Translate Tamil to any languages.

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

கடவுள் எதை வழிகாட்டுவார்?


பயின்றவர்... முயன்றவர்...
வென்றுவிடுகிறார்...
பயிலாதவர்... முயலாதவர்...
தோற்றுவிடுகிறார்...
கண்ணால் கண்டவர்
கண்ட பின்னர் சொன்ன
உண்மை இது!
"தான் வென்றது என்னவோ
தனது நல்ல நேரம்" என்கிறார்
வெற்றி கண்டவர்...
"தான் தோற்றது என்னவோ
தனது கெட்ட நேரம்" என்கிறார்
தோல்வி கண்டவர்...
கண் மூடித் திறப்பதற்குள்
கரைகின்ற நேரமோ
"பொய்! பொய்! பொய்!" என்கிறதே!
கடந்து போன நேரம் கேட்கிறது
எனது நேரத்தில் - நீ
என்ன செய்தாய் என்று...
புதிதாய் வந்த நேரம் கேட்கிறது
எனது நேரத்தில் - நீ
என்ன செய்ய இருக்கிறாய் என்று...
ஆனால், மனிதனும்
ஏதோ எண்ணிப் பார்க்கிறான்...
அப்படி இருந்தும்
நேரம் விரைவாகக் கரைகிறது...
இதையுணர்ந்த அறிஞர் ஒருவரே
"நேரம் பொன்னானது - அதை
ஒரு பொழுதும் வீணடிக்காதே!" என்று
சொல்லிவைத்தார் போலும்!
நேர முகாமைத்துவம்
சரியாக பேணும் ஒருவராலேயே
உலகை வெல்ல முடியுமென
நானும் நம்புகிறேன் - அதைத் தான்
பகலவனையும் நிலவவளையும் வைத்து
பகலையும் இரவையும் ஆக்கி
நேர முகாமைத்துவம் படிப்பிக்கின்ற
கடவுளும் வழிகாட்டுவாரோ?!

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

வலைப்பூக்களில் இணைய வானொலியை இணைப்பது எப்படி

இனிய உறவுகளே!

விருப்பத்துக்குரிய இணைய வானொலியை உங்கள் வலைப்பூக்களில் இணைப்பது எப்படி எனச் சற்று எண்ணிப் பார்ப்போம்.

எடுத்துக்காட்டாக http://shakthifm.com/ என்ற தளத்திற்குச் செல்லுங்கள். அத்தளத்தில் இடது பக்கக் கீழ்ப் பகுதியில் ஒலிக்கும் ஒலிப் பட்டை (Sound Player Bar) தென்படும். அதன் மேல் வலது சுட்டெலி அழுத்தியை (Right Mouse Button) அழுத்தியதும் தோன்றும் பட்டியில் (Menu) Copy Audio Address என்பதனைத் தெரிவு செய்து ஒலி இணைப்பு முகவரியைப் படி (Copy) எடுத்துக்கொள்க.
அந்த இணைப்பு:

பின்னர் HTML இணைய மொழியிலுள்ள iframe கட்டளையைப் பயன்படுத்திக் கீழ்வருமாறு நிரலை (Code) ஆக்குங்கள்.

<br>
<center>
<iframe src="http://76.164.217.100:7012/;stream.mp3" height="80" width="320"></iframe>
</center>
<br>

இந்த எளிமையான நிரலை (Code) வலைப்பூவில் (Blog) எப்படி இணைப்பது?

வழமை போல வலைப்பூ வழங்குநர் (Blogger) பகுதிக்குள் நுழையுங்கள். பின் தங்கள் வலைப்பூவைச் (Blog)  சொடுக்குங்கள். அவ்வேளை Yarlpavanan Publishers · Overview என்பது போல தோன்றும் பகுதியில் Layout என்பதனைத் தெரிவு செய்க. பின்னர் விரும்பிய (Side Bar) நிரலில் Add a Gadget என்பதனைச் சொடுக்குக. அவ்வேளை HTML/JavaScript என்பதனைத் தெரிவு செய்க. பின்னர் தோன்றும் பகுதியில், Title பெட்டிக்குள் உங்கள் விருப்ப வானொலிப் பெயரை இடலாம்; Content பெட்டிக்குள் மேலுள்ளவாறு உங்கள் விருப்ப வானொலிக்கான நிரலை (Code) இட்டுச் Save அழுத்தியை அழுத்தவும். பின் Save Arrangement அழுத்தியை அழுத்தவும்.

