Translate Tamil to any languages.

வெள்ளி, 29 ஜூலை, 2016

படிக்கப் படிக்க


படிக்கப் படிக்கப் படிப்பும் சுவைக்குமே
அடிக்கடி அதைமீட்டுப் படிக்க இனிக்குமே
                            (படிக்க)

கொடுக்கவும் வேண்டவும் கணக்கும் வேண்டுமே
கொடுக்கக் கொடுக்கக் கூட்டலும் பெருக்கலுமே
வேண்ட வேண்டக் கழித்தலும் பிரித்தலுமே
கணிக்கக் கணிக்கக் கணக்கும் இனிக்குமே
                            (படிக்க)

பழகப் பழகப் படமும் வரைவோமே
கட்டிக் கட்டிக் கட்டுரையும் எழுதுவோமே
எழுத எழுதக் கதையும் புனைவோமே
எண்ண எண்ணக் கவிதையும் ஆக்குவோமே
                            (படிக்க)

இளைக்க இளைக்க விளையாடவும் இயலுமே
உதைக்க உதைக்க ஆடவும் தோன்றுமே
இசைக்க இசைக்கப் பாடவும் வருமே
ஆடியோ பாடியோ நடிக்கவும் முடியுமே
                            (படிக்க)

                இப்பதிவிற்கான முழுமையான விளக்கம் உண்டு. அதைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

படிப்பது எப்படி? படிப்பது இலகுவானதா?

அறிஞர் வே.இறையன்பு எழுதிய "படிப்பது சுகமே! (முதல் பதிப்பு – டிசம்பர் 2004, பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்)" என்ற நூலை வேண்டிப் படித்தால், எல்லாப் பிள்ளைகளும் படிக்கும் தானே! இவனேன் யாழ்பாவாணன் படிப்பைப் பற்றி இடித்துரைக்க வாறான்... எனத் தொடர்ந்து படிக்காமல் நிறுத்திவிடாதீர்கள். இது யாழ்பாவாணனின் கைவண்ணமெனப் படித்துச் சுவைத்துப் பாருங்களேன்.

இருவர் பேச்சை எடை போடுங்க பார்ப்போம்...
ஒருவர்: தேர்வெழுத அஞ்சிப் பள்ளிக்கூடம் போகாமல் இருந்தியளே, இப்ப என்னாச்சு?
அடுத்தவர்: நாலு காசு வருவாய் ஈட்ட, நாளுக்கு நாள் தேர்வெழுத வேண்டியிருக்கே!

இப்படியான ஒரு சூழலில் தான் "காலம் கடந்து அறிவு (ஞானம்) வந்தென்ன பயன்?" என்று கேட்பார்கள்! குறித்த காலத்திலேயே (பருவத்திலேயே) பயிர் செய்ய வேண்டும். அதாவது, மழைக் காலத்தில் பயிர்களை நட்டால் தானாகவே வளரும். அதுபோலத் தான், இளமையிலே கல்வி கற்றால் இலகுவாகத் திறமை பெற வாய்ப்பிருக்கே! ஆயினும், முழுமையான விருப்பத்துடன் கல்வி கற்பவருக்குத் தான் இந்த வாய்ப்புக் கிட்டும்!

இளமையிலே கல்வி கற்றிருந்தால்
நாலு காசு வருவாய் ஈட்ட
நாளுக்கு நாள்
தேர்வெழுத வேண்டியிருக்காதே!
அப்படியாயின்
படிப்பது எப்படி? படிப்பது இலகுவானதா?
என்றெல்லாம்
எவரும் கேட்கலாம் தானே! - அந்த
படிப்பில எத்தனை அறிவு இருக்கு?

