Translate Tamil to any languages.

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா?

முந்தைய உலகில் 7500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம்... பின் மொழிகள் அழிந்து வரலாயிற்று. 1950 இற்கு முன் 4500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம்... 2000 இற்கு முன் 2500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம்... 2020ஆம் ஆண்டுக்கு பின் 1500 இற்கும் குறைந்த மொழிகள் இருக்குமாம்... 2040ஆம் ஆண்டுக்கு பின் 150 இற்கும் குறைந்த மொழிகள் இருக்குமாம்...” என்றொரு தகவலை 2000ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் கேட்ட நினைவுண்டு.


இப்படிப் போனால் தமிழ் மொழியும் அழிந்து விடும் என அஞ்சுகின்றனர். இன்னும் முப்பது ஆண்டுகளில் அழியவிருக்கும் மொழிகளின் விரிப்பில் (List) தமிழ் மொழியும் இருப்பதாக ஐ.நா. அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் "தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா?" என்றால் நிறைவான பதிலை எட்ட முடியாது இருக்கும். வலைவழியே உலகில் முதலில் தோன்றியது தமிழ் மொழி என்று பலரும் கருத்துப் பகிருகின்றனர்.



மேலுள்ளவாறு மக்களாய/ குமுகாய (சமூக) வலைப் பக்கங்களில் அழகான ஆளுக்கொரு படங்களில் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்று பரப்புகின்றனர். அப்படங்களை வைத்து எவரையும் நம்ப வைக்க இயலாதென்பதை நாம் ஏற்றுத் தான் ஆகவேண்டும்.

உலகில் முதலில் தோன்றிய மொழி எதுவென்றால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றே சொல்லலாம். அதனால், இன்று பேச்சு வழக்கில் உறவாடும் மொழிகளில் உலகில் முதலில் தோன்றிய மொழி எதுவென்றால் தமிழ் என்று சொல்ல முடியுமே தவிர, அதனை உறுதிப்படுத்தச் சான்றுகள் தேவை.

கீழ்வரும் வலைப்பக்கங்களில் உலகில் முதலில் தோன்றிய மொழிகளைத் திரட்டி உள்ளனர். அவ்வவ் வலைப்பக்கங்களின் நம்பகத் தன்மையை வைத்தே உறுதிப்படுத்த இயலும். ஆயினும், உலகில் முதலில் தோன்றிய மொழிகளில் தமிழும் இருப்பதைக் காணலாம்.

What is the oldest language still spoken today? 
Top 10 Oldest Languages In The World
Top 10 Oldest Languages in the World Maybe
Do you know what are the 7 oldest languages?
7 Classical Oldest Language Of The World!
Seven oldest languages in the world that are still in use

மேலுள்ள வலைப்பக்கங்களில் திரட்டப்பட்ட தகவலின் படி கிப்ரு மொழி, சுமேரியன் மொழி, வட மொழி, தமிழ் மொழி ஆகிய பழைய மொழிகளில் தொன்மையைக் கருதித் தமிழ் மொழி முதன்மையானது எனலாம்.

ஆயினும் உலகில் மூத்த மொழி எது என்று ஆளுக்காள் ஒவ்வொன்றைச் சொல்லலாம். சிலர் கிப்ரு மொழி என்பர்; சிலர் சுமேரியன் மொழி என்பர்; சிலர் வட மொழி என்பர்; சிலர் தமிழ் மொழி என்பர்தமிழ் இலக்கியங்களைச் சான்றாகக் கருத்திற்கொண்டு பலர் தமிழே உலகின் முதன் மொழி என்கின்றனர். அதற்கும் கீழ்வரும் இணைப்புக்குச் சென்று உறுதிப்படுத்துங்கள்.


உலக மொழிகளில் முதலில் தோன்றிய மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்என்ற கருத்தை அமெரிக்க மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அவர்கள் வெளியிட்டுள்ளார் என்பதை வலைப்பக்கங்களில் படித்திருந்தேன்.

