Translate Tamil to any languages.

செவ்வாய், 30 அக்டோபர், 2018

உளநோய்க்கு மருந்து உள்ளமே!


உள/மன நோய் வரலாம்!


அடிக்கடி நடைபேசியைச் சொறிவதும்
ஓய்வின்றி இணையத்தில் உலாவுவதும்
தொலைக்காட்சித் தொடரில் தலைகாட்டுதலும்
செய்யும் பணிகளில் ஒழுங்கின்மையும்
குடும்பத்தில் அன்பும் பண்பும் இல்லாமையும்
தோல்விகளைக் கண்டு துயருறுவதும்
வெற்றிகளைக் கண்டு பிறரை மதிக்காமையும்
பணத்தைக் கண்டதும் சேமித்து வைக்காமையும்
பணம் இல்லையென்றால் பிறரை நாடுவதும்
வாழ்வில் போதிய மகிழ்வைத் தராமையால்
உள/மன நோய்கள் எட்டிப் பார்க்குமே!
வழமையான வாழ்வில் தான் - எவருக்கு
பயன் மிக்க வழியில் நேரம் செலவழிக்காமை
பெறுமதியோடு பொழுதுகளை போக்காமை
நல்ல உறவுகளை அணைக்காமை
திட்டமிட்டுச் செயலில் இறங்காமை
வேண்டாத எதையும் எண்ணித் துயருறலும்
விரும்பியதை அடைய முடியாமல் துயருறலும்
உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்தாத வேளையில்
உள/மன நோய்கள் வரலாம் தானே!
கிட்டாதாயின் வெட்டென மறந்தும்
கைக்கெட்டியதை நிறைவோடு ஏற்பதும்
கைக்கெட்டியதைக் கையாளப் பயில்வதும்
உள்ளம் அமைதியுற நல்லதை நினைப்பதும்
உள/மன நோய்கள் வருவதைத் தடுக்குமே!
-----
உளநோயை உருவாக்காதீர்!
வீட்டுக்கு வீடு வாசல்படி தான்
உரிமையாளர் ஒப்புதல் இன்றி
உள் நுழைய இயலாதே!
ஒப்புதல் ஏதுமின்றி வீட்டிற்குள் நுழைந்தால்
உடமைகளைக் களவெடுக்கலாம் - அங்கே
கடிநாய்கள் இருப்பின் கடிவேண்டிச் சிக்கலாம்!
ஆளுக்கு ஆள் உள்ளம் தான்
உள்ளத்தின் விருப்பம் இன்றி
உள்ளத்தில் இடம் பிடிக்கேலாதே!
ஒப்புதல் இன்றி உள்ளத்தில் நுழைந்தால்
எதிர்ப்பும் வெறுப்பும் வெளியேற்றுமே
உள்ளத்தின் விருப்புக்கு இசைந்து விட்டால்
உண்மையிலே உள்ளத்தையே களவெடுக்கலாம்!

வீட்டின் உடமைகளைக் களவெடுத்தோர்
வாழ்வில் எப்போதும் எதிரியே!
உள்ளத்தைக் களவெடுத்தவர் எவரோ
அவரே வாழ்வில் அன்புக்கு உரியவர்
எவராச்சும் இந்த உண்மையை அறிவாரோ!
வீட்டின் உடமைகளைக் களவு கொடுத்தோர்
இழப்பை எண்ணி துயர் தாங்காமல்
உள்ளமும் உடலும் நோவுற வாழ்வாரே!
உள்ளத்தில் எதிர்ப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்திய
வாழ்வின் எதிரியை எண்ணி எண்ணி
உள்ளம் நொந்தவர் வாழ்வும் துயரே!
நம்மவர் வீடுகளிலும் சரி
நம்மவர் உள்ளங்களிலும் சரி
பாதிப்பும் வெறுப்பும் மலிந்து விட்டால்
உள்ளம் புண்ணாகக் கூடும் - அந்த
உளப்புண் நோக நோக உளநோயே!
மாற்றார் உள்ளங்களைப் புண்ணாக்கி
மாற்றாருக்கு உளநோயை உருவாக்குவோர்
உலகின் மாபெரும் கெட்ட உள்ளங்களே!
-----
தலைப்பு: உள/மன நோயை விரட்ட

