Translate Tamil to any languages.

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 01

நான் பாடத்தான் விருப்பம்
ஆனால்,
எனக்குப் பாட்டுப் பாட முடியாதே...
ஆதலால்,
நான் எழுதுவதை ஏற்றுவிட்டேன்!
நான் எழுதியது எல்லாம்
நான் படிக்க
அழகாய் மின்னினாலும் கூட
வாசகர் எண்ணத்தில்
நிறைவு ஏற்பட்டதாய் நானறியேன்!
ஏனெனில்,
எனது வலைப்பூவில்
பின்னூட்டம் எதுவும் கிட்டவில்லை!
நான்
வாசகர் எதிர்பார்ப்பை உள்வாங்கி
எழுதத் தொடங்கிய பின்னரே
பின்னூட்டம் அதிகமாய்
என் பக்கம் எட்டிப் பார்த்தது!
ஓ! உறவுகளே!
தங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்...
என்றாலும்
வாசகர் எதிர்பார்ப்புக்கு மதிப்பளித்து
ஏற்ற இலக்கியமாகப் படைத்தால்
சிறந்த படைப்பாளியாக - நீங்களும்
உலகில் உலா வரலாம் வாங்க!

படைப்பு என்பது ஆக்குவது அல்ல
படைப்பு என்பது
படைப்பாளியின் உள்ளத்தில் கருவுற்று - அவர்
கைவண்ணமாகவோ நாவண்ணமாகவோ
வெளிவரவேண்டுமே! - அதற்கு
அதாவது, உள்ளத்தில்
படைப்புகள் கருவுறச் செய்ய
தேடல்கள் தேவை என்பேன்! - அத்தேடல்
உங்கள் உள்ளத்தில் உரசினால் தான்
படைப்புகள் கருவுறும் என்பேன்! - நான்
சென்னையில் இருந்து ஆழப்புலா வரை
புகைவண்டியில் சென்றவேளை கண்டேன்
பலர் ஏழைகளாகத் தெருவழியே...
என் உள்ளமும் நான் பார்த்ததும் (என் தேடலும்)
இரண்டறக் கலந்தமையால்...
"ஏழைகளற்ற நாடு தான்
தன்நிறைவு கண்ட நாடு...
தன்நிறைவு காணத் தான்
ஏழைகளும் வாழ்வில் மேம்படத் தான்
அரசு கவனம் எடுக்குமா? " என்ற
என் படைப்புக் கருவுற்றதே!
சரி! சரி! - இனி
நீங்களும் படைப்புகளை ஆக்கி
தளத்தில் போடலாம் தானே!

வலைப்பூக்களில் (Blog) - இன்று
ஏதாவது பதிவு இட்டீர்களா?
இல்லையா?
அப்ப - நகைச்சுவை
ஒன்றைப் பதிவு செய்யுங்களேன்!
நகைச்சுவை எழுத வராதா?
இதோ
வழிகாட்டுகிறேன்; எழுதுங்க...
"உண்மையை
கொஞ்சம் கூட்டியோ
கொஞ்சம் குறைத்தோ
எழுதிப்பாருங்க - அப்ப
நகைச்சுவை தானாகவே வரும்!" என
இந்திய (All India) வானொலியில் சொல்ல
நான் படித்தேன்; பகிருகிறேன்!
நண்பர் ஒருவர்
"மின்ன மின்ன
அணிகலன் அணிந்தவளை
மெள்ள அணைத்தால்
பணக்காரன் ஆகலாம்!" என்றான்...
அதைக்கேட்ட அடுத்தவன்
"மின்னுவதெல்லாம் பொன்னல்ல
ஆகையால் - நீ
பிச்சைக்காரன் ஆவாய்!" என்றான்...
தோழி ஒருத்தி
"ஏன்டி - அவனை
காதலிக்க மாட்டேன் என்கிறாய்?" என்றாள்...
அதைக்கேட்ட அடுத்தவள்
"அவருடைய மகள் தான்
என்ர வகுப்பில படிக்கிறாளே
ஆகையால் - நான்
காதலிக்க மாட்டேன்!" என்றாள்...
இவை
என் கிறுக்கல் தான்...
சிந்திக்க வைக்கிறதோ
சிரிக்க வைக்கிறதோ
எனக்குத் தெரியாது...
ஆனால்,
சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்பது
நகைச்சுவை என்பேன்!
நீங்க
எங்க தான் ஓடுறியள்?
உங்கள் வலைப்பூக்களில் (Blog)
பதிவு எழுதத் தான் போறியளோ!
வாழ்த்துகள்!

