Translate Tamil to any languages.

செவ்வாய், 30 அக்டோபர், 2018

உளநோய்க்கு மருந்து உள்ளமே!


உள/மன நோய் வரலாம்!


அடிக்கடி நடைபேசியைச் சொறிவதும்
ஓய்வின்றி இணையத்தில் உலாவுவதும்
தொலைக்காட்சித் தொடரில் தலைகாட்டுதலும்
செய்யும் பணிகளில் ஒழுங்கின்மையும்
குடும்பத்தில் அன்பும் பண்பும் இல்லாமையும்
தோல்விகளைக் கண்டு துயருறுவதும்
வெற்றிகளைக் கண்டு பிறரை மதிக்காமையும்
பணத்தைக் கண்டதும் சேமித்து வைக்காமையும்
பணம் இல்லையென்றால் பிறரை நாடுவதும்
வாழ்வில் போதிய மகிழ்வைத் தராமையால்
உள/மன நோய்கள் எட்டிப் பார்க்குமே!
வழமையான வாழ்வில் தான் - எவருக்கு
பயன் மிக்க வழியில் நேரம் செலவழிக்காமை
பெறுமதியோடு பொழுதுகளை போக்காமை
நல்ல உறவுகளை அணைக்காமை
திட்டமிட்டுச் செயலில் இறங்காமை
வேண்டாத எதையும் எண்ணித் துயருறலும்
விரும்பியதை அடைய முடியாமல் துயருறலும்
உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்தாத வேளையில்
உள/மன நோய்கள் வரலாம் தானே!
கிட்டாதாயின் வெட்டென மறந்தும்
கைக்கெட்டியதை நிறைவோடு ஏற்பதும்
கைக்கெட்டியதைக் கையாளப் பயில்வதும்
உள்ளம் அமைதியுற நல்லதை நினைப்பதும்
உள/மன நோய்கள் வருவதைத் தடுக்குமே!
-----
உளநோயை உருவாக்காதீர்!
வீட்டுக்கு வீடு வாசல்படி தான்
உரிமையாளர் ஒப்புதல் இன்றி
உள் நுழைய இயலாதே!
ஒப்புதல் ஏதுமின்றி வீட்டிற்குள் நுழைந்தால்
உடமைகளைக் களவெடுக்கலாம் - அங்கே
கடிநாய்கள் இருப்பின் கடிவேண்டிச் சிக்கலாம்!
ஆளுக்கு ஆள் உள்ளம் தான்
உள்ளத்தின் விருப்பம் இன்றி
உள்ளத்தில் இடம் பிடிக்கேலாதே!
ஒப்புதல் இன்றி உள்ளத்தில் நுழைந்தால்
எதிர்ப்பும் வெறுப்பும் வெளியேற்றுமே
உள்ளத்தின் விருப்புக்கு இசைந்து விட்டால்
உண்மையிலே உள்ளத்தையே களவெடுக்கலாம்!

வீட்டின் உடமைகளைக் களவெடுத்தோர்
வாழ்வில் எப்போதும் எதிரியே!
உள்ளத்தைக் களவெடுத்தவர் எவரோ
அவரே வாழ்வில் அன்புக்கு உரியவர்
எவராச்சும் இந்த உண்மையை அறிவாரோ!
வீட்டின் உடமைகளைக் களவு கொடுத்தோர்
இழப்பை எண்ணி துயர் தாங்காமல்
உள்ளமும் உடலும் நோவுற வாழ்வாரே!
உள்ளத்தில் எதிர்ப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்திய
வாழ்வின் எதிரியை எண்ணி எண்ணி
உள்ளம் நொந்தவர் வாழ்வும் துயரே!
நம்மவர் வீடுகளிலும் சரி
நம்மவர் உள்ளங்களிலும் சரி
பாதிப்பும் வெறுப்பும் மலிந்து விட்டால்
உள்ளம் புண்ணாகக் கூடும் - அந்த
உளப்புண் நோக நோக உளநோயே!
மாற்றார் உள்ளங்களைப் புண்ணாக்கி
மாற்றாருக்கு உளநோயை உருவாக்குவோர்
உலகின் மாபெரும் கெட்ட உள்ளங்களே!
-----
தலைப்பு: உள/மன நோயை விரட்ட