அறிவு ஐந்து வகை தான் - அவை
கண்ணால் காண்பது பார்த்து அறிதல்
காதால் கேட்பது கேட்டு அறிதல்
மூக்கால் மணப்பது மணந்து அறிதல்
நாக்கால் சுவைப்பது சுவைத்து அறிதல்
தோலால் உணருவது உணர்ந்து அறிதல்
என்றவாறே கற்றறிவதேயாம்!
இவ்வைந்தறிவை விஞ்சி நிற்பது
ஆறாம் அறிவாம் - அது
நல்லது எது? கெட்டது எது? என
வேறாக்கிக் கற்றறிவதேயாம்!
ஏழாம் அறிவு என்று
ஏதோ ஒன்று இருப்பதாய் அறிந்தால் - அது
நல்வழி எது? கெட்டவழி எது? என
வேறாக்கிக் கற்றறிவதேயாம்!
அடடே! அதற்கப்பால்
எட்டாம் அறிவு ஒன்றிருக்காம் - அது
கெட்டது, கெட்டவழி எதுவென்றறிந்து
அவற்றை விட்டொதுங்கி
நல்லது, நல்வழி எதுவென்றறிந்து
நடை போடக் கற்றறிவதேயாம்!

இப்படித்தான் அடிப்படைக் கல்வியை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு மாணவருக்கும் முதலாவது ஆசிரியர், அம்மா தான்; இரண்டாவது அப்பா தான்! எனவே, பெற்றோர்கள் தான் இந்த அடிப்படைக் கல்வியை ஊட்ட வேண்டும்.

சுவையறிந்து உண் - உண்டு சுவைத்து உணர்ந்தைச் சொல்லி உணவூட்டுவது போல, நாம் கற்றுச் சுவைத்த உணர்வைப் பகிர்ந்து அறிவூட்டலாம்.
செயலறிந்து செய் - சில செயல்களைச் செய்ததன் விளைவாகப் பட்டறிந்ததைப் பகிர்ந்து அறிவூட்டலாம்.
படம் பார் பாடம் படி - படங்களை அல்லது காட்சிகளைக் காண்பித்துக் குறித்த ஒன்றைச் சுட்டி அடையாளப்படுத்தியும் அறிவூட்டலாம்.
இப்படித்தான் மாணவர் உள்ளத்தைப் புண்ணாக்காமல், மாணவர் உள்ளத்தில் விருப்பங்களை விதைத்துக் கற்றலை ஊக்கப்படுத்தலாம்.

"இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
     இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
     ஆலயம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
     பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
     ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்..."

இப்படியொரு பாரதியாரின் பாடல் உண்டு. அதாவது, எத்தனையோ கோடி நன்மைகள் பிறருக்குச் செய்தாலும் ஓர் ஏழைக்கு எழுதறிவித்தலே (கற்பித்தலே) சிறந்தது எனப் பாரதியார் வழிகாட்டுகின்றார். இதனை ஆசிரியர்கள் கருத்திற்கொண்டு நிறைவான பணியை மாணவர்களுக்கு வழங்கலாம். அந்த நிறைவான பணி, மாணவர்களின் கற்றலை ஊக்கப்படுத்துமே!

நாளும் எழுத, வாசிக்க, பேச
படம் வரைய, கணக்குப் பார்க்க
ஆடிப் பாடி நடிக்க, விளையாட
பழகிப் பழகிப் படிக்க முடியுமே!

விரும்பிய படத்தைப் பார்த்து வரையலாம்
விரும்பிய ஆளைப் பார்த்து வரையலாம்
விரும்பிப் படித்ததை எழுதிப் பார்க்கலாம்
விரும்பிக் கேட்டதை எழுதித் தொகுக்கலாம்
எழுதிய எதையும் வாசித்துப் பார்க்கலாம்
எழுதி வைத்தே பேசிக் காட்டலாம்
எழுதி வைத்தே பாடிக் காட்டலாம்
பாட்டுக்கு ஏற்ப ஆடிக் காண்பிக்கலாம்
கதைக்கு ஏற்ப நடித்துக் காண்பிக்கலாம்
விரும்பிய விளையாட்டும் விளையாடலாம்
விளையாட்டின் முடிவுகளைக் கணித்துச் சொல்லவும்
கொடுக்கல், வாங்கல் விரைவாக அமையவும்
கணக்குப் பார்க்கவும் அறிந்திருக்க வேண்டுமே!
உண்மையில்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமென
வழிகாட்டிய பெரியோர் விருப்புக்கு அமைய
நாமும் கற்றுப் பெரியவர் ஆகலாமே!

