Translate Tamil to any languages.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

போலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்!



மனிதன் நாயைக் கடித்தானெனப் பேசப்படுவதான
நாட்டில வழமைக்கு மாறாக நிகழும் செயல்களை
செய்திகள் என்றெல்லோ தகவல் பரப்புவாங்க!
சில ஊடகங்களும் ஊரில சிலரும் தானே
உண்மைச் செய்திகளைப் போலப் பேசப்படுவதான
போலிச் செய்திகளைப் பரப்பி விடுவதால
குடும்பங்கள், ஊர்கள், நாடுகளென உலகிலே
பெரும் பெரும் பாதிப்புகளை விதைத்துவிடுகின்றன!
உறவுகள் முறிந்தால் சேர்த்து விடலாம் தான்...
பொருளிழப்புகள் வந்தாலும் தேடிக்கொள்ளலாமே...
உயிரிழப்புகள் நிகழ்ந்தால் எவரையும் மீட்கலாமோ?
உலகத்தில எத்தனையோ கண்டுபிடிக்கும் அறிவாளிகள்
உயிரிழந்த மனிதருக்கு உயிர்கொடுக்கக் கண்டுபிடிக்கல
உலகையே அழிக்கவல்ல போலிச் செய்திகளை
உண்மைச் செய்தியாகப் பரப்பிவிடக் கண்டுபிடித்தனரோ?
நானொரு பேயன் தெருவில விழுந்தவளைத் தூக்கிவிட
அழகான குமரியோட முட்டிமுனகியதைக் கண்டதாக
பழக்கமே இல்லாத பரதேசிமகள் அறியாமல் பரப்பிவிட
என்ர பெண்டிலோ என்னை நம்பாமல் வெட்டிவிட
கட்டையிலே வே(போ)கும்வரை தனிக்கட்டை ஆனேனே!
இலங்கையிலே என்ரநிலை இப்படியாகி இருக்கலாம்...
இந்தியாவிலே விழுந்தவளையும் தூக்கியவனையும் சேர்த்தே
வேற்றுச் சாதிக்காரன் கட்டியணைக்கவோ என்றெல்லோ
எரிபற்றெண்ணெய் (பெற்றோல்) ஊற்றியெரித்து இருப்பாங்களே!
காதலிப்பதற்கு நானொருசாதி அவளொருசாதி அவ்வளவே...
சாதிப்புரளியைக் கிளப்பிவிட்ட ஆங்கொரு கத்தரிவெருளியாலே
இலங்கையிலே ஊரைவிட்டு ஓடிமறைந்து வாழ்ந்தாலும் கூட
நானாண்சாதி பெண்சாதியவள் நாம் மனிதச்சாதி என்றாலும்
இந்தியாவிலே எம்மிருவரின் தலைகளையே அறுப்பாங்களே!
வீசும் காற்றில் கலந்துவிட்ட போலிச் செய்திகளாலே
எரியிற நெருப்பில நெய்யூற்றினால் போலவே
இனமோதலோ மதக்கலவரமோ ஊரிரண்டாகிப் போராகவோ
இலங்கையிலும் இந்தியாவிலும் அழிவது தமிழினமென்றதும்
என்நெஞ்சு வெடித்துப் பலதுண்டாகப் பிளக்கிறதே!
ஊரழிந்தென்ன உலகழிந்தென்ன கடவுளுமளிந்தென்ன
தமிழழிந்தென்ன தமிழரழிந்தென்ன யாருக்குத் தேட்டமென
பெருந்தீங்கினை விளைவிக்கும் போலிச்செய்தி பரப்பும்
ஊரவங்களாயினும் ஊடகங்களாயினும் உணரவேண்டுமே!
போலிச் செய்திகளை உள்வாங்கும் உறவுகளே...
உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே
மூளைக்கு வேலைகொடுத்து நன்றெண்ணிப் பார்த்தே
நம்பிச் செயலாற்றினால் உயிரிழப்புகளைத் தடுக்கலாமே!

வாழ்க்கையில் தவறு விட்டால்...