இனி உங்கள் வலைப்பூவை (Blog) விரித்துப் பார்த்தால் நீங்கள் விரும்பிய வானொலி இயங்கிக் கொண்டிருக்கும். உங்கள் வலைப்பூவில் (Blog) உங்கள் நாட்டு உங்கள் விருப்ப வானொலியை இணைக்க இச்சிறுகுறிப்பு உதவுமென நம்புகிறேன். இப்பகுதியை எழுத உதவிய தளத்தின் முகவரியைக் கீழே தருகின்றேன். மேலும், அத்தளம் தங்களுக்கு வழிகாட்டுமே!
இந்த வலைப்பூவில் (Blog) இணைக்கப்பட்டுள்ள இலங்கைச் சக்தி பண்பலை (FM) வானொலி இணைப்புக் கருவியை (Gadget) தங்கள் தளத்தில் இணைக்க விரும்பினால் கீழ்வரும் நிரலைப் (Code) பயன்படுத்துக.

<center>
<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYuRzeVf8OFnT75cRj2eFn4Q4ED06GFgTVnr-6AtmIj2tOFYKRgQx-sAzPWJZN8q6OL2MFvTFHz-u5cZSMcPS2aSr4SnYZioxZjrECcDj1KVF9OUpRvGZeTI2aARdiiKmKjvjNC2NqOTMp/s1600/shakthi_fm.jpg"></img><br>
<iframe src="http://76.164.217.100:7012/;stream.mp3" frameborder="0" height="60"  marginheight="0" marginwidth="0" width="220"  scrolling="no"></iframe>
</center>

Wordpress வலைப்பூவில் இணைக்க

<br>
<center>
<img src="https://yarlpavanan.files.wordpress.com/2016/08/shakthi_fm.jpg"></img>
<br>
[audio autoplay="autoplay" src="http://76.164.217.100:7012/;stream.mp3" /]
</center>
<br>


நன்றி. 

புதன், 17 ஆகஸ்ட், 2016

வெற்றிகரமாக வலைப்பூ நடாத்தலாம் வாங்க...

இப்பவெல்லாம் வலைப்பூப் பதிவர்கள் முகநூல் பக்கம் ஓட்டம் பிடிக்கையில், வலைப்பூப் பதிவர்களுக்கான வழிகாட்டலைப் பகிருவதனால் நன்மை கிட்டாது. ஆயினும் முகநூல் பக்கப் பதிவர்கள் வலைப்பூப் பக்கம் ஓட்டம் பிடித்து வரலாம். அவர்களுக்காகவும் புதிய வலைப்பூப் பதிவர்களுக்காகவும் வலைப்பூக்களில் பற்று வைத்துத் தொடர்ந்து வலைப்பூ நடாத்துவோருக்காகவும் சில வழிகாட்டல் குறிப்புகளைத் தரலாம் என விரும்புகிறேன்.

"லட்ச லட்சமாய் சம்பாதிக்க பெண் பதிவர் தரும் டிப்ஸ்!" என்ற தலைப்பில் நண்பர் பகவான்ஜி அவர்கள் தமது ஜோக்காளி தளத்தில் வலைப் பதிவராகத் (ஆங்கில) தொடங்கி முழுநேர எழுத்தாளர் ஆகிய ப்ரீத்தி செனாய் அவர்களின் வலைப் பதிவர்களுக்கான வழிகாட்டலைப் பகிர்ந்திருந்தார். (முழுமையாகப் படிக்க அவரது இணைப்பு: http://www.jokkaali.in/2016/07/blog-post_17.html, இப்பதிவு இவரது தளத்தில் முன்னரும் வெளிவந்திருக்கிறது.) நண்பர் பகவான்ஜி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்த வண்ணம், அதனைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன்.