நாம் எண்ணமிட்டது
எல்லாமே நடந்துவிட்டால்
இறைவன் இருப்பதை
நாம் மறந்துவிடக்கூடும்...
இனிவர இருப்பதிலும்
தோல்விகளைச் சந்திக்கக் கூடும்...
எதையும் எண்ணமிடலாம்
எண்ணமிட்டது எல்லாமே
இடம்பெறுமென நம்பக்கூடாது!
பழசுகளை மறந்து தோல்விகளைக் கடந்து
எது எப்ப நடக்க வேண்டுமோ
அது அப்ப நடந்தால் போதுமென
இதை இப்பவே செய்தால் சரியென
எதிலும் இறங்கினால் வெல்ல வாய்ப்புண்டு!
எண்ணியது நடக்க வேண்டுமென்றோ
தோல்விகள் வரக்கூடாது என்றோ
எவரும் நம்பிவிடக்கூடது - எப்பவும்
வருவதும் வராததும் நன்மைக்கே
கிடைப்பதும் கிடைக்காததும் நிறைவே
எது வரினும் நாம் தளர மாட்டோமென
தன்னம்பிக்கை கொண்வருக்கு
உள/மன நோயல்ல எந்த நோயுமே
விரட்ட முன்னமே ஓடி ஒளியுமே!
-----
உளநோய்க்கு மருந்து உள்ளமே!
 
உலகத்தில 24 மணி நேரம் தான்
நாளொன்றாகப் பேணப்படுகிறதாயினும்
8 மணி நேரம் தூக்கம் தேவை தான்
8 மணி நேரம் வேலை போகத் தான்
8 மணி நேரம் பொழுது போகத் தானென
எவராச்சும் பொழுது போக்குகிறாரா?

பயனுள்ளதாகப் பொழுது போக்கினால்
அறிவாளியாகவும் நலமாகவும் வாழலாமே!
பயனேதுமின்றிப் பொழுது போக்கினால்
தேவையற்றவை தலையில குந்தியிருக்க
எதை எதையோ தேவையின்றி நினைக்க
உடல் வலுவும் தளர உள்ளமும் குழம்புமே!

பொழுது போக்கும் பயனுள்ளதாக இருப்பின்
உள்ளத்தில் அமைதியும் மகிழ்வும் உண்டாம்
உளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்
பயனேதும் இன்றிய பொழுது போக்கினை
பயன் மிக்க மகிழ்வைத் தரக் கூடியதாக
நாமே நெறிப்படுத்தி வாழப் பழக வேணுமே!

தான் வாழத் தனக்கு வேண்டியதை ஏற்று
தான் ஒதுங்கி வாழ்ந்து விட்டால் சிக்கலேது?
வேண்டாத சிக்கலை வேண்டிக் கட்டிப்போட்டு
வாழ் நாள் முழுவதும் துயரப்படுவதா?
நெருக்கடி நிலையில் உதவிக் கொள்ளலாம்
நேரடி மோதலில் குறுக்கிட்டுச் சாவதா?
உளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்
உணர்வுகளை கட்டுப்படுத்தி அமைதியைப் பேணலாமே!

விரும்பிய எல்லாம் அடையலாம் தான்
கையிருப்புக்கு ஏற்பவே அடைய முயலலாம்
கையிருப்பை மீறி அடைய முயன்று
கையில் இல்லாததைக் கொடுக்க இயலாது
சிக்கித் தவிக்கையில் உள்ளம் சிதறலாம்
உளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்
கைக்கு எட்டியதைக் கையாள முயலலாமே!

வேலைகள் இருப்பின் பிற்போடக் கூடாது
பிற்போட்டவை நெருக்கடியைத் தரலாம் மறவாதே!
நெருக்கடி நிலையிலே உள்ளம் தடுமாறலாம்
உள்ளம் அமைதி அடையாது இருப்பின்
உளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்
நெருக்கடி நிலைக்கு விடுதலை காணலாமே!

காதல், திருமணம், குடும்பம், பிள்ளைகள்
வாழ்க்கையில் நிறைவாக அமையாது விட்டால்
உள்ளத்தில் அமைதி என்றுமே இருக்காதே!
திட்டமிடல் ஒழுங்கின்மை அமைதியைக் குலைக்கலாம்
உளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்
திட்டமிடலும் ஒழுங்குபடுத்தலும் முறையாகப் பேணலாமே!

சட்டென்று பின்விளைவைப் பகுத்தறியாது
முடிவு எடுத்தலில் பிழைத்து விட்டால்
பொன்னான எதிர்காலமும் மண்ணாகிப் போகலாம்!
உளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்
பகையேதும் முளைத்து விடாமல் பார்த்தே
ஊரோடு ஒத்துப் போகக் கூடியதாகவே
நீண்ட கால நோக்கில் எண்ணிப் பார்த்தே
கடந்த காலப் படிப்பினைகளைக் கருத்திற் கொண்டே
முடிவெடுத்துக் கொண்டால் நெடுநாள் வாழலாமே!

