Translate Tamil to any languages.

புதன், 17 ஆகஸ்ட், 2016

வெற்றிகரமாக வலைப்பூ நடாத்தலாம் வாங்க...

இப்பவெல்லாம் வலைப்பூப் பதிவர்கள் முகநூல் பக்கம் ஓட்டம் பிடிக்கையில், வலைப்பூப் பதிவர்களுக்கான வழிகாட்டலைப் பகிருவதனால் நன்மை கிட்டாது. ஆயினும் முகநூல் பக்கப் பதிவர்கள் வலைப்பூப் பக்கம் ஓட்டம் பிடித்து வரலாம். அவர்களுக்காகவும் புதிய வலைப்பூப் பதிவர்களுக்காகவும் வலைப்பூக்களில் பற்று வைத்துத் தொடர்ந்து வலைப்பூ நடாத்துவோருக்காகவும் சில வழிகாட்டல் குறிப்புகளைத் தரலாம் என விரும்புகிறேன்.

"லட்ச லட்சமாய் சம்பாதிக்க பெண் பதிவர் தரும் டிப்ஸ்!" என்ற தலைப்பில் நண்பர் பகவான்ஜி அவர்கள் தமது ஜோக்காளி தளத்தில் வலைப் பதிவராகத் (ஆங்கில) தொடங்கி முழுநேர எழுத்தாளர் ஆகிய ப்ரீத்தி செனாய் அவர்களின் வலைப் பதிவர்களுக்கான வழிகாட்டலைப் பகிர்ந்திருந்தார். (முழுமையாகப் படிக்க அவரது இணைப்பு: http://www.jokkaali.in/2016/07/blog-post_17.html, இப்பதிவு இவரது தளத்தில் முன்னரும் வெளிவந்திருக்கிறது.) நண்பர் பகவான்ஜி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்த வண்ணம், அதனைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன்.

"ஒரு வலைப் பூ என்பது வாசகர்களை ஈர்க்கக் கூடியதாகவும். அவர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும். எழுதச் சோம்பேறித் தனம் உள்ளவர்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள், தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். போலித் தனம் கூடாது. உங்களை உங்கள் எழுத்துக்கள் வாயிலாக வாசகர்கள் நேரில் பார்ப்பதைப் போன்று உணர வைக்க வேண்டும். எனவே உங்களைப் பற்றி எழுதும் போது 'பில்டப்' கொடுத்து எழுதவே கூடாது. பொய்யையும் உண்மையையும் பிரித்துப் பார்க்க வாசகர்களுக்கு தெரியும், எழுதுபவர்களை விட வாசகர்கள் புத்திசாலிகள்.

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் தவிர்த்து நிறைய பேர் உங்கள் வலைத் தளத்திற்கு வருகிறார்கள் என்றால் நீங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம், எழுத்தாளர் ஆகி விட்டீர்கள் என்று! வெற்றி பெற்றால் மட்டும் போதாது, அதை நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம், மாதத்துக்கு மாதம், வருடத்துக்கு வருடம் தக்க வைத்துக் கொள்ள உழைக்க வேண்டும். மற்ற எல்லாமே உங்களைத் தேடி வரும்!" என வலைப் பதிவர் ப்ரீத்தி செனாய் தெரிவித்திருப்பதாக நண்பர் பகவான்ஜி அவர்கள் அறிமுகம் செய்திருந்தார்.

நானும் ஏதாச்சும் சொல்ல வேண்டுமே என்பதற்காக, எதையாவது சொல்லி உங்களிடம் சொல்லெறி வேண்டித் தாக்குப்பிடிக்க இயலாமையால் எனது பட்டறிவையே (அனுபவத்தையே) சொல்ல விரும்புகிறேன். என்னைப் பற்றியோ என்னுடையதைப் பற்றியோ நான் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அடுத்தவரைப் பற்றியோ அடுத்தவருடையதைப் பற்றியோ நான் சொல்ல எனக்கு உரிமை இல்லை.

ஆயினும் அடுத்தவரின் அடையாளத்தைச் சுட்டிக்காட்டிப் பகிர இயலுமே! எடுத்துக் காட்டிற்காக மேலே வலைப் பதிவர் ப்ரீத்தி செனாய் தெரிவித்திருப்பதாக நண்பர் பகவான்ஜி அவர்கள் அறிமுகம் செய்திருந்தை; எப்படி அவர்களது அடையாளத்தை மூடி மறைக்காமல் பகிர்ந்தேனோ, அப்படி நீங்களும் அடுத்தவரின் பதிவைப் பகிரலாமே! அப்படி இன்றி அடுத்தவரின் பதிவைப் பகிர்ந்தால் 'இலக்கியக் களவு' செய்ததாக உங்கள் மீது பழி விழும்.

