Translate Tamil to any languages.

திங்கள், 3 ஏப்ரல், 2017

என் பதிவுக்குக் கிட்டிய தாக்குரை (Condemn)


முகநூல் (Facebook) பக்கம் எட்டிப் பார்த்ததால் - என்
வலைப்பூப் (Blog) பக்கம் எட்டிப் பார்த்தவரால் - என்  
பதிவுக்குக் கிட்டியதே தாக்குரை (Condemn)! - அதில்
வேண்டிக் கட்டியது நானென்று அறிவீரோ!

இந்தப் பதிவுக்கு முன் முகநூலில் (Facebook) நடந்ததைச் சொல்கிறேன். வழக்கம் போல முகநூல் (Facebook) பக்கம் எட்டிப் பார்த்த வேளை "வடக்கில் ''ஏறாவூர்'' எங்கு உள்ளது?" என்ற பதிவைக் கண்டேன். உண்மையில் ''ஏறாவூர்'' என்ற ஊர் மட்டக்களப்பு நகரிலிருந்து 10km இற்கு அப்பால் இருப்பதை நானறிவேன். ஆயினும் குறித்த பதிவுக்கு

"இடம் பெயர்ந்த மக்கள்
மீளக் குடியமராத இடங்கள்
எல்லாமே - அவர்களுக்கு
ஏறாவூர் தானே!
இவை
வடக்கிலும் கிழக்கிலும் இருக்கே!"

என்றவாறு பதில் கருத்தும் இட்டிருந்தேன். இந்த நிலை தான் இலங்கைத் தமிழர் வாழ்க்கை. இதனைச் சுட்டிக் காட்டவே அப்படி எழுதியிருந்தேன். இதனைப் படித்த ஏறாவூர் படைப்பாளிகள் எவரேனும் என்னைத் தாக்கவில்லை.

ஆயினும், இலங்கைத் தமிழர் வாழ்க்கையை இரண்டு வரிகளில் முடக்காமல் கொஞ்சம் நீட்ட முயன்றேன். விளைவாக "ஈழத் தமிழரின் ஏறாவூர்கள்" என்ற தலைப்பில் (http://www.ypvnpubs.com/2017/03/blog-post_28.html) ஒரு பதிவை எனது வலைப்பூவில் (Blog) இட்டிருந்தேன். மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி அதனைப் படியுங்கள்; அத்துடன் என் பதிவுக்குக் கிட்டிய தாக்குரையையும் (Condemn) படியுங்கள். அதற்கான என் பதிலுரையையும் படியுங்கள். பின்னர் இப்பதிவைத் தொடருங்கள்.

திறனாய்வு (Criticism)/ விமர்சனம் என்றால் பதிவின் நல்லன, கெட்டன சுட்டி பயனுள்ளது, பயனற்றது விளக்கி பதிவரை நோகடிக்காமல் வாசகரை நிறைவடைய வைக்கும் கண்ணோட்டமே! இதனால் பதிவரும் பயன்தரும் பதிவை ஆக்குவார்; வாசகரும் சிறந்த பதிவைத் தேடி நாடுவார்.

தாக்குரை (Condemn)/ கண்டனம் என்றால் பதிவை நன்றாக ஊடுருவி உண்மைக்கு முரணானதை, நம்பிக்கை தராதவற்றை, வாசகரை ஏமாற்றுவதைப் பொறுக்கி எடுத்து இவற்றால் குறித்த பதிவு இலக்கியமாகாது, வரலாற்றை மாற்ற இயலாது, வாசகர் உள்ளத்தை மாற்ற முயலாதீர் என எச்சரிப்பதே! இதனால் பதிவர் தான் சொல்ல வருகின்ற செய்தியை நம்ப வைக்க, அதற்கான உண்மைச் சான்றை முன்வைக்க முடியும்; மக்களை முட்டாளாக்க இயலாது.

ஏன் எழுதுகிறோம்? வாசகரை நிறைவடையச் செய்வதோடு, நாமும் உள்ளத்தில் அமைதி பெறவே! அப்படி எழுதுவதால், எழுதியவை இலக்கியத் தரமாக வேண்டும்; மக்களாய/குமுகாய (சமூக) முன்னேற்றத்திற்கு வழிகாட்ட வேண்டும். அதற்குத் திறனாய்வும் (Criticism) தாக்குரையும் (Condemn) நெறிப்படுத்துகிறது எனலாம்.

இந்த எண்ணங்களை, எந்த உள்ளங்களும் கருத்திற்கொண்டு மாற்றார் பதிவுக்குக் கருத்திட்டால், உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாமே! உங்கள் கருத்துகள் நல்ல பதிவர்களை உருவாக்க உதவுவதோடு, வாசகர்கள் நிறைவடையவும் ஊருலகம் முன்னேறி நன்மையடையவும் ஊக்க மருந்தாக இருக்கட்டுமே!

