Translate Tamil to any languages.

செவ்வாய், 27 மார்ச், 2018

காலடி வைப்பதிலும் அழகு தேவையோ?


தனித்திருக்கும் போது தான்
பெற்றோரின் அருமை தெரிகிறதே!
பிரிந்திருக்கும் போது தான்
துணையாளின் அருமை தெரிகிறதே!
பின்னுக்கு வருவதைத் தானும்
முன்னுக்குத் தெரிந்து வைத்திருக்க
எமக்குத் தெரியவில்லையே!

குத்தின பிறகு தானே தெரிகிறது
முள்ளின் மேல் காலை வைத்தோமென்று!
சுட்ட பிறகு தானே தெரிகிறது
நெருப்பின் மேல் காலை வைத்தோமென்று!
எதிர் விளைவையோ பின் விளைவையோ
எப்போதாவது எண்ணிப் பார்க்கிறோமா?

சட்டி சுட்டதடா கையை விட்டேனடா
காலைச் சுட்டதடா கணவாய் கறியென
பட்ட பின்னரே கெட்டுத் தெளிவதா?

எல்லாம் இழந்த பின்னர்
கதறி அழுது என்ன பயன்?
காலம் கடந்து அறிவு வந்தும்
அதனால் என்ன பயன்?
எதனால் என்ன பயன் என்றறியாது
எதிலும் இறங்கி ஏமாறுவதை விட
முழுதும் முற்றும் அறிந்த பின்
ஆழமறிந்து காலை வைப்பதே அழகு!

பிறகு பார்ப்போம் என்பதும்
நாளை பார்ப்போம் என்பதும்
நாளடைவில் இல்லை என்றாகிவிடும்!
நன்றே எண்ணிப் பாரும் - அதை
இன்றே பண்ணிப் பாரும்
என்றும் முன்னேறுவது நீயே!


நல்லுறவுக்கு நல்மருந்து

உள்ளப் புண் வலிக்கும் வண்ணம்
வெள்ளம் பெருகுவதைப் போல
சுடு சொல்களைக் கொட்டாதீர்கள்!
அந்தச் சொல்கள் தான்
எந்த வேளையிலும் - உங்களை
எதிரியாகக் காட்டி நிற்குமே!
பிறகெப்படி நல்லுறவை பேணுவீர்?
தித்திக்கும் தேனைப் போல
உள்ளப் புண்ணை ஆற்றும் வண்ணம்
அன்பொழுகும் சொல்களைக் கொட்டி
உறவுகளை அள்ளி அணைக்கலாமே!



மாற்றாரின் சாவு கூட

வாழ்க்கை என்பது
எவரும் சொல்லித்தருவதில்லை!
வாழ்ந்து பார்த்த பின்னர் தான்
இதுவா வாழ்க்கை என்றறிகிறோம்!
அட முட்டாளே!
வாழுகின்றவர்களுக்கு
வாழ்ந்தவர்கள் வாழ்க்கை தான்
நல்ல பாடமடா!
அதனால் தான்
"நான் சாகும் வரை
என்னுடையதை எவரும் மறைக்கலாம்!
என் சாவின் பின்
என்னுடைய எல்லாம் வெளிவருமே!"
என்றுரைக்கின்றனரோ?!
அதிலும் பாரும்
"சாட்டின்றிச் சாவில்லை" என
மாற்றாரின் சாவு கூட - நமக்கு
வழிகாட்டத் தவறுவதில்லையே!



பிழைப்பதற்கும் உழைக்க வேண்டுமே!
வாழப் பிடிக்க வில்லையா? - அப்ப
சாகப் பிடிக்கும் தானே! - அப்ப
சாக வேண்டியது தானே! - அப்ப
அச்சம் வந்து நோகடிக்குதே! - அப்ப
வாழ வேண்டியது தானே! - அப்ப
கொஞ்சம் உழைச்சால் தானே! - அப்ப
காசு/ பணம் வந்தால் தானே! - அப்ப
மகிழ்வாய் வாழலாம் தானே! - அப்ப
தனிமையும் வாட்டும் தானே! - அப்ப
நல்லுறவை நாடலாம் தானே! - அப்ப
அன்பானவர் உறவு தானே! - அப்ப
எல்லோருக்கும் வாழப் பிடிக்குமே!

ஞாயிறு, 11 மார்ச், 2018

குழந்தை பெற்றுச் சாகடிப்பது காதலாகுமோ?