அமெரிக்கப் பேராசிரியரும் மொழி ஆய்வாளரும் ஆகிய அலெக்ஸ் கொல்லியர் "உலகின் முதன் மொழியாகத் தமிழ் இருக்கலாம்" என்கிறார் என்பதை கீழ்வரும் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
மேற்படி செய்திக் குறிப்புத் தெரிவித்த அலெக்ஸ் கொல்லியர் அவர்களின் ஒளிஒலி (Video) இணைப்பையும் தருகின்றேன்.

உலகம் தோன்றிய பின் மனிதன் தோன்றியிருப்பான் என எல்லோரும் தானே சொல்லுகினம். அடுத்து மொழி எப்போது தோன்றியது? தாயின் வயிற்றிலிருந்து தாய்மண்ணைக் காண வந்ததும் குழந்தை பேசும் மொழி அழுகை தானே! குழந்தை தன்நிலையை (பசி, தண்ணீர் விடாய், தனிமை என...) வெளிப்படுத்த அழுகையைப் பாவித்தமையால் மொழிக்கு முதற்காரணம் ஒலி ஆகலாம்.

குழந்தை எழுப்பிய ஒலிகளின் மாற்றமே அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ என அமைந்திருக்கலாம். மேலும் குழந்தை வளர, வளர ம், அம், ஆ, அம்மா எனச் சொல்ல முயன்றிருக்கலாம். இவ்வாறே ப், அப், ஆ, அப்பா எனச் சொல்லியிருக்கலாம். இப்படித்தான் மனித உணர்வுகள் எழுத்தாகவும் மனித வெளிப்பாடு சொல்லாகவும் தோன்றத் தமிழ் மனிதப் பிறப்போடு தோன்றிய உலகின் முதன் மொழி என்று எண்ணத் தோன்றுகிறது.


வலைப்பக்கங்களில் பகிரப்பட்ட படம் ஒன்றை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன். இப்படம் மனிதப் பிறப்போடு வெளிக்கொணர்ந்த மொழி தமிழ் என்பதைச் சுட்டி நிற்கிறது. ஆயினும் இதனை வைத்து உலகில் முதலில் தோன்றியது தமிழ் மொழி என்று உறுதிப்படுத்த முடியாதே!

"உலகைப் படைத்த ஆண்டவரே, உலகில் உயிர் வாழ்வனவற்றையும் படைத்து இருக்க வேண்டும். அந்த வகையில் மனிதரைப் படைத்த ஆண்டவரே, மனிதத் தொடர்பாடலுக்கான மொழியையும் படிப்பித்து இருக்க வேண்டும்." என்ற கருத்து மக்கள் மத்தியில் நெடுநாளாகப் பேசப்பட்டு வருகிறது.

"இந்து மதத்தவரின் முழுமுதற் கடவுளான சிவபெருமானே, உலகையும் மக்களையும் படைத்து அவர்களுக்கான தொடர்பாடல் மொழியாகத் தமிழையும் அகத்தியர் ஊடாகக் கற்பித்து உள்ளார்." என்ற கருத்து இந்து மதத்தவர்களால் நெடுநாளாகப் பேசப்பட்டு வருகிறது.

இதன் படிக்குச் சைவமும் தமிழும் தொன்மையானது என்றும் நெடுநாளாகப் பேசப்பட்டு வருகிறது. இவை வெறும் கட்டுக்கதைகளாக இருந்திருக்க முடியாது. தமிழில் செவி வழி கேட்டு வாய் வழி வெளியிட்டு வந்த வாய் மொழி இலக்கியங்கள் (நாட்டார் இலக்கியங்கள்) வழியாக முன்னோர்களிடம் இருந்து கடத்தப்பட்டு வந்த உண்மையாகவும் இருக்கலாம்.

