Translate Tamil to any languages.
7-பொத்தகங்கள் மீது பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
7-பொத்தகங்கள் மீது பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 டிசம்பர், 2018

வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்


உலகத் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவரான சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) அவர்களின் "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்" என்ற நாற்பத்திரண்டு சிறுகதைகளின் தொகுப்பு நூல் 08/12/2018 அன்று ஜேர்மனியில் மிகவும் சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது. இவ்வறிமுக விழாவில் வலைப்பதிவர் கௌசி அவர்களின் உலகெங்கிலுமுள்ள வலையுலக நட்புறவுகள், அவரது வாசகர்கள் எனப் பலர் ஜேர்மனிக்கு வருகை தந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நூலாசிரியரின் இந்நூல் 17/06/2018 ஞாயிறன்று காலை 9 மணிக்கு இலங்கை, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் பங்கெடுத்தவர் என்ற வகையிலும் 2010 இலிருந்து வலையுலகை உலா வருவதனாலும் ஜேர்மனியில் இடம்பெறும் நூலறிமுக விழாவில் பங்கெடுக்கும் உலகெங்கிலுமுள்ள வலைப்பதிவர்கள் இந்நூலைப் பற்றியறிய உதவும் தகவலைப் பகிர விரும்புகின்றேன்.
--------------------------------- நூல் அறிமுகம் ----------------------------------

இலக்கிய வாசகர்களின் உள்ளங்களை இலக்கியப் படைப்பாளிகள் கொள்ளையடிப்பது என்பது இலகுவானதல்ல. வாசகர் விருப்பறிந்து, தமது திணிப்புகளைத் தூக்கியெறிந்து, வாசகர் சுவையறிந்து, தமது வசப்படுத்தும் எழுத்து நடையாலே தான் வாசகரைத் தம்பக்கம் இழுத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறாகத் தான் பல முன்னோடி எழுத்தாளர்கள், வாசகர்கள் தமது புனைகதை இலக்கியத்தை நாடவைக்க (தமது எழுத்தால் வாசகரைக் கட்டிப் போட) முயன்றுள்ளனர். இவ்வாறே (www.gowsy.com வலைப்பூ) சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) அவர்கள் தமக்கென வாசகர் அணியினைப் பேணி வருகின்றார்.

கையடக்கமாக அமைந்துள்ள இந்நூலின் அட்டை கறுப்பு நிறம். பின்னட்டையில் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் அவர்கள் வழங்கிய நூலாசிரியரைப் பற்றிய குறிப்பும் முன்னட்டையில் "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்", நூலாசிரியர் பெயர், வெளியீடு: ஜேர்மனி தமிழ் கல்விச் சேவை ஆகியன வெள்ளை எழுத்துக்களால் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளது. உள்ளே கண்ணிற்கு எரிச்சலை ஏற்படுத்தாத செம்மஞ்சள் (ஐவரி) தாளில் கறுப்பு எழுத்துக்களால் அச்சடிக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்து வாசிக்கும் போது எழுத்து அளவு அரைப் புள்ளியாயினும் பெரிதாக்கி இருக்கலாமெனத் தோன்றுகிறது.

முன்னட்டையில் பக்கங்களைத் தட்டும் விளிம்பில் மட்டும் மங்கலான வெண்ணிறம் வெளிப்படுகிறது. அதேவேளை வெண்ணிறப் பூவொன்றும் விரிந்து காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நூலுக்குள்ளே நுழைந்தால் "வெள்ளை உடையணிந்த ஒருவரின் இளமைக்கால வாழ்வை வெளிக்கொணருவதோடு ஒளிமயமான வாழ்வுக்கு வழிகாட்டும் தகவல் ஒளிந்திருக்கு." என்பதை வாசித்தறியலாமெனத் தோன்றுகிறது. எப்படியிருப்பினும் நூலின் அட்டை வடிவமைப்பு, தெளிவான அச்சடிப்பு ஆகியவற்றை மேற்கொண்ட இலங்கை, யாழ்ப்பாணம் அன்ரா பிறின்டர்ஸ் குழுமத்தினருக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.

"ஓர் ஐரோப்பிய வாழ்வியல் தரிசனம்" என்ற தலைப்பில் நூலாசிரியருக்குக் கற்பித்த பேராசிரியர் துரை மனோகரன் அவர்களின் எண்ணப்பதிவுகள் நூலின் முதலுரையாக அமைந்திருப்பதோடு நூலின் சிறப்புக்கு வலுச் சேர்க்கின்றது.

அடுத்து "ஒரு வாசகனின் வாக்குமூலம்" என்ற தலைப்பில் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் அவர்கள் சிறுகதைகளை அழகுணர்வோடு அறிமுகம் செய்கின்றார். அதனால் வாசகர்கள் விரைவாகக் கதைகளைப் படிக்க நுழைந்து விடுவார்கள்.

அடுத்ததாக "சில நிமிடங்கள் நுழை வாயிலில் உங்களுடன்..." என்ற தலைப்பில் நூலாசிரியர் வாசகரை இடைமறிக்கிறார். "சமுதாயக் கண்கள் திறக்கப்பட வேண்டும். தான் வாழும் சூழலும் நலம் பெற வேண்டும்." எனத் தனது எழுத்தின் நோக்கை நூலாசிரியர் முன்வைக்கின்றார். இதனால் கதைகள் எப்படிப்பட்டதாக இருக்குமென்பதை நீங்களே கண்டுபிடிக்கலாம்.

நூலின் இறுதிப் பகுதியில் பக்கம் 223-224 இல் "கௌசியின் வரிகளை நேசித்தவர் வரிகள்" என்ற தலைப்பில் நூலாசிரியரின் வாசகர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் இடம்பெறுகிறது. அவை நூலாசிரியரின் ஆற்றலை மதிப்பீடு செய்யக்கூடிய அளவுகோலாகத் தென்படுகிறது.

சரி! இனிக் கதைகளை வாசிக்கப் போகலாம் தான்... ஆயினும், கதைகள் எவ்வாறு அமைந்திருக்குமெனத் தெரிந்துகொள்வோம். கதாசிரியர் தான் சொல்வதாகவோ கதாசிரியர் தான் பார்த்ததை அப்படியே சொல்வதாகவோ கதாசிரியர் தான் ஒரு கதாபாத்திரமாக நின்று வெளிப்படுத்துவதாகவோ கதைகள் நகருவதைக் காணலாம். கதைகளின் முடிவில் அடைப்புக்குள் உண்மைக் கதை, உண்மை கலந்த கதை, யாவும் கற்பனை எனக் குறிப்பிட்டிருப்பார்கள்.