சனி, 13 அக்டோபர், 2018

பொத்தகம் வெளியிட எண்ணியுள்ளேன்!


எனது 'உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் (https://plus.google.com/u/0/communities/110989462720435185590)' குழும உறுப்பினர்களுக்கும் 'தமிழ் வலைப்பதிவகம்' வாட்ஸ்அப் குழும உறுப்பினர்களுக்கும் ஏனைய குழும உறுப்பினர்களுக்கும் எனது வலைப்பக்கம் வந்து பின்னூட்டம் தந்து ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கியதோடு அறிவூட்டிய அறிஞர்களாகிய வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி. என் அன்புக்குரியவர்களே! நான் "அலைகள் ஓய்வதில்லை" என்ற கவிதைப் பொத்தகம் அச்சிட்டு வெளியிட எண்ணியுள்ளேன்!

2019 மாசி யாழ்ப்பாணத்தில் வெளியீட்டு விழாவும் அதன் பின் தமிழகத்தில் (இடம், காலம், நேரம் பின்னர் தருகின்றேன்) அறிமுக விழாவும் (வலைப்பதிவர்களுடனான சந்திப்பும்) நடாத்த எண்ணியுள்ளேன். பொத்தக உருவாக்கத்தை (அச்சிடும் பணி) தமிழகம்-திருச்சி இனிய நந்தவனம் சஞ்சிகை குழுமம் செய்து தருகிறது. நான் வெளியிடவுள்ள எனது பொத்தகத்தில் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களிடம் இருந்து 'எனது படைப்பாக்கத் திறன்' பற்றிய சிறு குறிப்பினைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

விரும்பும் உள்ளங்களே! P.P.Size படம், புனைப் பெயர், இயற் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைப்பக்க முகவரி ஆகியவற்றுடன் 'எனது படைப்பாக்கத் திறன்' பற்றிய தங்கள் எண்ணங்களை சிறு குறிப்பாக 02/11/2018 இற்கு முன்னதாக wds0@live.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவுங்கள். வலைவழி நமது தமிழ் இலக்கிய உறவு தொடரும். தொடரவே நானும் விரும்புகின்றேன்.

நான் 1986 இலிருந்து எழுதினாலும் இதுவரை பொத்தகமேதும் வெளியிடாமைக்கு பொருண்மியும் ஏதுவாகலாம். அச்சடித்த பொத்தக வெளியீட்டில் வேறு சில சிக்கலும் வரலாம். எனது மண்ணில் (யாழில்) கண்டவற்றைக் கீழே பதிவு செய்துள்ளேன்.

என் நிலை என்னவாகுமோ?


பாவலர் ஒருவள்
பாக்களின் தொகுப்பைப் பொத்தகமாக்கி
வெளியீட்டு விழாவுக்கு
1000 அழைப்பையும் அனுப்பியிருந்தார்!
வெளியீட்டு விழாவிற்கு வந்ததோ 50 ஆள்கள்
அன்பளிப்பாகக் கொடுத்ததோ 10 ஆம்
200 உரூபா பொத்தகத்தை
வேண்டியவர் 10 ஆள்களாம்
எஞ்சிய 480 உட்பட அச்சடிக்க 81000 ஆம்
வெளியீட்டு நாள் செலவுக்கு 51000 ஆம்
நன்றியுரையில் சொல்லியழுத
பாவலரின் கதை கேட்டு
என் உள்ளம் புண்ணாயிற்று!
உண்மையில் நான் கூட
'பா நடையில புனைந்தவை' என்ற
பொத்தகத்தை அச்சடித்து வெளியிட
எண்ணி எண்ணி அழுகின்றேன்
'என் நிலை என்னவாகுமோ?' என்று தான்!

நூலின் பெறுமதியைக் கொடுத்து வாங்கலாமே!

