Translate Tamil to any languages.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

காதல் மாதத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவை!

அன்புக்கு மறுபெயர் காதல் என்பாங்க! வாழ்க்கைப் பயணம் இலகுவாக நகர "அன்பு" என்ற ஊக்க உணர்வு தேவை. அந்த ஊக்க உணர்வான அன்பு அதிகமாகப் பற்றுதல் அதிகமாகிறது. ஒருவர், ஒருவர் மீது வைத்திருக்கும் பற்றுத் தான் "காதல்" எனலாம். அதாவது அதிக அன்பு காட்டுதலைக் "காதல்" என்று சொல்லலாம். அதிக அன்பு காட்டுதலால் ஒருவரது உள்ளத் தாழ்ப்பாளைத் (கதவைத்) திறக்க முடிகிறது. அதனால் தான் "அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்!" என்பாங்க! இவ்வாறான காதல் இயற்கையாக அமையும். இவ்வாறு அமைந்த காதல் இணையர்களுக்குச் சோதிடத்தில் குறிப்புப் பார்க்கத் தேவை இல்லையாம்.


சமகாலத்தில் (2000 இன் பின்) திரைப்படப் பாணியில் "காதல்" என்ற போர்வையில் நல்லுறவுகள் கெட்டுப் போகின்றன. "கண்டதே காதல் கொண்டதே கோலம்" என்ற நாடகமல்லவா அரங்கேறுகிறது. இன்றைய இளசுகள் நடித்துக் காட்டுவது "காதல்" என்றால் என்னவென்று அறியாத தெருக்கூத்துத் தானே! இந்நிலை குமுகாயத்தில்/ மக்களாயத்தில (சமூகத்தில) பல கெடுதல்களை விளைவிக்கின்றன.

அப்படியொரு கெடுதல் 'தற்கொலை செய்தல்' எனலாம். இன்னொரு கெடுதல் 'கருக்கலைப்பு' எனலாம். அடுத்தொரு கெடுதல் "குழந்தையைப் பெற்றுத் தெருக் குப்பையில் இடுதல்" எனலாம். இன்னும் பல அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் கருத்தில் வைத்து "இது தான் காதலா?" என்ற தலைப்பில் மின்நூல் வெளியிடுவதோடு மூன்று சிறந்த கவிதைகளுக்குப் பரிசில் வழங்குவதாகவும் அறிவித்துள்ளோம். தாங்கள் கவிதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 28-02-2018 என்பதனை நினைவூட்டுகிறோம்.

கவியரசர்களே!
கவிமன்னர்களே!
கவிவேந்தர்களே!
கவிக்கோக்களே!

உங்கள் கவித்திறனை வெளிக்காட்ட நல்ல களம். உடனே உங்கள் கவிதைகளை கீழ்வரும் இணைப்பில் தெரிவித்தவாறு அனுப்பி வைக்கவும்.

2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

புதன், 14 பிப்ரவரி, 2018

காதலர் நாள் படிப்பு


30 ஆண்டுகளுக்கு முன்
(இப்ப எனக்கு 50)
நான்
காதலிக்க நினைத்த எவரையும்
என்னால் காதலிக்க முடியவில்லை...
எவளோ
என்னைக் காதலிக்க நினைத்தாலும்
அவளால் காதலிக்க முடியவில்லை...
வாழ்வில்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
கடவுளை நினைப்பவர் எவர்?
சிலர்
ஒரு தலைக் காதலாக
சொல்லிக் கொள்ளாமல் இணைவதில்லை
சிலர்
காதலைச் சொல்லி இணைந்தாலும்
திருமணம் வரை செல்வதில்லை
சிலர்
திருமணமான பின்னர் காதலிப்பதும்
(நானும் என்னில்லாளும் போல)
வாழ்வில் நிகழ்ந்தே தீரும்
ஆதாலால்,
உள்ளங்கள் உரசுவதால்
ஊற்றெடுக்கும் அன்பால் (காதலால்)
உறவாடும் உறவுகள் எல்லோருக்கும்
காதலர் நாள் வாழ்த்துகள்!
அதுவும்
வலன்டைன் நினைவாய் - எல்லோருக்கும்
காதலர் நாள் வாழ்த்துகள்!

"கி.பி.207 இல் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம் கிளாடியஸ், ரோமானிய வீரர்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால் சலனங்கள் எதுவும் இல்லாமல் முழு ஆவேசத்துடன் போர் புரிவார்கள் எனக் கருதினார். ஆகவே படையில் சேரும் இளைஞர்களுக்கு‚ 'திருமணம் ஆகியிருக்கக் கூடாது; காதலிக்கக்கூடாது' எனச் சட்டமிட்டார் மன்னர்.