அச்சு ஊடக எழுத்துகளில் எழுத்துடன் இயங்காத/ பேசாத படங்கள் இணைக்கலாம். ஆனால் மின் ஊடக (வலைப்பூ - Blog) எழுத்துகளில் இயங்காத/ பேசாத படங்கள், இயங்கும்/ பேசும் படங்கள், ஒலி இணைப்பு (Audio), ஒளிஒலி இணைப்பு (Video) எனப் பல இணைக்கலாம். எதுவாயினும் பதிவின் கருப்பொருளை விழுங்காது; பதிவின் கருப்பொருளுக்கு உயிரூட்ட உதவும் வகையில் அளவாக, அழகாக இணைக்கலாம்.

அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள் எதுவும் தமக்கெனத் தனி அடையாளத்தைப் பேணுகின்றன. அவற்றில், உங்கள் பதிவுகள் இடம்பெறுமாயின் அதிக வாசகர்களைச் சென்றடையும். ஆனால், வலைப்பூவில்(Blog) அதெல்லாம் கிடையாது. அதற்காக வலைப்பூவில்(Blog) பதிவுகளை இடுகை செய்த பின், அதன் இணைப்பைத் திரட்டிகளிலும் மக்களாய (சமூக) வலைத்தளங்களிலும் பகிருகிறார்கள். அதுவும் எனக்கு நிறைவைத் தரவில்லை.

'யாழ்பாவாணன் வெளியீட்டகம்' என்ற எனது வலைப்பூவிற்கான(Blog) தனி அடையாளத்தைப் பேண, நான் எவ்வளவோ முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது. அதாவது, எனது வலைப்பூவை(Blog) வாசகர் கண்ணில் பட வைக்க வேண்டுமே! அதைவிட வாசகர் கண்ணில் பட்ட எனது வலைப்பூவில்(Blog) வாசகர் உள்ளம் நிறைவடையத்/ களிப்படையத்/ மகிழ்ச்சியடையத் தக்கதாக எனது பதிவுகளும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதிவின் தலைப்பும் ஒவ்வொரு வாசகரையும் சுண்டி இழுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எதிர்பாராத விதமாக வலைத் (கூகிள்) தேடுதலில் உங்கள் வலைப்பூ(Blog) புதிய வாசகர் கண்ணில் பட்டுவிடலாம். அவ்வேளை தங்களது பதிவின் தலைப்பு அவர்களை ஈர்த்தால் மட்டுமே உங்கள் வலைப்பூவிற்கு(Blog) அவர்கள் வர வாய்ப்புண்டு. அப்படி வந்த வாசகர் அடிக்கடி மீண்டும் வர வேண்டுமாயின், உங்களது பதிவின் தரம்/ தகுதி/ சிறப்பு அவர்களை ஈர்க்க வேண்டுமே!

உங்கள் வலைப்பூவிற்கான(Blog) தனி அடையாளத்தைப் பேண, நீங்கள் மற்றைய வலைப்பூக்களில்(Blog) உங்கள் அடையாளத்தைக் காட்ட வேண்டும். அதாவது, எனது 'யாழ்பாவாணன் வெளியீட்டகம்' என்ற எனது வலைப்பூவிற்கு(Blog) வரும் அறிஞர்கள் தங்கள் சிறந்த கருத்துகளை (Comments) இட்டு தங்களை அடையாளப்படுத்துவர். அதன் சுவையறிந்து நானும் அவர்களது வலைப்பூவிற்குச்(Blog) சென்று கருத்துகளைப் (Comments) பதிவு செய்வேன். தமிழ்மணம் திரட்டி எனது தளத்தை இணைக்காத போதும் இவ்வழியிலேயே எனது வலைப்பூவிற்கான(Blog) வருகையாளர்களைப் பெருக்குகின்றேன்.

அடுத்தவர் வலைப்பூவிற்குச்(Blog) சென்று கருத்துகளைப் (Comments) பகிரும் வேளை, உங்களால் இயன்றளவு உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக கருத்துகளைப் (Comments) பகிருங்கள். அப்ப தான் உங்கள் ஆற்றல் ஏனைய புதிய வாசகர்களுக்கும் சென்றடைய வாய்ப்புண்டு. அதனடிப்படையிலேயே உங்கள் வலைப்பூவிற்கான(Blog) வருகையாளர்களைப் பெருக்க முடியும் என்பேன்.