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்." என்றவாறு ஔவையார் பாடலும் விளக்கமும் https://ta.wikisource.org/s/4m என்ற பக்கத்தில் (ஏழாவது வெண்பா) காணப்படுகிறது.

அதாவது, மீள மீளச் சொல்வதாலோ செய்வதாலோ பழக்கமாகிவிடும் என ஔவையார் வழிகாட்டுவதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆமாம்! ஒரு பொழுது எண்ணிப் பார்ப்பதை விட, பல பொழுது எண்ணிப் பார்ப்பதால் நமது உள்ளத்தில் குறித்த செய்தி ஆழமாகப் பதிந்து விடுகிறது. மேலும், உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த செய்தி தானியங்கி (Automatic) முறையில் தக்க சூழலில் வெளிவரும். எனவே, ஔவையாரின் வழிகாட்டலைப் பின்பற்றினால் கூடப் படிப்பது இலகுவானதே!

தேர்வு என்பது அதிகமாகத் திரட்டிய தகவல் வைப்பகத்தில் விரைவாகத் தேடி எடுக்கின்ற பதில்களை வைத்துத் திறமையானவர்களை அடையாளம் காண்பதேயாகும். அப்படியாயின், அதிகமான தகவலைத் திரட்டிய மாணவரே முதன்மை நிலை அடைகின்றார். அதன்படிக்கு நாம் எத்தனை வழிகளில் தகவலைச் சேகரிக்கிறோம் என்பது முக்கியமல்ல, நாம் எத்தனை தகவலைச் சேகரித்துப் பேணுகிறோம் என்பது தான் முக்கியம். இப்படிப் படிப்பதனாலேயே படிப்பது இலகுவானதாக அமைகின்றது.

சனி, 16 ஜூலை, 2016

நீட்டல், குறுக்கலல்ல; காரமான பதிவே தேவை!

தேடல் உள்ள வரை தான் - உங்கள்
அறிவைக் கூடப் பெருக்க முடிகிறதே!
அப்படித் தான் - நானும்
என் தேடலில் சிக்கிய சில பதிவுகளை
தங்களுடன் பகிர முனைகின்றேன்!

பெயருக்குத் தான் தமிழ் மொழியில்
வலைப் பூக்கள் வைத்து இருந்தாலும்
ஆங்கில மொழிக் கலப்புப் பதிவுகளையே
எங்கள் கண்களும் பார்த்துக் களிக்கின்றன!

அடடே! எனது பா/கவிதை நடையில, என் எண்ணங்களைப் பகிர முனைந்தால் அழகிருக்காது. நான் தமிழ் மொழியில் பதிவுகளை வெளியிட்டு உதவுமாறு எல்லோரிடமும் கேட்டுக்கொள்வதுண்டு. அதற்காகப் பிற மொழிகளைத் தமிழுக்குள் நுழைக்கக் கூடாது என்று நான் சொன்னதில்லை. பிற மொழிகளைத் தமிழ் எழுத்துகளால் எழுத வேண்டாமென்றே சொன்னேன். பிற மொழிகளை நேரடியாகவோ அடைப்புகளுக்குள்ளோ எழுதலாம் தானே!

மக்களாய (சமூக) ஊடக வளர்ச்சி பற்றிய பதிவொன்றைப் படித்தேன். இன்றைய தொழில் நுட்ப மாற்றங்களைச் சுட்டி அழகாக எழுதியுள்ளார். இதில் ஆங்கிலத்தை ஆங்கில எழுத்துகளால் எழுதியிருப்பது சிறப்பு. ஆயினும், தமிழ் எழுத்துகளால் எழுதிய ஆங்கிலத்தை ஆங்கில எழுத்துகளால் எழுதியிருப்பின் சிறப்பாக இருந்திருக்கும். இந்தப் பதிவின் தூண்டுதல் பதிவு, இதுவென்பதால் இங்கு அவரது பதிவைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவரது பதிவிற்குக் கிடைத்த கருத்தொன்று தான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