அதேவேளை கதையின் முடிவினை கதாசிரியர் தானே சொல்லி முடிப்பதாகவோ வாசகர்கள் தாமே கதையின் முடிவினை கண்டுபிடிக்க இடமளிப்பதாகவோ கதைகள் முடிவுக்கு வரலாம். இதன் அடிப்படையில் வாசகர்கள் கதைகளை வாசிக்கப் பழகினால் மகிழ்ச்சி அடையலாமெனக் கூறிக்கொண்டு நான்கு கதைகளைத் தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.

"அப்பா என்னவானார்!" என்ற கதையே முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கிறது.
"இஞ்ச பாருங்கோ இது நான் காசு கட்டி வாங்கின வோஸ் மெசின். இதில் என்ர பிள்ளைகள்ட உடுப்பும் என்ர உடுப்பும் தான் கழுவலாம். உங்கட ஊத்தைகள் இதுக்குள்ள போட்டுக் கழுவாதீங்க"
"அப்படியென்றா நானென்ன கையாலயா கழுவிறது"
என்றவாறு முதலாவது கதையே கணவன் - மனைவி சிக்கலில் தான் தொடங்குகிறது.

மேற்படி கதையில "பலமுறை தந்தையுடன் தொடர்புகொள்ள முடியாத பிள்ளைகள் அப்பா என்னவானார் என்று தெரியாமல் ஜேர்மனி பொலிசாருக்கு அறிவித்தனர். வீட்டு இலக்கத்தைத் தேடிச் சென்ற பொலிசார் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியும் திறக்கப்படாத கதவினை திறந்தனர்." பிள்ளைகளது தந்தை அங்கே பிணமாகக் கிடந்ததாகக் கதை முடிவுக்கு வருகிறது.
இக்கதையில் புலம்பெயர் நாட்டில் நிகழும் குடும்பச் சிக்கலை நூலாசிரியர் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.

"கவிதை பாடலாம்" என்றொரு கதை பக்கம் 44 - 50 இல் காணப்படுகிறது. "தாயின் நீண்ட விளக்கத்தில் தெளிவு பெற்ற மகளும் காலத்துக்கேற்பக் கவிபாடும் உத்தியில் தன்னை ஈடுபடுத்தும் முனைப்புடன் அகக்கண்ணைத் திறந்தாள். அவள் கற்ற இலக்கணமும் தாயின் கருத்தும் ஒருங்கிணைய கற்பனைக்கு மோட்டர் பூட்டினாள்." என்றவாறு தாயானவள் மகளுக்குக் கவிதை எழுதத் தூண்டுவதாகக் கதை நகருகிறது.

இக்கதை, கதை போலன்றி 'கவிதை எழுதக் கற்பித்தல்' பாடம் நடாத்துவதாக அமைந்திருக்குமென நீங்கள் நினைக்கலாம். அப்படியாயின் இந்நூலைப் பெற்று இக்கதையினை முழுமையாக வாசிக்கவும். இக்கதையினை வாசித்தவர்கள் சிறந்த கவிதையினை எழுதத் தேவையானவற்றை பொறுக்கிக்கொள்ள இந்நூல் உதவுமென நம்புகின்றேன்.

"மதிவதனி ஏன் மதி இழந்தாள்" என்றொரு கதை பக்கம் 149 - 152 இல் காணப்படுகிறது. "குடிக்கிறதுக்கு அளவு கணக்கில்லை. மனிசர நிம்மதியா இருக்க விடுறீங்களே. எப்பதான் இந்த பார்ட்டிகள் குறையப் போகுதோ" என்றவாறு மனைவி, தன் கணவனின் தொல்லை தாங்காது அலுத்துக் கொள்வதைக் கதையில் காணமுடிகிறது. மேலும், கணவன் மனைவிக்கு மதுவை ஊட்டிவிட்டார் என்றவாறு கதை நகருகிறது. மது போதையினால் ஏற்படும் விளைவினை நூலாசிரியர் இக்கதாபாத்திரங்களூடாகக் குடும்ப உணர்வோடு இயல்பாகப் படம்பிடித்து வெளிக்காட்டுகின்றார்.

நூலின் தலைப்பாகிய "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்" என்றொரு கதை பக்கம் 201 - 206 இல் காணப்படுகிறது. "உனக்கு வயது 30. இப்படி எத்தனை காலம் வாழப் போகின்றாய். வாழ்க்கை ஒரு முறை தான். அதுவும் வாழத்தான்." என மதியுரை கூறுவதைப் பார்த்தால் கதையில் வரும் கதாநாயகியின் (மருத்துவத் தாதியின்) பருவம் கரைவதேன் என்பதை நீங்கள் வாசித்து அறியலாம். மேலும், "இப்பெல்லாம் யாரும் பெடியனைக் கண்டால் காதல் வர மாட்டன் என்கிறது." எனக் கதாநாயகி தெரிவிப்பதைப் பார்த்தால் பருவம் கரையக் காரணம் காதல் தானென எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் மறக்காமல் நூலை வேண்டிப் படித்தால், ஐயங்களும் ஊகங்களும் முடிவுக்கு வந்துவிடுமே!

"வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்" என்ற நூலை அறிமுகம் செய்வதாகக் கூறிக்கொண்டு நாற்பத்திரண்டு கதைகளையும் குறுக்கிச் சொல்ல இயலாது என்பதே உண்மை. பெரும்பாலான கதைக் கருப்பொருள், சமகாலத்தில் (2018 இல்) ஆங்காங்கே இடம்பெறும் உண்மை நிகழ்வுகளை மீட்டுப் பார்க்க உதவுகின்றது. இந்நூலில் வணிக நோக்கிலான கற்பனைக் (மசாலாக்) கதைகள் இல்லையென்றே சொல்லலாம். அருமையான சிறுகதைகளைக் கொண்ட இந்நூல் வாசகரின் உள்ளத்தில் நல்லதோர் இடத்தினைப் பிடிக்கும் என்பதே எனது கருத்து.
முற்றும்.

செவ்வாய், 13 டிசம்பர், 2016

“சல்லடை கனவுகள்” நூலைப் பற்றி...

"தினத்தந்தி நாளிதழில் புதன்கிழமையன்று வெளியாகும் மதிப்புரை பக்கத்தில் “சல்லடை கனவுகள்” கவிதை நூல்.

தமிழ்நாட்டில் வெளியான நாளிதழில் பக்கம் எண்:16 இலும் அமீரகத்தில் பக்கம் எண்:8 இலும் புத்தக மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது." என்பதை நூலாசிரியர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



வாருங்கள் உறவுகளே! தமிழ்நண்பர்கள் தளத்தில் "மௌனங்கள் உயிர்த்தெழுந்தால்" என்ற பா/கவிதை தொடரைப் (http://tamilnanbargal.com/node/57302) படித்தால் புரியும் ஆய்க்குடியின் செல்வன் (மணிகண்டன்) அவர்களது பா/கவிதை புனையும் ஆற்றலை!

