Translate Tamil to any languages.

சனி, 9 பிப்ரவரி, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-004


எழுத்தின்றிச் சொல் அமையாது
சொல்லமைந்தாலும்
எழுத்துக்கள் இணையாத நிலை
இருப்பதை இடமறிந்து
பாவிக்க வேண்டுமே!
பன்னிரு உயிரோடு
'ச' வரிசை எழுத்துகளில்
'சௌ' ஒழிந்த (தவிர்ந்த)
பதினொன்றும்
'ஞ' வரிசை எழுத்துகளில்
ஞ; ஞா; ஞி; ஞெ; ஞே; ஞொ ஆகிய ஆறும்
'ய' வரிசை எழுத்துகளில்
தொல்காப்பியர் காலத்தில்
'யா' மட்டுமிருக்க
நன்னூலார் காலத்தில்
ய; யா; யு; யூ; யோ; யௌ ஆகிய ஆறும்
'வ' வரிசை எழுத்துகளில்
வ; வா; வி; வீ; வெ; வே;
வை; வௌ ஆகிய எட்டும்
மேலும்,
க; த; ந; ப; ம ஆகிய ஐந்தின்
பன்னிரு எழுத்துகளும்
மொழி முதல் எழுத்தாக
(சொல்லின் முதலெழுத்தாக)
வருவதைக் காணலாம்!
'ச' வரிசை எழுத்துகளில்
சௌ மட்டும்
'ஞ' வரிசை எழுத்துகளில்
ஞீ; ஞு; ஞூ; ஞை; ஞோ; ஞௌ ஆகிய ஆறும்
'ய' வரிசை எழுத்துகளில்
தொல்காப்பியரின் படிக்கு
'யா' ஒழிந்த (தவிர்ந்த)
ஏனைய பதினொன்றும்
நன்னூலாரின் படிக்கு
இது வேறுபடக் காரணம்
வடமொழிச் சொற்களாகச் சில
நன்னூலர் சேர்த்திருக்கலாம் என
அறிஞர்கள் ஐயுறுகின்றனர்...
'வ' வரிசை எழுத்துகளில்
வு; வூ; வொ; வோ ஆகிய நான்கும்
மேலும்,
ங; ட; ண; ர; ல; ழ;
ள; ற; ன ஆகிய ஒன்பதின்
பன்னிரு எழுத்துகளும்
மொழி முதல் எழுத்தாக
(சொல்லின் முதலெழுத்தாக)
வரமாட்டாதென அறிக!
ஞ்; ண்; ந்; ம்; ன்; ய்; ர்; ல்; வ்; ழ்; ள் ஆகிய
பதினொன்றும்
மெய் எழுத்துகளுடன் சேர்ந்தே
பன்னிரு உயிரும்
'எ' என்ற உயிர்
'சேஎ' என்று அளபெடையாகவும்
(சே, சேஎ - எருது)
(சொல்லின் இறுதி எழுத்தாக)
மொழியீற்று எழுத்தாக வருமே!
தனித்துப் பன்னிரு உயிரும்
க்; ச்; ட்; த்; ப்; ற் ஆகிய
வல்லின எழுத்துகளும்
'ங்' என்னும்
மெல்லின எழுத்தும்
(சொல்லின் இறுதி எழுத்தாக)
மொழியீறாக வராது என்க!
க்; ச்; ட்; த்; ப்; ற்; ங் என்பன
மொழியீற்றில் வருமாயின்
அச்சொற்கள்
தமிழ்ச் சொற்கள் ஆகாது என்க!
ட்; ற் ஆகிய இரண்டும்
மொழிக்கு (சொல்லுக்கு)
முன்னும் பின்னும் வராதென
அறிந்தும் கூடப் பாருங்கோ
'ஃ' என்ற எழுத்தை
இதுவரை எங்கும்
இணைக்க முடியவில்லையே!
ஆயுத எழுத்தல்லவா...
உயிரோடும் மெய்யோடும்
இணைவதெப்படி?
'ஃ' என்ற எழுத்தை
மொழியின் (சொல்லின்)
இடைச் செருகலாகவே
பாவித்தாலும் கூட
அருமையாகத் தான்
தனிநிலை எனப் பெயர் பெற்றே
காண முடிகிறதே!
அது, இது, உது என்பன
சுட்டுச் சொற்களாயினும்
அஃது, இஃது, உஃது என்பன
சுட்டுச் சொற்களாயினும்
நம்மாளுகள்
எப்பனும் பாவிக்கிறதாகத் தெரியேல்லையே!