"பதிவை நீட்டாமல் பிரித்து எழுதினால் இன்னும் அழகான பகிர்வாய் அமையும் என்பது என் கருத்து! பிழை என்றால் மன்னிக்கவும்!" என நண்பர் ஒருவர் கருத்துப் பதிந்திருந்தார். "இதில் என்ன தப்பு இருக்கு... பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்... நீங்கள் தரும் ஆக்கமும் ஊக்கமும் தான் என்னைக் கிறுக்க வைக்கின்றது..." என அவரது கருத்தைத் தான் ஏற்பதாகவும் குறித்த வலைப்பூ ஆசிரியர் பதிலளித்திருந்தார். எனக்கும் "அடேய்! யாழ்பாவாணா! பா/கவிதை நடையில எழுதுறதை விட்டிட்டு, உரை நடையாக எழுதினால் கொஞ்சம் எங்களுக்கும் புரியுமே!" என நண்பர் ஒருவர் கருத்துப் பதிந்திருந்தார். அவரது கருத்தை நானும் வரவேற்றேன். இவை எமக்கு எதிரான கருத்து அல்ல; எம்மை நல்வழியில் செல்ல வழிகாட்டுவன.

இங்கு "பதிவை நீட்டாமல் பிரித்து எழுதினால்" என்றால் பந்தி பிரித்து எழுதினால் அழகு எனப் பொருட்படுத்தினால் வரவேற்கலாம். ஆனால், "பதிவை நீட்டாமல் குறுக்கினால் அதாவது சிறு பதிவாகப் பதிந்திருந்தால்" என்றெழுதியிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனைக் கருத்திற் கொண்டே "நீட்டல், குறுக்கலல்ல; காரமான பதிவே தேவை!" என இப்பதிவிற்குத் தலைப்பிட்டிருந்தேன். வாசகர் நீண்ட பதிவிலோ குறுகிய பதிவிலோ நாட்டம் கொள்வதில்லை. வாசகர் விரும்பும் முழுமை அல்லது நிறைவு தரக்கூடிய காரமான பதிவுகளில் தான் வாசகர் நாட்டம் அதிகம். பதிவு எழுதுவோர் இதனைக் கருத்திற் கொள்வார்கள் என நம்புகிறேன்.

சரி! நீட்டல் பதிவுகளை எவரும் படிப்பதில்லையா? படிக்கிறார்கள்... இதோ ஓரளவு நீட்டல் பதிவுகளிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகின்றேன். படித்துச் சுவைத்துப் பாருங்கள். இதே போல நீங்களும் நீட்டல் பதிவுகளை எழுதலாம்.

மது விலக்கு நாயகர் (இவரைப் போல ஒருவர் இன்று எமக்குத் தேவை, அதனைக் கருத்திற்கொண்டு இப்பதிவைப் பகிருகிறேன்.)

முதல் மனித வெடிகுண்டு (பெத்த தாயை நாம் மறப்பதில்லை. அதுபோலத் தாயக விடியலுக்காக (சுதந்திரத்திற்காக) தம்மை ஈகம் செய்தோரை எப்படி மறக்கலாம். அதனைக் கருத்திற்கொண்டு இப்பதிவைப் பகிருகிறேன்.)

சரி! குறுக்கல் பதிவுகளை எவரும் படிப்பதில்லையா? படிக்கிறார்கள்... இதோ ஓரளவு குறுக்கல் பதிவுகளிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகின்றேன். படித்துச் சுவைத்துப் பாருங்கள். இதே போல நீங்களும் குறுக்கல் பதிவுகளை எழுதலாம்.

மண்டியிட வைத்த மனசு (மூளைக்கு வேலை தரும் அல்லது சிந்திக்க வைக்கும் பதிவிது. அதனைக் கருத்திற்கொண்டு இப்பதிவைப் பகிருகிறேன்.)