"ஒரு வலைப் பூ என்பது வாசகர்களை ஈர்க்கக் கூடியதாகவும். அவர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும். எழுதச் சோம்பேறித் தனம் உள்ளவர்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள், தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். போலித் தனம் கூடாது. உங்களை உங்கள் எழுத்துக்கள் வாயிலாக வாசகர்கள் நேரில் பார்ப்பதைப் போன்று உணர வைக்க வேண்டும். எனவே உங்களைப் பற்றி எழுதும் போது 'பில்டப்' கொடுத்து எழுதவே கூடாது. பொய்யையும் உண்மையையும் பிரித்துப் பார்க்க வாசகர்களுக்கு தெரியும், எழுதுபவர்களை விட வாசகர்கள் புத்திசாலிகள்.

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் தவிர்த்து நிறைய பேர் உங்கள் வலைத் தளத்திற்கு வருகிறார்கள் என்றால் நீங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம், எழுத்தாளர் ஆகி விட்டீர்கள் என்று! வெற்றி பெற்றால் மட்டும் போதாது, அதை நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம், மாதத்துக்கு மாதம், வருடத்துக்கு வருடம் தக்க வைத்துக் கொள்ள உழைக்க வேண்டும். மற்ற எல்லாமே உங்களைத் தேடி வரும்!" என வலைப் பதிவர் ப்ரீத்தி செனாய் தெரிவித்திருப்பதாக நண்பர் பகவான்ஜி அவர்கள் அறிமுகம் செய்திருந்தார்.

நானும் ஏதாச்சும் சொல்ல வேண்டுமே என்பதற்காக, எதையாவது சொல்லி உங்களிடம் சொல்லெறி வேண்டித் தாக்குப்பிடிக்க இயலாமையால் எனது பட்டறிவையே (அனுபவத்தையே) சொல்ல விரும்புகிறேன். என்னைப் பற்றியோ என்னுடையதைப் பற்றியோ நான் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அடுத்தவரைப் பற்றியோ அடுத்தவருடையதைப் பற்றியோ நான் சொல்ல எனக்கு உரிமை இல்லை.

ஆயினும் அடுத்தவரின் அடையாளத்தைச் சுட்டிக்காட்டிப் பகிர இயலுமே! எடுத்துக் காட்டிற்காக மேலே வலைப் பதிவர் ப்ரீத்தி செனாய் தெரிவித்திருப்பதாக நண்பர் பகவான்ஜி அவர்கள் அறிமுகம் செய்திருந்தை; எப்படி அவர்களது அடையாளத்தை மூடி மறைக்காமல் பகிர்ந்தேனோ, அப்படி நீங்களும் அடுத்தவரின் பதிவைப் பகிரலாமே! அப்படி இன்றி அடுத்தவரின் பதிவைப் பகிர்ந்தால் 'இலக்கியக் களவு' செய்ததாக உங்கள் மீது பழி விழும்.

அச்சு ஊடக எழுத்துகளில் எழுத்துடன் இயங்காத/ பேசாத படங்கள் இணைக்கலாம். ஆனால் மின் ஊடக (வலைப்பூ - Blog) எழுத்துகளில் இயங்காத/ பேசாத படங்கள், இயங்கும்/ பேசும் படங்கள், ஒலி இணைப்பு (Audio), ஒளிஒலி இணைப்பு (Video) எனப் பல இணைக்கலாம். எதுவாயினும் பதிவின் கருப்பொருளை விழுங்காது; பதிவின் கருப்பொருளுக்கு உயிரூட்ட உதவும் வகையில் அளவாக, அழகாக இணைக்கலாம்.

அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள் எதுவும் தமக்கெனத் தனி அடையாளத்தைப் பேணுகின்றன. அவற்றில், உங்கள் பதிவுகள் இடம்பெறுமாயின் அதிக வாசகர்களைச் சென்றடையும். ஆனால், வலைப்பூவில்(Blog) அதெல்லாம் கிடையாது. அதற்காக வலைப்பூவில்(Blog) பதிவுகளை இடுகை செய்த பின், அதன் இணைப்பைத் திரட்டிகளிலும் மக்களாய (சமூக) வலைத்தளங்களிலும் பகிருகிறார்கள். அதுவும் எனக்கு நிறைவைத் தரவில்லை.

