Translate Tamil to any languages.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

ஆண்டவனுக்கு (கடவுளுக்கு) என்ன வேலை?

நண்பர் கில்லர்ஜி
"நான் தான் கடவுள்" என்ற பதிவை போட
http://killergee.blogspot.com/2016/02/blog-post_26.html
நானும் அதைப் படித்தேன்! - அப்பதிவிற்கான
பின்னூட்டங்களில் - அவரே
ஆண்டவனை (கடவுளை) விரட்டிவிட்டார் என
மின்னியதைக் கண்டதும் - என்னால
சும்மா இருக்க முடியல... - அதனால
ஆண்டவனுக்கு (கடவுளுக்கு) என்ன வேலை? என
எழுதி முடித்தேன் - அதனை
கொஞ்சம் படித்துப் பாருங்க!
அதற்கு முன்
அவரது பதிவைப் படித்துப் பாருங்க
நானும்
"விஞ்ஞானிகளால் முடியாது ஐயா!
Wait N See; Waste ஐயா!
ஆனால், இப்பவும்
மெஞ்ஞானிகளால் முடியும் ஐயா!
எப்படி என்கிறீரா? - எனது பதிவை
படித்தால் புரியும் ஐயா!" என
பின்னூட்டம் இட்டுள்ளேனே!

ஆண்டவன் ஒருவர்
ஆண்டவனை அடைய அறநெறி (மதம்) ஒன்று
அது தான் உண்மை!
நம்மாளுங்க
ஆளுக்கொரு அறநெறியைப் (மதத்தைப்) பின்பற்றுவதால்
எனக்கு இப்படித்தான் பா/கவிதை வருகிறதே!
நம்மாளுங்க நிலையைப் பார்த்த
ஆண்டவன் கண்ணீர் வடிக்க - அது
மழையாக வந்து மலையுச்சியில் வீழ்ந்து
நாலா பக்கமும் வழிந்தோட
வீழ்ந்த மழை நீர் அருவியாகப் பெருகி
கடலோடு கைகுலுக்கிக் கலந்துவிடுகிறதே!

கலந்த மழை நீர்
கடல் நீர் நிலையை உயர்த்த
உயர்ந்த கடல் நீர் நிலையால்
தரைவாழ் நம்மாளுங்க சாகாமல் இருக்க
கடல் நீரை உறிஞ்சவே
ஆண்டவனும் பகலவன் (சூரியன்) ஆனாரே!

ஆண்டவன் வடித்த கண்ணீரால் ஆகிய
அருவிகள் எல்லாமே
வெவ்வேறு வழிகளில் பயணித்தாலும்
கடைசியில் கடலோடு கலந்துவிடுவது போல
ஆண்டவனை அடைய வழிகாட்டும்
அறநெறிகள் (மதங்கள்) வெவ்வேறாயினும்
ஆண்டவனை அடைய வழிகாட்டினால் போதுமே!

வெவ்வேறு வழிகளில் பயணிக்கும் அருவிகள்
கடலில் கலப்பதைப் பார்க்க வைக்க
மழையையும் வெயிலையும் வழங்கி
அறநெறிகள் (மதங்கள்) வெவ்வேறாயினும்
ஆண்டவனை அடைய வழிகாட்டுகிறதா
நம்மாளுங்க
ஆண்டவனை (தன்னை) அடைய முயலுறாங்களா
தமக்குள்ளே மோதிக்கொண்டு சாகிறாங்களா
என்றெல்லாம் கண்காணிப்பதே
ஆண்டவனுக்கு வேலையாகிப் போச்சே!

சனி, 20 பிப்ரவரி, 2016

உலகாளுவோம் உயிர்த் தமிழால்...

21/02/2016 அன்று தாய்மொழி உரிமை மாநாடு, விரிப்புக் கீழே தரப்படுகிறது.

மேற்காணும் நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்புக் கிடைத்தும் என்னால் பங்கெடுக்க இயலவில்லை. தாங்கள் எல்லோரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றேன்.
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கப் பொதுச் செயலாளர் செம்மொழிப் போராளி கவிஞர் க.ச.கலையரசன் அவர்களால் தரப்பட்ட "உலகாளுவோம் உயிர்த் தமிழால்..." என்ற தலைப்பைப் பணிவோடு ஏற்று உலகத் தாய்மொழி நாளில் என் பாவண்ணம் கேட்போம் வாரீர்!


