Translate Tamil to any languages.
1-குழந்தை வளர்ப்பு - கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1-குழந்தை வளர்ப்பு - கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜூலை, 2016

படிப்பது எப்படி? படிப்பது இலகுவானதா?

அறிஞர் வே.இறையன்பு எழுதிய "படிப்பது சுகமே! (முதல் பதிப்பு – டிசம்பர் 2004, பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்)" என்ற நூலை வேண்டிப் படித்தால், எல்லாப் பிள்ளைகளும் படிக்கும் தானே! இவனேன் யாழ்பாவாணன் படிப்பைப் பற்றி இடித்துரைக்க வாறான்... எனத் தொடர்ந்து படிக்காமல் நிறுத்திவிடாதீர்கள். இது யாழ்பாவாணனின் கைவண்ணமெனப் படித்துச் சுவைத்துப் பாருங்களேன்.

இருவர் பேச்சை எடை போடுங்க பார்ப்போம்...
ஒருவர்: தேர்வெழுத அஞ்சிப் பள்ளிக்கூடம் போகாமல் இருந்தியளே, இப்ப என்னாச்சு?
அடுத்தவர்: நாலு காசு வருவாய் ஈட்ட, நாளுக்கு நாள் தேர்வெழுத வேண்டியிருக்கே!

இப்படியான ஒரு சூழலில் தான் "காலம் கடந்து அறிவு (ஞானம்) வந்தென்ன பயன்?" என்று கேட்பார்கள்! குறித்த காலத்திலேயே (பருவத்திலேயே) பயிர் செய்ய வேண்டும். அதாவது, மழைக் காலத்தில் பயிர்களை நட்டால் தானாகவே வளரும். அதுபோலத் தான், இளமையிலே கல்வி கற்றால் இலகுவாகத் திறமை பெற வாய்ப்பிருக்கே! ஆயினும், முழுமையான விருப்பத்துடன் கல்வி கற்பவருக்குத் தான் இந்த வாய்ப்புக் கிட்டும்!

இளமையிலே கல்வி கற்றிருந்தால்
நாலு காசு வருவாய் ஈட்ட
நாளுக்கு நாள்
தேர்வெழுத வேண்டியிருக்காதே!
அப்படியாயின்
படிப்பது எப்படி? படிப்பது இலகுவானதா?
என்றெல்லாம்
எவரும் கேட்கலாம் தானே! - அந்த
படிப்பில எத்தனை அறிவு இருக்கு?

அறிவு ஐந்து வகை தான் - அவை
கண்ணால் காண்பது பார்த்து அறிதல்
காதால் கேட்பது கேட்டு அறிதல்
மூக்கால் மணப்பது மணந்து அறிதல்
நாக்கால் சுவைப்பது சுவைத்து அறிதல்
தோலால் உணருவது உணர்ந்து அறிதல்
என்றவாறே கற்றறிவதேயாம்!
இவ்வைந்தறிவை விஞ்சி நிற்பது
ஆறாம் அறிவாம் - அது
நல்லது எது? கெட்டது எது? என
வேறாக்கிக் கற்றறிவதேயாம்!
ஏழாம் அறிவு என்று
ஏதோ ஒன்று இருப்பதாய் அறிந்தால் - அது
நல்வழி எது? கெட்டவழி எது? என
வேறாக்கிக் கற்றறிவதேயாம்!
அடடே! அதற்கப்பால்
எட்டாம் அறிவு ஒன்றிருக்காம் - அது
கெட்டது, கெட்டவழி எதுவென்றறிந்து
அவற்றை விட்டொதுங்கி
நல்லது, நல்வழி எதுவென்றறிந்து
நடை போடக் கற்றறிவதேயாம்!

இப்படித்தான் அடிப்படைக் கல்வியை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு மாணவருக்கும் முதலாவது ஆசிரியர், அம்மா தான்; இரண்டாவது அப்பா தான்! எனவே, பெற்றோர்கள் தான் இந்த அடிப்படைக் கல்வியை ஊட்ட வேண்டும்.