"தாமரை கண்ணான் உலகிற்கு
போகிற வழி தந்தாலும்
போகிற எண்ணம் ஏதும் இல்லையடி
நீயற்ற எவ்வுலகமும் நிறையற்றதே எனக்கு!" என்று
அவள் இல்லாத இடத்துக்கு
இவன் போகானாம் - ஆங்கே
நிறைவு கிட்டாதென - இவன்
எண்ணம் வெளிப்படுத்தும் வண்ணம்
பல பா/கவிதை புனைந்த - தம்பி
ஆய்க்குடியின் செல்வன் (மணிகண்டன்)
ஆக்கி அரங்கேற்றிய படைப்பாம்
“சல்லடை கனவுகள்” நூல் பற்றி
தமிழ்நாட்டு 'தினத்தந்தி' நாளிதழில்
புத்தக மதிப்புரை பக்கத்தில்
அறிமுகம் செய்திருப்பதை பாரும்!

தாங்கள் “சல்லடை கனவுகள்” நூலை வாங்கிப் படியுங்கள். தாங்கள் கொடுக்கின்ற பணத்திற்கு அதிகமான அறிவு கிட்டும். அத்தனை சிறப்பான நூலைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்னறேன். 

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

மாதகல்வாசி அறிஞர் அஸ்வின் நினைவுகளைப் பகிருகிறேன்.

எனது தாய் மண்ணில், நான் பிறந்த ஊரில் பிறந்த தம்பி அஸ்வின் சுதர்சனை நான் நேரில் கண்டதுமில்லை; கதைத்ததுமில்லை. நம்நாட்டு இடப்பெயர்வுகள் தான் காரணம். இருந்தும் ஊடகவியலாளன், சித்திரக் கலைஞன் (காட்டூனிஸ்ட்), குறும்திரைப்பட இயக்குனர் எனப் பலதுறை ஆற்றலாளனாக எனது ஊருக்கும் எனது நாட்டிற்கும் உலகத் தமிழருக்கும் மின்னினார். ஆண்டவன் இளம் அகவையிலேயே அவரை அழைத்துவிட்டான். அவரது இழப்பை ஈடு செய்ய இயலாது. எனினும் அவரது வெளியீடுகளில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்நோக்கத்தைக் கருத்திற் கொண்டு, அவரது சில பதிவுகளைத் தொகுத்து மின்நூலாக்கி உள்ளேன்.

மாதகல்வாசி அறிஞர் அஸ்வின் தனது நேர்காணல் ஒன்றில் ஈழத்து மூத்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களே தனது வழிகாட்டி என்று தெரிவித்திருந்தார். அவரது ஊக்கப்படுத்தலே தனது வளர்ச்சிக்கு உந்துசக்தி என்றும் தெரிவித்திருந்தார். எனது இலக்கிய முயற்சிகளின் வழிகாட்டியும் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களே! புதுக்குடியிருப்பில் இருந்த வேளை மாதகல்வாசி அறிஞர் அஸ்வின் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களோடு ஈழநாடு பத்திரிகை ஊடாக முதன் முதலில் அடையாளம் காட்டிவிட்டார். பின் ஈழத்து முன்னணி நாளேடுகளில் முத்திரை பதித்துள்ளார்.


இலங்கை ஊடகங்களில் பணியாற்றுவதென்பது கத்தியின் கூர் விளிம்பில் நடப்பது போலத் தான் இருக்கும். இங்கே கருத்துகளைக் கவனமாகக் கையாளத் தெரிந்தாலும் ஊடகக்காரனுக்குத் தற்காப்புத் வேவைப்படுகிறது. இந்நிலை அறிந்தும் தம்பி மாதகல்வாசி அஸ்வின் சுதர்சன் துணிச்சலுடன் ஊடகங்களில் பணியாற்றி வெற்றி பெற்றவர் என்பதால் அவரது பதிவுகளை உலகெங்கும் வாழும் தமிழர் அறியும் வண்ணம் அவரது நினைவாக இம்மின்நூலை வெளியிட்டுத் தங்களுடன் பகிருகிறேன்.



இம்மின்நூலைப் பதிவிறக்க கீழ்வரும் இணைப்பையும் பயன்படுத்தலாம்.
https://app.box.com/embed/preview/jo8nbovx6xlrm449l6lo6zfel0hj3et6

சனி, 9 ஏப்ரல், 2016

அறிஞர் கணேசனின் பயன்தரும் நூல்கள்

ஒரு வெளியீட்டாளரின் எண்ணத்தில் வாசகர் உளநிறைவைத் தரும் நூல்களையே வெளியிட்டுதவ முன்வருவார். நூல் ஆசிரியர்களோ தங்கள் எண்ணங்களை வெளியிட முன்நிற்பர். வாசகரோ தங்கள் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கின்ற நூல்களையே வாங்க முயற்சிப்பர். இந்த மும்முனைப் போருக்குள்ளே ஒரளவேனும் உடன்பாடு எட்டப்பட்டாலே ஒரு நூல் அச்சிட்டு வெளிவரமுடிகிறது. வெளியீடு இப்படி என்றால், ஒரு நூலை ஆக்கி முடிக்க எப்படி எல்லாம் நூல் ஆசிரியர் முகம் கொடுத்திருப்பார்.

ஒரு நூலை ஆக்கி முடிக்க இப்படி என்றால், பல நூலை ஆக்கி வெளியிட்ட அறிஞர் எவ்வளவு முகம் கொடுத்திருப்பார். அவரது திறமை, தன்னம்பிக்கை இரண்டுமே அந்நூல்களுக்கான முதலீடு என்பேன். அதிலும் சிறப்பு என்னவென்றால் படைத்துறை (இராணுவ) அறிஞர் எழுதிய நூல்களை வெளியிட்டுதவ முன்வந்த வெளியீட்டாளர்களை நான் பாராட்டியே ஆகவேண்டும். திறமை, தன்னம்பிக்கை இரண்டையும் முதலீடாகக் கொண்டு தனது எண்ணங்களை வெளியிட்ட படைத்துறை (இராணுவ) அறிஞர் கர்ணல் கணேசன் ஐயா அவர்களின் நூல்கள் பற்றிய தகவலைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அவரது நூல்களைத் தாங்களும் வேண்டிப் படித்துப் பகிருவீர்கள் என நம்புகின்றேன்.