வலைப்பூவிற்கான(Blog) வருகையாளர்களைப் பெருக்கும் நோக்கில் கருத்துகளைப் (Comments) பகிரப் போய் சொல்லெறியும் வேண்டியிருக்கிறேன். அதாவது, சிறந்த பகிர்வு அல்லது அருமையான பதிவு எனப் பல நூறு வலைப்பூக்களில்(Blog) கருத்துகளைப் (Comments) பகிர்ந்து வந்திருக்கிறேன். இதனைக் கண்ணுற்ற நண்பர்கள் இருவர் கீழுள்ளவாறு சொல்லெறி விட்டார்கள். அதனைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அண்ணே! என்னண்ணே!
எவர் வலைப்பூவிலும்
ஒரே கருத்தையே
அப்பிப் பூசி மெழுகி வாறியளே!
அவங்க அதைப் படிச்சிட்டு
உங்களை
காறித் துப்பிக் கழிச்சுப் போடுவாங்கண்ணே!

இப்படி ஒருவர் மின்னஞ்சலில், எனக்கு அருமையாக வழிகாட்டினார். அடுத்தவரோ, அருகில் நின்றிருந்தால் கன்னத்தில் அறைந்திருப்பார். அவரது மின்னஞ்சலில் கீழ்வருமாறு இருந்தது.

எனது வலைப்பூவிற்கு(Blog) வாருங்கள்
கருத்து (Comment) என்று சொல்லி.
எனது ஒவ்வொரு பதிவிலும்
'சிறந்த பகிர்வு' எனப் பதிவிடாமல்
ஒவ்வொரு பதிவையும்
பொறுமையாக வாசித்த பின்
பெறுமதியான கருத்து (Comment) இட வருவதாயின்
எனது வலைப்பூவிற்கு(Blog) வாருங்கள்
இல்லையேல்
எனது வலைப்பூவிற்கு(Blog)
வரவேண்டாமென எச்சரித்தும் இருந்தார்!

இதற்குப் பிறகு நான் கொஞ்சம் திருந்தி இருக்கிறேன். இனியும் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாகத் திருந்தி விடுவேன். வலைப்பூவிற்கான(Blog) வருகையாளர்களைப் பெருக்கும் நோக்கில் பிறரது தளங்களிற்குப் போய் கருத்துகளைப் (Comments) பகிரலாம். ஆனால், அத்தளப் பதிவர்களை நோகடிக்காமல் தங்கள் ஆற்றலைப் பகிர்ந்து வெற்ற பெற எனது வாழ்த்துகள்.

9 கருத்துகள் :

 1. தங்கள் வழிகா்ட்டியபடியேதான் நடந்து வருகிறேன்.வேலைப்பளு... உடல்சுகவீனம் போன்ற நாட்களைத் தவிர.........

  பதிலளிநீக்கு
 2. நல்ல ஆலோசனைகள்! குறிப்பாக கருத்து பகிர்தல் பற்றி நீங்கள் பெற்ற இரண்டு கருத்துரைகள் எல்லோருக்கும் பொருந்தும் வண்ணம் சிறப்பாக இருந்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 3. ஆலோசனை நன்று நண்பரே முடிந்தவரை எழுதுவோம் இதுவே எமது கொள்கை.

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு வழிகாட்டியாய் அமைந்துள்ளது இப்பதிவு ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியவையே

  பதிலளிநீக்கு
 5. நல்ல யோசனைகளைக் கூறியுள்ளீர்கள். சிலவற்றையாவது கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. சொல்லெறியுடன் கூடிய அனுபவப் பகிர்வு அருமை !இப்படியா கொலை வெறியுடன் கருத்து சொல்வது ?
  என் பதிவையும் குறிப்பிட்டு இருப்பதற்கு மிக்க நன்றி !
  #தமிழ்மணம் திரட்டி எனது தளத்தை இணைக்காத போதும் #இப்படி எழுதி இருப்பதன் அர்த்தம் என்னவென்று அறிய விரும்புகிறேன் .நீங்கள் பதிவை இணைப்பதில்லையா அல்லது அவர்கள் உங்களை தவிர்க்கிறார்களா?

  பதிலளிநீக்கு
 7. மிக மிக உளம் திறந்த, பிறர் என்ன நினைப்பாரோ என்று எண்ணாமல் உங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்திய பதிவு. மட்டுமல்ல நல்ல கருத்துகள் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் மின் அஞ்சலுக்கு வந்த கருத்துகள் பொதுவாக நிறைய பேருக்குக் பொருந்தும். நல்ல பதிவு நண்பரே!

  பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!