'யாழ்பாவாணன் வெளியீட்டகம்' என்ற எனது வலைப்பூவிற்கான(Blog) தனி அடையாளத்தைப் பேண, நான் எவ்வளவோ முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது. அதாவது, எனது வலைப்பூவை(Blog) வாசகர் கண்ணில் பட வைக்க வேண்டுமே! அதைவிட வாசகர் கண்ணில் பட்ட எனது வலைப்பூவில்(Blog) வாசகர் உள்ளம் நிறைவடையத்/ களிப்படையத்/ மகிழ்ச்சியடையத் தக்கதாக எனது பதிவுகளும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதிவின் தலைப்பும் ஒவ்வொரு வாசகரையும் சுண்டி இழுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எதிர்பாராத விதமாக வலைத் (கூகிள்) தேடுதலில் உங்கள் வலைப்பூ(Blog) புதிய வாசகர் கண்ணில் பட்டுவிடலாம். அவ்வேளை தங்களது பதிவின் தலைப்பு அவர்களை ஈர்த்தால் மட்டுமே உங்கள் வலைப்பூவிற்கு(Blog) அவர்கள் வர வாய்ப்புண்டு. அப்படி வந்த வாசகர் அடிக்கடி மீண்டும் வர வேண்டுமாயின், உங்களது பதிவின் தரம்/ தகுதி/ சிறப்பு அவர்களை ஈர்க்க வேண்டுமே!

உங்கள் வலைப்பூவிற்கான(Blog) தனி அடையாளத்தைப் பேண, நீங்கள் மற்றைய வலைப்பூக்களில்(Blog) உங்கள் அடையாளத்தைக் காட்ட வேண்டும். அதாவது, எனது 'யாழ்பாவாணன் வெளியீட்டகம்' என்ற எனது வலைப்பூவிற்கு(Blog) வரும் அறிஞர்கள் தங்கள் சிறந்த கருத்துகளை (Comments) இட்டு தங்களை அடையாளப்படுத்துவர். அதன் சுவையறிந்து நானும் அவர்களது வலைப்பூவிற்குச்(Blog) சென்று கருத்துகளைப் (Comments) பதிவு செய்வேன். தமிழ்மணம் திரட்டி எனது தளத்தை இணைக்காத போதும் இவ்வழியிலேயே எனது வலைப்பூவிற்கான(Blog) வருகையாளர்களைப் பெருக்குகின்றேன்.

அடுத்தவர் வலைப்பூவிற்குச்(Blog) சென்று கருத்துகளைப் (Comments) பகிரும் வேளை, உங்களால் இயன்றளவு உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக கருத்துகளைப் (Comments) பகிருங்கள். அப்ப தான் உங்கள் ஆற்றல் ஏனைய புதிய வாசகர்களுக்கும் சென்றடைய வாய்ப்புண்டு. அதனடிப்படையிலேயே உங்கள் வலைப்பூவிற்கான(Blog) வருகையாளர்களைப் பெருக்க முடியும் என்பேன்.

வலைப்பூவிற்கான(Blog) வருகையாளர்களைப் பெருக்கும் நோக்கில் கருத்துகளைப் (Comments) பகிரப் போய் சொல்லெறியும் வேண்டியிருக்கிறேன். அதாவது, சிறந்த பகிர்வு அல்லது அருமையான பதிவு எனப் பல நூறு வலைப்பூக்களில்(Blog) கருத்துகளைப் (Comments) பகிர்ந்து வந்திருக்கிறேன். இதனைக் கண்ணுற்ற நண்பர்கள் இருவர் கீழுள்ளவாறு சொல்லெறி விட்டார்கள். அதனைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அண்ணே! என்னண்ணே!
எவர் வலைப்பூவிலும்
ஒரே கருத்தையே
அப்பிப் பூசி மெழுகி வாறியளே!
அவங்க அதைப் படிச்சிட்டு
உங்களை
காறித் துப்பிக் கழிச்சுப் போடுவாங்கண்ணே!

இப்படி ஒருவர் மின்னஞ்சலில், எனக்கு அருமையாக வழிகாட்டினார். அடுத்தவரோ, அருகில் நின்றிருந்தால் கன்னத்தில் அறைந்திருப்பார். அவரது மின்னஞ்சலில் கீழ்வருமாறு இருந்தது.