பெண்ணொருத்தி குழந்தை பெற்றெடுக்கும் வரையான துன்பங்களை விட, நூல் ஆசிரியர் நூலொன்றை ஆக்கி முடித்து,  வெளியிட்டு, வாசகர் கைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் வரையான துன்பங்கள் அதிகம் என்பர். ஆயினும் குழந்தையைப் பெற்றெடுப்பவளே அதிக துன்பங்களை அடைகின்றாள். எப்படி இருப்பினும் அச்சு நூல் வெளியீடு என்பது பல துன்பங்களைக் கண்டே இடம்பெறுகிறது. அப்படிப் பல தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து பல அச்சு நூல்களை வெளியீட்ட படைத்துறை (இராணுவ) அறிஞர் கர்ணல் கணேசன் ஐயா அவர்களின் நூல்கள் பற்றிக் கீழே விரித்துப் படியுங்கள்.



இனிய வலையுலக உறவுகளே! எனது அடுத்த முயற்சியாகச் சித்திரைப் புத்தாண்டின் பின் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கும் பணியைத் தொடரவுள்ளேன். அதற்கெனத் தனித் தளம் பேணவுள்ளேன். விரைவில் அத்தகவலை இத்தளத்தில் வெளியிடுவேன்.


எல்லோருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

சனி, 9 மே, 2015

மின் இதழும் மின் இதழ் வடிவமைப்பும்


பத்து மாதம் வயிற்றிலே
பிள்ளையைச் சுமந்து
பெற்றெடுத்தவளுக்குத் தான் தெரியும்
மகப்பேற்று வலி!
ஒரு பக்கம் தட்டச்சுச் செய்ய
நம்மாளுகள் படுகிற பாட்டை
தாங்களும்
அறியாமல் இருக்க முடியாதே!
முன், பின், நடு
மேல், கீழ், நடு
இடம், வலம், நடு
அமைப்புகளுக்கேற்ப நிறங்கள்...
நிற அமைப்புகளிற்கு உள்ளே
கனதியான படைப்புகள்...
சொல்ல வரும் செய்திக்கேற்ப
படைப்புகளின் தொகுப்பு...
இப்படியே அடுக்கித் தான்
மின் இதழ் என்ன
மின் நூல் என்ன
எந்தவொரு
மின் வெளியீடு என்ன
உருவாக்கி வெளியிட வேண்டியிருக்கே!
தடைகள் பல தாண்டி
எண்ணங்கள் பல கொட்டி
விடியும் வரை விழித்திருந்து
இதழோ நூலோ வெளிக்கொணர
படைப்பாளி பட்ட வலி
எவருக்குத் தான் தெரியுமிங்கே!
"நமது திண்ணை" என்றொரு மின் இதழை
( மின்னிதழைப் பதிவிறக்க இங்கே சொடுக்குக )
எப்படித் தான் வடிவமைத்திருப்பார்களோ?
பக்கங்களின் சுமையையும்
பக்க வடிவமைப்பு நுட்பங்களையும்
பதிவிறக்கிப் படித்தால் தான் தெரியுமே!
அதற்கு முன்னர்
அறிஞர் இராதாகிருஷ்ணன் ஆக்கிய
"நமது திண்ணை - சிற்றிதழ்
வடிவமைப்பு" பற்றிய விரித்துரைப்பை
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்!
வெளியீடுகள் என்பது
எழுத்துகளில் தான் இருப்பினும்
கண்ணுக்கு குளிர்மை தரும்
பின் புற நிறம்
எழுத்துகள் சொல்லும் செய்திக்கு ஏற்ப
பின் புறப் படம்
பின் புற அமைவிற்கு ஏற்ப
எழுத்துகளின் நிறம்
வெளியீடுகளின் அளவிற்கு ஏற்ப
பதிவுகளின் நீளம்
இன்னும் இன்னும்
எத்தனையோ இருக்கலாம்...
படித்துப் பார்த்தால் படித்துக் கொள்ளலாமே!
மின் இதழும் 
மின் இதழ் வடிவமைப்பும்
எப்படி இருக்க வேண்டுமென அறிந்தால்
நமது மின்நூல் கூட
எப்படி இருக்க வேண்டும் என்பதை
நான் சொல்லாமலே - நீங்களே
கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கே!

வெள்ளி, 8 மே, 2015

மின்நூல்கள் என்றால் இலகுவாய் வெளியிடலாமா?

ஒரு நூல் வெளியீட்டையும் ஒரு தாயின் மகப்பேற்றையும் ஒப்பிட்டு தாயின் மகப்பேற்று வலி போலத் தான் ஒருவரது நூல் வெளியீட்டு வலியும் இருக்குமென்பர். தாயானாவள் தன் குழந்தையைச் சுமந்து ஈன்றெடுக்கம் நாள் வரை பட்ட துயர் எழுத்தில் எழுதிவிட முடியாது. அது போலப் படைப்பாளியின் உள்ளத்தில் கருவுற்ற எண்ணம் எழுதி,  தொடராக வெளியாகி. தொகுத்து நூலாக உருவாகி வெளியிடும் வரை படைப்பாளி பட்ட துயரும் அதை விட அதிமாகத் தானிருக்கும்.

நம்மாளுகள் சிலரின் தவறான எண்ணங்கள் பல படைப்பாளிகளின் உள்ளத்தை நோகடித்து இருக்கிறது.
உவர்களுக்கென்ன
எம்.எஸ்.வேர்ட்டில் தட்டிப்போட்டு
போட்டோசொப்பில் வெட்டிப்போட்டு
பிடிஎஃப் இல ஒட்டிப்போட்டு
வலையில காட்டிப்புட்டால்
மின்னூல் என்பாங்க!

இப்படி மின்னூல் ஆக்கியோரைச் சொல்லால் அடித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு படைப்பாளி தனது மின்நூலை வெளிக்கொணர எவ்வளவு துன்ப, துயரங்களைச் சந்தித்திருப்பார். நான் கூட மின்னூல் ஒன்றை ஆக்கி வெளியிட்ட வேளை பட்ட துயரை உணர்ந்தே இவ்வாறு மின்னூல் வெளியிடுவோரை நோகடிக்க வேண்டாம் எனப் பணிவோடு கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தனைக்கும் மத்தியில் எப்படியோ பல அறிஞர்கள் தங்கள் மின்னூல்களை வெளியிடுகிறார்கள். அவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அந்த வகையில் அறிஞர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் மின்னூல் விரிப்பைப் பார்க்க முடிந்தது. அதிலும் தமிகத்தில் இருந்து "ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்" என்றொரு ஈழம் சார்ந்த கட்டுரைகளையும் மின்னூல் ஆக்கியுள்ளார். அவரது மின்னூல்களைப் பதிவிறக்கிப் படித்துப் பாருங்கள்.

ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்
"ஈழம் சார்ந்த கட்டுரைகள்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/

தமிழர் தேசம்
"நானும் எங்க ஊரும்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/tamilar-desam/

வெள்ளை அடிமைகள்
"என் நாடு இந்தியா. நான் இந்தியன்" என்று  தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/white-slaves/

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்
"திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/factory-notes/

பயத்தோடு வாழப் பழகிக் கொள்
"நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கின்றோம்." என்று  தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/live-with-fear/

படம் - அவரது நூலறிமுகத்தில்...

