Translate Tamil to any languages.

செவ்வாய், 27 மார்ச், 2018

காலடி வைப்பதிலும் அழகு தேவையோ?


தனித்திருக்கும் போது தான்
பெற்றோரின் அருமை தெரிகிறதே!
பிரிந்திருக்கும் போது தான்
துணையாளின் அருமை தெரிகிறதே!
பின்னுக்கு வருவதைத் தானும்
முன்னுக்குத் தெரிந்து வைத்திருக்க
எமக்குத் தெரியவில்லையே!

குத்தின பிறகு தானே தெரிகிறது
முள்ளின் மேல் காலை வைத்தோமென்று!
சுட்ட பிறகு தானே தெரிகிறது
நெருப்பின் மேல் காலை வைத்தோமென்று!
எதிர் விளைவையோ பின் விளைவையோ
எப்போதாவது எண்ணிப் பார்க்கிறோமா?

சட்டி சுட்டதடா கையை விட்டேனடா
காலைச் சுட்டதடா கணவாய் கறியென
பட்ட பின்னரே கெட்டுத் தெளிவதா?

எல்லாம் இழந்த பின்னர்
கதறி அழுது என்ன பயன்?
காலம் கடந்து அறிவு வந்தும்
அதனால் என்ன பயன்?
எதனால் என்ன பயன் என்றறியாது
எதிலும் இறங்கி ஏமாறுவதை விட
முழுதும் முற்றும் அறிந்த பின்
ஆழமறிந்து காலை வைப்பதே அழகு!

பிறகு பார்ப்போம் என்பதும்
நாளை பார்ப்போம் என்பதும்
நாளடைவில் இல்லை என்றாகிவிடும்!
நன்றே எண்ணிப் பாரும் - அதை
இன்றே பண்ணிப் பாரும்
என்றும் முன்னேறுவது நீயே!


நல்லுறவுக்கு நல்மருந்து

உள்ளப் புண் வலிக்கும் வண்ணம்
வெள்ளம் பெருகுவதைப் போல
சுடு சொல்களைக் கொட்டாதீர்கள்!
அந்தச் சொல்கள் தான்
எந்த வேளையிலும் - உங்களை
எதிரியாகக் காட்டி நிற்குமே!
பிறகெப்படி நல்லுறவை பேணுவீர்?
தித்திக்கும் தேனைப் போல
உள்ளப் புண்ணை ஆற்றும் வண்ணம்
அன்பொழுகும் சொல்களைக் கொட்டி
உறவுகளை அள்ளி அணைக்கலாமே!



மாற்றாரின் சாவு கூட

வாழ்க்கை என்பது
எவரும் சொல்லித்தருவதில்லை!
வாழ்ந்து பார்த்த பின்னர் தான்
இதுவா வாழ்க்கை என்றறிகிறோம்!
அட முட்டாளே!
வாழுகின்றவர்களுக்கு
வாழ்ந்தவர்கள் வாழ்க்கை தான்
நல்ல பாடமடா!
அதனால் தான்
"நான் சாகும் வரை
என்னுடையதை எவரும் மறைக்கலாம்!
என் சாவின் பின்
என்னுடைய எல்லாம் வெளிவருமே!"
என்றுரைக்கின்றனரோ?!
அதிலும் பாரும்
"சாட்டின்றிச் சாவில்லை" என
மாற்றாரின் சாவு கூட - நமக்கு
வழிகாட்டத் தவறுவதில்லையே!



பிழைப்பதற்கும் உழைக்க வேண்டுமே!
வாழப் பிடிக்க வில்லையா? - அப்ப
சாகப் பிடிக்கும் தானே! - அப்ப
சாக வேண்டியது தானே! - அப்ப
அச்சம் வந்து நோகடிக்குதே! - அப்ப
வாழ வேண்டியது தானே! - அப்ப
கொஞ்சம் உழைச்சால் தானே! - அப்ப
காசு/ பணம் வந்தால் தானே! - அப்ப
மகிழ்வாய் வாழலாம் தானே! - அப்ப
தனிமையும் வாட்டும் தானே! - அப்ப
நல்லுறவை நாடலாம் தானே! - அப்ப
அன்பானவர் உறவு தானே! - அப்ப
எல்லோருக்கும் வாழப் பிடிக்குமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!