நாம் எண்ணமிட்டது
எல்லாமே நடந்துவிட்டால்
இறைவன் இருப்பதை
நாம் மறந்துவிடக்கூடும்...
இனிவர இருப்பதிலும்
தோல்விகளைச் சந்திக்கக் கூடும்...
எதையும் எண்ணமிடலாம்
எண்ணமிட்டது எல்லாமே
இடம்பெறுமென நம்பக்கூடாது!
பழசுகளை மறந்து தோல்விகளைக் கடந்து
எது எப்ப நடக்க வேண்டுமோ
அது அப்ப நடந்தால் போதுமென
இதை இப்பவே செய்தால் சரியென
எதிலும் இறங்கினால் வெல்ல வாய்ப்புண்டு!
எண்ணியது நடக்க வேண்டுமென்றோ
தோல்விகள் வரக்கூடாது என்றோ
எவரும் நம்பிவிடக்கூடது - எப்பவும்
வருவதும் வராததும் நன்மைக்கே
கிடைப்பதும் கிடைக்காததும் நிறைவே
எது வரினும் நாம் தளர மாட்டோமென
தன்னம்பிக்கை கொண்வருக்கு
உள/மன நோயல்ல எந்த நோயுமே
விரட்ட முன்னமே ஓடி ஒளியுமே!
-----
உளநோய்க்கு மருந்து உள்ளமே!
 
உலகத்தில 24 மணி நேரம் தான்
நாளொன்றாகப் பேணப்படுகிறதாயினும்
8 மணி நேரம் தூக்கம் தேவை தான்
8 மணி நேரம் வேலை போகத் தான்
8 மணி நேரம் பொழுது போகத் தானென
எவராச்சும் பொழுது போக்குகிறாரா?

பயனுள்ளதாகப் பொழுது போக்கினால்
அறிவாளியாகவும் நலமாகவும் வாழலாமே!
பயனேதுமின்றிப் பொழுது போக்கினால்
தேவையற்றவை தலையில குந்தியிருக்க
எதை எதையோ தேவையின்றி நினைக்க
உடல் வலுவும் தளர உள்ளமும் குழம்புமே!

பொழுது போக்கும் பயனுள்ளதாக இருப்பின்
உள்ளத்தில் அமைதியும் மகிழ்வும் உண்டாம்
உளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்
பயனேதும் இன்றிய பொழுது போக்கினை
பயன் மிக்க மகிழ்வைத் தரக் கூடியதாக
நாமே நெறிப்படுத்தி வாழப் பழக வேணுமே!

தான் வாழத் தனக்கு வேண்டியதை ஏற்று
தான் ஒதுங்கி வாழ்ந்து விட்டால் சிக்கலேது?
வேண்டாத சிக்கலை வேண்டிக் கட்டிப்போட்டு
வாழ் நாள் முழுவதும் துயரப்படுவதா?
நெருக்கடி நிலையில் உதவிக் கொள்ளலாம்
நேரடி மோதலில் குறுக்கிட்டுச் சாவதா?
உளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்
உணர்வுகளை கட்டுப்படுத்தி அமைதியைப் பேணலாமே!

விரும்பிய எல்லாம் அடையலாம் தான்
கையிருப்புக்கு ஏற்பவே அடைய முயலலாம்
கையிருப்பை மீறி அடைய முயன்று
கையில் இல்லாததைக் கொடுக்க இயலாது
சிக்கித் தவிக்கையில் உள்ளம் சிதறலாம்
உளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்
கைக்கு எட்டியதைக் கையாள முயலலாமே!

வேலைகள் இருப்பின் பிற்போடக் கூடாது
பிற்போட்டவை நெருக்கடியைத் தரலாம் மறவாதே!
நெருக்கடி நிலையிலே உள்ளம் தடுமாறலாம்
உள்ளம் அமைதி அடையாது இருப்பின்
உளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்
நெருக்கடி நிலைக்கு விடுதலை காணலாமே!

காதல், திருமணம், குடும்பம், பிள்ளைகள்
வாழ்க்கையில் நிறைவாக அமையாது விட்டால்
உள்ளத்தில் அமைதி என்றுமே இருக்காதே!
திட்டமிடல் ஒழுங்கின்மை அமைதியைக் குலைக்கலாம்
உளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்
திட்டமிடலும் ஒழுங்குபடுத்தலும் முறையாகப் பேணலாமே!

சட்டென்று பின்விளைவைப் பகுத்தறியாது
முடிவு எடுத்தலில் பிழைத்து விட்டால்
பொன்னான எதிர்காலமும் மண்ணாகிப் போகலாம்!
உளநோய்க்கு மருந்து உள்ளமே என்றால்
பகையேதும் முளைத்து விடாமல் பார்த்தே
ஊரோடு ஒத்துப் போகக் கூடியதாகவே
நீண்ட கால நோக்கில் எண்ணிப் பார்த்தே
கடந்த காலப் படிப்பினைகளைக் கருத்திற் கொண்டே
முடிவெடுத்துக் கொண்டால் நெடுநாள் வாழலாமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!