Translate Tamil to any languages.

வெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்

ஓரிடத்திலிருந்து இன்னொரிடத்துக்கு மின்னைக் கடத்த மின்னினைப்பான் (wire) ஊடகமாகப் பயன்படுகிறது. அது போலத் தான் தகவல், செய்தி, பதிவு என ஆக்கங்களைக் கடத்த வானொலி, தொலைக்காட்சி, வலைப்பக்கம், வலைப்பூ என மின்னூடகங்கள் செயற்படுகின்றன. அச்சு ஊடகங்களை செய்தி ஏடு, ஏழல் (வார) ஏடு, மாத ஏடு (சஞ்சிகை) என எல்லாம் நல்ல செய்திகளையும் தகவல் மற்றும் ஆக்கங்கள் என எல்லாவற்றையும் வெளியிடுகின்றன.

ஊடகங்கள் அரசின் தலை எழுத்தையோ மக்களின் உள மாற்றத்தையோ மாற்றக்கூடிய வலுவை (சக்தியை) வைத்திருக்கின்றன. அந்த வலுவை (சக்தியை) படைப்பாளிகள், பதிவர்கள் தான் உருவாக்குகின்றனர். அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள் பற்றி அலசுவதை விட வலைப்பூக்கள் (மின் ஊடகம்) பற்றிய ஒரு சில குறிப்புகளைத் தரலாம் என எண்ணுகிறேன்.

வலைப்பூ நடாத்த அடிப்படைக் கணனி அறிவு, இணையத்தள நுட்பங்கள் எனக் கொஞ்சம் படித்திருந்தால் போதுமானது. எழுத்தாற்றல் உள்ள எவரும் வலைப்பூ நடாத்தலாம். மக்களின்  எண்ணங்களில் மாற்றம் ஏற்பட, அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட ஏனைய ஊடகங்களைப் போல வலைப்பூக்களாலும் (Blogs) ஏற்படுத்தலாம். அதற்குச் சில முயற்சி எடுக்க வேண்டி இருக்கும்.

தமிழ்மணம்.நெற், தேன்கூடு.இன், தமிழ்நண்பர்கள்.கொம் போன்ற தானியங்கித் திரட்டிகளில் வலைப்பூக்களை இணைப்புச் செய்வதோடு, கூகிள்பிளஸ் (g+), முகநூல் (facebook), கீச்சுகள் (twitter) போன்ற மக்களாய (சமூக) வலைத்தளங்களில் நட்புகளைப் பெருக்கி பதிவுகளைப் பரப்ப வேண்டும். அதாவது, வாசகர் எண்ணிக்கை அதிகமாயின் வலுவான (சக்தி வாய்ந்த) வலைப்பூ என்ற இடத்தைப் பிடிக்கலாம்.

பல வலைப்பூ நடாத்தும் நண்பர்கள் தங்களது வலைப்பூவை முதல் இடத்தில் வைத்துப் பேணுகின்றனர். அவர்கள் ஏனையோரது வலைப்பூக்களில் தங்களது அடையாளங்களைக் கருத்துகளாக வெளிப்படுத்த, அவ்வலைப்பூப் பதிவர்களும் குறித்த நண்பர்களின் வலைப்பூவில் கருத்துகளைப் பகிருகின்றனர். எடுத்துக்காட்டாக ஒரு நண்பரின் வலைப்பூவில் ஒரு பதிவிற்கு நூற்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் பதியப்பட்டிருந்தன. அவ்வலைப்பூ நண்பர் நூற்றுக்கு மேற்பட்ட அவரது நண்பர்களின் வலைப்பூவில் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருப்பார் என நம்புகிறேன்.

வலைப்பூ நடாத்தி வெற்றி பெற்றவர்களின் கருத்துக்கள் புதிய வலைப்பூ நடாத்துபவர்களுக்கு நல்ல வழிகாட்டல் ஆகும். இவ்வாறு தான் எனது வலைப்பூக்களை நானும் மேம்படுத்தவுள்ளேன்.

நாம் எழுதுவதால் எமக்கு உள நிறைவு கிடைக்கின்றது. அதே போல எமது எழுத்தை வாசிக்கின்ற வாசகருக்கும் உள நிறைவு ஏற்பட வேண்டுமே. வாசகர் ஏன் எமது எழுத்தை வாசிக்கின்றார்கள்? வாசிப்பதால் அவரும் களிப்படைவதாலே (மகிழ்வடைவதாலே)! வாசகர் விருப்பறிந்து நாம் எழுதினால் வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

வாசகர்கள் அச்சு ஊடகங்களை நாடாமல் மின்னூடகங்களை (வலைப்பூக்களை) நாடுவதேன்? தொழில் நுட்ப வளர்ச்சி, நேர ஒதுக்கீடு, பணம் செலுத்த வேண்டியிருக்காது எனப் பல காரணிகள் இருக்கலாம். இன்றைய உலக நடப்பில் மின்னூடகங்கள் (வலைப்பூக்கள்) பல வாசகர்களின் உள்ளத்தை ஈர்க்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. வலைப்பூ நடாத்த முன் வருபவர்கள் இதனையும் கருத்தில் கொள்வது நன்று.

எடுத்துக்காட்டாக நண்பர் திண்டுக்கல் தனபாலனின் (http://dindiguldhanabalan.blogspot.com/) வலைப்பூவைப் பாருங்கள். அவரது பதிவுகள் நம்பிக்கை ஊட்டுவனவாக இருந்தாலும் கருத்து, கவிதை, பாடல் என அதிக வலைப்பூ நுட்பங்களுடன் அழகாகப் பதிகின்றார்.

ஊடகங்களும் வெளீயீடுகளும், அறிஞர்களின் பதிவுகள் எனப் பலவற்றைப் படித்து எனது கண்ணோட்டமாக இங்கு தரவிருக்கிறேன். அவ்வேளை மேலும் பல மின்னூடகக் (வலைப்பூக்) கருத்துக்களை தரவிருக்கிறேன். நான் எனது மின்னூடகப் (வலைப்பூப்) பதிவு வளர்ச்சியின் இறுதிக்கட்டமே இந்த 'யாழ்வாணனின் வெளீயீட்டகம்' என்ற வலைப்பூ (http://www.ypvnpubs.com/). இங்கு எனது மின்னூடகப் (வலைப்பூப்) பதிவுகள், மின்னூல்கள், எனது கண்ணோட்டங்கள் எனப் பல வெளியிட எண்ணியுள்ளேன்.

என் இனிய உறவுகளே! மின்னூடகம் (வலைப்பூ) ஊடாக உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேணுவோம் வாருங்கள். எங்களது படித்தறிவையோ பட்டறிவையோ போல மின்னூடகம் (வலைப்பூ) ஊடாக உலகெங்கும் புகட்டலாம் வாருங்கள். இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு சிறந்த மின்னூடகம் வலைப்பூ என்பதை எவரும் மறப்பதிற்கில்லை. நீங்களும் மின்னூடகம் (வலைப்பூ) சார்ந்த பட்டறிவை என்னுடன் பகிரலாம். உங்கள் கருத்துகளை என்றும் நான் ஏற்றுக்கொள்வேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!