நாட்டு மக்களால் சொல்லப்பட்டு, பாடப்பட்டு, இசைக்கப்பட்டு, நடிக்கப்பட்டு, வெளிப்படுத்தப்பட்டு வந்த பேச்சு வழக்கு இலக்கியமே நாட்டார் இலக்கியங்கள் எனலாம். அன்றாட வாழ்வில் ஆடிப் பாடி வேலை செய்தால் களைப்பு (அலுப்பு) இருக்காதெனத் தொடுத்த இலக்கியமாக அன்றி; காதல், ஊடல், தாலாட்டு எனப் பல பாடல்கள் அன்றி இருபத்தி நான்கு மணிநேர நாளொன்றில் காணும் வாழ்வின் துளிகளை ஆங்காங்கே பழமொழிகள், விடுகதைகள், கதைகள், பாடல்கள், கதைப் பாடல்கள் (கூத்து நாடகம்) என நாட்டார் இலக்கியங்களில் காணலாம்.
சான்றிணைப்புகள்:

தமிழிற்கு முதலில் இலக்கணம் வகுத்தவர் அகத்தியர் என்றும் அவர் ஆக்கிய இலக்கண நூலே அகத்தியம் என்றும் அறிய முடிகிறதே! அகத்தியர் ஆக்கிய பிற நூல்களும் இருக்கிறது. "அகத்தியர்" என்ற பெயரில் பிறர் ஆக்கிய நூல்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இணைப்பு: https://ta.wikipedia.org/s/3urb

தொல்காப்பியமே தமிழின் முதல் இலக்கண நூலாகப் பலரும் கருதலாம். ஆயினும் தனக்கு முன்னோர் ஆக்கிய இலக்கண நூல்களின் அடிப்படையில் தான், தனது இலக்கண நூலை ஆக்கியதாக ஐம்பத்தாறு இடங்களில் தொல்காப்பியனார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

எனவே, தொல்காப்பியத்திற்கு முன்னரும் அகத்தியம் போன்ற பல தமிழ் இலக்கண நூல்களும் இருந்திருக்கின்றன. நாட்டார் இலக்கியங்கள் கூடத் தமிழர் தோன்றிய காலத்திலிருந்து பகிரப்பட்டு வந்திருக்க வேண்டும். இதனைக் கருத்திற்கொண்டு உலகில் தமிழ்மொழி முதலில் தோன்றிய மொழியாகலாம்.

குமரிக்கண்டம் (Lemuria Continent) என்ற உலக நிலப்பரப்பில் அரைப்பங்கினில் தமிழர் வாழ்ந்தனர்; தமிழரே ஆண்டனர் என்ற கருத்து; தமிழ் மொழிதான் உலகில் முதன்மையானது என்ற முடிவுக்கு வரவைக்கலாம். ஆயினும் குமரிக்கண்டம் வாழ் மக்கள் திராவிடர் என்றும் அவர்கள் பேசியது திராவிட மொழி என்றும் வரலாறுகள் கூறி நிற்கின்றன. யார் அந்தத் திராவிடர்? தமிழரென வாழும் நாங்களே! திராவிட மொழி என்றால் எது? நாங்கள் பேசும் தமிழ் மொழியே!

குமரிக்கண்டம் (Lemuria Continent) என்னும் தமிழரின் இப்பெருநிலப்பரப்பின் எல்லைகளாக ஆபிரிக்காவிலிருந்து அவுஸ்ரேலியா வரையான இந்து மா கடலை அண்டிய நிலப்பரப்பென “குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு என்ற நூலில் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கூறுகின்றார்.

அவரது நூலில் “இலெமூரியா கண்டத்தின் மூலமாக பெர்மியன் (Permian), மயோஸின் (Miocene) காலங்களில் ஆபிரிக்கா இந்தியாவுடன் இணைக்கப் பட்டிருந்தது என்றும் பலயோஸியிக் (Palaeozoie) காலங்களில் அவுஸ்ரேலியா இந்தியாவுடன் இணைக்கப் பட்டிருந்தது என்றும் கருதப்படுகிறது எனப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், ஆபிரிக்கா இந்திய இணைப்புப் பிரிகையில் தோன்றியதே மேற்கிந்தியத் தீவுகள் என்றும் அவுஸ்ரேலியா இந்திய இணைப்புப் பிரிகையில் தோன்றியதே கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் அப்பாத்துரையாரின் நாலிலிருந்து அறிய முடிகிறது. அவரது நூலில் தரப்பட்ட உலக வரைபடத்தை இங்கே இணைத்துள்ளேன்.


