Translate Tamil to any languages.

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

நல்லவராகவும் வெற்றியாளராகவும் வழி!



மூளை செயற்படும் ஒழுங்கு அல்லது மூளை இயங்கும் விதம் தான் உள்ளம் (மனம்) என்கிறோம். உணர்வு உள்ளம் (மேல் மனம்) - Conscious Mind, துணை உணர்வு உள்ளம் (ஆழ் மனம்) - Sub Conscious Mind என இரண்டு வகையில் உள்ளம் (மனம்) பற்றிக் கதைப்பதுண்டு. இவ்விரு உள்ளங்களையும் (மனங்களையும்) முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பல வெற்றிகளை நம்மால் குவிக்க முடியும்.

உணர்வு உள்ளம் (மேல் மனம்) - Conscious Mind இல் தான் புலன் உறுப்புகளால் உள்வாங்கப்படும் தகவல் பேணப்படும். துணை உணர்வு உள்ளம் (ஆழ் மனம்) - Sub Conscious Mind இல் தான் அவை சேமிக்கப்படுகிறது. இவ்வாறு இவ்விரு உள்ளமும் (மனமும்) செயற்படுவதாகக் கருதுவோம். இதனடிப்படையில் எப்படிப் பல வெற்றிகளை நம்மால் குவிக்க முடியும்?

மேல் மனத்தில் கவனமாக கையாளப்படும் தகவல் ஆழ் மனத்தில் பேணப்படுவதால், ஆழ் மனம் குறித்த வெற்றிகளைக் குவிக்க உதவுகின்றது. அதாவது ஆழ் மனத்தில் இருப்பவை தக்க சூழலில் நமது வெளிப்பாடாக அமைவதால் அவ்வெற்றிகள் கிட்டுகின்றன.

குறித்த சுழலில் ஒருவர் புலன் உறுப்புகளால் உள்வாங்கப்படும் தகவல் எதுவாயினும் மேல் மனத்தில் நல்ல நோக்கில் எண்ணிப் பார்த்தால் (சிந்தித்தால்), அவை ஆழ் மனத்தில் பதிந்தபடி அவரது நடத்தைகளில் நல்லெண்ண வெளிப்பாடாக மின்னும். அதனால் அந்த ஆளை சூழல் நல்லவராக அடையாளப்படுத்துகிறது. குறித்த சுழலில் ஒருவர் புலன் உறுப்புகளால் உள்வாங்கப்படும் தகவல் எதுவாயினும் மேல் மனத்தில் கெட்ட நோக்கில் எண்ணிப் பார்த்தால் (சிந்தித்தால்), அவை ஆழ் மனத்தில் பதிந்தபடி அவரது நடத்தைகளில் கெட்ட எண்ண வெளிப்பாடாக மின்னும். அதனால் அந்த ஆளைச் சூழல் கெட்டவராக அடையாளப்படுத்துகிறது. இவ்வாறு தான் சிலர் நல்லவரென்றும் சிலர் கெட்டவரென்றும் பலரால் எடை போடப்படுவதுண்டு.

நாம் மேல் மனத்தில் எதை எண்ணுகிறோமோ / சிந்திக்கிறோமோ, அது ஆழ் மனத்தில் பதியும். ஆழ் மனத்தில் பதிந்தது நமது நடத்தைகளாக வெளிக்காட்டும். எனவே, புலன் உறுப்புகளால் உள்வாங்கப்படும் தகவல் எதுவாயினும் நல்ல நோக்கில் எண்ணிப் பார்த்து (சிந்தித்து) நாம் நற்பெயரை ஈட்ட முயற்சி செய்வோம். தவறாகக் கெட்ட எண்ணங்கள் மேல் மனத்தில் தோன்றினால் உடனடியாக நிறுத்தி, நல்லெண்ணங்களை எண்ணிப் பார்த்துக் (சிந்தித்துக்) கொள்ளவும். ஏனெனில், மேல் மனத்தில் கெட்டதைக் கழித்து நல்லதை உறிஞ்சினால் தான் நம்மை அறியாமலேயே நமது நடத்தைகளில் நல்லவை மின்னும். அதனால் தான் எந்த இடத்திலும் எவ்வேளையிலும் பலர் நற்பெயரை ஈட்டிக்கொள்கின்றனர்.

