Translate Tamil to any languages.

புதன், 19 ஏப்ரல், 2017

இறை வணக்கத்துடன் தொழிலைத் தொடங்குகிறோம்!


எம் மதத்தவரும் தம் தொழிலை
இறை வணக்கத்துடனேயே தொடங்குவது
வழமையான ஒன்றே! - அதை
எதிர்க்க எவரும் இங்கில்லையே!
அப்படித் தான் - எவரும்
எண்ணுவது உண்டு - ஆனால்
உடற்பேழைக் (சவப்பெட்டிக்) கடைக்காரன்
இறை வணக்கத்துடன்
தொழிலைத் தொடங்கினால் - நேரில்
எதிர்க்காமல் இருந்தாலும் கூட
"இன்றைக்கு
எத்தனை பேழை விலைப்படும்
எத்தனை காசு ஈட்டலாம்" என்று
வணக்கும் கடைக்காரன் செயலால்
"எத்தனை ஆளுகள் சாவினமோ?" என்று
உள்ளத்தில் எதிர்ப்பவர்கள் அதிகமே!

தனது வணிகம் இனிதே நடக்கவே
கடவுளை வேண்டியபடி தான்
உடற்பேழைக் (சவப்பெட்டிக்) கடைக்காரனும்
தன் தொழிலைத் தொடங்குவான் - அவன்
வேண்டுதலை ஏற்ற இறைவனும்
தன் தொழிலைத் தொடங்குவான் - அதில்
எவரோ ஒருவர் சாவாரே! - அந்த
எவரோ ஒருவரில் - நானும்
ஒருவராக இருக்கலாம் தானே!
நான் சாகிற நாள்
எந்த நாளாக இருக்குமென்று தேட
சித்திரபுத்திரனார் (இயமனின் கணக்காளர்) கையாளும்
பதிவு ஏட்டைக் கொஞ்சம் புரட்டி
படித்துப் பார்க்க வேண்டி இருக்கிறதே!

இறை வணக்கத்துடன்
தொழிலைத் தொடங்காதே என
உடற்பேழைக் கடைக்காரனை
உள்ளத்தில் எதிர்ப்போர் - கொஞ்சம்
சித்திரபுத்திரனாரின் பதிவேட்டில் - தங்கள்
சாவு நாளைத் தேடிப் படிக்கலாமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!