Translate Tamil to any languages.

செவ்வாய், 16 ஜனவரி, 2024

வெற்றிநடை கவிநடை | வந்தது வந்தது இனிய தைப்பொங்கல்|

உலகத் தமிழ் உறவுகளே! 2024 இல் மீண்டும் தங்களுடன் இணைகிறேன்.


ஊடக வெளியில் ஊடறுக்கும் வெற்றிநடையில் 
வெற்றிநடை வழங்கும் கவிநடை நிகழ்வில் 
வந்தது வந்தது இனியதைப் பொங்கலென 
தந்தனர் தலைப்பொன்று நான்கவி பாடிடவே! 

சின்னப் பொடியன் நானென்று அறிந்துங்கூட 
என்னையும் கவிபாட அழைத்த 
வெற்றிநடைக்கு வணக்கம் 

என்னோடு கவிபாட இணையும் 
பெரியோருக்கு வணக்கம் 

அன்போடு கவனித்து கேட்கின்ற 
அறிஞருக்கு வணக்கம் 

என்னையும் உங்களையும் இணைக்கும் 
ஊடகத் தமிழுக்கு வணக்கம் 

என்பாவைச் சுவைத்துக் கேளுங்கள் பாடுகின்றேன்.

                                                        <--->

பனித்துளி விழுந்து குளிர்ந்தது குளிர்ந்தது 
இனியதைப் பொங்கல் வந்தது வந்தது
(பனி)

இனியதைப் பொங்கலிலும் மகிழ்வோடு வாழ்வோம்
பனிதரும் குளிரிலும் பிணியின்றி வாழ்வோம் 
(இனி)

ஆடியில தேடிவிதைத்த காலம் போயிற்று 
ஆவணியில மழைவந்த காலம் போயிற்று 
புரட்டாதியில விதைக்கிற காலம் ஆயிற்று
மாசிப்பனியில அறுவடைக் காலம் ஆயிற்று
மாதங்களின் மாற்றங்களில் சோர்வுகளே ஆயிற்று 
தையிலும் பகலவனுக்கு நன்றிப்பொங்கல் ஆயிற்று
(பனி)(இனி)

தமிழருக்கு முதல்மாதம் முதல்நாள் பொங்கல் ஆயிற்று 
உழவருக்குப் புதுநெல்லு புத்தரிசிப் பொங்கல் ஆயிற்று 
பகலவனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் ஆயிற்று 
நல்லெண்ணம் நல்வழி காட்டும் பொங்கல் ஆயிற்று  
புத்தாண்டுப் புதுமுயற்சித் தொடக்கமே பொங்கல் ஆயிற்று 
எவ்வாண்டும் தவறாமல் தப்பாமல் பொங்குவதாயிற்று
(பனி)(இனி)

குடும்பமே கூடிநின்று பொங்கும் நாளாயிற்று 
பகலவன் கதிர்பட்டு பனித்துளி மின்னுவதாயிற்று 
பொங்கற்பானை பொங்கி வழியும் நேரமாயிற்று 
பொங்கிடும் நுரைவழி வேளாண்மை என்றாயிற்று 
பானையில் இருந்தள்ளி எடுத்துப் படைத்துமாயிற்று
பகலவனைப் பார்த்துப் பக்தியிசை படிப்பதாயிற்று
(பனி)(இனி)

தைப்பொங்கல் பொங்கிப் படைத்து உண்டும் ஆயிற்று 
உண்டாறுமுன் புதுப்பணியும் தொடங்கி ஆயிற்று 
கோயில்போய்க் கும்பிட்டு வயற்கரையும் பார்த்தாயிற்று 
உழவுக்குத் துணைநின்ற எருதுக்குமடுத்துப் பொங்கலாயிற்று 
பணியிடத்தில் பொதுவிடத்தில் பண்பாட்டுப் பொங்கலாயிற்று 
உலகெங்கும் தமிழரின் தைப்பொங்கலே பேச்சாயிற்று 
தமிழரின் தைப்பொங்கலை உலகமே பின்பற்றலாயிற்று
(பனி)(இனி)

                                                    (முற்றும்)