நாளை
நன்நாளாக விடியப் போகிறது - அதை
இன்றே - நல்வழியில்
பயனீட்டத் திட்டமிடுவோம் - அதற்காக
நேற்றுச் சேமித்து வைத்ததை - அப்படியே
செலவு செய்யாமல் மீளச் சேமி...
ஏனெனில்
நாளைக்கு அடுத்த நாள் என்ற
ஒன்று இருப்பதை - நீங்கள்
நேற்று முன்றைய நாள்
எப்படியாவது படித்திருப்பியளே!
ஆனால் - எந்நாளும்
எவருக்கும் பொன்நாள் தான் - எதற்கும்
சேமிப்பும் திட்டமிடலும் பேணும்
ஒவ்வொருவருமே
வாழ்வில் வெற்றி நடை போடுகின்றனரே!
ஓ!
வாழ்க்கையைப் படம்பிடித்து
வெளிப்படுத்துவது போல
எழுதினாலும் கூட இலக்கியமே!

மக்களாய வலைத்தளங்களில் எழுதிய கிறுக்கல்களைத் தொகுத்து எழுதியது.

புதன், 21 செப்டம்பர், 2016

இருநூற்றியோராவது மணநாள் நினைவு!

மணமுடித்து நூறாண்டு கழிய
மணமுடித்த நூற்றியோராவது நாளில்
அரசடிப் பிள்ளையாருக்கு வழிபாடென
மணநாள் மிடுக்கோடு நடைபோட்டு
அம்மான் அழகாய்ப் பட்டுடுத்தி வர
அம்மாள் அழகாய்ச் சேலையுடுத்து வர
அன்பான உறவுகளின் ஊர்வலம் வர
எதிரே வந்த எவரோ ஒருவர்
நீண்ட ஆயுளோடு வாழ - நீங்கள்
கையாண்ட மருந்தென்ன என்றார்!

நீங்கள் எல்லோரும் - உண்மையில்
சின்னஞ் சிறிசுகள் என்றாலும் - நாங்கள்
நெடுநாள் வாழ்ந்து வந்தாலும்
மருத்துவரையோ மருந்துகளையோ
கண்டதில்லைப் பாருங்கோ...
ஒழுங்காகக் கடவுளை வணங்கினோம்...
உறவுகளொடு அன்பைப் பேணினோம்...
நாளுக்கு நாள் உடற்பயற்சி செய்தோம்...
அரிசி, மா உணவைத் தவிர்தோம்...
எண்ணை, பொரியல், வறுவலை விலக்கினோம்...
பாவற்காய் பிழிந்து சாறு குடிப்போம்...
வெண்டிக்காய் அவிக்காமலே கடித்துண்போம்...
பனம் பண்டங்களோட அவியல் உணவோட...
உழுந்து, பயறு, கடலை, கௌப்பீயோட...
குரக்கன், சாமி, தினை, வரகு உண்பதோட...
அன்பான உறவைப் பேணி வாழ்ந்தால்...
இருநூற்றியோராவது மணநாள் நினைவும்
இணையராக வாழ்ந்து கொண்டாடுவோமே!