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
"நான் தமிழ்நாட்டில் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் மாசுபட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல வற்றையும், சந்தித்த அனுபவங்களையும் எழுதி உள்ளேன்." என்று  தொடருகிறார்.

படம் - அவரது நூலறிமுகத்தில்...

அறிஞர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். இவற்றைவிட டொலர் நகரம் என்றொரு நூலையும் அறிஞர் வெளியிட்டுள்ளார். அறிஞரின் மின் நூல்களைப் பதிவிறக்கிப் படித்த பின், தங்கள் எண்ணங்களைப் பகிருமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன். 








வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்

என் இனிய பதிவுலக உறவுகளே!

எனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகளை வெளியிட யாழ் மென்பொருள் தீர்வுகள் என்றும் இறங்கி நானே முழுமையான பணியை வெளிக்கொணர முடியாத வேளை அறிஞர் நேசனின் வேண்டுதலை ஏற்று அவரது மின்நூலை வெளியிட வேண்டியதாயிற்று. நேரம் கிடைக்கின்ற வேளை இவ்வாறு பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.

பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் போது அவர்கள் சொல்ல வரும் செய்தி, அவர்களது எழுத்தாளுமை, அவர்களது மக்களாயப் (சமூகப்) பொறுப்புணர்வு, அவர்களது மக்களாய (சமூக), நாட்டு முன்னேற்ற எண்ணங்கள் எனப் பலவற்றை நான் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. அறிஞர் நேசனின் மின்நூலை வெளியிடும் போதும் இவற்றையே பொருட்படுத்தினேன்.

அறிஞர் நேசனை நேரில் கண்டதுமில்லை. ஸ்கைப், வைபர் எதிலும் முகம் பார்த்துக் கதைத்ததுமில்லை. அவரது எழுத்தை நம்பியே இம்மின்நூலை வெளியிடுகிறேன். அவரைப் பற்றியோ அவரது மின்நூலைப் பற்றியோ நானே அடுக்கிச் சென்றால் அழகிருக்காது. அவரது மின்நூலைப் படித்தால் அழகாக அத்தனையும் நீங்களே அறிய வாய்ப்புண்டு.

யாழ்பாவாணன் வெளியீட்டகமூடாகத் தனிமரம் வலைப்பூ நடாத்தும் அறிஞர் நேசனின் "தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்" என்ற மின்நூலை வெளியிட்டு, உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றேன். அதனைப் படித்த பின் அறிஞர் நேசனை ஊக்கப்படுத்துவதோடு நின்றுவிடாமல் எனது வெளியீட்டு முயற்சி பற்றிய தங்கள் எண்ணங்களையும் பகிர முன்வாருங்கள்.

இதோ அவரது மின்நூலைப் பதிவிறக்கத் தேவையான இணைப்பு
http://www.thanimaram.org/2015/04/blog-post_2.html

எனது வெளியீட்டு முயற்சியோடு அறிஞர் நேசனின் "தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்" என்ற மின்நூல் வெளியிடு பற்றியும் அறிஞர்களாகிய நீங்கள் உங்கள் வலை ஊடகங்களில் உங்களது திறனாய்வை (விமர்சனத்தை) வெளியிடலாம். தவறுகள் ஏதுமிருப்பின் தப்பாமல் சுட்டுங்கள். கிட்டவுள்ளோர் என் தலைக்குக் கல்லெறியலாம். தூரவுள்ளோர் என் தலைக்குச் சொல்லெறியலாம். யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளிக்கொணரும் வெளியீடுகள் வாசகர் பக்கம் செல்லவோ செல்லாமல் இருக்கவோ உங்களது திறனாய்வு (விமர்சனம்) உதவும் என நம்புகிறேன்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

ந.கோபிநாத்தின் "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" நூலறிமுகம்

தமிழ் நண்பர்கள்.கொம், முகநூல்(Facebook).கொம் ஆகிய தளங்களில் நண்பராக இணைந்து பல கருத்துக்களைப் பகிர்ந்த அறிமுகத்தில் நண்பர் ந.கோபிநாத்தின் உறவு மலர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக அவரது "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" என்ற நூலைப் பார்க்க முடிந்தது. அந்நூலைப் படித்துச் சுவைத்துப் பெற்ற சில உண்மைகளை நண்பர்கள் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நண்பர் ந.கோபிநாத் புலம் பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவருடலில் ஓடும் செந்நீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வியல் சூழல் கலந்திருப்பதை அவரது படைப்புகளே சான்று பகருகின்றன. புலம்பெயர் படைப்பாளிகள் பலர் பல நூல்களை வெளியிட்டு தங்கள் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நண்பர் ந.கோபிநாத் தனது "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" நூலை வெளியிட்டு தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி உள்ளாரென நான் உணருகிறேன்.

உள்ளூர் படைப்பாளியோ புலம்பெயர் படைப்பாளியோ இலங்கைத் தமிழரைப் பற்றி எழுதுவதாயின் போரியல் இலக்கியம் அல்லது போர்க் கால இலக்கியம் சார்ந்தே இருக்கும். காரணம் ஐம்பது ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் போர்ச் சூழலில் சிக்குண்டு வாழ்ந்தமை தான். போர் இடம்பெறும் சூழலைப் படம் பிடித்துக் காட்டுவது போரியல் இலக்கியம். போரினால் விளைந்த பாதிப்பினை வெளிக்காட்டுவது போர்க் கால இலக்கியம். அப்படியாயின் நண்பர் ந.கோபிநாத் எவ்வகை இலக்கியத்தை நூலாக்கினார் என்றால் இரண்டும் கலந்திருந்தாலும் போர்க் கால இலக்கியமே அதிகம் என்பேன்.

எழுதுகோல் ஏந்தியோர் எல்லோரும் எழுத்தாளர் ஆகவில்லையே! காரணம் எழுதும் வேளை தன் எண்ணங்களைக் கொட்டி விட்டால் போதுமென நினைத்திருக்கலாம். ஓர் எழுத்தாளன் தன் எண்ணங்களைக் கொட்டும் போது அளந்து தான் கொட்ட வேண்டும். எழுத்தாளர் எழுதுகோலைப் பிடித்ததும் தன் மொழியாளுமையைச் சரி பார்க்க வேண்டும்; பின் இலக்கியப் படைப்புகளைப் படித்துப் பட்டறிவை வளர்க்க வேண்டும்; பின் எழுதலாம்.