பணக்காரன், வெளிநாட்டுக்காரன்
நூல் வெளியீட்டுக்கு அஞ்சான்
இருப்பினும் நூலை வெளியிட்டால்
அன்பளிப்பாக அள்ளிச்செல்ல ஆளிருப்பர்!
அப்படி வெளியிட்டு நட்டப்பட்ட
பணக்காரனின், வெளிநாட்டுக்காரனின்
வயிற்றெரிச்சலை, துயரத்தை எவரறிவார்?
முழு ஏழைக்கு நூல் வெளியீடு
எட்டாப் பொருத்தமாக இருக்குமே!
முழு ஏழை பாரதியைப் போல
தெருவிலே கரித்துண்டாலே எழுதி
எண்ணங்களை வெளியிட்டுச் சுவைப்பான்!
அரை ஏழைக்குத் தான்
அடுத்தவர் உதவி இருப்பின்
நூல் வெளியீட்டுக்கு வாய்ப்புண்டு!
இருப்பினும் சூழலில் கூடியுள்ளோருக்கு
வாய் மூலம் வெளியிட்டு மகிழ்வார்!
வாழ்வை எளிமையாக நடாத்தும் அக்காவோ
அத்தானின் சங்கிலியை
அடகு வைத்து வெளியிட்ட
'பட்டினி' கதைத்தொகுப்பை விற்று
அத்தானின் சங்கிலியை மீட்க முடியாமல்
அக்காவும் சாவை அணைத்துக் கொண்டாள்!
உண்மையைத் தான் சொல்லுறன்
நான் எழுதுவது கவிதையல்ல...
கவிதை போல எழுதியதைத் தொகுத்து
நூலாக வெளியிடத் தான் - நானும்
மனைவியின் தாலிக்கொடியை அடகு வைத்தேன்!
நாளை நடாத்தும் வெளியீட்டு விழாவில்
வெற்றுத் தபாலுறையை நீட்டாது
20, 50ஐ உட்தள்ளித் தபாலுறையை நீட்டாது
நூலின் பெறுமதி நானூறைச் செலுத்தி
வருகை தருவோர் நூல்களை வேண்டினாலே
மனைவியின் தாலிக்கொடியை மீட்பேன்
இல்லையேல் நானும் சாவதே வழி!
நூலை வெளியிட்டோர் வயிற்றில அடிக்காமல்
வெளியீட்டுக்கு வருகை தருவோர்
நூலின் பெறுமதியைக் கொடுத்து உதவினாலே
'மகாவமிசம்' போல அழகானதொரு
'தமிழரின் தாயகம் இலங்கை' என
தமிழர் வரலாற்றைத் தானும்
எவரும் எழுத முன்வருவார் என்பேன்!

சனி, 6 அக்டோபர், 2018

கவிதை எழுதப் பழகலாம் வாங்க!


நல்ல தமிழ் சொல்களாலான வரிகள், உணர்வு வீச்சாக அமைய,
ஓசை நயம் வந்தமர, எதுகையும் மோனையும் கூடிவர, வாசிப்பவர் மீள மீள வாசிக்கத் தூண்டும் வரிகளாக அமைந்தால் கவிதை எனலாமென நண்பர் ஒருவர் எனக்கு மதியுரை கூறினார். அதன்படிக்குக் கீழ் வரும் பகுதியைக் கவிதையாக்க முனைகின்றேன்.

கவிதைக்கான சூழல்:
கடின உழைப்பின் பயனாக ஈட்டிய பணத்தில் சமையல் பொருள்கள் அப்பா வேண்டிவர, அரைப் பட்டினியாக இருந்த அம்மாவும் சட்டுப் புட்டென உணவு ஆக்கிவிட்டார். வறுமையைத் தெரியாத வண்ணம் பிள்ளைகளுக்கு அப்பெற்றோர் அன்றைய உணவை ஊட்டி மகிழ்ந்தனர். பெற்றோர் இவ்வாறு பிள்ளைகளை வளர்க்க; பிள்ளைகள் பெற்றோரின் நிலையை உணர்ந்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அதுவே தமக்கும் தம்பெற்றோருக்கும் தம் நாட்டுக்கும் செய்கின்ற நற்பணியாகும்.

இச்சூழலுக்கு ஏற்ற கவிதை எது?
1.
கடின உழைப்பின் பயனாக ஈட்டிய பணத்தில்
சமையல் பொருள்கள் அப்பா வேண்டிவர,
அரைப் பட்டினியாக இருந்த அம்மாவும்
சட்டுப் புட்டென உணவு ஆக்கிவிட்டார்.
வறுமையைத் தெரியாத வண்ணம் பிள்ளைகளுக்கு
அப்பெற்றோர் அன்றைய உணவை ஊட்டி மகிழ்ந்தனர்.
பெற்றோர் இவ்வாறு பிள்ளைகளை வளர்க்க;
பிள்ளைகள் பெற்றோரின் நிலையை உணர்ந்து
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
அதுவே
தமக்கும் தம்பெற்றோருக்கும் தம் நாட்டுக்கும்
செய்கின்ற நற்பணியாகும்.

*இப்படிக் கட்டுரை வரிகளைத் துண்டு துண்டாக எழுதினால் கவிதை அமைந்துவிடாதே!

