Translate Tamil to any languages.

சனி, 16 ஜூலை, 2016

நீட்டல், குறுக்கலல்ல; காரமான பதிவே தேவை!

தேடல் உள்ள வரை தான் - உங்கள்
அறிவைக் கூடப் பெருக்க முடிகிறதே!
அப்படித் தான் - நானும்
என் தேடலில் சிக்கிய சில பதிவுகளை
தங்களுடன் பகிர முனைகின்றேன்!

பெயருக்குத் தான் தமிழ் மொழியில்
வலைப் பூக்கள் வைத்து இருந்தாலும்
ஆங்கில மொழிக் கலப்புப் பதிவுகளையே
எங்கள் கண்களும் பார்த்துக் களிக்கின்றன!

அடடே! எனது பா/கவிதை நடையில, என் எண்ணங்களைப் பகிர முனைந்தால் அழகிருக்காது. நான் தமிழ் மொழியில் பதிவுகளை வெளியிட்டு உதவுமாறு எல்லோரிடமும் கேட்டுக்கொள்வதுண்டு. அதற்காகப் பிற மொழிகளைத் தமிழுக்குள் நுழைக்கக் கூடாது என்று நான் சொன்னதில்லை. பிற மொழிகளைத் தமிழ் எழுத்துகளால் எழுத வேண்டாமென்றே சொன்னேன். பிற மொழிகளை நேரடியாகவோ அடைப்புகளுக்குள்ளோ எழுதலாம் தானே!

மக்களாய (சமூக) ஊடக வளர்ச்சி பற்றிய பதிவொன்றைப் படித்தேன். இன்றைய தொழில் நுட்ப மாற்றங்களைச் சுட்டி அழகாக எழுதியுள்ளார். இதில் ஆங்கிலத்தை ஆங்கில எழுத்துகளால் எழுதியிருப்பது சிறப்பு. ஆயினும், தமிழ் எழுத்துகளால் எழுதிய ஆங்கிலத்தை ஆங்கில எழுத்துகளால் எழுதியிருப்பின் சிறப்பாக இருந்திருக்கும். இந்தப் பதிவின் தூண்டுதல் பதிவு, இதுவென்பதால் இங்கு அவரது பதிவைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவரது பதிவிற்குக் கிடைத்த கருத்தொன்று தான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

"பதிவை நீட்டாமல் பிரித்து எழுதினால் இன்னும் அழகான பகிர்வாய் அமையும் என்பது என் கருத்து! பிழை என்றால் மன்னிக்கவும்!" என நண்பர் ஒருவர் கருத்துப் பதிந்திருந்தார். "இதில் என்ன தப்பு இருக்கு... பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்... நீங்கள் தரும் ஆக்கமும் ஊக்கமும் தான் என்னைக் கிறுக்க வைக்கின்றது..." என அவரது கருத்தைத் தான் ஏற்பதாகவும் குறித்த வலைப்பூ ஆசிரியர் பதிலளித்திருந்தார். எனக்கும் "அடேய்! யாழ்பாவாணா! பா/கவிதை நடையில எழுதுறதை விட்டிட்டு, உரை நடையாக எழுதினால் கொஞ்சம் எங்களுக்கும் புரியுமே!" என நண்பர் ஒருவர் கருத்துப் பதிந்திருந்தார். அவரது கருத்தை நானும் வரவேற்றேன். இவை எமக்கு எதிரான கருத்து அல்ல; எம்மை நல்வழியில் செல்ல வழிகாட்டுவன.

இங்கு "பதிவை நீட்டாமல் பிரித்து எழுதினால்" என்றால் பந்தி பிரித்து எழுதினால் அழகு எனப் பொருட்படுத்தினால் வரவேற்கலாம். ஆனால், "பதிவை நீட்டாமல் குறுக்கினால் அதாவது சிறு பதிவாகப் பதிந்திருந்தால்" என்றெழுதியிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனைக் கருத்திற் கொண்டே "நீட்டல், குறுக்கலல்ல; காரமான பதிவே தேவை!" என இப்பதிவிற்குத் தலைப்பிட்டிருந்தேன். வாசகர் நீண்ட பதிவிலோ குறுகிய பதிவிலோ நாட்டம் கொள்வதில்லை. வாசகர் விரும்பும் முழுமை அல்லது நிறைவு தரக்கூடிய காரமான பதிவுகளில் தான் வாசகர் நாட்டம் அதிகம். பதிவு எழுதுவோர் இதனைக் கருத்திற் கொள்வார்கள் என நம்புகிறேன்.

சரி! நீட்டல் பதிவுகளை எவரும் படிப்பதில்லையா? படிக்கிறார்கள்... இதோ ஓரளவு நீட்டல் பதிவுகளிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகின்றேன். படித்துச் சுவைத்துப் பாருங்கள். இதே போல நீங்களும் நீட்டல் பதிவுகளை எழுதலாம்.

மது விலக்கு நாயகர் (இவரைப் போல ஒருவர் இன்று எமக்குத் தேவை, அதனைக் கருத்திற்கொண்டு இப்பதிவைப் பகிருகிறேன்.)

முதல் மனித வெடிகுண்டு (பெத்த தாயை நாம் மறப்பதில்லை. அதுபோலத் தாயக விடியலுக்காக (சுதந்திரத்திற்காக) தம்மை ஈகம் செய்தோரை எப்படி மறக்கலாம். அதனைக் கருத்திற்கொண்டு இப்பதிவைப் பகிருகிறேன்.)