ஆயினும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடற்கோள் (சுனாமி-tsunami) ஒன்று ஏற்பட்டதால் குமரிக்கண்டம் கடலால் மூழ்கடிக்கப்பட்டதாகப் (அதன் பின்னரே ஒரே நிலப்பரப்பான இந்தியாவும் ஈழமும் பாக்கு நீரிணையால் இரண்டாகத் துண்டானதாம்) பல அறிஞர்கள் எழுதிய நூல்களில் காணமுடிகிறது.
இணைப்பு: குமரிக்கண்டம் https://ta.wikipedia.org/s/1c

தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில்
"அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" (சிலம்பு 1, 17) என்றொரு பாடலுண்டு.
இணைப்பு: https://ta.wikisource.org/s/18ne

இதன்படிக்கு இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும் குமரிகண்டம், கடற்கோள் (சுனாமி-tsunami) ஒன்று ஏற்பட்டதால் கடலால் மூழ்கடிக்கப்பட்ட செய்தியை அறிய முடிகிறது.

மேலும், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து எனத் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, கடல்கொண்ட குமரிகண்டத்திலோ அதன் எல்லையான குமரியை அண்டியோ தமிழ் பேசும் மக்கள் தான் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது.
இணைப்பு: https://ta.wikipedia.org/s/1c5c

"பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர்- கையகல
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி.'' என 'புறப்பொருள் வெண்பாமாலை' கூறுகிறது.
இணைப்பு: https://ta.wikisource.org/s/8huq

கடல்கொண்ட மண்ணில் நீர் வழிந்தோடிய பின் அதாவது தப்பிப் பிழைத்த மண்ணில் 'கல்' தோன்றி என்பதற்கு 'மலை தோன்றி' என்றும் மண் தோன்றாக் காலம் என்றால், வயல் (வேளாண்மை/ விவசாயம்) தோன்றாத காலம் என்றும் கருதி தப்பிப் பிழைத்த நம்மாளுங்க வாளொடு (தமிழரின் வீரத்திற்கான அடையாளம்) இருந்தனராம் என அறியலாம்.

மலை வாழ்க்கையாகிய 'குறிஞ்சி' தோன்றி, வயல் வாழ்க்கையாகிய 'மருதம்' தோன்றுமுன்பே 'முல்லை' யாகப் பூத்தது தமிழினம் என்பதே 'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து...' எனக் கருதலாமென வலைப்பூ ஒன்றில் படித்தேன்.

தமிழரின் பெருநிலப்பரப்பான குமரிக்கண்டம் (Lemuria Continent) ஒன்று இருந்ததை ஆய்வுகளின் படி தெரிவிக்கின்றனர். அதனைப் பற்றி எழுதிய தமிழறிஞர்களின் கருத்துப்படி சிலப்பதிகாரம், தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றில் குறிப்பிட்டது போல தமிழும் தொன்மையானதே! தமிழரும் உலகில் முதலில் தோன்றியவர்களே! எனவே, உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. தொன்மையான மொழிகளில் தமிழே முதன்மையானாலும் தமிழை அழியாது பேணுவோம்.

வியாழன், 27 ஏப்ரல், 2017

உள (மன) அமைதிக்கு வாசிப்பு மருந்தாகுமே!


அறிஞர் குணசீலன் அவர்களின் "வேர்களைத் தேடி..." தளத்தில் "புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்" என்ற பதிவைப் படித்தேன். (இணைப்பு: http://www.gunathamizh.com/2017/04/blog-post_25.html) இவ்விணைப்பைச் சொடுக்கிப் படித்த பின் வாசிப்பை விரும்பக் (நேசிக்கக்) கற்றுக்கொள்வோம். முத்தான கருத்துகள் முழுவதும் என்னை ஈர்த்துவிட்டன. அதனால் தான் நானும் இப்பதிவை எழுதுகிறேன்.


தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தில் மின்நூல்கள் (eBooks), வாசிப்பு ஒலி (Audio Book), வாசிப்புக் காட்சி (Video Book) எனப் பல வழிகளில் திறன் பேசிகள் (Smartphones), மடிக்கணினிகள் (Laptops) எனப் பல கருவிகள் ஊடாக வாசிப்புப் பழக்கம் வந்துவிட்டதை ஏற்றுக்கொண்டாலும் உள, உடல் நலத்தோடு வாசிப்பதற்கு அச்சடித்த புத்தகங்களே சிறந்தது. அச்சடித்த புத்தகங்களையும் வாசிக்கக் கற்றுக்கொள்வோம்.

"உடலுக்கு எப்படி உடற் பயிற்சியோ அது போல உளப் (மனப்) பயிற்சிக்குப் புத்தக வாசிப்பு" என உளப் பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் பிராய்டு தெரிவித்த கருத்து உண்மையானது.

உள (மன) அமைதி பெற நல்ல புத்தகங்களை வாசிப்பது மருந்து.
உள (மன) நோய்கள் நெருங்காமல் இருக்க வாசிப்பு உதவுகிறது.
அறிவைப் பெருக்கும் வழியும் நல்ல புத்தகங்களை வாசிப்பதே!

வாசிப்பதால் மனிதன் முழுமையடைகிறான். தன் (சுய) முன்னேற்றப் புத்தகங்களை அதிகமாக வாசித்தவர் பிறரிடம் மதியுரை (ஆலோசனை) கேட்டு அலையமாட்டார். வாழ்வில் மகிழ்வைக் காண நல்ல நூல்கள் (புத்தகங்கள்) துணைக்கு வரும்.

கோவில் இல்லாத ஊரில் இருந்தாலும் நூலகம் (புத்தக ஆலயம்) இல்லாத ஊரில் இருக்கக்கூடாதென அறிஞர் ஒருவர் சொல்லியிருப்பதாக நானும் படித்திருக்கிறேன். அதுவும் கிட்டாதெனின் அவரவர் வீட்டில் சிறிய நூலகம் (புத்தக ஆலயம்) ஆக்குவோம். ஆங்கே அச்சடித்த புத்தகங்களை வேண்டித் திரட்டிப் பேணிப் படித்து அறிஞர்களாவதோடு நெடுநாள் வாழவும் முயற்சி எடுப்போம்.

நூல்கள் (புத்தகங்கள்) - வெறும்
எழுத்துகள் நிறைந்த
தாள்களின் திரட்டு அல்ல - அவை
அறிஞர்களின் அறிவாற்றலை வெளிக்கொணரும்
சுமை தாங்கிகளே!
நல்லதைக் கற்போம் - அதை
நன்றே கற்போம் - அதை
இன்றே கற்போம் - கற்றவை
நன்றே நமக்கு வழிகாட்டும்!

நிறுவனமொன்றில் நேர்காணல் செய்பவர் "என்ன படித்திருக்கிறாய்?" என்று கேட்க "நிறையப் படித்திருக்கிறேன்." என நேர்காணலுக்கு வந்தவரும் சொல்லியிருந்தார். "அப்படியென்ன நிறையப் படித்திருக்கிறாய்" என நேர்காணல் செய்பவர் அடுத்த கேள்வியைப் போட்டார்.

"பத்தாம் அகவையில் (வயதில்) இருந்து பக்கத்து ஊர் மயில்வாகனப் புலவர் வாசிகசாலையில் ஒவ்வொரு நாளும் ஐந்தாறு பத்திரிகைகள் படிப்பேன். ஒரு கிழமைக்கு ஒரு பொத்தகம் என்ற அடிப்படையிலே இரவல் எடுத்துப் படிப்பேன். இப்படி இருபது ஆண்டுகளாகப் படிக்கிறேன்" என நேர்காணலுக்கு வந்தவரும் சொன்னார்.