சொற்கள் புணரும் வேளை
பின்னொட்டு முதலெழுத்து
உயிராக அமைந்தால்
அது, இது, உது என வராது
அஃது, இஃது, உஃது என்றே
புணர்ந்து கொள்ளுமே!
எடுத்துக்காட்டாக
'அது அப்படியா?' என வராது
'அஃது அப்படியா?' என அமையுமே!
மேலும்
'இது உண்மையானது!' என வராது
'இஃது உண்மையானது!' என்றமையும்
'உது ஒழுங்கில்லை' என வராது
'உஃது ஒழுங்கில்லை' என்றமையும்
என்றறிந்து பாவிக்க!
ஒன்றைக் குறிக்க
'ஒரு' என்றே பாவித்தாலும்
'ஓர்' என்று ஒன்று
இருப்பதை அறிவீரா!
பின்னொட்டு முதலெழுத்து
உயிராக அமைந்தால்
'ஒரு' ஆனது 'ஓர்' ஆக மாறுமே!
எடுத்துக்காட்டாக
'ஒரு அப்பம்' என வராது
'ஓர் அப்பம்' என்றே அமையும்!
மேலும்
'ஒரு ஆயிரம்' என வராது
'ஓர் ஆயிரம்' ஆகி
ஓராயிரம் எனப் புணர்ந்து வருமே!
ஆயினும்
இந்நடைமுறைக்கு மாறாக
பின்னொட்டு 'யா' ஐ
முதலெழுத்தாகக் கொண்டிருப்பினும்
'ஒரு யானை' ஆக வரினும்
'ஓர் யானை' என்றும் வருமே!
குழப்பம் அடையாதீர்கள்
'யா' இனது ஒலியும்
'அ' இனது ஒலி போல
ஒலிப்பதனால் அமைந்த
சிறப்பு நிலை இதுவாகும்!
எண்ணும் போது பாரும்
ஒரு; இரு ஆகிய இரண்டும்
பின்னொட்டு முதலெழுத்து
உயிராக அமையும் வேளை
ஓர்; ஈர் என மாறுமே!
எடுத்துக்காட்டாக
ஒரு+ஆயிரம்=ஓராயிரம் எனவும்
இரு+ஆயிரம்=ஈராயிரம் எனவும்
அமைவதைக் காண்போமே!
ஒலியன்களான எழுத்துக்களின்
ஒலி (ஓசை) எழும் நிலையை வத்தே
வெவ்வேறாகவே
சொற்கள் புணருவதைப் பார்த்தோமே!
இவ்வண்ணம்
பாக்களில் ஒலி (ஓசை) குறையும் போதோ
சீரும் தளையும் சிதையும் போதோ
யாப்பிலக்கணம் உடையவே
யாப்பைச் சீர் செய்யும் முகமாய்
ஒலி (ஓசை) இனிமையாக அமையவே
நெடிலுடன் குறில் சேரவே
குறில் நெடிலாக மாறி அமையவோ
புணரும் செயலே அளபெடையாம்!
நெடில் குறிலைத் துணைக்கு இழுத்தோ
குறில் நெடிலாக மாறி நின்றோ
தன்னினத்தை அளபெடுத்தல்
இசை நிறை அளபெடை,
இன்னிசை அளபெடை,
சொல்லிசை அளபெடை என
மூன்று வகையில் பார்க்கலாமே!
பாவோசை (செய்யுள் ஓசை) குறையும் போதும்
சீரும் தளையும் சிதையும் போதும்
அசையை நிறைப்பதற்காகவே
கையாளப்படுவது
இசை நிறை அளபெடையாம்!
செய்யுள் இசை அளபெடையும்
இதுவன்றோ!
எடுத்துக்காட்டாக
"ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னும் அவர்" என்ற
திருக்குறள் அடிகளில்
"விளமுன் நேர்" என்ற
வெண்பா இலக்கணத்தைச் சரிசெய்யவே
ஓதல், ஆதும் ஆகிய சீர்கள்
ஓஒதல், ஆஅதும் என்றவாறு
ஓ, ஆ என்பன - தமது
இனங்களான ஒ, அ என்பவற்றை
தம்மோடு இணைத்தே
அளபெடுத்துள்ளது என்போம்!
