Translate Tamil to any languages.

வெள்ளி, 7 டிசம்பர், 2018

வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்


உலகத் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவரான சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) அவர்களின் "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்" என்ற நாற்பத்திரண்டு சிறுகதைகளின் தொகுப்பு நூல் 08/12/2018 அன்று ஜேர்மனியில் மிகவும் சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது. இவ்வறிமுக விழாவில் வலைப்பதிவர் கௌசி அவர்களின் உலகெங்கிலுமுள்ள வலையுலக நட்புறவுகள், அவரது வாசகர்கள் எனப் பலர் ஜேர்மனிக்கு வருகை தந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நூலாசிரியரின் இந்நூல் 17/06/2018 ஞாயிறன்று காலை 9 மணிக்கு இலங்கை, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் பங்கெடுத்தவர் என்ற வகையிலும் 2010 இலிருந்து வலையுலகை உலா வருவதனாலும் ஜேர்மனியில் இடம்பெறும் நூலறிமுக விழாவில் பங்கெடுக்கும் உலகெங்கிலுமுள்ள வலைப்பதிவர்கள் இந்நூலைப் பற்றியறிய உதவும் தகவலைப் பகிர விரும்புகின்றேன்.
--------------------------------- நூல் அறிமுகம் ----------------------------------

இலக்கிய வாசகர்களின் உள்ளங்களை இலக்கியப் படைப்பாளிகள் கொள்ளையடிப்பது என்பது இலகுவானதல்ல. வாசகர் விருப்பறிந்து, தமது திணிப்புகளைத் தூக்கியெறிந்து, வாசகர் சுவையறிந்து, தமது வசப்படுத்தும் எழுத்து நடையாலே தான் வாசகரைத் தம்பக்கம் இழுத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறாகத் தான் பல முன்னோடி எழுத்தாளர்கள், வாசகர்கள் தமது புனைகதை இலக்கியத்தை நாடவைக்க (தமது எழுத்தால் வாசகரைக் கட்டிப் போட) முயன்றுள்ளனர். இவ்வாறே (www.gowsy.com வலைப்பூ) சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) அவர்கள் தமக்கென வாசகர் அணியினைப் பேணி வருகின்றார்.

கையடக்கமாக அமைந்துள்ள இந்நூலின் அட்டை கறுப்பு நிறம். பின்னட்டையில் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் அவர்கள் வழங்கிய நூலாசிரியரைப் பற்றிய குறிப்பும் முன்னட்டையில் "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்", நூலாசிரியர் பெயர், வெளியீடு: ஜேர்மனி தமிழ் கல்விச் சேவை ஆகியன வெள்ளை எழுத்துக்களால் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளது. உள்ளே கண்ணிற்கு எரிச்சலை ஏற்படுத்தாத செம்மஞ்சள் (ஐவரி) தாளில் கறுப்பு எழுத்துக்களால் அச்சடிக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்து வாசிக்கும் போது எழுத்து அளவு அரைப் புள்ளியாயினும் பெரிதாக்கி இருக்கலாமெனத் தோன்றுகிறது.

முன்னட்டையில் பக்கங்களைத் தட்டும் விளிம்பில் மட்டும் மங்கலான வெண்ணிறம் வெளிப்படுகிறது. அதேவேளை வெண்ணிறப் பூவொன்றும் விரிந்து காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நூலுக்குள்ளே நுழைந்தால் "வெள்ளை உடையணிந்த ஒருவரின் இளமைக்கால வாழ்வை வெளிக்கொணருவதோடு ஒளிமயமான வாழ்வுக்கு வழிகாட்டும் தகவல் ஒளிந்திருக்கு." என்பதை வாசித்தறியலாமெனத் தோன்றுகிறது. எப்படியிருப்பினும் நூலின் அட்டை வடிவமைப்பு, தெளிவான அச்சடிப்பு ஆகியவற்றை மேற்கொண்ட இலங்கை, யாழ்ப்பாணம் அன்ரா பிறின்டர்ஸ் குழுமத்தினருக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.