"அப்படி என்றால் உன்னால் கவிதை எழுத முடியுமா?" என நேர்காணல் செய்பவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"ஓமோம்! மு.மேத்தா அவர்களின் "கண்ணீர்ப் பூக்கள்" நூலைப் படித்துப் புதுக்கவிதையும் வைரமுத்து அவர்களின் "என் பழைய பனை ஓலைகள்" பொத்தகத்தைப் படித்து மரபுக்கவிதையும் எழுதுவேன்" என நேர்காணலுக்கு வந்தவரும் சொன்னார்.

"உள்ளம் (மனம்) அமைதி அடைய எதைப் படிக்கலாம்?" என நேர்காணல் செய்பவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"கவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் அல்லது இயேசு காவியம் படிக்கலாம்." என நேர்காணலுக்கு வந்தவரும் சொன்னார்.

ஈற்றில் "வாசிப்பு ஆற்றல் பரவாயில்லையே! நாளைக்கே வேலை தரலாம்." என நேர்காணல் செய்பவர் உறுதியளித்தார்.

இந்தச் செய்தியை என்னுடைய அம்மாட்டச் சொன்னேன். "வாய் இருந்தால் வங்காளம் போய் வரலாமடா..." என அம்மாவும் சொன்னார். அதைக்கேட்ட அப்பா "வாய் இருந்தாலும் நாலஞ்சு எழுத, வாசிக்கத் தெரிய வேணும்" என்றார்.

உறவுகளே! வாசிப்பு உங்களை உயர்ந்த இடத்துக்கு உயர்த்தினாலும் உளநிறைவோடு நெடுநாள் வாழ உதவுமே!

உறவுகளே! "புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்" என்ற பதிவைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்; பின் வாசிப்பை விரும்பக் (நேசிக்கக்) கற்றுக்கொள்வோம்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

சாவு (தற்கொலை) தான் தீர்வு ஆகாதே!

முகநூல் (Facebook) பயன்படுத்துவோர் பலர் சாவு (தற்கொலை) மூலம் தம் கதையை முடித்துக் கொள்கின்றனர். இலங்கையில் சாவடைவதை (தற்கொலை செய்வதை) ஒருவர் திறன்பேசி (Smart Phone) ஊடாக ஒளிஒலி (Video) பதிவு செய்து தன் கதையை முடித்து இருக்கின்றார். அதனை ஒட்டி முகநூலில் (Facebook) எழுதியதை இங்கும் பகிருகின்றேன்.



முகநூல் (Facebook) உறவுகளே!
ஒவ்வொருவர் வாழ்விலும்
அவரவர் சந்திக்கும் சிக்கல்கள்
எல்லாவற்றுக்கும் முடிவாக
சாவு (தற்கொலை) தான் தீர்வு என்றால்
உலகில் எவரும் வாழ இயலாதே!
சிக்கல்கள் எல்லாம் வந்தாலும்
வாழ முயன்று தான் பார்க்கணும்
வாழ முயன்று பார்க்கையிலே
சிக்கல்கள் எல்லாம் ஓடி மறையலாம்!
வலைவழியே தலை காட்டுவோர்
எல்லோரும் - உண்மையான
அடையாளம் அற்றவர்கள் என்பேன்
வலைவழியே உலாவும் போலிகள் இடையே
உண்மையான அடையாளங்களும்
அருமையாய் உலாவலாம்!
வலைவழியே உலாவும் உறவுகளை நம்பி
எவரும்
வலைவழியே தம்மை வெளிப்படுத்தி
பொன்னான வாழ்வில்
சிக்கல்களைத் தேடிவேண்டி
மண்ணோடு மண்ணாகும்
முடிவுகளை எடுக்காதீர்கள்!
எப்படியும் வாழலாம் என்கின்ற
கடவுள் - எப்படியும்
சாவு (தற்கொலை) அடையலாம் என்பாரா?
மேடுபள்ளம், சறுக்கி விழுத்தும் சேற்றுவழி
நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில்
தலையை நிமிர்த்திப் பயணித்து
வாழ்வதே வாழ்க்கை என்பேன்!
அடைய/ கிடைக்க முடியாத ஒன்றை
எண்ணி எண்ணிச் சாவதை விட
கல்லும் முள்ளும் நிறைந்த
கரடுமுரடான வாழ்க்கைப் பயணத்தில்
வாழும் வரை பயணிக்கலாம் வாங்க!
பயணம் தெளிவில்லை என்றால்
பயணிக்கத் துணிவில்லை என்றால்
சற்று ஓய்வு எடுக்கலாம் - அடுத்து வரும்
பின்விளைவை எண்ணிப் பார்த்து
முன்னேறிப் பார்க்கலாமே! - அதுவும்
நம்பிக்கை தரவில்லை என்றால்
நல்லோர் மதியுரை கேட்கலாமே!

