Translate Tamil to any languages.

வெள்ளி, 25 அக்டோபர், 2019

வாசிப்பு மாதமும் தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியமும்


ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி (October) மாதம் வாசிப்பு மாதமாகக் கடைப்பிடிக்கிறோம். வாசிப்பதற்கு எத்தனையோ நாளேடுகள், எத்தனையோ மாதவேடுகள், எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. தேர்வு எழுதத் தேவையான ஏடுகளையே மாணவர்கள் வாசிக்கின்றனர். ஏனையோர் தலைப்புச் செய்திகளை வாசித்த பின் ஏடுகளை வீசுகின்றனர். இந்நிலையில் அறிவைப் பெருக்கிக் கொள்ள இருக்கின்ற ஏடுகளையோ புத்தகங்களையோ வாசிக்க முன்வருவோர் குறைந்து செல்கிறது. இந்நிலையில் மாற்றம் மலரும் என்றுதான் ஐப்பசி (October) மாதம் வாசிப்பு மாதமாகக் கடைப்பிடிக்கிறோம்.

இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் அச்சு ஏட்டினை வாசிப்பது போல வலைப்பக்கங்கள், மின் ஏடுகள், மின் புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன. வாசிப்பு மனிதனை ஆளுமை மிக்க ஒருவராக மாற்றுகின்றது. ஆளுமை மிக்க அறிவாளிகளை உருவாக்கத் தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியம் உதவுமென நம்புகின்றேன். இத்தளத்தில் மேற்கோள்கள், சான்றைப் பகிரும் (உசாத்துணை) நூல்கள் என்பன தரப்பட்டு நம்பகமான முறையில் ஒவ்வொரு பதிவும் பேணப்படுவதைக் காணலாம். இவ்வாறு தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தில் பல நாட்டுப் பல துறை அறிவினைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. எனவே, 2019 ஐப்பசி (October) வாசிப்பு மாதத்தில் இருந்து தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தினை வாசிப்புக்கான சிறந்த ஊடகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.


தமிழ் விக்கிப்பீடியா (https://ta.wikipedia.org) கலைக் களஞ்சியம் (2003 - 2019) பதினாறு ஆண்டு நிறைவினை வட இலங்கை - யாழ்பாணத்தில் (19/10/2019 – 20/10/2019) கொண்டாடியது. சின்னப்பொடியன் நானும் அதில் பங்கெடுத்தேன். எனது எண்ணங்களைப் பகிரவே இப்பதிவைப் பகிருகின்றேன். இந்நிகழ்வினைத் தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத் தொடக்ககாரர்களில் ஒருவரான .மயூரநாதன் (கட்டடக் கலைஞர், இலங்கை) அவர்களும் மூத்த விக்கிப்பீடியர் மு.சிவகோசரன் (பொறியியலாளர், இலங்கை) அவர்களும் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர். இந்நிகழ்வினை இலங்கை, இந்திய விக்கிப்பீடியர்கள் ஒன்றிணைந்து பங்கெடுத்துச் சிறப்பாகக் கொண்டாடினர்.

தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியம் கடந்து வந்த காலம் மற்றும் அடையவேண்டிய இலக்கு பற்றியே இந்நிகழ்வின் கருப்பொருள் அமைந்திருந்தது. இந்நிகழ்வில் பல நூற்றிற்கு மேல் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவுகளை எழுதியும் வலைப்பூ (Blog) நடத்தியவாறும் களத்தில் நின்று ஆய்வுப் பணி மேற்கொள்ளும் ஐம்புலிங்கம் ஐயாவைத் தேடினேன். நூல் வெளியிடும் முயற்சியில் இறங்கி இருப்பதால் இலங்கைக்கு வரமுடியவில்லையென அவர் தெரிவித்ததாக நீச்சல்காரன் (விக்கிப்பீடியர், வலைப்பதிவர், மென்பொருள் ஆக்குநர், தமிழ்நாடு) அவர்கள் எனக்குத் தெரிவித்தார். நீச்சல்காரன் உடன் இரவிசங்கர், சீனிவாசன் எனத் தமிழ்நாட்டில் இருந்து வந்த அறிஞர்களையும் இலங்கையின் பல அறிஞர்களையும் சந்திக்கத் தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியம் பதினாறாம் ஆண்டு நிகழ்வு எனக்கு உதவியதில் மகிழ்ச்சி.

