Translate Tamil to any languages.

வியாழன், 27 ஏப்ரல், 2017

உள (மன) அமைதிக்கு வாசிப்பு மருந்தாகுமே!


அறிஞர் குணசீலன் அவர்களின் "வேர்களைத் தேடி..." தளத்தில் "புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்" என்ற பதிவைப் படித்தேன். (இணைப்பு: http://www.gunathamizh.com/2017/04/blog-post_25.html) இவ்விணைப்பைச் சொடுக்கிப் படித்த பின் வாசிப்பை விரும்பக் (நேசிக்கக்) கற்றுக்கொள்வோம். முத்தான கருத்துகள் முழுவதும் என்னை ஈர்த்துவிட்டன. அதனால் தான் நானும் இப்பதிவை எழுதுகிறேன்.


தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தில் மின்நூல்கள் (eBooks), வாசிப்பு ஒலி (Audio Book), வாசிப்புக் காட்சி (Video Book) எனப் பல வழிகளில் திறன் பேசிகள் (Smartphones), மடிக்கணினிகள் (Laptops) எனப் பல கருவிகள் ஊடாக வாசிப்புப் பழக்கம் வந்துவிட்டதை ஏற்றுக்கொண்டாலும் உள, உடல் நலத்தோடு வாசிப்பதற்கு அச்சடித்த புத்தகங்களே சிறந்தது. அச்சடித்த புத்தகங்களையும் வாசிக்கக் கற்றுக்கொள்வோம்.

"உடலுக்கு எப்படி உடற் பயிற்சியோ அது போல உளப் (மனப்) பயிற்சிக்குப் புத்தக வாசிப்பு" என உளப் பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் பிராய்டு தெரிவித்த கருத்து உண்மையானது.

உள (மன) அமைதி பெற நல்ல புத்தகங்களை வாசிப்பது மருந்து.
உள (மன) நோய்கள் நெருங்காமல் இருக்க வாசிப்பு உதவுகிறது.
அறிவைப் பெருக்கும் வழியும் நல்ல புத்தகங்களை வாசிப்பதே!

வாசிப்பதால் மனிதன் முழுமையடைகிறான். தன் (சுய) முன்னேற்றப் புத்தகங்களை அதிகமாக வாசித்தவர் பிறரிடம் மதியுரை (ஆலோசனை) கேட்டு அலையமாட்டார். வாழ்வில் மகிழ்வைக் காண நல்ல நூல்கள் (புத்தகங்கள்) துணைக்கு வரும்.

கோவில் இல்லாத ஊரில் இருந்தாலும் நூலகம் (புத்தக ஆலயம்) இல்லாத ஊரில் இருக்கக்கூடாதென அறிஞர் ஒருவர் சொல்லியிருப்பதாக நானும் படித்திருக்கிறேன். அதுவும் கிட்டாதெனின் அவரவர் வீட்டில் சிறிய நூலகம் (புத்தக ஆலயம்) ஆக்குவோம். ஆங்கே அச்சடித்த புத்தகங்களை வேண்டித் திரட்டிப் பேணிப் படித்து அறிஞர்களாவதோடு நெடுநாள் வாழவும் முயற்சி எடுப்போம்.

நூல்கள் (புத்தகங்கள்) - வெறும்
எழுத்துகள் நிறைந்த
தாள்களின் திரட்டு அல்ல - அவை
அறிஞர்களின் அறிவாற்றலை வெளிக்கொணரும்
சுமை தாங்கிகளே!
நல்லதைக் கற்போம் - அதை
நன்றே கற்போம் - அதை
இன்றே கற்போம் - கற்றவை
நன்றே நமக்கு வழிகாட்டும்!

நிறுவனமொன்றில் நேர்காணல் செய்பவர் "என்ன படித்திருக்கிறாய்?" என்று கேட்க "நிறையப் படித்திருக்கிறேன்." என நேர்காணலுக்கு வந்தவரும் சொல்லியிருந்தார். "அப்படியென்ன நிறையப் படித்திருக்கிறாய்" என நேர்காணல் செய்பவர் அடுத்த கேள்வியைப் போட்டார்.

"பத்தாம் அகவையில் (வயதில்) இருந்து பக்கத்து ஊர் மயில்வாகனப் புலவர் வாசிகசாலையில் ஒவ்வொரு நாளும் ஐந்தாறு பத்திரிகைகள் படிப்பேன். ஒரு கிழமைக்கு ஒரு பொத்தகம் என்ற அடிப்படையிலே இரவல் எடுத்துப் படிப்பேன். இப்படி இருபது ஆண்டுகளாகப் படிக்கிறேன்" என நேர்காணலுக்கு வந்தவரும் சொன்னார்.

"அப்படி என்றால் உன்னால் கவிதை எழுத முடியுமா?" என நேர்காணல் செய்பவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"ஓமோம்! மு.மேத்தா அவர்களின் "கண்ணீர்ப் பூக்கள்" நூலைப் படித்துப் புதுக்கவிதையும் வைரமுத்து அவர்களின் "என் பழைய பனை ஓலைகள்" பொத்தகத்தைப் படித்து மரபுக்கவிதையும் எழுதுவேன்" என நேர்காணலுக்கு வந்தவரும் சொன்னார்.

"உள்ளம் (மனம்) அமைதி அடைய எதைப் படிக்கலாம்?" என நேர்காணல் செய்பவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"கவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் அல்லது இயேசு காவியம் படிக்கலாம்." என நேர்காணலுக்கு வந்தவரும் சொன்னார்.

ஈற்றில் "வாசிப்பு ஆற்றல் பரவாயில்லையே! நாளைக்கே வேலை தரலாம்." என நேர்காணல் செய்பவர் உறுதியளித்தார்.

இந்தச் செய்தியை என்னுடைய அம்மாட்டச் சொன்னேன். "வாய் இருந்தால் வங்காளம் போய் வரலாமடா..." என அம்மாவும் சொன்னார். அதைக்கேட்ட அப்பா "வாய் இருந்தாலும் நாலஞ்சு எழுத, வாசிக்கத் தெரிய வேணும்" என்றார்.

உறவுகளே! வாசிப்பு உங்களை உயர்ந்த இடத்துக்கு உயர்த்தினாலும் உளநிறைவோடு நெடுநாள் வாழ உதவுமே!

உறவுகளே! "புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்" என்ற பதிவைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்; பின் வாசிப்பை விரும்பக் (நேசிக்கக்) கற்றுக்கொள்வோம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!