சுவையறிந்து உண் - உண்டு சுவைத்து உணர்ந்தைச் சொல்லி உணவூட்டுவது போல, நாம் கற்றுச் சுவைத்த உணர்வைப் பகிர்ந்து அறிவூட்டலாம்.
செயலறிந்து செய் - சில செயல்களைச் செய்ததன் விளைவாகப் பட்டறிந்ததைப் பகிர்ந்து அறிவூட்டலாம்.
படம் பார் பாடம் படி - படங்களை அல்லது காட்சிகளைக் காண்பித்துக் குறித்த ஒன்றைச் சுட்டி அடையாளப்படுத்தியும் அறிவூட்டலாம்.
இப்படித்தான் மாணவர் உள்ளத்தைப் புண்ணாக்காமல், மாணவர் உள்ளத்தில் விருப்பங்களை விதைத்துக் கற்றலை ஊக்கப்படுத்தலாம்.

"இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
     இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
     ஆலயம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
     பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
     ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்..."

இப்படியொரு பாரதியாரின் பாடல் உண்டு. அதாவது, எத்தனையோ கோடி நன்மைகள் பிறருக்குச் செய்தாலும் ஓர் ஏழைக்கு எழுதறிவித்தலே (கற்பித்தலே) சிறந்தது எனப் பாரதியார் வழிகாட்டுகின்றார். இதனை ஆசிரியர்கள் கருத்திற்கொண்டு நிறைவான பணியை மாணவர்களுக்கு வழங்கலாம். அந்த நிறைவான பணி, மாணவர்களின் கற்றலை ஊக்கப்படுத்துமே!

நாளும் எழுத, வாசிக்க, பேச
படம் வரைய, கணக்குப் பார்க்க
ஆடிப் பாடி நடிக்க, விளையாட
பழகிப் பழகிப் படிக்க முடியுமே!

விரும்பிய படத்தைப் பார்த்து வரையலாம்
விரும்பிய ஆளைப் பார்த்து வரையலாம்
விரும்பிப் படித்ததை எழுதிப் பார்க்கலாம்
விரும்பிக் கேட்டதை எழுதித் தொகுக்கலாம்
எழுதிய எதையும் வாசித்துப் பார்க்கலாம்
எழுதி வைத்தே பேசிக் காட்டலாம்
எழுதி வைத்தே பாடிக் காட்டலாம்
பாட்டுக்கு ஏற்ப ஆடிக் காண்பிக்கலாம்
கதைக்கு ஏற்ப நடித்துக் காண்பிக்கலாம்
விரும்பிய விளையாட்டும் விளையாடலாம்
விளையாட்டின் முடிவுகளைக் கணித்துச் சொல்லவும்
கொடுக்கல், வாங்கல் விரைவாக அமையவும்
கணக்குப் பார்க்கவும் அறிந்திருக்க வேண்டுமே!
உண்மையில்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமென
வழிகாட்டிய பெரியோர் விருப்புக்கு அமைய
நாமும் கற்றுப் பெரியவர் ஆகலாமே!

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்." என்றவாறு ஔவையார் பாடலும் விளக்கமும் https://ta.wikisource.org/s/4m என்ற பக்கத்தில் (ஏழாவது வெண்பா) காணப்படுகிறது.

அதாவது, மீள மீளச் சொல்வதாலோ செய்வதாலோ பழக்கமாகிவிடும் என ஔவையார் வழிகாட்டுவதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆமாம்! ஒரு பொழுது எண்ணிப் பார்ப்பதை விட, பல பொழுது எண்ணிப் பார்ப்பதால் நமது உள்ளத்தில் குறித்த செய்தி ஆழமாகப் பதிந்து விடுகிறது. மேலும், உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த செய்தி தானியங்கி (Automatic) முறையில் தக்க சூழலில் வெளிவரும். எனவே, ஔவையாரின் வழிகாட்டலைப் பின்பற்றினால் கூடப் படிப்பது இலகுவானதே!