குறிப்பு: உங்கள் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களைத் தீர்க்க நல்ல உளவளத் துணையாளரை நாடவும். என்னுடனும் தொடர்புகொண்டு மதியுரை பெற்றுக்கொள்ளலாம்.

சனி, 22 ஏப்ரல், 2017

'நாம் தமிழர்', 'தமிழ் வாழும்' என்றால்...

ஈழத்தில
தமிழர் - சிங்களவர் வேறுபாடு
தமிழ் நாட்டில
தமிழர் - மலையாளியர் வேறுபாடு
தமிழர் - தெலுங்கர் வேறுபாடு
தமிழர் - கன்னடர் வேறுபாடு
இப்படிப் பல...
இனிய தமிழ் உறவுகளே...
இவ்வாறான வேறுபாடுகளை
எவ்வாறாயினும் விரட்ட வேண்டும்!
எல்லா மொழிக்கும்
தாய் மொழியான தமிழில் இருந்தே
பிரிந்து போன மொழிக்காரரை
உச்சரிக்கையிலே
நாம் தமிழைத் தாழ்த்துகிறோமே!
வேறுபடுத்த விரும்பின்
தமிழில் இருந்து பிரிந்து போன
சிங்கள மொழிக்காரர்
தமிழில் இருந்து பிரிந்து போன
மலையாள மொழிக்காரர்
தமிழில் இருந்து பிரிந்து போன
தெலுங்கு மொழிக்காரர்
தமிழில் இருந்து பிரிந்து போன
கன்னட மொழிக்காரர்
என்றழைக்கும் போது பாரும்
தமிழைப் பலமுறை சொல்ல முடிகிறதே!
தமிழில் இருந்து பிரிந்து போன
மொழிக்காரர் எல்லோரையும்
தமிழ் மீது நாட்டம் கொள்ள வைக்க
வேறேதும் வழியுமுண்டோ?
மொழி சுட்டி வேறுபடுத்தலை நிறுத்தி
தமிழில் இருந்து பிரிந்து போன
------- மொழி உறவுகளே
என்றழைக்கும் போது பாரும்
நாம் பலமுறை
தமிழை உச்சரிக்கும் வேளை
பிறரையும்
தமிழை உச்சரிக்க வைக்க முடிகிறதே!
'தமிழ் வாழும்', 'தமிழ் வாழும்' என்றோ
'நாம் தமிழர்', 'நாம் தமிழர்' என்றோ
கூப்பாடு போடுவதை விட
மொழி சுட்டி வேறுபடுத்தலை நிறுத்தி
தமிழில் இருந்து பிரிந்து போன
------- மொழி உறவுகளே என்றழைத்து
உலகெங்கும் தமிழை உச்சரிக்கும்
நாக்குகளின் எண்ணிக்கையைப் பெருக்கியே
'நாம் தமிழர்', 'தமிழ் வாழும்' என்று
முழக்கமிடலாம் வாங்க உறவுகளே!