"ஓர் ஐரோப்பிய வாழ்வியல் தரிசனம்" என்ற தலைப்பில் நூலாசிரியருக்குக் கற்பித்த பேராசிரியர் துரை மனோகரன் அவர்களின் எண்ணப்பதிவுகள் நூலின் முதலுரையாக அமைந்திருப்பதோடு நூலின் சிறப்புக்கு வலுச் சேர்க்கின்றது.

அடுத்து "ஒரு வாசகனின் வாக்குமூலம்" என்ற தலைப்பில் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் அவர்கள் சிறுகதைகளை அழகுணர்வோடு அறிமுகம் செய்கின்றார். அதனால் வாசகர்கள் விரைவாகக் கதைகளைப் படிக்க நுழைந்து விடுவார்கள்.

அடுத்ததாக "சில நிமிடங்கள் நுழை வாயிலில் உங்களுடன்..." என்ற தலைப்பில் நூலாசிரியர் வாசகரை இடைமறிக்கிறார். "சமுதாயக் கண்கள் திறக்கப்பட வேண்டும். தான் வாழும் சூழலும் நலம் பெற வேண்டும்." எனத் தனது எழுத்தின் நோக்கை நூலாசிரியர் முன்வைக்கின்றார். இதனால் கதைகள் எப்படிப்பட்டதாக இருக்குமென்பதை நீங்களே கண்டுபிடிக்கலாம்.

நூலின் இறுதிப் பகுதியில் பக்கம் 223-224 இல் "கௌசியின் வரிகளை நேசித்தவர் வரிகள்" என்ற தலைப்பில் நூலாசிரியரின் வாசகர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் இடம்பெறுகிறது. அவை நூலாசிரியரின் ஆற்றலை மதிப்பீடு செய்யக்கூடிய அளவுகோலாகத் தென்படுகிறது.

சரி! இனிக் கதைகளை வாசிக்கப் போகலாம் தான்... ஆயினும், கதைகள் எவ்வாறு அமைந்திருக்குமெனத் தெரிந்துகொள்வோம். கதாசிரியர் தான் சொல்வதாகவோ கதாசிரியர் தான் பார்த்ததை அப்படியே சொல்வதாகவோ கதாசிரியர் தான் ஒரு கதாபாத்திரமாக நின்று வெளிப்படுத்துவதாகவோ கதைகள் நகருவதைக் காணலாம். கதைகளின் முடிவில் அடைப்புக்குள் உண்மைக் கதை, உண்மை கலந்த கதை, யாவும் கற்பனை எனக் குறிப்பிட்டிருப்பார்கள்.

அதேவேளை கதையின் முடிவினை கதாசிரியர் தானே சொல்லி முடிப்பதாகவோ வாசகர்கள் தாமே கதையின் முடிவினை கண்டுபிடிக்க இடமளிப்பதாகவோ கதைகள் முடிவுக்கு வரலாம். இதன் அடிப்படையில் வாசகர்கள் கதைகளை வாசிக்கப் பழகினால் மகிழ்ச்சி அடையலாமெனக் கூறிக்கொண்டு நான்கு கதைகளைத் தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.

"அப்பா என்னவானார்!" என்ற கதையே முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கிறது.
"இஞ்ச பாருங்கோ இது நான் காசு கட்டி வாங்கின வோஸ் மெசின். இதில் என்ர பிள்ளைகள்ட உடுப்பும் என்ர உடுப்பும் தான் கழுவலாம். உங்கட ஊத்தைகள் இதுக்குள்ள போட்டுக் கழுவாதீங்க"
"அப்படியென்றா நானென்ன கையாலயா கழுவிறது"
என்றவாறு முதலாவது கதையே கணவன் - மனைவி சிக்கலில் தான் தொடங்குகிறது.

மேற்படி கதையில "பலமுறை தந்தையுடன் தொடர்புகொள்ள முடியாத பிள்ளைகள் அப்பா என்னவானார் என்று தெரியாமல் ஜேர்மனி பொலிசாருக்கு அறிவித்தனர். வீட்டு இலக்கத்தைத் தேடிச் சென்ற பொலிசார் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியும் திறக்கப்படாத கதவினை திறந்தனர்." பிள்ளைகளது தந்தை அங்கே பிணமாகக் கிடந்ததாகக் கதை முடிவுக்கு வருகிறது.
இக்கதையில் புலம்பெயர் நாட்டில் நிகழும் குடும்பச் சிக்கலை நூலாசிரியர் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.