பாவில் (செய்யுளில்)
ஓசையோ அசையோ குறையாத போதும்
ஓசையை இனிமைப்படுத்தவே
கையாளப்படுவது
இன்னிசை அளபெடையாம்!
எடுத்துக்காட்டாக
"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை" என்ற
திருக்குறள் அடிகளில்
விளமுன் நேர் அமைந்து
வெண்பா இலக்கணம் சரியாயினும்
காய்முன் நேர் அமையும் வண்ணம்
கெடுப்பதும், எடுப்பதும் என்பன
கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் ஆக
இனிமையான ஓசைக்காக
அளபெடுத்துள்ளது என்போம்!
பாவில் (செய்யுளில்)
ஓசை குறையாது இருப்பினும்
பெயர்ச்சொல் ஒன்றை
வினையெச்சச் சொல்லாக
மாற்றும் நோக்கிலேயே
கையாளப்படுவது
சொல்லிசை அளபெடையாம்!
எடுத்துக்காட்டாக
"உரனசைஇ உள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உளேன்" என்ற
திருக்குறள் அடிகளில்
நசை(விருப்பம்) எனும் பெயர்ச்சொல்லை
நசைஇ(விருப்பி) எனும்
வினையெச்சச் சொல்லாக மாற்றவே
விளமுன் நேர் சரியாக இருந்தும்
வெண்பா இலக்கணம் பிழைக்காமல்
காய்முன் நேர் சரியாக அமைய
உரனசை, வரனசை என்பன
'ஐ' இற்கு 'இ' இனம் என்ற வழியில்
உரனசைஇ, வரனசைஇ என்றவாறு
அளபெடுத்துள்ளது என்போம்!
மூவகை அளபெடைகள்
அறிந்தாலும் கூட
"ஒற்றளபெடை" என்ற
ஒன்றுமிருக்கிறதே!
பாவில் (செய்யுளில்)
ஓசை குறையும் போது
தனிக்குறிலை அடுத்துவரும் ஒற்றோ
குறிலிணையை அடுத்துவரும் ஒற்றோ
மீள ஒன்றைச் சேர்த்து (இரட்டிப்பாகி)
ஓசையை நிரப்பக் கையாளப்படுவது
ஒற்றளபெடையாம்!
எடுத்துக்காட்டாக
"எங்ங் கிறைவனுளன் என்பாய் மனனேயான்
எங்ங் கெனத்திரிவா ரில்" என்பதில்
"எங்ங்கு இறைவன்" என்பது
"எங்ங் கிறைவன்" எனவும்
"எங்ங்கு எனத்" என்பது
"எங்ங் கெனத்" எனவும்
ஒற்று, தனிக்குறிலை அடுத்து
ஓசையை நிரப்பக் கொள்ள
அளபெடுத்துள்ளது என்போம்!
ஈற்றுச் சீர் ஓரசைச் சீராக
அமைகின்ற வெண்பாவில்
"எங்ங்" எனும் ஓரசைச் சீர்
அடியின் முதலாய் நிற்பதைப் பாரும்!
பிறிதோர் எடுத்துக்காட்டாக
"இலங்ங்கு வெண்பிறைசூ டீசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண்" என்பதில்
இலங்கு, கலங்கு என்பன
இலங்ங்கு, கலங்ங்கு என்றவாறு
குறிலிணைக்கு அடுத்துவரும் ஒற்று
ஓசையை நிரப்பிக் கொள்ள
அளபெடுத்துள்ளது என்போம்!
"மாமுன் நேர்" என அமைந்தமையால்
வெண்பா இலக்கணம்
மீறப்படுவதை இங்குப் பாரும்!
எடுத்துக்காட்டாகக் காட்டிய
குறள் வெண்பாக்கள்
திருக்குறள் இல்லைப் பாரும்...
திருக்குறள் காலத்திலும்
பின்னரும் கூட
ஒற்றளபெடை
வழக்கு ஒழிந்து விட்டதாக
புலவர் வெற்றியழகனின்
யாப்பரங்கம் நூலில்
சுட்டிக் காட்டப்பட்டுள்ளதே!
யாப்பிலக்கணப் பாக்கள்
அளபெடையை அறிந்ததும்
நன்றாகப் புரியும் என்றாலும்
குற்றியலுகரம், முற்றியலுகரம்,
குற்றியலிகரம் என்றும்
சற்றுப் பார்க்க வேண்டுமே!
(தொடரும்)


முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/01/003.html

2 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!