தேர்வு என்பது அதிகமாகத் திரட்டிய தகவல் வைப்பகத்தில் விரைவாகத் தேடி எடுக்கின்ற பதில்களை வைத்துத் திறமையானவர்களை அடையாளம் காண்பதேயாகும். அப்படியாயின், அதிகமான தகவலைத் திரட்டிய மாணவரே முதன்மை நிலை அடைகின்றார். அதன்படிக்கு நாம் எத்தனை வழிகளில் தகவலைச் சேகரிக்கிறோம் என்பது முக்கியமல்ல, நாம் எத்தனை தகவலைச் சேகரித்துப் பேணுகிறோம் என்பது தான் முக்கியம். இப்படிப் படிப்பதனாலேயே படிப்பது இலகுவானதாக அமைகின்றது.

திங்கள், 23 மே, 2016

ஆண்களும் அறியாப் பெண்களும் படியுங்க!


அந்தக் காலத்தில ஒருவள் "பெண் குழந்தையைப் பெற்றுவிட்டாள்" என்றால் அந்த வீட்டில போர்க்களம் தான். மாமிமார்கள் "பெட்டைப் பிள்ளையைப் பெத்துப் போடவா, மருமகளானாய்" என்று மருமகளிடம் புலிப் பாய்ச்சல் பாய்வார்களாம். மகன்மார் "பெட்டைப் பிள்ளையைப் பெத்துப் போட வந்தவள், வேண்டாம்" என்று இரண்டாவது திருமணம் செய்ய அம்மாக்களிடம் கெஞ்சுவார்களாம். இந்தக் காலத்தில இந்தப் போருக்கு என்ன தீர்வு?

பெண் பிள்ளை பிறந்தால்
பெத்தவளில் தவறில்லை...
பிறக்கப் போவது
ஆணா? பெண்ணா? - அதை
உறுதிப்படுத்துவதே
ஆணின் உயிரணுக்களே! - அப்படியிருக்க
பெண் மீது பழி சுமத்தும் ஆண்களுக்கு
சாவு ஒறுப்பு (மரண தண்டனை) வழங்கலாம்!
பெண்ணாய் இருந்தும்
மருமகளிடம் தான் பிழை என்னும்
மாமிமார்களுக்கு - இரு மடங்கு
சாவு ஒறுப்பு (மரண தண்டனை) வழங்கலாம்!

இந்தக் காலத்தில இந்தப் போருக்கு இது தான் தீர்வு என்றால் எந்தக் கடவுளும் ஏற்க மாட்டார்கள். அதற்கு நாளைய அறிவியலை வைத்து நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். அப்ப தான் உண்மையை உணர்ந்த உள்ளங்களில் மாற்றம் காணலாமென நம்பலாம்.

மனிதர்கள் எல்லோருக்கும் 46 குரோமோசோம்கள் (Chromosomes) உள்ளன. இதில் ஆணின் உயிரணுக்களிலிருக்கும் 23 குரோமோசோம்களும் பெண்ணின் கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களும் தான் குடும்ப உறவின் பயனாகக் கருவுறும் வேளை குழந்தை உருவாகக் காரணமாகின்றன. அதாவது, மொத்தம் 23 இணை (ஜோடி) குரோமோசோம்கள் இருக்கிறது. இந்த 23 இணை (ஜோடி)  குரோமோசோம்களில் 22 பரம்பரையாக வரக்கூடியது. 23 ஆவது இணை (ஜோடி) குரோமோசோம்கள் ‘ஆணா? பெண்ணா?’ என பாலியலைத் (Sex) தீர்மானிக்கும் குரோமோசோம்கள் ஆகும்.

