Translate Tamil to any languages.

வெள்ளி, 25 அக்டோபர், 2019

வாசிப்பு மாதமும் தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியமும்


ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி (October) மாதம் வாசிப்பு மாதமாகக் கடைப்பிடிக்கிறோம். வாசிப்பதற்கு எத்தனையோ நாளேடுகள், எத்தனையோ மாதவேடுகள், எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. தேர்வு எழுதத் தேவையான ஏடுகளையே மாணவர்கள் வாசிக்கின்றனர். ஏனையோர் தலைப்புச் செய்திகளை வாசித்த பின் ஏடுகளை வீசுகின்றனர். இந்நிலையில் அறிவைப் பெருக்கிக் கொள்ள இருக்கின்ற ஏடுகளையோ புத்தகங்களையோ வாசிக்க முன்வருவோர் குறைந்து செல்கிறது. இந்நிலையில் மாற்றம் மலரும் என்றுதான் ஐப்பசி (October) மாதம் வாசிப்பு மாதமாகக் கடைப்பிடிக்கிறோம்.

இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் அச்சு ஏட்டினை வாசிப்பது போல வலைப்பக்கங்கள், மின் ஏடுகள், மின் புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன. வாசிப்பு மனிதனை ஆளுமை மிக்க ஒருவராக மாற்றுகின்றது. ஆளுமை மிக்க அறிவாளிகளை உருவாக்கத் தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியம் உதவுமென நம்புகின்றேன். இத்தளத்தில் மேற்கோள்கள், சான்றைப் பகிரும் (உசாத்துணை) நூல்கள் என்பன தரப்பட்டு நம்பகமான முறையில் ஒவ்வொரு பதிவும் பேணப்படுவதைக் காணலாம். இவ்வாறு தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தில் பல நாட்டுப் பல துறை அறிவினைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. எனவே, 2019 ஐப்பசி (October) வாசிப்பு மாதத்தில் இருந்து தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தினை வாசிப்புக்கான சிறந்த ஊடகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.


தமிழ் விக்கிப்பீடியா (https://ta.wikipedia.org) கலைக் களஞ்சியம் (2003 - 2019) பதினாறு ஆண்டு நிறைவினை வட இலங்கை - யாழ்பாணத்தில் (19/10/2019 – 20/10/2019) கொண்டாடியது. சின்னப்பொடியன் நானும் அதில் பங்கெடுத்தேன். எனது எண்ணங்களைப் பகிரவே இப்பதிவைப் பகிருகின்றேன். இந்நிகழ்வினைத் தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத் தொடக்ககாரர்களில் ஒருவரான .மயூரநாதன் (கட்டடக் கலைஞர், இலங்கை) அவர்களும் மூத்த விக்கிப்பீடியர் மு.சிவகோசரன் (பொறியியலாளர், இலங்கை) அவர்களும் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர். இந்நிகழ்வினை இலங்கை, இந்திய விக்கிப்பீடியர்கள் ஒன்றிணைந்து பங்கெடுத்துச் சிறப்பாகக் கொண்டாடினர்.

தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியம் கடந்து வந்த காலம் மற்றும் அடையவேண்டிய இலக்கு பற்றியே இந்நிகழ்வின் கருப்பொருள் அமைந்திருந்தது. இந்நிகழ்வில் பல நூற்றிற்கு மேல் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவுகளை எழுதியும் வலைப்பூ (Blog) நடத்தியவாறும் களத்தில் நின்று ஆய்வுப் பணி மேற்கொள்ளும் ஐம்புலிங்கம் ஐயாவைத் தேடினேன். நூல் வெளியிடும் முயற்சியில் இறங்கி இருப்பதால் இலங்கைக்கு வரமுடியவில்லையென அவர் தெரிவித்ததாக நீச்சல்காரன் (விக்கிப்பீடியர், வலைப்பதிவர், மென்பொருள் ஆக்குநர், தமிழ்நாடு) அவர்கள் எனக்குத் தெரிவித்தார். நீச்சல்காரன் உடன் இரவிசங்கர், சீனிவாசன் எனத் தமிழ்நாட்டில் இருந்து வந்த அறிஞர்களையும் இலங்கையின் பல அறிஞர்களையும் சந்திக்கத் தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியம் பதினாறாம் ஆண்டு நிகழ்வு எனக்கு உதவியதில் மகிழ்ச்சி.

வலைப்பதிவர்கள் பலர் இப்போதெல்லாம் வலைப்பக்கம் வருவதில்லை. அவர்கள் எல்லோரும் முகநூலில் மறைந்து இருப்பதைக் காணலாம். முகநூல் பதிவுகள் மறைவதைப் போலவே அவர்களும் மறைந்துவிடலாம். முகநூலில் மறையுண்டு இருப்பதை விடத் தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தில் பதிவுகளை இட்டு, சிறந்த தமிழ் கலைக் களஞ்சியம் உருவாக்கத்திற்கான பங்காளராக ஒவ்வொருவரும் மாறலாம். நான் கூட விக்கிப்பீடியாவில் பதிவு எழுதத் தொடங்கிவிட்டேன். தமிழ் வளம் பேண உலகத் தமிழ் படைப்பாளிகள் தாமாகவே விரும்பி வந்து தமிழ் விக்கிப்பீடியா (https://ta.wikipedia.org) கலைக் களஞ்சியத்தில் பதிவுகளை இடுமாறு பணிவோடு அழைக்கின்றேன்.

2 கருத்துகள் :

  1. என்னைத் தேடியதறிந்து மகிழ்ச்சி. உங்களுடைய இப்பதிவு நேரில் வராத குறையைத் தீர்த்தது. முதலில் வருவதாக யோசித்தேன். பின்னர் திட்டம் மாறியது. அருமையான தொகுப்பாகத் தந்துள்ளீர்கள். இன்றுவரை தமிழ் விக்கிபீடியாவில் 745 கட்டுரைகளும், ஆங்கில விக்கிபீடியாவில் 145 கட்டுரைகளும் எழுதியுள்ளேன். அண்மையில்கூட புதுக்கோட்டையில் நடந்த வகுப்பில் நேரடியாக ஒரு கட்டுரையினை களத்தில் ஆரம்பித்தேன். சக விக்கிபீடியர்களும், உங்களைப் போன்ற நண்பர்களுக்கும் என் பணிக்குத் துணை நிற்கின்றார்கள். தற்போது விக்கிபீடியா நடத்தும் வேங்கைத்திட்டம் போட்டியில் கலந்துகொண்டுள்ளேன். உங்களின் அன்பிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!