எனது வலைப்பூவிற்கு(Blog) வாருங்கள்
கருத்து (Comment) என்று சொல்லி.
எனது ஒவ்வொரு பதிவிலும்
'சிறந்த பகிர்வு' எனப் பதிவிடாமல்
ஒவ்வொரு பதிவையும்
பொறுமையாக வாசித்த பின்
பெறுமதியான கருத்து (Comment) இட வருவதாயின்
எனது வலைப்பூவிற்கு(Blog) வாருங்கள்
இல்லையேல்
எனது வலைப்பூவிற்கு(Blog)
வரவேண்டாமென எச்சரித்தும் இருந்தார்!

இதற்குப் பிறகு நான் கொஞ்சம் திருந்தி இருக்கிறேன். இனியும் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாகத் திருந்தி விடுவேன். வலைப்பூவிற்கான(Blog) வருகையாளர்களைப் பெருக்கும் நோக்கில் பிறரது தளங்களிற்குப் போய் கருத்துகளைப் (Comments) பகிரலாம். ஆனால், அத்தளப் பதிவர்களை நோகடிக்காமல் தங்கள் ஆற்றலைப் பகிர்ந்து வெற்ற பெற எனது வாழ்த்துகள்.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

வாழ்வில் எதற்கும் கருவியா? (கருத்து மோதல்)

எங்கட பிள்ளைகளின் கண்டு பிடிப்பை நீங்களும் படித்துப் பாருங்களேன். தொழில்நுட்ப வளர்ச்சியும் இவர்களது எண்ணங்களும் எப்படி மாறிவிடுகிறது. இதன் பின்விளைவு எப்படி இருக்கும்?

புதியகண்ணகி: அடியே! நீ திருமணம் செய்தால் கணவருக்கு உடுப்புத் துவைத்தல், சமைத்தல், குழந்தை பெறல், குழந்தைக்கு உணவூட்டல் என ஓய்வின்றிய வேலை இருக்குமே!

புதியமாதவி: இப்பதானே எல்லாவற்றுக்கும் கருவி (எந்திரன்) வந்துவிட்டது.

புதியகண்ணகி: குழந்தை பெறவும், குழந்தைக்கு உணவூட்டவுமா?

புதியமாதவி: ஆம்! குழந்தை பெற வாடகைத் தாயை ஒழுங்கு செய்வேன். குழந்தைக்கு உணவூட்டக் கருவி (எந்திரன்) தயாரிக்கிறாங்களாமே!

நம்மாளுகளுக்கு உணவூட்டக் கருவி (எந்திரன்) தயாரிக்கிறாங்க என்றால் எவ்வளவு மகிழ்ச்சி. கீழ்வரும் படத்தைச் சொடுக்கிப் பாருங்கள். பின் இப்பதிவின் கீழுள்ள கேள்விக்குப் பதில் கருத்தைப் பகிர்ந்து உதவுங்க.



"Technology is for our ease and to make us lazy!" என்ற கருத்தோடு "https://www.facebook.com/laughingcolours/videos/vb.173770089577/10153987847449578/?type=2&theater" என்ற இணைப்பில் முகநூலில் பகிரப்பட்ட ஓளிஒலி (வீடியோ) இணைப்பையே மேலே காண்கின்றீர்.

இன்று வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் கருவி (எந்திரன்) வந்துவிட்டது. ஆயினும், நம்மாளுங்க சோம்பேறி (lazy) ஆகிறாங்க. அதைவிடக் கருவிச் (எந்திரன்) செயற்பாடு அல்லது அதனுடன் தொடர்புள்ள தொழில்நுட்பம் நமக்குப் பாதுகாப்பானதா? அதனைச் சிந்திக்க வைக்கவே மேற்காணும் ஓளிஒலி (வீடியோ) இணைப்பை உங்களுடன் பகிர விரும்பினேன். இது பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

என் கருத்து: "அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு" என்று முன்னோர் கூறியதை நினைவூட்டுகிறேன். அதாவது, எதற்கெடுத்தாலும் கருவியை (எந்திரனை) நாடுவது பாதுகாப்பு இல்லை. மலம் கழித்தால் கழுவுவதற்கும் உடல் நாறினால் குளிப்பாட்டுவதற்கும் பசித்தால் உணவூட்டுவதற்கும் கருவியை (எந்திரனை) நாடினால்; கருவியில் (எந்திரனில்) தவறு நிகழ்ந்தால் நம்மாளுங்க உயிரைப் பறித்துவிடுமே! தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முன்னேறினாலும் நம்மாளுங்க உயிரைப் பறிக்க இடமளிக்கும் கருவியைப் (எந்திரனைப்) பாவிக்காமல் இருப்பதே நன்மை தரும்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