2.
பகலவன் எரிந்தெரிந்து ஒளி தருவது போல
அப்பாவும் கடுமையாக உழைத்து
வருவாயோடு வருகையில் தான்
அரைப் பட்டினியோடு கிடந்த அம்மா
அடுப்பில உலை வைத்துச் சமைப்பார்!
வறுமையின் தாக்கமும் குடும்பத் துயரும்
பிள்ளைகளறியா வண்ணம் உணவூட்டி வளர்த்த
பெற்றோருக்குப் பிள்ளைகள் படித்து அறிஞராகணுமே!
இன்றைய படிக்கிற பிள்ளைகளை நம்பியே
நாளைய நம்நாடு முன்னேறக் காத்திருக்கிறதே!

*எனது நண்பர் சொன்னபடி கவிதை ஆகவில்லையே! ஒரு படி முன்னேறினாலும் கவிதை அமைய முயல வேண்டும்

3.
281 நாள் எம்மைச் சுமந்த அம்மா
அரைப் பட்டினியாக முழுப் பட்டினியாக
தான் நொந்தும் பிள்ளை நோகாமல்
பகலவனைப் போல எரிந்தெரிந்து உழைத்தே
பணமீட்டிச் சமையல் பொருளோடு வர
வீட்டில சமையல் சாப்பாடு நிகழுமே!
வறுமையும் துயரமும் பிள்ளைக்குத் தெரியாமல்
நாளும் தப்பாமல் பட்டினி போடாமல்
அன்பும் அறிவும் ஊட்டி பிள்ளைகளை
வளர்த்தெடுப்பதில் பெற்றோர் பங்கு உயர்வானதே!
பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆற்றும் பணிக்கு
பிள்ளைகள் தம் அறிவைப் பெருக்கி
ஊருக்கும் நாட்டுக்கும் நற்பணி ஆற்றலாமே!

*இதெல்லாம் கவிதையென்றால், உண்மையான கவிதையை என்னவென்று சொல்லலாம். முயன்றால் முடியாதது ஏதுமில்லை.

4.
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அம்மா
எவ்வளவு துன்பம் வரினும் தளராமல்
அன்பும் ஆதரவும் கலந்து சமைப்பார்!
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அப்பா
எவ்வளவு கடினமான உழைப்பும் பார்த்து
அறிவும் அணைப்பும் கலந்து பேணுவார்!
வறுமை, துன்பம், துயரம் இருப்பினும்
பொறுமை மிக்க பெற்றோர் பிள்ளைகளை
மகிழ்வோடு உள நிறைவோடு வளர்க்கின்றார்!
மகிழ்ச்சியாகப் பிள்ளைகள் படித்துப் பெற்றோருக்கு
அறிஞராகி ஊருக்கும் நாட்டுக்கும் பணியாற்றலாமே!

*கொஞ்சம் கவித்துவம் அரும்பினாலும் சொல்களை, அடிகளைக் குறைத்தால் நல்ல கவிதை வரும் தானே!

5.
எட்டுத் திக்கிலும் பிள்ளைகள் புகழீட்ட
கட்டுப்பணம் உழைத்து வாழவைத்த அப்பா!
அன்பும் பண்பும் பாலோடு ஊட்டிய
அன்பான அம்மாவைப் போல எவருமுண்டோ?
வறுமையும் துன்பமும் அறியாமல் வளர்த்த
மறுமையிலும் மறக்க இயலாத பெற்றோருக்காக
பிள்ளைகள் படித்து ஊருக்கும் நாட்டுக்கும்
கள்ளமின்றி நற்பணி ஆற்றுதல் வேண்டுமே!

*கொஞ்சம் கவிதை அரும்புவதாகத் தெரிந்தாலும் சொல்களை, அடிகளைக் குறைத்தால் சிறந்த கவிதை கிட்டுமே!

6.
பெற்றோருக்கு நிகராகக் கடவுளும் இல்லையே!
உற்றாரும் ஊராரும் உற்று நோக்கவே
பெற்றோர் பெத்து வளர்த்து அறிஞராக்கவே
கற்ற பிள்ளையும் நற்பணி ஆற்றலாமே!
ஊரும் நாடும் உலகும் மேன்மையுறவே!

இப்படித்தான் நானும் கவிதை எழுதப் பழகினேன். ஆயினும், நான் எழுதியது கவிதை அல்ல. இப்படி நீங்களும் கவிதை எழுதப் பழகிப் பாருங்கள்; நல்ல கவிதை உங்களால் ஆக்க முடியுமே!