எடுத்துக்காட்டாக "மனத்தில் இருப்பது தான் நடத்தைகளில் (எழுத்தில், சொல்லில், செயலில்) வெளிவரும்" என்பது இதனடிப்படையில் எழுந்த உண்மை ஆகும். இதனைப் பொய்யாக்க முடியாது. எனவே, எம்மை அறியாமலேயே எந்த இடத்திலும் எவ்வேளையிலும் நற்பெயரை ஈட்டிக்கொள்ள என்ன செய்யலாம்?

கெட்டதைப் பாராமல், கேளாமல் இருக்க முடியாது போகலாம்; சூழலில் அவையும் இருக்கலாம். அவ்வேளை அவற்றை மேல் மனத்தில் போட்டு எண்ணிக்கொள்ளாமல் (சிந்திக்காமல்) நல்லதைப் பார்க்கவும் நல்லதைக் கேட்கவும் முயற்சிக்கலாம். எடுத்துக்காட்டாக நூறாயிரம் உரூபா செல்லும் வழியில் காண்கிறீர்கள். அவ்வேளை அதனை எடுத்துக்கொண்டால் வருவாயாக இருக்கலாம். அவ்வேளை அதனை எடுத்து உரியவரைத் தேடி ஒப்படைத்தால் இழந்தவரின் நன்றியினைப் பெறலாம். இங்கே உரியவரிடம் ஒப்படைக்காமல் தனக்கு வருவாயாகப் பெற்றவர் கெட்டவர்; அவரைச் சூழல் ஒரு நாள் ஒதுக்கி வைக்கலாம். இங்கே உரியவரைத் தேடி ஒப்படைத்து இழந்தவரின் நன்றியினைப் பெற்றவர் நல்லவர்; அவரைச் சூழல் எந்நாளுமே போற்றிப் புகழும்.

"ஒரு நொடியில் கெட்டவரென்று பெயரெடுக்கலாம்; நல்லவரென்று பெயரெடுக்க நெடுநாள் செல்லலாம்." என்பதை அடிக்கடி பலரும் எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டுவதைக் காண்பீர்கள். அந்த நல்லவரென்று பெயரெடுக்க மேலே சொன்னவாறு மேல் மனத்தில் நல்லதையே எண்ணிக்கொள்ள (சிந்திக்க) வேண்டும். நல்லவரென்று பெயரெடுத்தால் மட்டும் வாழமுடியாது; வாழ்வில் எல்லாவற்றிலும் வெற்றிகாண வேண்டும். அப்படியாயின் வெற்றிகாண என்ன செய்ய வேண்டும்? மேலுள்ள எடுத்துக்காட்டில் நல்லவர் என்று பெயரெடுத்தவர், சூழலில் நன்மதிப்பைத் பேணிக்கொள்கிறார். அந்த நன்மதிப்பு அவருக்கு முதலீடாகிறது. அதனால் அவர் மக்கள் உள்ளங்களை வென்றுவிடுகிறார்.

அதாவது, வாழ்வில் வெற்றிகாணச் சிந்திக்க வேண்டும். அப்படியாயின், எப்படி வாழ்வில் வெற்றிகாணச் சிந்திக்க வேண்டும்? ஐம்புலன்கள் ஊடாக ஐந்து வகையில் மேல் மனத்திற்குத் தகவல் வரலாம். அதனை வைத்து எப்படிச் சிந்தித்தால் வாழ்வில் வெற்றிகாண முடியும்? வாசிப்பதை விடக் கேட்பதை விடப் பார்த்தல், மேல் மனத்தில் இலகுவாக நுழையும். அப்படியாயின் மேல் மனத்தில் படக் காட்சிகளாக அல்லது சூழல் காட்சிகளாக வெற்றியடையும் வழிகளை எண்ணிப் பாருங்கள். அவை ஆழ் மனத்தில் அப்படியே பதிந்துவிட, நம்மை அறியாமலேயே நாம் வெற்றிகாண ஆழ் மனம் தூண்டிவிடும். அதாவது நமது நடத்தைகளே நம்மை வெற்றியடையச் செய்துவிடும்.