எதிர்ப்பட்ட எவரோ ஒருவர் கேட்டதிற்கு
பட்டென்று படக் படக்கென - அந்த
நூற்றியோராம் மணநாள் நினைவுக்கு - அந்த
அரசடிப் பிள்ளையாரை வழிபடச் சென்ற
இணையர்கள் பதிலளித்து முடிக்கு முன்
எதிர்ப்பட்ட எவரோ, அவரே தான்
எப்படியோ குதிக்கால் பிடரியில் அடிக்க
ஓட்டம் பிடிப்பதைக் கண்டவர் பலர் - அவர்கள்
சமச்சீர் உணவுப் பழக்கத்தைத் தான்
தங்கள் வாழ்வில் வழக்கப்படுத்தினால் தான்
நெடுநாள் வாழலாம் தான் - என்றுரைக்க
இன்னும் எவராச்சும் தேவையோ என்றனர்!

சனி, 10 செப்டம்பர், 2016

காதலிக்க விரும்பும் முன்...


காதலிக்க விரும்பி
ஒருவன் ஒருவளை நாடினான்!
அவளோ
கணவன் விரும்பினால்
காதலிக்கலாமென நழுவினாள்!
காதலிக்க விரும்பி
ஒருவள் ஒருவனை நாடினாள்!
அவனோ
மனைவி விரும்பினால்
காதலிக்கலாமென நழுவினான்!
நாளும் நழுவிச் செல்வோர்
அதிகம் தான்...
காதலிக்க விரும்பும் முன்
காதலிக்க விரும்புவோரை
முன் விசாரணை செய்தால்
நழுவும் ஆள்களை
முன்கூட்டியே அடையாளம் காணலாமே!
காதல் என்பது
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வரலாம்...
மணமானவருக்கும்
மணமாகாதவருக்கும் இடையே வரக்கூடாதே!
காதல் என்பது
நழுவும் ஆள்களிடையே
தழுவும் ஆள்களிடையே
மலர்ந்தால் முறிந்தும் போகலாம்...
காதலிக்க விரும்பும் முன்
கவனத்திற் கொள்ளவேண்டியதை
கருத்தில் கொள்ளாமையால் தான்
காதலுக்கு 
கண் இல்லை என்றார்கள் போலும்!

வியாழன், 1 செப்டம்பர், 2016

தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)


01/09/2016 காலை "தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்" என்ற செய்தியைக் கேட்டதும் எனது உள்ளம் நொந்தது; உடலும் இயங்க மறுத்தது. நான் வலையுலகில் "யாழ்பாவாணன்" என்ற பெயரில் உலா வர வழிகாட்டி, தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) என்பதால் என் நெஞ்சு முட்டத் துயரம் நிறைந்து நிற்கத் தான் செய்கிறது. என்னால் இந்தச் செய்தியை நம்பத் தான் இயலவில்லை!

"எல்லோருக்கும் பொதுவான இறைவன்
இப்படி விரைவாக
தம்பி வினோத்தை அழைப்பாரென
எவரும் எதிர்பார்த்திருக்க இயலாது தான்...
இத்தால்
எல்லோர் உள்ளத்திலும் துயரம் தான்...
இறைவா!
இந்தத் துயரை எமக்கேன் தந்தாய்!" என என்னால் அழத்தான் முடிந்தது. என்னையே என்னால் ஆற்றுப்படுத்த இயலாத நிலையில், அவரது குடும்பத்தாருக்கு நான் எத்தனை கோடி ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்த முடியும் என்கிறீர்கள்.

இறைவா!
இந்தத் துயரை எமக்கேன் தந்தாய்!
யாரை யார்
ஆற்றுப்படுத்துவது என்று அறியாமல்
தமிழ்நண்பர்கள்.கொம் உறவுகள்
எல்லோருமே துயரத்தில் மூழ்கி நிற்கின்றனர்.
"தமிழும் தமிழ் சார்ந்த நண்பர்களும்!..." என்றும்
ஒன்றுகூடி - உலகெங்கும்
தமிழைப் பரப்பிப் பேண என்றே
தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தை ஆக்கித் தந்து
அன்பாலே தமிழறிவையும் ஊட்டி வைத்து
நட்புகளை அரவணைத்துச் சென்றாயே என
ஆளுக்காள் கதறி அழுகின்றனர்!
தமிழ்நண்பர்கள்.கொம் உறுப்பினர்கள் எளிதாக
"கவிதை! கவிதை!
கவிதை எழுதலாம் வாங்க!!!" என
கவிதை எழுத்தத் தூண்டி
தனக்குத் தெரிந்த தமிழ் என
தமிழ் இலக்கணத்தையும் சுட்டிக் காட்டி
தமிழ்நண்பர்கள்.கொம் உறுப்பினர்கள் இடையே
தமிழ் பற்றை ஊட்டி வளர்த்த
தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) அவர்களை
உலகத் தமிழர் அறிய வேண்டும் - அவர் செயலை
உலகெங்கும் அறிய வைப்போம்!