"கவிதை பாடலாம்" என்றொரு கதை பக்கம் 44 - 50 இல் காணப்படுகிறது. "தாயின் நீண்ட விளக்கத்தில் தெளிவு பெற்ற மகளும் காலத்துக்கேற்பக் கவிபாடும் உத்தியில் தன்னை ஈடுபடுத்தும் முனைப்புடன் அகக்கண்ணைத் திறந்தாள். அவள் கற்ற இலக்கணமும் தாயின் கருத்தும் ஒருங்கிணைய கற்பனைக்கு மோட்டர் பூட்டினாள்." என்றவாறு தாயானவள் மகளுக்குக் கவிதை எழுதத் தூண்டுவதாகக் கதை நகருகிறது.

இக்கதை, கதை போலன்றி 'கவிதை எழுதக் கற்பித்தல்' பாடம் நடாத்துவதாக அமைந்திருக்குமென நீங்கள் நினைக்கலாம். அப்படியாயின் இந்நூலைப் பெற்று இக்கதையினை முழுமையாக வாசிக்கவும். இக்கதையினை வாசித்தவர்கள் சிறந்த கவிதையினை எழுதத் தேவையானவற்றை பொறுக்கிக்கொள்ள இந்நூல் உதவுமென நம்புகின்றேன்.

"மதிவதனி ஏன் மதி இழந்தாள்" என்றொரு கதை பக்கம் 149 - 152 இல் காணப்படுகிறது. "குடிக்கிறதுக்கு அளவு கணக்கில்லை. மனிசர நிம்மதியா இருக்க விடுறீங்களே. எப்பதான் இந்த பார்ட்டிகள் குறையப் போகுதோ" என்றவாறு மனைவி, தன் கணவனின் தொல்லை தாங்காது அலுத்துக் கொள்வதைக் கதையில் காணமுடிகிறது. மேலும், கணவன் மனைவிக்கு மதுவை ஊட்டிவிட்டார் என்றவாறு கதை நகருகிறது. மது போதையினால் ஏற்படும் விளைவினை நூலாசிரியர் இக்கதாபாத்திரங்களூடாகக் குடும்ப உணர்வோடு இயல்பாகப் படம்பிடித்து வெளிக்காட்டுகின்றார்.

நூலின் தலைப்பாகிய "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்" என்றொரு கதை பக்கம் 201 - 206 இல் காணப்படுகிறது. "உனக்கு வயது 30. இப்படி எத்தனை காலம் வாழப் போகின்றாய். வாழ்க்கை ஒரு முறை தான். அதுவும் வாழத்தான்." என மதியுரை கூறுவதைப் பார்த்தால் கதையில் வரும் கதாநாயகியின் (மருத்துவத் தாதியின்) பருவம் கரைவதேன் என்பதை நீங்கள் வாசித்து அறியலாம். மேலும், "இப்பெல்லாம் யாரும் பெடியனைக் கண்டால் காதல் வர மாட்டன் என்கிறது." எனக் கதாநாயகி தெரிவிப்பதைப் பார்த்தால் பருவம் கரையக் காரணம் காதல் தானென எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் மறக்காமல் நூலை வேண்டிப் படித்தால், ஐயங்களும் ஊகங்களும் முடிவுக்கு வந்துவிடுமே!

"வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்" என்ற நூலை அறிமுகம் செய்வதாகக் கூறிக்கொண்டு நாற்பத்திரண்டு கதைகளையும் குறுக்கிச் சொல்ல இயலாது என்பதே உண்மை. பெரும்பாலான கதைக் கருப்பொருள், சமகாலத்தில் (2018 இல்) ஆங்காங்கே இடம்பெறும் உண்மை நிகழ்வுகளை மீட்டுப் பார்க்க உதவுகின்றது. இந்நூலில் வணிக நோக்கிலான கற்பனைக் (மசாலாக்) கதைகள் இல்லையென்றே சொல்லலாம். அருமையான சிறுகதைகளைக் கொண்ட இந்நூல் வாசகரின் உள்ளத்தில் நல்லதோர் இடத்தினைப் பிடிக்கும் என்பதே எனது கருத்து.
முற்றும்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!