23 ஆவது இணை (ஜோடி) குரோமோசோம்கள் ‘ஆணா? பெண்ணா?’ என்பதை எப்படி உறுதிப்படுத்துகிறதா? அதாவது ஆணின் குரோமோசோமில் 22X உம் 1Y உம்  இருக்க, பெண்ணின் குரோமோசோமில் 23X உம் இருக்கிறதாம். அப்படியிருக்கையில் குடும்ப உறவின் பயனாகக் கருவுறும் வேளை பெண்ணின் X குரோமோசோமுடன் ஆணின் X குரோமோசோம் இணைந்தால் பெண் குழந்தையாகவும் பெண்ணின் X குரோமோசோமுடன் ஆணின் Y குரோமோசோம் இணைந்தால் ஆண் குழந்தையாகவும் கருவுறுகிறதாம். இதன் பயனாக பெண் குழந்தையோ ஆண் குழந்தையோ கிடைப்பதற்கு ஆணே முழுப் பொறுப்பையும் ஏற்கிறார். ஆயினும் பெண் பிள்ளை கருவுற உடனிருந்த ஆண் தானே குற்றவாளி! பாழாய்ப் போன மக்களாயம் (சமூகம்) பெண்ணில் பழிபோடுவதைத் தான் தொடருகிறது.

இதற்குத் திருமூலரின் பாடலொன்றும் சான்றாக மின்னுகிறதே!

462. ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
     பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
     தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
     பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

(ப. இ.) காதலரிருவரும் மருவிப் பொருந்துங்கால் ஆண் ஆகிய வலப்பால் மூச்சு மிகுந்து சென்றால் கருவுற்றுப் பிறக்குமுயிர் ஆணாகப் பிறக்கும். பெண்ணாகிய இடப்பால் மூச்சு மிகுந்து சென்றால் பிறக்குமுயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு ஒத்திருந்தால் பிறக்குமுயிர் அலியாக இருக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து மிகுதியாகவிருந்தால் பிறக்குமுயிர் சிறப்பாகப் பிறக்கும். அச் சிறப்புடன் பிறந்த உயிர் 'உழையார் புவனம் ஒருமூன்று' மொருங்குடன் ஆளும். அகப் பயிற்சியால் விந்து கட்டுப்பட்டுத் திண்மை ஏற்படின் மருவி இன்புறினும் விந்து வெளிச் செல்லுவதில்லை. ஆதலால் பாய்ந்ததும் இல்லை என்றனர். பாணவம்; பண்ணவம் என்பதன் செய்யுள் திரிபு. பண்ணவம் - திண்மை. (27)

இதன்படிக்குக் குடும்ப உறவின் போது (பக்கம் பார்த்துச் சரிந்து கூடும் தன்மையப் பொறுத்து) வலப் பக்க மூச்சு அதிகமெனின் ஆண் குழந்தையும் இடப் பக்க மூச்சு அதிகமெனின் பெண் குழந்தையும் இரண்டு மூச்சும் சமனாயின் திருநங்கை (அலி) குழந்தையும் பிறக்குமாம். அப்படியாயின் இருபாலாரும் பொறுப்பு எனலாம். ஆயினும் இங்கும் ஆணின் மூச்சுத் தான் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிக்கிறது. மொத்தத்தில் சொல்லப் போனால், பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிப்பது முழுக்க முழுக்க ஆண் மட்டும் தான். பெண்ணுக்கு இதில் எந்தப் பங்கும் கிடையாது.

எத்தனையோ இணையர்கள் குழந்தைகள் இல்லாமல் கண்ணீர் வடிக்கின்றனர். எத்தனையோ இணையர்கள் ஆணென்ன பெண்ணென்ன எந்தக் குழந்தை பிறந்தாலும் போதும் என்கின்றனர். குழந்தையின் அருமை உணர்ந்து செயற்படாதோர் இதனைக் கருத்தில் கொள்ளவும். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நீங்கள் கூடிப் பெற்றது தானே! அந்தக் குழந்தையைப் பாதுகாப்பது உங்கள் கடமை.

