Translate Tamil to any languages.

திங்கள், 24 ஏப்ரல், 2017

சாவு (தற்கொலை) தான் தீர்வு ஆகாதே!

முகநூல் (Facebook) பயன்படுத்துவோர் பலர் சாவு (தற்கொலை) மூலம் தம் கதையை முடித்துக் கொள்கின்றனர். இலங்கையில் சாவடைவதை (தற்கொலை செய்வதை) ஒருவர் திறன்பேசி (Smart Phone) ஊடாக ஒளிஒலி (Video) பதிவு செய்து தன் கதையை முடித்து இருக்கின்றார். அதனை ஒட்டி முகநூலில் (Facebook) எழுதியதை இங்கும் பகிருகின்றேன்.



முகநூல் (Facebook) உறவுகளே!
ஒவ்வொருவர் வாழ்விலும்
அவரவர் சந்திக்கும் சிக்கல்கள்
எல்லாவற்றுக்கும் முடிவாக
சாவு (தற்கொலை) தான் தீர்வு என்றால்
உலகில் எவரும் வாழ இயலாதே!
சிக்கல்கள் எல்லாம் வந்தாலும்
வாழ முயன்று தான் பார்க்கணும்
வாழ முயன்று பார்க்கையிலே
சிக்கல்கள் எல்லாம் ஓடி மறையலாம்!
வலைவழியே தலை காட்டுவோர்
எல்லோரும் - உண்மையான
அடையாளம் அற்றவர்கள் என்பேன்
வலைவழியே உலாவும் போலிகள் இடையே
உண்மையான அடையாளங்களும்
அருமையாய் உலாவலாம்!
வலைவழியே உலாவும் உறவுகளை நம்பி
எவரும்
வலைவழியே தம்மை வெளிப்படுத்தி
பொன்னான வாழ்வில்
சிக்கல்களைத் தேடிவேண்டி
மண்ணோடு மண்ணாகும்
முடிவுகளை எடுக்காதீர்கள்!
எப்படியும் வாழலாம் என்கின்ற
கடவுள் - எப்படியும்
சாவு (தற்கொலை) அடையலாம் என்பாரா?
மேடுபள்ளம், சறுக்கி விழுத்தும் சேற்றுவழி
நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில்
தலையை நிமிர்த்திப் பயணித்து
வாழ்வதே வாழ்க்கை என்பேன்!
அடைய/ கிடைக்க முடியாத ஒன்றை
எண்ணி எண்ணிச் சாவதை விட
கல்லும் முள்ளும் நிறைந்த
கரடுமுரடான வாழ்க்கைப் பயணத்தில்
வாழும் வரை பயணிக்கலாம் வாங்க!
பயணம் தெளிவில்லை என்றால்
பயணிக்கத் துணிவில்லை என்றால்
சற்று ஓய்வு எடுக்கலாம் - அடுத்து வரும்
பின்விளைவை எண்ணிப் பார்த்து
முன்னேறிப் பார்க்கலாமே! - அதுவும்
நம்பிக்கை தரவில்லை என்றால்
நல்லோர் மதியுரை கேட்கலாமே!

குறிப்பு: உங்கள் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களைத் தீர்க்க நல்ல உளவளத் துணையாளரை நாடவும். என்னுடனும் தொடர்புகொண்டு மதியுரை பெற்றுக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!