காதலும் தோல்வியும்

வாழ்க்கை என்னும் ஊரிலே
காதலர் சந்திக்கும் தெருவிலே
அரும்பிய காதலும் தோல்வியே!
                   (வாழ்க்கை)

காதல் அரும்பிய பொழுதிலே
கண்கள் மங்கிய வேளையிலே
தவறுகள் முளைக்கத் தோல்வியே!
                   (காதல்)


காதலர் சந்திக்கும் தெருவிலே
அழகாய் மின்னும் ஆண்களே
தங்கச் சங்கிலி அணிந்தே
உந்து உருளியில் பாய்வோரே
நாளும் மகிழுந்தில் செல்வோரே
பெண்ணவள் கேட்டால் சொல்வீரே
எல்லாம் வாடகை என்பீரே
காதலும் முறிவதைப் பார்ப்பீரே
                   (வாழ்க்கை)
                   (காதல்)

காதலர் சந்திக்கும் தெருவிலே
அழகாய் உடுத்தும் பெண்களே
மின்னும் அணிகலன் அணிந்தே
எடுப்பாய் அன்னநடை பயில்வோரே
இசையோடு ஈர்த்திடப் பேசுவோரே
ஆணவன் கேட்டால் சொல்வீரே
நண்பரெனப் பழகியது என்பீரே
காதலும் முறிவதைப் பார்ப்பீரே
                   (வாழ்க்கை)
                   (காதல்)

காதலர் சந்திக்கும் தெருவிலே
வேளைக்கு வேளை சந்திப்பீரே
என்னுயிரே நம்பு என்பீரே
அன்பாய் முத்தமும் கொடுப்பீரே
மணமுடிக்கக் கேட்டால் சொல்வீரே
பெற்றவர் விரும்பாரென மறுப்பீரே
காதலியும் கண்ணீர் வடிப்பாளே
காதலும் முறிவதைப் பார்ப்பீரே
                   (வாழ்க்கை)
                   (காதல்)

காதலர் சந்திக்கும் தெருவிலே
நாளுக்கு நாள் சந்திப்பீரே
நீயின்றி நானில்லை என்பீரே
நோகாமல் அன்பாய் அணைப்பீரே
மணமுடிக்கக் கேட்டால் சொல்வீரே
பெற்றவர் விரும்பிய படியென்றே
காதலனும் குடிச்சு வெறிப்பாரே
காதலும் முறிவதைப் பார்ப்பீரே
                   (வாழ்க்கை)
                   (காதல்)

காதல் என்ற போர்வையிலே
இணையாமல் பிரிவதும் நிகழுமே
காசுகளைப் பறிப்பதும் நிகழுமே
கற்பையும் இழப்பதும் நிகழுமே
பிரிந்தவர் வாடுவதும் நிகழுமே
வாடியோர் சாவதும் நிகழுமே
எதுவும் காதலிக்க முன்னரே
எண்ணிப் பார்க்க வேண்டுமே!
                   (வாழ்க்கை)
                   (காதல்)

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?

ஒரு காலத்தில வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) வழியே கலைப் படைப்புகளைப் பகிர்ந்த நம்மாளுங்க; பின்னர் மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) கலைப் படைப்புகளைப் பகிர்ந்தனர். ஆனால், இன்றோ குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு ஊடாகக் கலைப் படைப்புகளைப் பகிருகின்றனர்.

1. வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) ஊடாகக் கலைப் படைப்புகளைப் பேணுவதால் ஒருவரது எல்லாப் பதிவுகளையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஆனால், மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) அப்படிக் காண்பிக்க இயலாதே!

2. வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) ஊடாகக் கலைப் படைப்புகளைப் பேணுவதால் ஒரு படைப்பாளியின் முழு (A to Z) ஆற்றலையும் ஒரே நேரத்தில் ஒப்புவிக்கலாம். ஆனால், மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) அப்படி ஒப்புதல் அளிக்க முடியாதே!