இணையர்கள் கூடியாச்சு; பெண்ணின் வயிற்றில் குழந்தை கருவுற்றது. வயிற்றில் வளருவது பெண் குழந்தை எனின், குழந்தைப் பெறுமதி உணராமல் கருக்கலைப்புச் செய்வது உயிர்க் கொலைக்குச் சமமானது. குறித்த குழந்தையைப் பெற்று, குழந்தைகள் இல்லாமல் கண்ணீர் வடிக்கின்ற பெற்றோரிடம் கொடுத்து வாழ்வளிக்க முன்வாருங்கள்.

"பெட்டைப் பிள்ளையைப் பெத்துப் போடவா, மருமகளானாய்" என்று மருமகளிடம் பாயும் மாமிமார்களும் "பெட்டைப் பிள்ளையைப் பெத்துப் போட வந்தவள், வேண்டாம்" என்று அம்மாக்களிடம் இரண்டாவது திருமணம் செய்யக் கெஞ்சும் மகன்மாரும் இதனைப் படித்த பின் தங்கள் முடிவை மாற்றினால் போதும். இந்தக் காலத்தில "பிறக்கப் போவது ஆணா? பெண்ணா?" என்ற போருக்கு இதுவே தீர்வு!


திங்கள், 10 ஆகஸ்ட், 2015

பிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது

Posted on மே 31, 2014 in Wordpress Blog that is https://mhcd7.wordpress.com

மணமுடிக்கிறோம்… பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறோம்… அவ்வளவுடன் குடும்ப வாழ்வு முற்றுப் பெறவில்லை. பெற்ற பிள்ளைகளைப் படித்தோராகாவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யக் கூடியவராகவும் வளர்த்து ஆளாக்குவதிலேயே மணவாழ்வின் வெற்றியைக் காணலாம்.

பிறந்த குழந்தையின் உள்ளம் எதுவுமே எழுதப்படாத ஏட்டைப் போன்றது. பிறந்த பின் வளர வளரக் குழந்தையின் உள்ளத்தில் பதிவுகள் எழுதப்படுகிறது. வளரும் குழந்தை நல்லெண்ணங்களைத் திரட்டிக் கொள்ளத்தக்கதாக “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்” என்றவாறு குழந்தையை வளர்க்க வேண்டும்.

குழந்தைகளின் நடத்தையை வைத்தே எல்லோரும் எடைபோடுவார்கள். குழந்தையின் உள்ளத்தில் இருப்பதே நடத்தையாக வெளிப்படுகிறது. குழந்தைகளின் நடத்தையை வைத்துப் பெற்றோர்களையும் அடையாளம் (நல்ல குழந்தையாயின் பெற்றோர் நன்றாக வளர்த்திருக்கிறார்கள் என்றும் கெட்ட குழந்தையாயின் பெற்றோர் வளர்ப்புச் சரியில்லை என்றும்) காணலாம்.

ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும் நல்லெண்ணங்களை விதைத்தால் அவர்களது நடத்தைகளில் நல்ல அறுவடைகளைப் பெறலாம். மேலும், குழந்தைகளை நல்ல சூழலில் வைத்து வளர்க்க வேண்டும். அவ்வேளை சூழலில் இருந்து குழந்தை நல்லவற்றை உள்வாங்க இடமுண்டு.

குழந்தையின் உள்ளத்தில் விதைக்கப்பட்ட எண்ணங்கள் தான் எதிர்காலத்தில் அக்குழந்தை சிறந்தவராக உருவாக வழிவிடுகிறது. எனவே, பிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது நல்லறிஞர்களாக உருவாக அன்பு, அறிவு, ஒழுக்கம் என நல்னவெல்லாம் ஊட்டப்படவேண்டும்.

அந்த வகையில் “உங்கள் குழந்தைகள் நல் ஒழுக்கமாக, புத்திசாலியாக வளர” என்ற பதிவை அந்திமாலை தளத்தில் கண்டேன். அதில் பதினைந்து வழிகாட்டல்கள் காணப்படுகிறது. அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.