மனசு ஒரு கண்ணாடி ("மனம் என்னும் கண்ணாடியில் அவரவர் எண்ணமே பிரதிபலிக்கிறது. எனவே மனதை நல்ல விஷயங்களின் பக்கமாகத் திருப்புங்கள்." என்ற கோட்பாட்டை உணர்த்த இப்பதிவைப் பகிருகிறேன்.)

நீட்டல், குறுக்கல் இரண்டுக்கும் அப்பால் காரமான பதிவையும் வாசகர் தேடுவதைக் காணலாம். அப்படியான இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகின்றேன். படித்துச் சுவைத்துப் பாருங்கள். இவ்வாறான கடுகு போலக் காரமான பதிவுகளை நீங்களும் எழுதலாம்.

ஒரு காக்கா கதை (அருமையான கதை. அதனைக் கருத்திற்கொண்டு இப்பதிவைப் பகிருகிறேன்.)

குடும்பத்தை நடத்துவது எப்படி? (குடும்பம் நடாத்தத் தெரியாமல், பலர் இருக்கலாம். அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறந்த பதிவு என்பதால் இதனைப் பகிருகிறேன்.)

ஒரு படைப்பாளி ஒரு படைப்பை ஆக்க ஓர் அமைதியான இடத்தை நாடுவது வழக்கம். அப்படியிருக்கையில் வலை ஊடகங்களைக் கையாளும் வேளை, அப்படைப்பாளி ஒரு படைப்பை எப்படி ஆக்க இயலும்? அப்படியாயின் வலை ஊடகங்களைக் கையாளுவதை நிறுத்திப்போட்டு, தமது படைப்பை ஆக்கிப்போட்டு மீள வலை ஊடகங்களைக் கையாளுவதனால் சிறந்த படைப்பை ஆக்கிய நிறைவு தங்களுக்குக் கிடைக்குமே! "எழுத முனைவோருக்கோர் எளிய துப்பு." என்ற பதிவில், அது பற்றிய மதியுரையைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறியலாமே!

நான் ஈழத் தமிழனாக இருந்தும் எடுத்ததிற்கெல்லாம் இந்தியாவில் தான் தமிழுக்குள் எல்லா இந்திய மாநில மொழிகளையும் கலந்து குழைத்துப் (சாம்பாராக்கிப்) பேசுகிறார்கள் என்பதை நான் ஏற்பதில்லை. தமிழரின் தாயகம் பாரத நாடு தான்; பாரத நாடு உடைந்ததும் தமிழரும் புலம் பெயர்ந்து உலகெங்கும் பரவிய பின், ஆங்காங்கே உள்ள நாட்டு மொழிகளையும் கலந்து தான் பேசுகிறார்கள். அதிகமான தமிழர் ஆங்கில அடிமைகளாக இருப்பதால் தான், தமிழ் + ஆங்கிலம் = தமிங்கிலம் என்ற நிலை வந்ததென்பேன். இதனைப் போக்க வலைப் பதிவர்களாகிய நாம், பிறமொழிகளைக் கலவாது தனித் தமிழில் எழுதலாம் என இப்பதிவைத் தொடக்கினேன். ஈற்றில் ஊடகங்களும் இதனைப் பின்பற்றினால் நல்லதென்பதை உணர்த்த விரும்பி "பத்திரிகைகள்" என்ற பதிவைப் பகிருகிறேன். இப்பதிவில் தமிழ் பெயரில்லா பத்திரிகைகளை ஆசிரியர் அலசுகிறார்.

உண்மையில் ஊடகங்கள் தமது பெயர்களைத் தமிழில் தான் வைக்காவிட்டாலும் தமது நிகழ்சிகளை அல்லது தமது பதிவுகளை எப்போதும் தனித் தமிழில் வெளிப்படுத்தலாமே! வேலியே பயிரை மேய்ந்தாற் போல ஊடகங்களும் தனித் தமிழில் தமது வெளியீடுகளைத் தராவிட்டால், தமிழ் எப்படித் தப்பிப் பிழைக்கும்? இதற்கான பதிலை வலை ஊடகப் பதிவர்களாகிய நாமும் சொல்லித் தான் ஆகவேண்டும். அதேவேளை இதற்கான பதிலை ஊடகங்கள் எப்படி முன்வைக்க இருக்கின்றன. அவர்களின் பதிலில் தான் தமிழ் வாழுமா? அல்லது தமிழ் சாகுமா? என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறதே!