எழுத்தாளன் எழுதும் வேளை தனது பக்கக் கருத்துகளைத் தொகுத்துப் புனையக்கூடாது. வாசகரை வாசிக்கத் தூண்டும் வகையில் எளிய நடையில் எழுதுவதோடு, வாசகர் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு எழுதவேண்டும். அதாவது, வாசகர் களிப்படையவோ நிறைவடையவோ வேண்டும். நண்பர் ந.கோபிநாத்தின் படைப்புகளில் இவை வெற்றிகரமாகப் பேணப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக வரி(வசன)க் கவிதை எழுதுபவர் கவிதை நடையைப் பேணத் தவறினால் உரைநடையாகிவிடும்; புதுக்கவிதை என்றெழுதப் போய் உணர்வுகள், ஓசை(ஒலி) என கவிதை வீச்சாகக் கருதி அடிகளை ஆக்கத் தவறினால் உரைநடை வரியை உடைத்து சொல்களை அடுக்கியது போல ஆகிவிடும்; யாப்பிலக்கண(மரபு)க் கவிதை எழுதப் போய் பாவிலக்கணத்தை இறுகப் பற்றினால் எவரும் படிக்க வாய்ப்பிருக்காது. பாவிலக்கணம் தெரியாதவர்களும் படிக்கும் வகையில் சீர்கள் அமையும் வண்ணம் அசை, தளை, அடி, தொடை பார்த்துப் புனைந்தால் மட்டுமே எவரும் மரபுக் கவிதைகளைப் படிக்க விரும்புவர்.

நண்பர் ந.கோபிநாத் கவிதை இலக்கணங்களை எளிமையாக வாசகர் விரும்பிப் படிக்கும் வண்ணம் கையாண்டுள்ளார். புதுக்கவிதை, மரபுக் கவிதை எதுவாயினும் வாசகர் விரும்பிப் படிக்கும் வகையில் 116 பக்கங்களில் 40 கவிதைகளைத் தந்துள்ளார். எல்லாம் பல வகைப் பாடுபொருளைக் கொண்டிருந்தாலும் இலங்கைத் தமிழரின் துயரை வெளிப்படுத்தும் சிறந்த நூலாகும்.

முதலில் நூலை மேலோட்டமாகத் தட்டிப்பார்த்த போது பல பக்கங்கள் வெளியாக(Blank) இருந்தது. அதாவது, இடைச் செருகல்(Fillers) ஏதுமில்லை. (சிலர் வெளிகளை(Blank)ப் பார்த்து ஓரிரு வரிகளாயினும் சிறு கவிதைகளைத் திணித்து விடுவர்.) ஒவ்வொரு கவிதையும் தனிப் பக்கங்களில் சிறப்பாக அழகுற அச்சிடப்பட்டுள்ளது. ஈழத்துச் சிறந்த பாவலர்(கவிஞர்) பண்டிதர் சா.வே.பஞ்சாட்சரம் அவர்கள் வழங்கிய அணிந்துரையைப் படித்தால் நண்பர் ந.கோபிநாத் நல்ல பாவல(கவிஞ)ருக்கான தகுதிகளைக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்.

இரண்டாவதாக நண்பர் ந.கோபிநாத்தின் நூலின் தகுதியைப் பார்க்க வேண்டியுள்ளது. விளம்பர(பிரச்சார) மணம் வீசாது திணிப்புகள்(Fillers) சேர்க்காது அளவாகவும் தெளிவாகவும் சொல்ல வந்த செய்தியை நல்ல தமிழில் வெளிப்படுத்தி உள்ளார். சிறந்த எண்ணங்களை, நல் வழிகாட்டலை புதிய அணுகுமுறையில் சொல்லப்பட்டுள்ளது. புதுக் கவிதைகளாகவோ மரபு சார்ந்த புதுக் கவிதைகளாகவோ வெண்பாவைப் போலவோ(சில வெண்பாவாக உள்ளன) வாசகர் படிக்க இலகுவாக அமைந்திருப்பது சிறந்த நூலுக்கான சான்றாகவே நான் கருதுகிறேன்.

காணாமல் போன மகன் - பக் 29
"நெஞ்சிலே புண்பட்டுச் செத்தாலும் முதுகில் புண்பட்டுச் சாகாதே" என்றொரு தாய் சொல்வதாகப் புறநானூற்றுப் பாடல் விளக்கத்தை பத்திரிகை ஒன்றில் படித்தேன். "காணாமல் போன மகன்" என்ற கவிதையில் தமிழரைக் காட்டிக் கொடுக்கும் துரோகியிடம் வீரமுள்ள தமிழ்த் தாய் வேண்டுவதைப் பாரும். தன் மகனும் துரோகி என்றால் சாகட்டுமென ஒப்பாரி அல்லவா வைக்கிறாள்.
எங்கும் என்மகனை உன்வழியிற் கண்டியெண்டால்
இங்கு கதறுமெந்தன் ஈனநிலை சொல்லாதே,
சங்கு நெரித்து அவனைச் சாய்த்துவிடு! என்மகனும்
எங்கும் உனைப்போல இருப்பதிலும் சாவதுமேல்.
என்றவாறு புதிய புறநானூற்றுக் கவிதை ஒன்றை நண்பர் ந.கோபிநாத் வடித்துள்ளார்.

யாழ்ப்பாணக் குமரிகள்! - பக் 73
கவிஞரின் மக்களாய(சமூக)ப் பார்வையை கீழ்வரும் வரிகளில் காணலாம்.
மாதவி டாயெனில் பத்தியமாய் - பல
சாத்திரங்கள் - தமிழ்
சொன்னபடி - அவள்
காத்துக் கறுப்புக ளண்டிடாமல் - தனிக்
காவலிட்டு - வேப்பம்
வேலியிட்டு - நல்ல
உழுந்துடன் சீனட்டி நெல்லுடைத்து - கழி
அஞ்சுநாட்கள் - உண்டு
பூரித்தாளாம்!
இதென்னடாப்பா, நண்பர் ந.கோபிநாத் இப்படி மருத்துவ மதியுரை வழங்குகிறாரோ தன் பெண் குஞ்சை இப்படித் தான் வளர்க்கிறாரோ தன் சகோதரியைத் தன் தாய் இப்படித் தான் வளர்த்தாளோ என்று கேட்குமளவுக்கு குமரி வளர்ப்பை விவரிக்கிறார்.