படிக்கிற அகவையில்
படிக்காது விட்டால் தொழில் தேடேலாது...
நேர்வழிப் படிப்புச் சரிவராட்டி
தொழில்நுட்பப் படிப்பாயினும் கற்றால்
தொழில் வாய்ப்புக் கிட்டுமாமே...
தொழில்நுட்பப் படிப்பும் படிக்காட்டி
வேலை பழகுநராகவேனும் நுழையாட்டி
நாலுபணம் தேடத் தொழில் கிட்டாதே!
பழகிற பழக்கத்தில
கெட்டவை தொற்றிக் கொண்டால்
சூழலே எம்மை ஒதுக்கியே வைக்கலாம்...
பழகிற நட்பில
நல்லவரைத் தெரிவு செய்யாது போனால்
பாழாய் போகத் தான் நேரிடும்...
சேருகிற குழுக்களில
ஊரார் மதிக்கிற குழுவில சேராட்டி
ஊரோரமாக ஒதுங்க வேண்டி வருமே...
சேர்த்து வைக்கிறதில
நாலாள் செத்தவுடல் காவிச்செல்ல...
நாளைக்கும் வாழத் தேவையானதை
சேர்த்துவைக்கத் தவறிவிட்டால் செத்தமாதிரி!
தேவை கருதித் தான்
நட்புகள் நாடி வரலாம் தான்
தேவை கிட்டினால் போதுமென
நறுக்கிப் போட்டு நழுவலாம் தான்
நாம் தவறிவிட்டால் தப்பேலாதே!
காதலிக்க முயற்சி செய்தால் தான்
காதல் தோல்வி நெருங்கி வருமாம்...
காதலே உள்ளிருந்து வெளிப்பட்டால்
உள்ளங்கள் இடம்மாறிக் கலந்துவிட்டால்
தோல்வி கூடக் காதலை நெருங்காதாம்...
காதலுக்குக் குறுக்கே கொடுப்பனவை முன்வைத்தால்
காதல் முறிவு தான் கைக்கெட்டுமே!
திருமணம் என்றால் பாரும் - கணவன்
மனைவியைத் தெரிவு செய்வதில் தவறினால்
சுடலைக்குப் போக வழி அமைத்தாச்சாம்...
திருமணம் என்றால் பாரும் - மனைவி
கணவனைத் தெரிவு செய்வதில் தவறினால்
தாலிக் கொடிக்கு ஈடாகத் தூக்குக் கொடியாம்...
வாழ்க்கையிலே கணவனுக்கும் மனைவிக்கும்
புரிந்துணர்வு இல்லையேல் வீடே போர்க்களமாம்...
எந்தப் பக்கத்தால தலையை நீட்டினாலும்
எந்தன் மூளையை பாவித்து
பின்விளைவை எண்ணிப்பார்த்து
தூர நோக்கில தெரிவும் முடிவும்
வாழ்க்கையிலே எடுக்கத் தவறிவிட்டல்
எனக்குச் சாவு தான் பரிசு என்கிறாங்க!
அம்மாவும் இணங்கி அப்பாவும் நெருங்கி
என்னையும் பெத்து ஆளாக்கி விட
எப்படித் தான் வாழ்வதென
படைத்தவன் கூட சொல்லித் தரவில்லை...
சூழவுள்ளோரோ வாழ்க்கையில் தவறு விட்டால்
எனக்கே மீட்சி இல்லை என்கிறாங்க...
நீங்களே உங்கள் வாழ்வைச் சரிபாருங்களேன்!

காலம் காலமாகினாலும் கூட.....

காலம் கரைந்தாலும் - அதுவோ
வரலாற்றுப் பதிவைத் தானே
எழுதிவிட்டுச் செல்கிறதே!
நஞ்சு வைத்தவர்கள்
எவரென்று எமக்கு உணர்த்துவதே
கடந்த காலப் பதிவே!
நல்லவர்களை இனங்கண்டு
நல்லுறவைப் பேணத் தூண்டுவதும்
கடந்த காலப் பதிவே!
கெட்டதெல்லாம் நமக்குச் செய்தவர்கள்
நல்லதெல்லாம் நமக்குச் செய்வார்களென
உறவைப் பேண வந்து நெருங்கினாலும்
எட்ட விலகி நிற்க வழிகாட்டுவதும்
கடந்த காலம் பதிவே!
எதிர்காலம் நல்ல பயனைத் தர
நிகழ்காலத்தில் திட்டமிட்டு வாழ்ந்தவர்களுக்கே
காலம் காலமாகினாலும் கூட...
நல்லவை வந்து அமைகின்றதே!
எதிர்காலத்தை எண்ணிப் பார்க்காமலே
நிகழ்காலத்தில் தவறான வழிகளில் போய்
காலம் காலமாகிய பின்னரே
கடந்த காலப் பதிவுகளின் படி
தமது தவறுகளை எண்ணிப் பார்ப்பதில்
பயனேதும் இருக்க வாய்ப்பில்லையே!
காலம் கரைந்தாலும் - அதுவோ
வரலாற்றுப் பதிவை எழுதிச் செல்வதால்
காலம் காலமாகினாலும் கூட
நாம் விதைத்தவை தானே
நமக்கு அறுவடையாகக் கிட்டுதே!

எனக்குப் பிள்ளை பிறந்தால்...

நல்ல காலம் - எனக்கு
பிள்ளைகள் பிறக்காமல் போயிட்டுது!
தாலாட்டுப் பாடாமலே
தாயின் முலைக்காம்பை கடிக்காமலே
குழந்தையை நித்திரையாக்க
திறன்பேசிகள் வேண்டிக் கொடுக்க
பிச்சைக்காரன் என்னாலே முடியாதே!
கடவுளே! - எனக்கு
பிள்ளை கிடைக்க அருள் (வரம்) தந்தால்
திறன்பேசிகள் வேண்டிக் கொடுக்க
நாலு காசு கிடைக்க நல்ல தொழிலும் தா!
இனி எனக்கும் மனைவிக்கும்
இனிப் பிள்ளை பிறந்தாலும் கூட
ஏணைக்குள் குழைந்தையைப் போட்டு
இருண்ட கருவறைக்குள் கிடந்த மாதிரி
நித்திரையாக்காமல்
பாயில கிடத்தி திறன்பேசியை நீட்டி
குழந்தையின் அழுகையை நிறுத்தி விட
திறன்பேசி போன்ற தொழில் நுட்பம்
தீர்வாகுமா? தொல்லை தருமா?
இருண்ட கருவறைக்குள் இருந்து வந்த
குழந்தையைத் தான்
இருண்ட உலகிற்குள் தள்ளிவிடும் வழியா?
நானும் படிக்காதவன் தான்...
திறன்பேசியைக் கொடுத்து அழுகையை நிறுத்தாமல்
பாட்டன், பூட்டி கையாண்ட வழிகளை
மறக்காமல் சொல்லித் தாருங்கோ...
இனி எனக்கும் மனைவிக்கும்
கடவுள் அருளால் பிள்ளை கிடைத்தால்
நாங்களும் ஒளிமிகு உலகைக் காட்டி
எங்கள் பிள்ளைகளை வளர்க்க உதவுமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!