எடுத்துக்காட்டாக நகரில் கம்பன், வம்பன் என்ற இரு கடைகள் இருப்பதாகக் கருதுக. வம்பன் என்ற கடை வெற்றிநடை போடுவதாகக் கருதுக. இந்தச் சூழலில் வம்பன் என்ற கடையை, கம்பன் என்ற கடை எப்படிச் சிந்தித்தால் வெற்றிகாண முடியும்? 

கம்பன் கடைக்காரர் வம்பன் கடையைத் தீமூட்டி அழித்துவிடலாம். அதனால் சில காலம் கம்பன் கடை வெற்றிநடை போடலாம். நெடுநாளைக்கு நன்மை தராது. ஏனெனில் வம்பன் கடை எரிந்து சாம்பலானதால் மக்கள் மனதில் வம்பன் கடைக்காரர் குந்தியிருப்பார். அதாவது மக்கள் வம்பன் கடைக்காரருக்கு அதிக விருப்பம் (அனுதாபம், இரக்கம் காரணமாக) தெரிவிக்கலாம். எனவே வம்பன் கடை மீள உருப்பெற்று வெற்றிநடை போட வாய்ப்பு உண்டு.

அப்படியாயின் மாற்று வழி என்ன? வம்பன் கடையைத் தீமூட்டி எரிக்காமல் மக்கள் மனதில் வம்பன் கடைக்காரர் குந்தியிருக்காமல் வெற்றிகாணச் சிந்திக்க வேண்டும். அவ்வாறு பெறும் வெற்றியே நீண்ட நாள் நிலைக்கும். அவ்வாறான வெற்றியைப் பெற எப்படிச் சிந்திக்க வேண்டும்?

அதற்கு வாடிக்கையாளரை மேல் மனத் திரையில் காணவேண்டும். அதாவது வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளைத் திரைப்படமாகப் பார்க்க வேண்டும். வம்பன் கடைக்காரர் விற்கின்ற பொருள்களின் விலையைக் குறைக்கலாம். வம்பன் கடைக்காரர் வாடிக்கையாளர் மீது செலுத்தும் அன்பு, ஆதரவு, பணியாற்றும் அணுகுமுறை (வசதி வழங்கல்) ஆகியவற்றை விடக் கொஞ்சம் கூட்டலாம். அவ்வேளை கம்பன் கடைப் பக்கம், வம்பன் கடை வாடிக்கையாளர் திரும்பிப் பார்க்கலாம். அதனால் காலப்போக்கில் வாடிக்கையாளர் உள்ளங்களை வென்று கம்பன் கடை நெடுநாள் வெற்றிநடை போடலாம்.

இவ்வாறு திரைப்படம் போல மேல் மனதில் சிந்தித்தால், ஆழ் மனதில் பதிந்துவிடும். எந்நாளும் ஆழ் மனம் நினைவூட்ட நம்மை அறியாமலேயே வெற்றி பெறத் தேவையானத் செய்து வர வெற்றிகள் கிடைத்துவிடும். "நீண்ட நாள் கனவு இன்று பலித்தது" என வெற்றி பெற்ற எல்லோரும் சொல்வது இவ்வாறு எண்ணிச் செயற்பட்டுக் கிடைத்த வெற்றி என்பதாலே! "எதை எண்ணுகிறோமோ அதுவாகவே நடந்துவிடுகிறது." என்ற கருத்தும் இதன் அடிப்படையிலேயே பிறந்தது.

நன்றே எண்ணுவோம் - அதை
இன்றே எண்ணுவோம் - எதையும்
என்றுமே வெல்லுவோம்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!