ஞாயிறு, 10 ஜூலை, 2016

இவங்க மூடினால் தான், அவங்க நிறுத்துவாங்க

இவங்க
அவங்க
குடிதண்ணீர் விற்போர்
குடிகளைக் கெடுப்பவங்க
குறையாடை அணிவோர்
குமரிகளைக் கெடுப்பவங்க


1)
குடிதண்ணீர் விற்பவரும் மூடுவதாயில்லை
குடிகளைக் கெடுப்பவரும் நிறுத்துவதாயில்லை
                                                (குடி)

குடிதண்ணீர் விற்போருக்குத் தடையில்லை
தடையென்றால் நம்ம அரசுக்கு வருவாயில்லை
சுவைப்பட்டோர் குடிக்காமல் இருந்ததில்லை
குடித்தவரோ தன் குடியைக் கெடுக்காமலில்லை
                                                (குடி)

படித்தோரும் படிக்காதோரும் அறியாமலில்லை
குடித்தோரும் குடிக்காதோரும் படிக்காமலில்லை
குடித்தவரும் துடித்துச் சாக வாழ்வுமில்லை
நாட்டவர் சாக நம்ம அரசும் பொருட்படுத்தவில்லை
                                                (குடி)

நடுவழியே வீழ்ந்தவரும் குடிக்காமலில்லை
வீழ்ந்தவரின் உடையுரிய உணர்வுமில்லை
பார்த்தோரும் சிரித்தோடத் துயரமில்லை
குடும்பத்தார் காவிச் செல்லவும் விழிக்கவில்லை
                                                (குடி)

2)
குறையாடை உடுப்பவரும் மூடுவதாயில்லை
குமரிகளைக் கெடுப்பவரும் நிறுத்துவதாயில்லை
                                                (குறை)

துணிமணி விற்போரில் குற்றமில்லை
எட்டுப்பத்து முளச்சேலைக்கும் குறைவுமில்லை
வேண்டுவோர் வேண்டுவதிலும் நிறைவுமில்லை
வேண்டியதை மூடியுடுக்க விரும்புவதில்லை
                                                (குறை)

குறையாடை உடுப்போரால் ஒழுக்கமில்லை
ஊர்தி ஓட்டுநரின் பார்வையும் சரியில்லை
வழி நெடுக மோதலும் சாவும் ஓயவுமில்லை
காவற்றுறையும் கண்காணித்தும் தீர்வுமில்லை
                                                (குறை)

குறையாடைக் கோலங்கள் ஈர்க்காமலில்லை
ஈர்த்த கோலமும் தூண்டிய உணர்வும் தடுப்பாரில்லை
பார்த்த மிருகமும் கெடுக்க முயலும் நோக்குவாரில்லை
கருக்கலைப்பும் குமரிகள் சாவும் நிறுத்துவாரில்லை
                                                (குறை)

3)
முடிவாக (மக்கள் சிந்தனைக்கு):

உழைப்பதும் குடிப்பதும் வாழ்வானால்
குடும்பத்தார் அழிந்துபோக வழியானால்
குடித்ததும் குடியை அழிப்பதும் தொழிலானால்
புகை, குடிதண்ணீர் கடைகளை மூடாது போனால்
நம் (தமிழ்) இனம் அழியாதிருக்க ஏது மருந்து?

குறையுடுப்பு அணிவோரும் - தம்
உடலை முழுமையாக மறைக்க
முடியாமல் போனால் பாரும்
குமரிகளைக் கெடுக்கவரும் மிருகவுணர்வை
தடுத்து நிறுத்த ஏது மருந்து?

சனி, 2 ஜூலை, 2016

ஒளிந்திருக்கும் ஒளிஒலிப் (Video) படக்கருவியில்...