காதலை எப்படி ஒதுக்கி வைக்க முடியும்? வீரர்கள் இரகசியமாகக் காதலித்தார்கள். அவர்களை ஆதரித்த 'வலன்டைன்' என்னும் பாதிரியார் இளைஞர்களுக்கு இரகசியமாக திருமணம் செய்து வைத்தார். விஷயம் தெரிந்து, பாதிரியார் சிறையில் தள்ளப்பட்டார்.

ஆனால், பாதிரியாராலேயே காதலிலிருந்து தப்ப முடியவில்லை. சிறை அதிகாரியின் பார்வை இழந்த மகள் அவருக்கு பணிவிடை செய்ய, காதல் மலர்ந்து விட்டது. 'இறைவா! இந்தப் பெண்ணுக்குப் பார்வை கொடு!' என்று வேண்டி சிறையில் தவம் இருந்தார் வலன்டைன். பெண்ணுக்குப் பார்வை கிடைத்தது.

இதையெல்லாம் கேள்விப்பட்ட மன்னர் கிளாடியஸ் கோபம் கொண்டு பாதிரியாரின் தலையைச் சீவும்படி ஆணையிட்டார். அதே ஆண்டு பாதிரியார் வலன்டைன் கொல்லப்பட்ட நாள் பெப்ரவரி 14 ஆகும்." என்ற தகவலை http://www.tamilwin.com/articles/01/135413 வலைப்பக்கமொன்றில் படித்தேன்.

அதாவது, அந்த 'வலன்டைன்' என்னும் பாதிரியார் சாவடைந்த நாளான மாசி 14 ஐக் "காதலர் நாள் (வலன்டைன்ஸ் டே)" என்றழைப்பதாக நானறிந்தேன். உண்மைக் காதல் எதுவென உலகிற்கு உரைத்த 'வலன்டைன்' என்னும் பாதிரியார் வாழ்வு பலருக்குப் பாடமாகட்டும். இதனைப் படித்த பின் காதலிக்கலாம் வாங்க. ஏனெனில், நீண்ட ஆயுளுக்கு அன்பு (காதல்) நல்மருந்தாம்.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 07

வலைப்பூக்களால் வருவாய் இல்லையென
மூடிவைச்சிட்டு ஒதுங்கியோரும் - கொஞ்சம்
வலைப்பூக்களை மேம்படுத்தலாம் வாங்க...
முகநூல் பக்கம் போனோரும் - கொஞ்சம்
வலைப்பூக்களை மேம்படுத்தலாம் வாங்க...
ஓர் ஏழலில் ஒரு பதிவு போதும்
ஓர் அட்சென்ஸ் கணக்கும் போதும்
நண்பர்களை அணைத்துச் சென்றால்
கருத்துப் பதிவும் பக்கப் பார்வையும்
தானாக வந்து சேர்ந்து கொள்ளும்
அட்சென்ஸ் விளம்பரம் இணைத்து
இணையவழி வருவாயும் ஈட்டலாம்!

இனி எல்லாம் கூகிள் அட்சென்ஸ் தான்.
கூகிள் தமிழை ஏற்றுகொண்டது (அங்கீகரித்தது).
இனி எல்லாம் கூகிள் அட்சென்ஸ் தான்.
எல்லோரும் வலைப்பக்கம் வாங்க...
வாங்க... வலைப்பக்கம் எங்கும்
அட்சென்ஸ் விளம்பரம் இணைத்து
இணையவழி வருவாய் ஈட்டலாம்!
அதாவது, அட்சென்ஸ் ஊடாக
வருவாய் ஈட்டலாம் வாங்க...!

கொஞ்சம் அட்சென்ஸ் பற்றி
சொல்லித் தாவென்று கேட்க
எவரும் முன்வரலாம் - அவர்களுக்காக
இரு அறிஞர்களின் வழிகாட்டல்
பதிவுகளைப் பகிருகிறேன் இங்கே!

இனி தமிழ் பதிவர்களுக்கும் Google விளம்பர வருமானம் கிடைக்கும்
https://senthilmsp.blogspot.com/2018/02/google-adsense-income.html

இனி தமிழிலும் கூகிள் அட்சென்ஸ் (Adsense in Tamil) வசதிகள்


மேற்காணும் ஒளிஒலி (Video) பதிவினைக் கவனித்துப் போதிய வழிகாட்டலைப் பெறவும். இந்த ஒளிஒலி (Video) பதிவு, கூகிள் அட்சென்ஸ் பயன்படுத்தக்கூடிய மொழிகளில் தமிழைச் சேர்க்க முன் ஆக்கப்பட்டது. ஆகையால், கூகிள் அட்சென்ஸ் தமிழுக்குப் பாவிக்க இயலாது என்பதைத் தவிர்க்கவும். தற்போது தமிழ் வலைப்பக்கங்களில் கூகிள் அட்சென்ஸைப் பாவிக்கலாம்.