இனி எனது "ஈழத் தமிழரின் ஏறாவூர்கள்" (http://www.ypvnpubs.com/2017/03/blog-post_28.html) என்ற பதிவுக்குக் கிடைத்த கருத்தை எண்ணிப் பாருங்கள். அதனைத் தாக்குரையாக (Condemn) நான் ஏன் கருத வேண்டும்? சற்று நீங்களும் எண்ணித் தான் பாருங்களேன்.

என்னடா புதுக் கதைகள் விடுகிறீர்கள்??.
சீதை, இராவணன், அனுமார் கதை கேள்விப்பட்டதுண்டோ?.
இது எத்தனை ஆண்டுகளுக்கு முன் நடந்தது?.
இந்த "ஏறாவூர்"க்கு
என்ன அர்த்தம் கொண்டு இதைப் பிரசுரித்துள்ளீர்கள்?.
இந்தச் சுத்தத் தமிழ் ஊர் மட்டு மாநகருக்கு வடக்கே
8 மைல் தொலைவில் இன்றும் உள்ளதே!!.
தயை பண்ணி, யாழ்ப்பாண "அரைவேக்காடுகள்"
எழுதுபாவையெல்லாம் - கணக்கில்
எடுக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நான் தாக்குரையாகக் (Condemn) கருதியதையே மேலே காண்கிறீர்கள்.

இந்துக்கள் வணங்கும் சிவபெருமானின் கணக்கப்பிள்ளை (Accountant) தான் குபேரன். குபேரன் தான் இலங்கையை இராவணனுக்கு அன்பளிப்புச் செய்தவராம். இலங்கை அரசன் இராவணன் ஒரு தமிழன். அயோத்தி அரசன் இராமன் ஓர் ஆரியன். இந்தக் கதை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னயது தான். "முழு இலங்கையும் தமிழருடையதே! சிங்களவர் இலங்கைக்கு வந்தேறு (விஜயன் மற்றும் 600 ஆள்களுடன்) குடிகளே!" என்பதனை வாசகர் மீட்டுப் பார்க்கவே இளையோடி இருந்தேன்.

உண்மையான ஏறாவூரைப் பற்றியறிய விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் வெளியான பதிவின் இணைப்பை https://ta.wikipedia.org/s/ufc வழங்கி இருந்தேன். அதில் ஏறாவூரைப் பற்றிய தகவல் இருக்கிறதே! அதனைப் படித்து வாசகர் எல்லோரும் "ஏறாவூர்"க்கு என்ன அர்த்தம் என்றறிவார்களே!

"1944 இலிருந்து தமிழர் வாழ்விடங்களைச் சிங்களவர் கைப்பற்றியதோடு அவ்விடங்களில் வாழ்ந்த தமிழரை வெட்டிக்கொத்தி வெளியேற்றியுமிருந்தனர். அவ்விடங்களில் இருந்து வெளியேறிய தமிழர், மீளவும் இதுவரை அவ்விடங்களிற்குச் சென்று வாழ முடியவில்லையே! அதனால் அவ்வூர்கள், அங்கு வாழ்ந்த தமிழருக்கு ஏறாவூர்களே! அதாவது, தமிழர் ஏறி இறங்காத ஊர்களை ஏறாவூர்கள் (தமிழர் ஏறாத ஊர்கள்) என விழித்திருந்தேன்." என்பதே "என்னடா புதுக் கதைகள் விடுகிறீர்கள்??." என்பதற்குப் பதில் என்பேன்.

ஈற்றில் "யாழ்ப்பாண 'அரைவேக்காடுகள்' எழுதுபாவையெல்லாம் கணக்கில் எடுக்கவேண்டாம்" என்றிருப்பதே என்னைத் தாக்கிய வரிகளாகும்.
எனது புனைபெயர் யாழ்பாவாணன் என்பதால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரெனக் கருதியிருக்கலாம். 'அரைவேக்காடுகள்' என்றால் அரைகுறையாகப் படித்தவர்கள் எனக் கருதலாம். நான் நுனிப்புல் மேயும் ஆடு, மாடுகளைப் போலக் கொஞ்சம் படித்திருக்கலாம். அப்படியாயின்
"யாழ்பாவாணன் என்ற அரைவேக்காடு
எழுதுபாவையெல்லாம்
கணக்கில் எடுக்கவேண்டாம்"
என்று எழுதியிருந்தால் நான் பணிவோடு ஏற்றிருப்பேன். ஆனால்,
"யாழ்ப்பாண 'அரைவேக்காடுகள்'
எழுதுபாவையெல்லாம்
கணக்கில் எடுக்கவேண்டாம்"
என்று எழுதியிருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதாவது, "யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழுகின்றவர்கள் எல்லோருமே அரைகுறையாகப் படித்தவர்கள்" என்று பொருள்கொள்ளும் படி எழுதியமை தான் என்னைத் தாக்கிய வரிகளாகும்.  உண்மையில் நானொருவன் படிக்காதவன் என்பதற்காக, எனது யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எல்லோருமே படிக்காதவர்கள் என்றாகி விடுமா?