நம்பி நம்பி நடைபயின்றுச் சுற்றி
கம்பி வேலி கடந்துசென்று கைகுலுக்கி
தெருக்களிலும் பூங்காக்களிலும் நெருங்கிப் பழகி
காதலெனக் காமம் மேலிடக் கூடியதில்
பெண்ணுக்கு வயிறு பெருத்திடப் பார்த்து - கெட்ட
ஆணுக்கு அச்சம் முட்ட ஒளிந்தோட - ஒளிக்க
முடியாத நல்ல பெண்ணின் அறுவடையாக
தெருவோர, குப்பைமேடு குழந்தைகளின் நிலை!
"வெளுத்ததெல்லாம் வெள்ளையென நம்பி
பதிவுத் திருமணம் செய்யாது கூடியவளே - உன்
அழுக்ககலக் குழந்தையைப் பெற்று வீசலாமோ?
காமம் மேலிட்டதால் காதல் நீங்கிட - ஓடி
ஒழியும் காமவெறி ஆண்களே பதில்கூறுவீரா?" என
இருபாலாரிடமும் இப்படித்தான் கேட்க முடிகிறது!
"பொதுவெளியில் காமம் மேலிட அலைவதும்
பொதுவெளியில் பிள்ளை பெற்று வீசுவதும்
காதலென்ற போர்வையில் பண்பாட்டை மிதிப்பதும்
சுத்தமான காதலுக்கு அழுக்குப் பூசுவதும் - உங்கள்
செயல் என்றால் சாவை நாடலாமே! - ஏன் தான்
குழந்தையைப் பெற்றுவீசிச் சாகடிக்கிறீர்கள்?" என
இருபாலாரிடமும் இப்படித்தான் கேட்க முடிகிறது!
"இது தான் காதலா?" என்று கேட்டால்
இருபாலாரது பதிலும் வீசியெறிந்த குழந்தைகளா?

யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடவுள்ள "இது தான் காதலா?" என்ற மின்நூலுக்கு மேற்காணும் படத்திற்கு மேற்காணும் கவிதையை விடச் சிறந்த கவிதைகளை 20/03/2018 இற்கு முன் wds0@live.com என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பரிசில் விரிப்பை அறியலாம்.

வெள்ளி, 9 மார்ச், 2018

பணத்தை எங்கே தேடுவேன்?

எமது மின்நூலுக்கு உங்கள் கவிதைகளை விரைவில் அனுப்பி உதவுக. இணைப்பைச் சொடுக்கி விரிப்பை அறிக.
https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html


பணத்தை எங்கே தேடுவேன்...
பகல், இரவாக உழைத்தாலும்
உடல் முழுக்க வியர்த்தாலும்
கிடைப்பதோ நாலு பணம் - அதை
உடல் இழைக்க விரைவு நடையில
வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தால்
இரண்டு மனைவி, நாலு பிள்ளை
என்னோடு ஏழுவயிறு நிறைய
உண்டு, குடிக்கப் போதவில்லையே!
பணத்தை எங்கே தேடுவேன்...
உழை, உழையென்று  உழைத்தாலும்
பிழைக்கப் பணம் போதவில்லையே!
கடுமையாக உழைத்தாலும் கூட
கைக்கெட்டிய பணம் கூட
எவர் கைக்குப் போனாலும் கூட
என் குடும்பம் பிழைக்க வழியேது?
பணத்தை எங்கே தேடுவேன்...
தேடிய பணத்தின் பெறுமதியோ
நானும் இரண்டு மனைவியும்
நாலு பிள்ளைகளும் வாழப் போதாதே!
வயிறு கடித்தாலும் உழைக்கிறேன்
ஏழு உயிர்கள் பிழைக்கத் தான்!
பணத்தை எங்கே தேடுவேன்...
உழைத்து ஈட்டிய பணம்
பிழைத்து வாழப் போதாமையால்
70 ஆம் அகவையிலும் உழைக்கிறேனே!

வியாழன், 8 மார்ச், 2018

இலங்கையில் இணையத் தளங்கள் முடங்கின



உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய செயலாகத் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு எழுச்சி இடம்பெறுகிறது. அவ்வெழுச்சி வெற்றிபெற இணையத் தளங்கள் முக்கிய பங்காற்றின. அதாவது மக்களாய (சமூக) வலைத் தளங்கள் ஊடாக ஜல்லிக்கட்டு எழுச்சியை மேற்கொள்ள முடிந்திருக்கிறது. இதனடிப்படையில் தான் இலங்கையில் மக்களாய (சமூக) வலைத் தளங்களை முடக்கி உள்ளனர்.