தாய் திருப்பார்வதி அன்னை - பக் 80
தாய் திருப் பார்வதி அன்னை - எம்
தலைவனை ஈன்றிட்ட தவமிழைத் தொருவள்
ஊட்டினள் ஓர்துளித் தாய்ப்பால் - ஈழ
நாட்டினர் நெஞ்சங்கள் நேர்கொண்டு எழவே!
பிரபாகரனை ஈன்ற தாயை இப்படிப் பாடும் போதே நல்ல தமிழைக் கையாளுகிறார். ஆணை 'ஒருவன்' என்பது போல பெண்ணை 'ஒருவள்' என்றழைக்கலாம் என பாவலர் பாரதிதாசன் 'பிழையின்றித் தமிழெழுத' என்ற நூலில் குறிபிட்டுள்ளார். அதனை 'தலைவனை ஈன்றிட்ட தவமிழைத் தொருவள்' என்ற அடியில் பார்க்க முடிகிறது. இவ்வாறு பல இடங்களில் நண்பர் ந.கோபிநாத் நல்ல தமிழைக் கையாண்டிருக்கிறார். பிறமொழிச் சொல்களைக் கலக்காது நல்ல தமிழ் சொல்களை எல்லாக் கவிதைகளிலும் கையாண்டிருப்பது பாராட்டத்தக்கது.

எஞ்சியிருக்கும் உணர்வுகள் - பக் 82
கவிதைக்கு ஓசை(ஒலி), இசை அதற்கேற்ப வந்தமையும் சொல்கள் தான் உயிர் ஊட்டுகிறது. இங்கும் அதனைக் காண முடிகிறது.
தட தட படையணி,
தட் தட் தட் தட் வெடியொலி,
சட சட அணிவகுப்பு,
அணி அணி!
பெண் அணி,
ஆண் அணி,
பெரும் அணி
அணி அணி!
ஈழத்தமிழ் போராளிகள் அணிவகுத்து நிற்பதை இவ்வாறு அழகாக இசைத்துக் காட்டுகிறார் நண்பர் ந.கோபிநாத் அவர்கள்.

காதலுக்கும் முன்னராய் - பக் 93
காதலென்ற உணர்வு உந்தப் பெற்றால் ஆணுக்குப் பெண்ணழகாகவும் பெண்ணுக்கு ஆணழகாகவும் பேச்சில் தேன் போன்று தித்திக்க அன்பாகப் பேசவும் வரும். ஆனால், முதலில் பேச்சைத் தொடுப்பது யார் என்ற சிக்கலும் வரும்.
அதிகாலைப் பேரழகி அன்னநடை போட்டு
குதிமேலாய் பாதணியிற் போவாள், மதிகிடந்து
முகம், முகப்பொலிவை முற்றாய் விழுங்கிவிடும்
பேசப் பலனிலாப் பார்வை.
(இங்கு 'மதிகிடந்து முகம்' என்பது `மதிகிடந்து மூசும்` என வரவேண்டும். நூல் பதிப்பில் தவறு நடந்துவிட்டதாக நூலாசிரியர் உறுதிப்படுத்துகிறார்.)
ஒருவளைப் பார்த்த ஒருவனின் உள்ளம் எப்படியிருக்கிறது என்று கவிஞர் படம் பிடித்துக் காட்டுகிறார் இங்கே.

காதலாய்க் கருத்திலதாய் - பக் 102
பாவலன்(கவிஞர்) என்பான் தூரநோக்கோடு வழிகாட்டத் தவறக்கூடாது. இங்கே பாரும்:
எல்லார் குறைகளுக்கும் மேலிருந்து வார்க்குமந்த
வல்லான் முருகனுக்கும் வஞ்சகமோ? - இல்லாள்
இருக்க இரந்ததுதான் ரண்டகமோ? - நல்லாள்
ஒருத்தியெனைக் கொள்ளவினை நல்க.
என்றவாறு வழிகாட்டும் நண்பர் ந.கோபிநாத்தைப் பாராட்டலாம்.

தேனடையே தேனே! - பக் 107
"குவிந்த நெற்றிப்பொட்டில்
குற்றியிறங்கிய கூர்மூக்கில்
பிட்டியெடுத்த கன்னத்தில்
பிறையான கூர்நாடியில்
குப்பென் றுதிர்க்கும்
கடைவாய்ப் பற்சிரிப்பில்"
என்று தொடங்கும் கவிதையில் ஓராளின் முகவழகைப் படம் பிடித்துக் காட்டுகிறார். பற்சிரிப்போடு அந்தாளை அடையாளப்படுத்துமளவுக்கு அழகாகப் பாபுனைந்துள்ளார். கொஞ்சம் விட்டால் கம்பனையும் விஞ்சுவார் போலத் தெரிகிறது!

கண்ணீர் குளக்கட்டு - பக் 111
இது நண்பர் ந.கோபிநாத்தின் கடைசிப் பதிவு. இதில் உணர்வு வெளிப்பாடு அதிகம். இப்பதிவை முடிக்கையில் நாயின் நன்றியை அழகாகப் பதிவு செய்கிறார்.
முற்றத்தில் குரைத்த நாயின் சள்ளையில் அவர்கள் ஓங்கி உதைத்த உதைப்பில் 'அவுக்' என்று கத்தியபடி மரணப் பயத்தில் வேலிக்கரையில் ஓடிப்போய் நின்று உப்பிட்டு வளர்த்த நன்றியை கண்ணீராய் சொரிந்து கொண்டிருந்தது அது. குரைக்கவில்லை.
படையினரின் உதைப்பால் நாய் சுருண்டாலும் நன்றி மறக்கவில்லைப் பாரும். இவ்வாறு நண்பர் ந.கோபிநாத் அவர்களின் எல்லாப் பதிவுகளும் நன்றாக அமைந்திருக்கிறது.

நண்பர் ந.கோபிநாத் அவர்களின் நூலைப் படித்து விட்டு, குறை அல்லது நிறை சொல்லத் தகுதியற்றவன். ஆயினும், நான் படித்து உள்வாங்கிய அளவில் எனக்குக் கிடைத்த மகிழ்வையும் நிறைவையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதை இங்கு பதிவு செய்துள்ளேன். சிறந்த படைப்பாளியின் சிறந்த நூலைப் படித்த நிறைவு எனக்கு ஏற்பட்டது. எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் காட்டி அதனை மெய்ப்பிக்க முனைந்திருக்கிறேன்.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் இலங்கைத் தமிழர் பற்றிய உண்மைகளைப் பதிவு செய்து நூலாக்கிய நண்பர் ந.கோபிநாத் அவர்களின் முயற்சிக்குப் பாராட்டினால் போதாது, அவரது வெளியீட்டு முயற்சி வெற்றியளிக்க நம்மாளுகள் ஒத்துழைக்க வேண்டும். நண்பர் ந.கோபிநாத் அவர்களிடம் இன்னும் பல வெளியீடுகளை வெளிக்கொணரவைக்க; நாம் அவருக்கு ஒத்துழைப்பை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். நண்பர் ந.கோபிநாத் அவர்களே, உங்கள் பணி தொடரவேண்டும்; இன்னும் பல படைப்புகளை ஆக்கி வெளியிட எனது வாழ்த்துகள்.