சரி! குறுக்கல் பதிவுகளை எவரும் படிப்பதில்லையா? படிக்கிறார்கள்... இதோ ஓரளவு குறுக்கல் பதிவுகளிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகின்றேன். படித்துச் சுவைத்துப் பாருங்கள். இதே போல நீங்களும் குறுக்கல் பதிவுகளை எழுதலாம்.

மண்டியிட வைத்த மனசு (மூளைக்கு வேலை தரும் அல்லது சிந்திக்க வைக்கும் பதிவிது. அதனைக் கருத்திற்கொண்டு இப்பதிவைப் பகிருகிறேன்.)

மனசு ஒரு கண்ணாடி ("மனம் என்னும் கண்ணாடியில் அவரவர் எண்ணமே பிரதிபலிக்கிறது. எனவே மனதை நல்ல விஷயங்களின் பக்கமாகத் திருப்புங்கள்." என்ற கோட்பாட்டை உணர்த்த இப்பதிவைப் பகிருகிறேன்.)

நீட்டல், குறுக்கல் இரண்டுக்கும் அப்பால் காரமான பதிவையும் வாசகர் தேடுவதைக் காணலாம். அப்படியான இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகின்றேன். படித்துச் சுவைத்துப் பாருங்கள். இவ்வாறான கடுகு போலக் காரமான பதிவுகளை நீங்களும் எழுதலாம்.

ஒரு காக்கா கதை (அருமையான கதை. அதனைக் கருத்திற்கொண்டு இப்பதிவைப் பகிருகிறேன்.)

குடும்பத்தை நடத்துவது எப்படி? (குடும்பம் நடாத்தத் தெரியாமல், பலர் இருக்கலாம். அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறந்த பதிவு என்பதால் இதனைப் பகிருகிறேன்.)

ஒரு படைப்பாளி ஒரு படைப்பை ஆக்க ஓர் அமைதியான இடத்தை நாடுவது வழக்கம். அப்படியிருக்கையில் வலை ஊடகங்களைக் கையாளும் வேளை, அப்படைப்பாளி ஒரு படைப்பை எப்படி ஆக்க இயலும்? அப்படியாயின் வலை ஊடகங்களைக் கையாளுவதை நிறுத்திப்போட்டு, தமது படைப்பை ஆக்கிப்போட்டு மீள வலை ஊடகங்களைக் கையாளுவதனால் சிறந்த படைப்பை ஆக்கிய நிறைவு தங்களுக்குக் கிடைக்குமே! "எழுத முனைவோருக்கோர் எளிய துப்பு." என்ற பதிவில், அது பற்றிய மதியுரையைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறியலாமே!

நான் ஈழத் தமிழனாக இருந்தும் எடுத்ததிற்கெல்லாம் இந்தியாவில் தான் தமிழுக்குள் எல்லா இந்திய மாநில மொழிகளையும் கலந்து குழைத்துப் (சாம்பாராக்கிப்) பேசுகிறார்கள் என்பதை நான் ஏற்பதில்லை. தமிழரின் தாயகம் பாரத நாடு தான்; பாரத நாடு உடைந்ததும் தமிழரும் புலம் பெயர்ந்து உலகெங்கும் பரவிய பின், ஆங்காங்கே உள்ள நாட்டு மொழிகளையும் கலந்து தான் பேசுகிறார்கள். அதிகமான தமிழர் ஆங்கில அடிமைகளாக இருப்பதால் தான், தமிழ் + ஆங்கிலம் = தமிங்கிலம் என்ற நிலை வந்ததென்பேன். இதனைப் போக்க வலைப் பதிவர்களாகிய நாம், பிறமொழிகளைக் கலவாது தனித் தமிழில் எழுதலாம் என இப்பதிவைத் தொடக்கினேன். ஈற்றில் ஊடகங்களும் இதனைப் பின்பற்றினால் நல்லதென்பதை உணர்த்த விரும்பி "பத்திரிகைகள்" என்ற பதிவைப் பகிருகிறேன். இப்பதிவில் தமிழ் பெயரில்லா பத்திரிகைகளை ஆசிரியர் அலசுகிறார்.

உண்மையில் ஊடகங்கள் தமது பெயர்களைத் தமிழில் தான் வைக்காவிட்டாலும் தமது நிகழ்சிகளை அல்லது தமது பதிவுகளை எப்போதும் தனித் தமிழில் வெளிப்படுத்தலாமே! வேலியே பயிரை மேய்ந்தாற் போல ஊடகங்களும் தனித் தமிழில் தமது வெளியீடுகளைத் தராவிட்டால், தமிழ் எப்படித் தப்பிப் பிழைக்கும்? இதற்கான பதிலை வலை ஊடகப் பதிவர்களாகிய நாமும் சொல்லித் தான் ஆகவேண்டும். அதேவேளை இதற்கான பதிலை ஊடகங்கள் எப்படி முன்வைக்க இருக்கின்றன. அவர்களின் பதிலில் தான் தமிழ் வாழுமா? அல்லது தமிழ் சாகுமா? என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறதே!

5 கருத்துகள் :

  1. நண்பர் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள் உள்பட அறிமுகப்படுத்திய அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. எல்லோரும் உட்கார்ந்து யோசிக்க வேண்டிய விஷயம். அல்லது தனிப்பட்ட முறையில் அவரவர் பதிவில் பிறமொழிக் கலப்பு இல்லாமல் எழுத முனைதல் - என்பதே தீர்வு இதுவே எனது கருத்து.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பகிர்வு. நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. சிந்திக்க வைக்கும் பகிர்வுகள் நன்றி

    பதிலளிநீக்கு
  5. வலை பதிவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!