ஐநா மன்றம் யுனெஸ்கோ பிரிவடா
2000ஆம் ஆண்டு மாசி 21ஆம் நாளடா
உலகத் தாய்மொழி நாளென உரைத்ததடா
உரைத்த நாள் தொட்டு இன்று வரையடா
தாய்மொழி நாளன்று தமிழ்மொழி நினைவடா
உணர்வுகளை வெளிப்படுத்தத் தாய் மொழியடா
தமிழினத்தின் அடையாளம் தமிழ் மொழியடா!

வீசும் காற்றும் "கா", "கூ" என இசைக்குமடா
ஓடும் ஆறும் "சல", "சல" என இசைக்குமடா
உடுக்கை அடி "தமிழ்", "தமிழ்" என இசைக்குமடா
இயற்கை எழுப்பும் இசையுணர்வும் தமிழடா
பிறந்த குழந்தைகளும் "அ..." என அழுவாரடா
இறக்கு முன் பழங்களும் "அ..." என அழுவாரடா
அப்பா அடித்தாலும் "அம்மா" என அழுவாரடா
முள்ளுக் குத்தினாலும் "ஆ...", "ஊ..." என அழுவாரடா
நம்மாள் எழுப்பும் உள்ளுணர்வும் தமிழடா
எட்டுத் திக்கிலும் முட்டிக் கொள்வதும் தமிழடா
எண்ணிப் பாரடா உலகாளுவதும் உயிர்த் தமிழடா!

தமிழெனும் அறிவுக்கடலை நீந்திக்கடக்க இயலுமாடா
உலக மொழிகளைக் கொஞ்சம் அலசிப் பாரடா
அம்மொழிகளுக்கு உள்ளே உலாவும் தமிழைப் பாரடா
அறிவியல் ஆய்வுக் கண்டுபிடிப்பு எல்லாமடா
தமிழிலக்கியத்தில் ஊறிக் கிடப்பதைக் காண்பாயடா
உருளும் உலகில் திரளும் அறிவு எல்லாமடா
ஒன்றே முக்கால் அடிகளில் வள்ளுவரும் உரைத்தாரடா
முதலில் அகத்தியரும் தமிழுக்கு இலக்கணம் வகுத்தாரடா
விரும்பி வந்திங்கே நற்றமிழைக் கற்றுக்கொள்ளடா
பிறமொழிச் சொல்களைக் கொஞ்சம் தூக்கி எறியடா
நற்றமிழ்ச் சொல்களைப் பஞ்சமின்றிக் கையாளடா
உலகெங்கும் விஞ்சி நிற்பதும் தமிழ் மொழியடா
எண்ணிப் பாரடா உலகாளுவதும் உயிர்த் தமிழடா!

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

அறி... உணர்... பெறு...

இனிய வலை உறுவுகளே! எனது பணி காரணமாக எனது வலைப்பக்கமோ தங்கள் வலைப்பக்கமோ என்னால் வர இயலாமல் போயிற்று. விரைவில் வருகை தந்து மீண்டும் நமது உறவுகளைப் பேணுவேன் என்பதை உறுதியளிக்கின்றேன்.


எதுவும்
எப்போதும் எம்மை நாடி வருமென்பது
பொய்!

எதையும்
நாமே தேடிச் செல்ல வேண்டுமென்பது
மெய்!

தேடல் உள்ள உள்ளங்கள்
வெற்றி காண்பதைக் கண்டேனும்
அறி!

வெற்றி பெற்ற உள்ளங்கள்
சோர்ந்து விடாமல் இருந்தால்
சரி!

தோல்வி கண்ட உள்ளங்கள்
பிழையைக் கற்றுக்கொள்ளா விட்டால்
பிழை!

பிழையைக் கற்றுக்கொண்ட உள்ளங்கள்
பிழைக்கத் தெரிந்துகொள்வரென
உணர்!

பிழைக்கத் துணிந்த உள்ளங்கள்
உழைக்கக் கற்றுக்கொண்டவரென
படி!

படிப்பதும் படித்ததைப் பகிர்வதும்
பயனுற்றோர் வெல்வதும் புகழ்வதும் தான்
பேறு!