சந்திப்போம் பிரிவோம் சிந்திப்போம்


அடிக்கடி எல்லோரும் சந்திக்கிறோம் தானே
அடிக்கடி எல்லோரும் பிரிகின்றோம் தானே
எதுக்கடி எல்லோரும் சிந்திக்க மறக்கிறாங்க...

வாழ்வில் பலரைச் சந்திக்கின்றோம் தானே
சந்தித்த பலரும் பிரிகின்றோம் தானே
பிரிந்த பின்னராவது சிந்திக்கின்றோமா?

விபத்துப் போலச் சந்தித்தோம் தானே
சந்திப்புகள் தொடராமலே பிரிந்தோம் தானே
பிரிவுகள் உறுத்தினாலும் சிந்தித்தோமா?

எதிர்பாராமலே எல்லோரும் சந்திக்கிறோம் தானே
எதிர்பார்ப்புகள் ஈடேறாமலே பிரிகின்றோம் தானே
பிரிவுகளால் பாதிப்புறச் சிந்திக்கின்றோமா?

முன்பின் அறியாமலே சந்தித்தோம் தானே
முழுமையாகப் பழகாமலே பிரிந்தோம் தானே
பிரிவையும் இழப்பாகச் சிந்தித்தோமா?

தவிர்க்கமுடியாத சந்திப்பும் இயல்பு தானே
எதிர்பார்க்காத பிரிவும் இயல்பு தானே
சந்திப்பும் பிரிவும் சிந்திக்க வைக்கிறதா?

நேற்றைய சந்திப்பும் நாளையும் தொடரும் தானே
நாளைய பிரிவும் நம்பாமலே நிகழும் தானே
இன்றைய சொல்லும் செயலும் தானே சான்று!

என்றும் சந்திப்போம் என்றும் பிரிவோம் தானே
நன்றே சிந்தித்தால் பிரிவும் நிகழாது தானே
என்றும் சிந்தனையும் செயலும் உதவும் தானே!

கைக்கெட்டிய வாழ்வில் பிரிவையும் சந்திப்போம் தானே
பிரிகின்ற வேளையில் இழப்பையும் சந்திப்போம் தானே
பிரிவையும் இழப்பையும் தவிர்க்க நன்றே சிந்திப்போம்!

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

இலங்கையின் 2018 - 1948 = 70 ஆவது சுதந்திர நாள்!

சிங்களம் அரச மொழி
பௌத்தம் அரச மதம்
சிங்களவரே இலங்கையர்
ஏனையோர் வந்தேறு குடிகளென
இலங்கை - இன்று
சுதந்திர நாளை கொண்டாடுகிறது!
சிங்களவர் விரும்பிய எதையும்
செய்யலாமாம் - எதிர்த்தவர்
தலைகளைத் தறிப்பார்களாம்...
மலையகத்தாரை
இந்தியாவுக்கு விரட்டுவார்களாம்...
(பண்டா-சாஸ்திரி உடன்படிக்கையில்)
முஸ்லீம்களை
வணிகம் செய்தது போதுமென
அரபு நாடுகளுக்கு விரட்டுவார்களாம்...
"இலங்கை முழுவதும்
தமிழரின் உடைமை என்பாயா?" என
தமிழினத்தை
தமிழ்நாடு பக்கத்தில என
வங்கக் கடலுக்குள்ளே விரட்டுவார்களாம்...
என்றபடி எண்ணியவாறு
இலங்கை - இன்று
சுதந்திர நாளை கொண்டாடுகிறது!
பல இன, பல மத
மக்களைக் கொண்ட இலங்கையில்
எல்லா இனமும் சமனென்றும்
எல்லா மதமும் சமனென்றும்
ஏனையோர் வரலாற்று இடத்தில்
சிங்களக் குடியேற்றலை நிறுத்திப்போட்டு
பிள்ளையாரைப் பிடுங்கி எறிந்து போட்டு
அரச மர நிழலில்
புத்தரை நட்டு வைக்காமல்
மத வழிபாட்டு இடங்களை
உடைத்து நொறுக்கி எரிக்காமல்
அமைதி பேணும் நாளிலேயே
இலங்கை - என்றாவது
சுதந்திர நாளை கொண்டாடினால்
அன்று தான்
இனிய சுதந்திர நாள் என்பேன்!
இல்லையேல்
சிங்களவருக்குச் சுதந்திர நாள்
ஏனையோருக்கு
சாவு நாளென எண்ணுவோம்!