வெள்ளி, 23 மே, 2014

மின்நூல்கள் பயன்தருமா?

உறவுகளே! பல இணையத்தளங்களில் (அவர்களது அனுமதியுடன்) இருந்து பதிவிறக்கிய மின்நூல்களை ஒன்றுதிரட்டி சேமிப்பகங்களில் வைத்திருக்கிறேன். பெரும்பாலும் எனது தெரிவாக அமைந்திருந்தாலும் உளவியல், இதழியல், தமிழ் இலக்கணம், பாட்டு இலக்கணம், தமிழ் இலக்கியம், கணினி எனப் பல துறை நூல்களைத் தொகுத்திருக்கிறேன். மேலும், பல நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைத் திரட்டிக் களஞ்சியப்படுத்தவும் எண்ணியுள்ளேன். இம்முயற்சிக்குப் பலர் உதவியும் ஒத்துழைப்பும் தருவதாகக் கூறியுமுள்ளனர்.

"எப்படியோ ஆயிரமாயிரம் மின்நூல்களைத் திரட்டி வைத்திருந்தாலும் இவற்றால் எவருக்குப் பயன்கிட்டும்?" என நீங்கள் கேட்கலாம். நானொரு எழுத்தாளராக, கவிஞராக, கதாசிரியராக, பாடலாசிரியராக, நாடக ஆசிரியராக என்றில்லாமல் உளநல மதியுரையராக, உளவியலாளராக, இதழியலாளராக, எனப் பல நிலைக்கு உயர எண்ணியுள்ள எல்லோருக்கும் பயன்தரும் வகையில் இம்மின்நூல் களஞ்சியத்தை ஒழுங்குபடுத்தி உள்ளேன்.

மேலும், "மின்நூல்கள் பயன்தருமா?" என நீங்கள் கேட்கலாம்.

அறிஞர்கள் - தங்கள்
அறிவைப் படைத்திருக்க - அவை
அச்சு நூல்களாகவோ மின்நூல்களாகவோ
எம் கைக்கெட்டலாம் - அவை
எம் அறிவைப் பெருக்க உதவுமே!
அறிவைப் பெருக்கலாம் என்பது
அறிவில் விருப்பம் / நாட்டம் உள்ளோருக்கு மட்டுமே
இலகுவாயிருக்கும் என்பேன்!
பெற்றோர்களிடமோ
நண்பர்களிடமோ
ஆசிரியர்களிடமோ
ஊடகங்களிடமோ இருந்து
நாம்
அறிவைப் பெறுவது போலவே
மின்நூல்களைப் படித்தும்
பயனீட்டலாமே - ஆனால்
கைக்குள் அடங்கி நிற்கும்
அச்சு நூல்களைப் போலல்லாது
கணினி வழியே படிக்க முடிந்தாலும்
அறிவைப் பெருக்கும் வழி ஒன்றே!
பொதுவாக, முடிவாகச் சொல்வதாயின்
அறிஞர்களின் அறிவைத் திரட்ட
நம் அறிவைப் பெருக்க
நல்லதோர் ஊடகம் மின்நூல்களே!

இன்றைய தொழில் நுட்ப உலகில் அச்சு ஊடகங்களை விட மின் ஊடகங்களே முன்னிலையில் இருக்கிறது என்பதை மறக்கமுடியாது. மேலும் கணினி, மடிக்கணினி, நடைபேசி, இணையப்பக்கங்களில் எனப் பல வழிகளில் மின்நூல்களைப் படிக்க முடியும். நாம் இவ்வாறு ஒரு வழியில் மின்நூல்களைப் படிக்க வசதி கொண்டிருந்தால் போதும். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர் தமக்குத் தேவையான மின்நூல்களைப் பெற்றுத் தமிழறிவைத் தம் பிள்ளைகளுக்கு ஊட்டுவார்கள் என நம்பியே மின்நூல் களஞ்சியம் அமைத்தேன்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண இம்மின்நூல் களஞ்சியம் உதவுமென நம்புகிறேன். தமிழ் தெரியாதோரும் தமிழை மறந்தோரும் தமிழை ஆங்கில மொழி மூலம் படிக்க உதவும் நூல்களும் இம்மின்நூல் களஞ்சியத்தில் இருக்கிறது. மேலும் கணினித் தொழில் நுட்ப நூல்களும் உண்டு. இவற்றை எல்லாம் படிக்க விரும்பி நூல்களைத் தேடும் உள்ளங்களுக்கு இந்தச் செய்தியைச் சொல்ல இந்தத் தளத்தினூடாக ஒவ்வொரு நூல்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் அறிமுகம் செய்யவுள்ளேன்.

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மேலே குறிப்பிட்டவாறு மின்நூல்கள் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். அடுத்து உங்கள் தளங்கள் ஊடாகவோ நண்பர்கள் ஊடாகவோ உலகெங்கும் வாழும் உறவுகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அதாவது படிக்க விரும்பி நூல்களைத் தேடும் உள்ளங்களுக்குத் தெரியப்படுத்தி உதவுங்கள். கீழ்வரும் படத்தைச் சொடுக்கி மின்நூல் களஞ்சியப் பக்கத்தைப் பார்வையிடலாம்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வாருங்கள்.


நம்மாளுகள் தாய்மொழியாம் தமிழ்மொழியைச் சிறப்பாக மேலும் கற்க, உலகெங்கும் தூயதமிழைப் பேண வசதியாகப் பெரும் அறிஞர்களின் மின்நூல்களைப் பதிவிறக்க: https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ 

நம்மாளுகள் பிறமொழிப் பழக்கத்திலிருந்து விடுபட்டுத் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வசதியாக ஆங்கில மொழிமூல மின்நூல்களைப் பதிவிறக்க: https://www.box.com/s/ih2aup1erqt3dvs70a07 

உங்கள் யாழ்பாவாணன் ஆக்கிய பதிவுகள் பல இணையப்பக்கங்களில் வெளிவந்துள்ளன. அவர் தற்போது ஐந்து வலைப்பூக்களை நடாத்துகிறார். எதிர்காலத்தில் அவர் வெளியிடவுள்ள தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க: https://www.box.com/s/exn2yefonnvoltly671v 

உங்கள் யாழ்பாவாணனும் கணினி சார் துறை வல்லுநராகையால், அவரது தெரிவில் திரட்டப்பட்ட கணினி சார் ஆங்கில மொழிமூல மின்நூல்களைப் பதிவிறக்க: http://sdrv.ms/1cBgSnf 

உங்கள் யாழ்பாவாணனின் தேடலில் அகப்பட்ட பல்வகை மின்நூல்களைப் பதிவிறக்க: http://sdrv.ms/1cBgLbn 

உறவுகளே! பயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வந்தால் போதாது; உங்கள் நண்பர்களுக்கும் இதனைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.