திரு.வினோத் கன்னியாகுமரி பற்றி...
அவரது தலைப்பக்கப் (Header Image) படம்

Description: வாழ்க்கை பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிட காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன்...

Introduction: நான் வினோத். பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலை பார்ப்பது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில். கணினி மென்பொருளாளராக வேலை. அமைதி, தனிமை, இசை, தியானம், தமிழ் பிடிக்கும்...

https://ta-in.facebook.com/vinoth.3v தளத்தில்
விருப்பமான மேற்கோள்கள்
"தவறு என்பதைச் செய்யத் தவறுங்கள்; சரி என்பது சரியாய் நடக்கும்."

தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) அவர்களின் முழுமையான அடையாளத்தையும் http://tamilnanbargal.com/nabar/5 தளத்தில் கண்டுகளிக்கலாம். தமிழ்நண்பர்கள்.கொம் தளமூடாகப் பல போட்டிகளை நடாத்திப் பரிசில்களும் வழங்கி எல்லோருக்கும் ஊக்கம் அளித்தவர்.
சிறந்த மென்பொருள் வடிவமைப்பாளர்
சிறந்த வலைப்பக்க வடிவமைப்பாளர்
சிறந்த கவிஞரும் எழுத்தாளரும்
கணினி நுட்பம், இலக்கியம், தமிழ், எனப் பல துறை அறிஞரும் கூட
ஈழத் தமிழருக்காக வலைவழியே குரல் கொடுத்தவர்

2010 இலிருந்து அவருடன் தொடர்பு வைத்திருந்தமையால் அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னேன். அவருடன் மின்னஞ்சல், நடைபேசி வழியாகத் தொடர்பைப் பேணினேன்.

2015 மாசி இந்தியாவுக்குச் சென்றிருந்த வேளை மதுரையில் தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர்களுடன் வந்து நேரில் சந்தித்தார். தமிழ்நண்பர்கள்.கொம் மேம்படுத்தல், பைத்தன் கணினி மொழியில் Frame Work கண்டுபிடித்தமை என அவரது பல செயலைக் குறிப்பிட்டுப் பேசினார். சகோதரிகளின் திருமணம் முடிந்ததும் தனது திருமணம் என்றார். நான் எப்படியும் தம்பி வினோத்தின் திருமணத்திற்கு வருவதாகக் கூறியுமிருந்தேன். எவரும் நம்ப முடியாதவாறு இறைவன் இடையே புகுந்து இப்படி இடையூறு செய்துவிட்டார்.

தம்பி வினோத் (கன்னியாகுமரி) அவர்கள்
உண்மையான இந்தியன் மட்டுமல்ல
சிறந்த குடும்பப் பொறுப்பு மிக்கவர்
சிறந்த நாட்டுப் பற்றாளர்
சிறந்த தமிழ் பற்றாளர்
அத்தோடு தேடல் மிக்க
பல துறை சார் அறிஞர் என்பேன்!

தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) அவர்களின் இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு எத்தனை கோடி ஆறுதல் கூறியும் என்னால் அவர்களை ஆற்றுப்படுத்த இயலாத துயரில் இப்பதிவினைத் தங்களுடன் பகிருகிறேன். தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) அவர்களின் இழப்பு, உலகத் தமிழரிடையே ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே கருதுகிறேன். இச்செய்தியைத் தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர்கள் சார்பாக உங்கள் யாழ்பாவாணன் பகிருகின்றார்.