கீழுள்ள ஒளிஒலி (Video) படத்தைச் சொடுக்கிப் பார்க்க.


இவ் ஒளிஒலி (Video) இணைப்பிற்கான உண்மையான முகநூல் இணைப்புக் கீழே தரப்படுகின்றது.


முகநூலில் கனடாவாழ் தோழி காவியகவி (http://kaviyakavi.blogspot.com/) இனியா அவர்கள் இதனைப் பகிர்ந்தமையால் (அவரது பதிவை நானும் முகநூலில் பகிர்ந்தேன்) இவ் இணைப்பை என்னால் பெறமுடிந்தது. தோழி இனியா அவர்களுக்கு நன்றி.


ஒளிஒலிப் (Video) படம் பார்த்தீர்களா?
தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பாடு
சொல்லும் செய்தி என்ன?

இன்றைய இளசுகளில் - அன்றைய
தமிழர் பண்பாட்டைப் பேணாத
ஆடைகளின் அணிவகுப்பைக் கண்ட
ஒளிஒலிப் (Video) படம் பிடிப்போர்
தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்கி
எப்படி எல்லாம்
தங்கள் நுட்பங்களைக் கையாளுகிறார்கள்!

பெண்களே, உங்கள் கண்களால் காணும்
தமிழர் பண்பாட்டை மீறும் கோலங்களை
ஒளிஒலிப் (Video) படம் பிடிப்போர்
ஒளிஒலிப் (Video) படக்கருவிகளில்
உங்களை அறியாமலே பிடிச்சிடுவாங்களே!

உங்களுக்குத் தெரியுமா? - இன்றெல்லாம்
வலை ஊடகங்கள் வழியே உலாவும்
ஒளிஒலிப் (Video) படங்கள் எத்தனை? - அ தனை
நானும் கண்ணுற்று அதிர்ந்து போக - அதை
உங்கள் உள்ளத்தில் உறைக்கவே பகிருகிறேன்...

சிந்திக்க வைக்க அகப்பட்ட - ஓர்
ஒளிஒலிப் (Video) படத்தைப் பகிர்ந்ததே
நாளை நாம் நம்மை இழக்காது
செயலாற்ற வழிகாட்டும் பதிவென்றே!
ஏனெனில்,
என் இல்லாளைப் படம் பிடிப்போர்
உங்கள் காதலியையோ இல்லாளையோ
ஏன்
உங்கள் பெண் பிள்ளைகளையோ
எள்ளளவேனும் உங்களுக்குத் தெரியாமலேயே
ஒளிஒலிப் (Video) படம் பிடிப்பார்களே - அதை
எத்தனையோ வழிகளில் கேவலப்படுத்தி,
தங்கள் வணிகம் ஆக்கி - அங்கால
என் எழுதுகோல் எழுத மறுக்கிறதே!
ஓ! தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பட
எழுத மறுக்கும் எழுதுகோலைப் போல
எங்கள் வாய்களும் திறக்க மறுக்கலாம்
எதற்கும் நாம் விழிப்பாக இருப்போம்!

ஒளித்து வைக்கப்பட்ட ஒளிஒலிப் படக்கருவியில்
பதிவாகிய எத்தனையோ ஒளிஒலிப் படங்கள்
வலை ஊடகங்களில் உலா வந்து - பலர்
உள்ளம் நொந்து அழுவதைப் பாரும்!
இன்றெல்லாம்
வலை ஊடகங்களில் உலா வந்த - பல
ஒளிஒலிப் படங்கள் விளைவித்த
அறுவடையால் சாவடையச் சென்றோரை
எவராவது எண்ணிப் பார்த்தீர்களா?
இனியெல்லாம்
நாம் எல்லோரும் எண்ணிப் பார்த்து
ஒளித்து வைக்கப்பட்ட ஒளிஒலிப் படக்கருவிகளால்
பெண்களின் கோலங்களைச் சிக்கவிடாமல்
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிராக
தமிழர் பண்பாட்டைப் பேணி வெல்வோம்!