கருத்திடும் போது பதிவு எழுதியவரை (என்னை) எப்படியும் தாக்கலாம். அதற்காக எனது யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எல்லோரையும் தாக்கிவிட முடியாதே! அப்படி 'அரைவேக்காடுகள்' என்று சொல்லுமளவுக்கு நான் என்ன தான் எழுதிவிட்டேன்.
"ஜ.நா. அவையோ (சபையோ)
வெளிநாட்டவரோ (வெள்ளைக்காரரோ)
எப்ப தான்
தமிழர் ஏறாத ஊர்களுக்கு (ஏறாவூர்களுக்கு)
ஏறி இறங்கி வாழ வைப்பார்கள்?" என்று
எழுதியமையால் தான் இந்நிலையோ!

"யாழ்ப்பாண 'அரைவேக்காடுகள்' எழுதுபாவையெல்லாம் கணக்கில் எடுக்கவேண்டாம்" என எழுதிய அறிஞருக்கு நான் வழங்கிய பதிலைக் கீழே படிக்கலாம்.

யாழ்பாவாணன் எழுதிய வரிகளில்
ஐயாவுக்குக் குழப்பம் வந்திருக்குப் போல...
இலங்கை
தமிழரின் நாடென்பதை உறுதிப்படுத்தவே
இராவணன் ஆட்சி செய்த நாடென்றேன்...
ஈரேழு தீவுகளைக் கொண்டதால்
ஈழம் என்றழைத்தார்கள் என்றேன்...
ஏறாவூரைப் பற்றியறிய
இணைப்பும் கொடுத்திருந்தேன் ஐயா!

நான் சொல்ல வந்த செய்தி
1944 ஆம் ஆண்டிலிருந்து
சிங்களவர் பறித்தெடுத்த
தமிழர் ஊர்களில்
இன்றுவரை எந்தத் தமிழரும்
ஏறி இறங்காத ஊர்களாக
எத்தனையோ இருக்கு ஐயா!
அவை தான்
நான் சுட்டிக் காட்டிய
தமிழ் பேசும் (தமிழர்+முஸ்லீம்கள்) மக்கள்
ஏறி இறங்காத ஊர்கள்
ஏறாதவூர்கள் என்று விழித்திருந்தேன்!

உங்களால் இந்தச் செய்தியை
உள்வாங்க முடியாதா ஐயா!
எனது பா நடையில்
நான் சொன்ன செய்தியை
அறிய முடியாத உங்களால்
எப்படி ஐயா!
"தயை பண்ணி,
யாழ்ப்பாண "அரைவேக்காடுகள்"
எழுதுபாவையெல்லாம்
கணக்கில் எடுக்கவேண்டாம்
எனக் கேட்டுக்கொள்கிறேன்." என்று
அடித்துச்சொல்ல முடிந்தது?

இந்தப் பதிவிலும் சரி
எந்தப் பதிவிலும் சரி
யாழ்பாவாணன் ஆகிய நான்
எந்த ஆளையோ எந்த ஊரையோ
இழிவுபடுத்திப் பதிவெழுதி
புகழ் சேர்க்க வேண்டிய
இழிவானவன் அல்லன்...
என் பேரனைப் (அப்பாவின் அப்பா) போல
தமிழில் பண்டிதராகப் படித்திரா விட்டாலும்
நானறிந்த தமிழில் நல்லன பகிரும்
எளிமையான ஒருவனே!

என் நிலை அறியாது
யாழ்ப்பாண "அரைவேக்காடுகள்" என
யாழ்ப்பாண மாவட்ட மக்களை
இழிவுபடுத்துவது அழகல்ல...
என் பெயரறியாத நிலையால்
தாங்கள் குழம்பியிருந்தாலும்
யாழ்பா + வாணன் = யாழ்பாவாணன்
என்றால்
யாழ்பாணத்தில் வாழ்பவன்/வசிப்பவன்
என்றும்
யாழ் + பாவாணன் = யாழ்பாவாணன்
என்றால்
யாழ்பாணத்தில் வாழும் பாவலன்/கவிஞன்
என்றும்
பொருள்படத் தான் பெயரிட்டேன்
அதற்காக
யாழ்ப்பாண "அரைவேக்காடுகள்" என
யாழ்ப்பாண மாவட்ட மக்களை
இழிவுபடுத்துவது அழகல்ல...

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!