இப்படிப் பல ஒப்பீடுகள் உள்ளன. அது பற்றி, எனது கீழ்வரும் பதிவுக்கு அறிஞர்கள் வழங்கிய கருத்துகளை படித்துத் தெளிவு பெறுவீர்கள் என நம்புகின்றேன்.
கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!

குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா? என்றால்; அதுவும் மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) பகிருவதை விட கீழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றது என்பதைத் தாங்கள் அறிவீர்களா? அதாவது, கையெழுத்துச் சஞ்சிகை ஆக்கிய பின் தெரிந்த நட்புகளுடன் பகிருவது போல குழுவில் (வாட்ஸ் அப், வைபர்) உள்ளவர்களுடன் பகிருவதாக இருக்குமே! கையெழுத்துச் சஞ்சிகை ஆவது ஆவணப்படுத்தலாக இருக்கும்; குழுவில் (வாட்ஸ் அப், வைபர்) பகிருவது அப்படி இருக்காதே! எப்படியோ ஒரு படைப்பாளியின் முழு (A to Z) ஆற்றலையும் வெளிப்படுத்த வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) போன்றன சிறந்தது எனலாம்.

இதன் காரணமாகவா குழுவில் (வாட்ஸ் அப், வைபர்) இணைந்தவர்கள்; இணைந்த வேகத்திலேயே குழுவை விட்டு ஓடுகிறார்கள்? இல்லை! கீழுள்ள சூழ்நிலைகளும் பலரைக் குழுவை விட்டு விலக வைக்கலாம்.
1. அடிக்கடி தகவல் வர நடைபேசி விரைவாக மின்னிறக்கம் அடைகிறது.
2. நீண்ட பதிவுகளை நடைபேசி வழியே படிக்கக் கண் வலிக்கும்.
3. ஒளிப்படங்கள் (Photo), ஒளிஒலிக் கோப்புகள் (Video) நடைபேசிச் சேமிப்பகத்தை நிரப்பிவிட; நடைபேசியின் வேகம் குறைகின்றது.
4. எல்லோரும் தெரிந்தவர்கள் தானே என எண்ணி நற்றமிழ் பேணாது, பெறுமதியற்ற சொல்கள், வரிகள் பாவிப்பதும் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

கலை ஆற்றலை வெளிப்படுத்த வலை ஊடகங்களை விட்டு, நடைபேசி வழியே குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வைப் பலர் நாடுகின்றனர். ஆங்கே நடப்பதென்ன? "கலையின் பெயரில் வார்த்தை ஆபாசம் பேசும் ஐந்தறிவு மிருகங்கள் (http://palainet.com/?p=2208)" என்ற பதிவைப் படித்துப் பாருங்கள். குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வின் ஊடாகத் தேவையற்ற சொல்களைக் கையாள்வது கலையை மதிக்காமை எனலாம். இந்தச் செயலை உங்கள் உள்ளத்தில் நிறுத்தி, எடை போட்டுத் தங்களது உண்மைக் கருத்துகளைப் பகிர முன்வாருங்கள். அவை கருத்து மோதலை ஏற்படுத்தினாலும் சிறந்த முடிவுக்கு வர உதவுமே!


முடிவாகச் சொல்வதாயின் வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) ஆகியவற்றில் பதிவுகளை இட்ட பின்னர், அதற்கான இணைப்பை மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) மற்றும் குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்விலோ வெளிப்படுத்தி வாசகர்களைப் பெருக்கலாம். அதேவேளை ஒவ்வொரு படைப்பாளியின் முழு (A to Z) ஆற்றலையும் வெளிக்கொணர ஆளுக்கொரு வலைப் பூ (Blog) போதுமென்பேன்.


வலைப்பூ உறவுகளே! சில மாதங்களாகத் தங்கள் தளங்களுக்கு வராது இருந்த போதும் எனது தளத்திற்கு வருகை தந்து கருத்திட்டு ஊக்கமளித்த பதிவர்களுக்கு மிக்க நன்றி. தங்கள் தளங்களுக்கு இனி அடிக்கடி வருவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது உறவு என்றென்றும் தொடரும்.