வலைப்பதிவர்கள் பலர் இப்போதெல்லாம் வலைப்பக்கம் வருவதில்லை. அவர்கள் எல்லோரும் முகநூலில் மறைந்து இருப்பதைக் காணலாம். முகநூல் பதிவுகள் மறைவதைப் போலவே அவர்களும் மறைந்துவிடலாம். முகநூலில் மறையுண்டு இருப்பதை விடத் தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தில் பதிவுகளை இட்டு, சிறந்த தமிழ் கலைக் களஞ்சியம் உருவாக்கத்திற்கான பங்காளராக ஒவ்வொருவரும் மாறலாம். நான் கூட விக்கிப்பீடியாவில் பதிவு எழுதத் தொடங்கிவிட்டேன். தமிழ் வளம் பேண உலகத் தமிழ் படைப்பாளிகள் தாமாகவே விரும்பி வந்து தமிழ் விக்கிப்பீடியா (https://ta.wikipedia.org) கலைக் களஞ்சியத்தில் பதிவுகளை இடுமாறு பணிவோடு அழைக்கின்றேன்.

செவ்வாய், 8 அக்டோபர், 2019

தக்க சூழலில் தலையைக் காட்டு!

இனிய உலகத் தமிழ் வலைப்பதிவர்களே!

கடந்த 07/10/2019 அன்று எனது 50 ஆவது பிறந்த நாள். அன்றைய  நாள் வாழ்த்துத் தெரிவித்த எல்லோருக்கும் மிக்க நன்றி.
எனது 50 ஆவது பிறந்த நாளிலிருந்து புதிய வலைத் தளங்கள் தொடங்கியுள்ளேன். இந்த வலைப்பூவைத் தொடர்ந்து பேணுவேன். புதிய தளங்களில் பிற சிறு தளங்களை ஒருங்கிணைத்துச் செல்லவுள்ளேன். புதிய தளங்கள் மேம்படுத்தப்பட்டதும் எனது புதிய பயணத்தைப் பார்க்கலாம்.
புதிய முகவரிகள்:
https://yarlpubs.com/
https://yarlsoft.yarlpubs.com/தக்க சூழலில் தலையைக் காட்டு!உனக்காக
எந்தச் சூழலும் அமைந்துவிடாது!
எந்தச் சூழலையும்
உனக்காகப் பயன்படுத்திக்கொள்...
வெற்றி உன்னை நாடி வருமே!
பிறருன்னை
அறிமுகம் செய்து வைப்பார்களென
நம்பியிருக்காதே!
எவர் முன்னும்
முதலில் உன்னை அறிமுகம் செய்து வை
அதுவே உனது வெற்றி!
பலருக்குள் (மக்களுக்குள்) அறிமுகமாக
சூழலோ (சந்தர்ப்பமோ) பிறரோ தேவையில்லை...
எந்தச் சூழலிலும் எவர் முன்னும்
உன்னை நீயே அறிமுகம் செய்யும் போதே!
உன்னை நீயே
அறிமுகம் செய்யத் தயங்கினால்
இலை மறை காயாகத் தானே
இருக்க முடியும்!கணக்கு

வாழ்க்கை என்பது கணக்குத் தானம்மா!
காதலன், காதலி சேர்வது
கூட்டல் கணக்குத் தானம்மா!
கணவன், மனைவியாக இணைவது
கூட்டல் கணக்குத் தானம்மா!
காதலன், காதலி பிரிவது
கழித்தல் கணக்குத் தானம்மா!
கணவன், மனைவி பிரிவதும்
கழித்தல் கணக்குத் தானம்மா!
வாழையடி வாழையாகக் குட்டி போடுவது
பெருக்கல் கணக்குத் தானம்மா!
பாடையில போவதற்கு மூச்சை நிறுத்துவது
பிரித்தல் கணக்குத் தானம்மா!
காசைக் கணக்குப் பார்த்து - சேமித்து
செலவு செய்தால் வாழ்வுதானம்மா!
கடனாற்றில் நீந்திக் கடந்தால்
சாவுக் கணக்குத் தானம்மா!
எங்கும் எதிலும் எப்போதும்
வாழ்க்கையில் கணக்குத் தானம்மா!கைநழுவிப் போனால் பயனேது?

கையில் பொருள் இருந்தால் தானே
விலையைப் பேசிக் கொள்ளலாம்!
உறவுகள் கிட்ட இருந்தால் தானே
அவர்களைப் பாவித்துக் கொள்ளலாம்!
கிட்டாதாயின் வெட்டென மற
கைக்கெட்டாததை எப்படிக் கையாள்வது?
குப்பையில போட்டாலும் கூட
குண்டுமணியும் ஒரு நாள் தேவைப்படலாமென
எண்ணிப்பார்க்காமல்
என்னைக் கழித்து ஒதுக்கிவிட்டவர்கள்
இன்று
என்னைப் பயன்படுத்த முடியாமல்
அழுகின்றனராம் பார்த்தியளே!
காற்றுள்ள போதே
தூற்றிக்கொள்வது போல
கைக்கெட்டியதைக் கையாள்வதே நலம்!