1944 இல் 'பட்டிப்பளை' என்ற ஊரிலுள்ள தமிழர்களை வெளியேற்றிய பின், அங்கே சிங்கள மக்களைக் குடியேற்றிய அரசு அவ்விடத்தை 'கல்லோயா' எனப் பெயர் மாற்றியது. இவ்வாறு தான் இலங்கையில் பேரினவாதிகளால் சிறுபான்மை இனத்தவர்கள் இன்றுவரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 2018 மார்ச்சு தொடக்கத்தில் முஸ்லீம் - சிங்கள மக்களிடையே மோதல்கள் இடம்பெறுகின்றன. இதனை வலுவடைய இடமளிக்காமல் மக்களாய (சமூக) வலைத் தளங்களை முடக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான இனமோதல்களைத் தடுக்க ஒரே வழி; பல இனங்களை, பல மதங்களை சமனாகப் பேணுவதேயாகும். இதற்கு எதிராகப் பௌத்த சிங்கள நாடென இலங்கை அரசு செயற்படுவதால் மென்மேலும் இனமோதல்கள் தோன்ற இடமுண்டு. எனவே, இலங்கை அரசு தனது செயற்பாட்டை மாற்றி எல்லா இனங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் சம உரிமை உண்டெனப் பேணினால் இலங்கையில் அமைதி ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வலு (சக்தி) மக்களாய (சமூக) வலைத் தளங்களுக்கு இருக்கிறது என்பதை இலங்கையில் இத்தளங்களுக்கான தடை உணர்த்தி நிற்கிறது. ஏற்கனவே, தமிழ்நாட்டில் 'சவுக்கு' என்ற வலைப்பூ (Blog) இற்கு சென்னை உயர் நீதிமன்று தடை ஏற்படுத்திமை வலைப்பதிவர்கள் யாவரும் அறிந்ததே!

தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும் நற்றமிழை உலகெங்கும் பரப்பிப் பேண நன்றே வலைப்பூக்கள் (Blogs) உடன் மக்களாய (சமூக) வலைத் தளங்களைப் பயன்படுத்தி வெற்றி காணலாம். மோதல்களைத் தூண்டாமல் அமைதியை ஏற்படுத்த நாட்டு மக்களுக்கு உண்மையை விளக்கலாம். மக்களுக்கு அறிவூட்டலாம்; தமது ஆற்றல்களை அரங்கேற்றலாம்.

அச்சு ஊடகங்களை (நாளேடுகள், ஏனைய ஏடுகள்) விட, மின்னூடகங்களை (வானொலி, தொலைக்காட்சி) விட வலை ஊடகங்கள் (வலைத் தள வெளியீடுகள்) வலுவானது என்பதை இப்பதிவினூடாக உணர்த்த முயன்றிருக்கிறேன். தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும் இந்த உண்மையை ஏற்று உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண முன்வாருங்கள்.

ஞாயிறு, 4 மார்ச், 2018

கண்ணே காணும் காதல் தோல்வி

இது தான் காதலா? - கால நீடிப்பு 
முடிவு நாள்: 15/03/2018
https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html

மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி விரிப்பை அறிந்து, படத்தைப் பார்த்துத் தங்கள் கவிதைகளை 20/03/2018 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கவும்.


கண்ணும் கண்ணும் கலந்து விட்டால்
மண்ணில் மின்னும் காதலாகி விட்டால்
முன்னும் பின்னும் எண்ணிப் பாரும்
(கண்ணும்)

காலம் கரைவதும் கண்ணுக்குத் தெரியாது
காதல் முறிவதும் முன்னுக்குத் தெரியாது
காலம் கடந்தும் உள்ளம் வலிக்குமே!
(காலம்)

கண்டதே கோலம் என்று எண்ணி
கண்கள் மேய்ந்த ஆள்களை நம்பி
கண்வழி நுழைந்த ஆளை விரும்பி
கண்ணில் காண்பதும் காதல் செய்தி
(கண்ணும்) (காலம்)

கண்ணில் நுழைந்த ஆளோடு பழகி
கண்ட தெருவிலும் இணைந்து உலாவி
கண்வழி உணர்ந்த காதலைப் பருகி
கண்ணே கலங்க பிரிவைச் சொல்லி
(கண்ணும்) (காலம்)

கண்ட இடத்திலும் கண்டவர் திரும்பி
கண்ணால் கண்ட காட்சியைப் பரப்பி
கண்கள் முன்னே
  ஊரறிய விளக்கி
கண்ணே காணும் காதல் தோல்வி
(கண்ணும்) (காலம்)

கண்ணால் சுவைத்த உணர்வு விலகி
கண்ணால் உணர்ந்த மெய்யும் நீங்கி
கண்ணால் பகிர்ந்த காதலை எண்ணி
கண்ணீர் வடிப்பதும் இளைசுகள் காலமாகி
(கண்ணும்) (காலம்)


"மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என்ற மின்நூல் வெளியிட்டாச்சு!
https://seebooks4u.blogspot.com/2018/03/blog-post.html

இலகுவாகக் குளிர்மையாகப் பார்வையிடப் பதிவிறக்க
https://issuu.com/ypvn/docs/arrack_poet_competition

விரைவாக வழமையாகப் பார்வையிடப் பதிவிறக்க
https://app.box.com/s/5zewanp1oen3pranrs4e6wquli7cn36z

இந்த மின்நூலில் அறிஞர்கள் வெளிப்படுத்திய எண்ணங்களைப் பரப்புவதன் ஊடாக விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் பல நண்பர்கள் ஊடாக இந்த மின்நூலை உலகெங்கும் பரப்ப முயலுவோம்.