Translate Tamil to any languages.

புதன், 26 பிப்ரவரி, 2014

பின்னர் தான் பின் விளைவும்...

நேற்று வந்தது சிறிதான பகையே
பகையே தந்தது பிரிவையும் இழப்பையும்
பகைக்க நேர்ந்தால் சட்டெனச் சீறுவதும்
சீறினால் வெட்டெனப் பிரிதலும் நிகழவே
நிகழ்விலே பிரிதலும் வருமென உணராமல்
பிரிந்தால் வந்திடும் தேவைக்குமே தேடிட
உறவும் இன்றியே இழப்பும் நேர்ந்திட
காலம்போக நினைத்துமே உணர்வீரே!

இயற்கைக் கணக்கு

வையகத்தில் பிறந்ததெல்லாம்
வரவுகளாக
விண்ணகத்தே மண்ணகத்தே சென்றதெல்லாம்
செலவுகளாக
வையகத்தின் எடையை
சமனிலையில் பேணுபவன்  ஆண்டவனே!

தேர்தல் பரப்புரையால் வந்த இழப்பு

நடிகை : இந்தத் தேர்தலில வெற்றி மேல் வெற்றி கிடைக்குமென்ற துணிவில, அந்த நடிகரைப் போட்டுத் தாக்கினீங்களே... இப்ப என்ன ஆச்சு?

நடிகர் : தேர்தலுக்குப் பிறகு எழுபது படத்தில நடிக்க வாய்ப்பில்லாமல்
பண்ணிட்டாங்களே!

நடிகை : உங்கட ஆள்களின்ர தோல்வியால, உமக்கு இதுவும் வேணும்... இனிமேல் என்னைக் காதலிக்கவும் வேணாம்...

நடிகர் : தேர்தலில பரப்புரைக்குப் போய், காதலியையும் நடிப்புத் தொழிலையும் இழந்து நிற்கிறேனே... எல்லாம் அந்த நடிகரைத் திட்டித் தீர்த்ததால தான் பாருங்கோ...

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

எதுகை, மோனை விளையாட்டு


"முந்தி முந்தி முன்னேறிப் பார்" என
எழுதப் போகையில தெரியுது பார்
"முந்தி முந்தி" என்ற சீர்களில்
முதலெழுத்துப் பொருந்தி வருவதே
மோனையாம் என்றெழுதப் பழகு!
"கத்திக் கத்திப் படித்துப் பார்" என
எழுதப் போகையில தெரியுது பார்
"கத்திக் கத்திப்" என்ற சீர்களில்
ஈராமெழுத்துப் பொருந்தி வருவதே
எதுகையாம் என்றெழுதப் பழகு!
"பாலைப் போல வெள்ளை" என
"நூலைப் போல சேலை" என
எழுதப் போகையில தெரியுது பார்
வெள்ளைக்குப் பாலையும் ஒப்பிட்டு
சேலைக்கு நூலையும் ஒப்பிட்டு
அழகு பார்ப்பதே உவமையாம்!
எதுகை, மோனை, உவமை எல்லாம்
புதுக் கவிதை எழுதும் எல்லோரும்
கற்றுக்கொண்டால் வெற்றுக் கவிதை
எழுதும் காலம் இனிக் கிட்டாதே!
மோனைக்கு எடுத்துக்காட்டாக
"நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்." என்ற
வள்ளுவர் ஆக்கிய குறளில்
அடியிரண்டிலும் முதற்சீரைப் பாரும்
'நா' என்ற எழுத்து ஒன்றியிருக்கே!
எதுகைக்கு எடுத்துக்காட்டாக
"பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து." என்ற
வள்ளுவர் ஆக்கிய குறளில்
அடியிரண்டிலும் முதற்சீரைப் பாரும்
'ணி' என்ற எழுத்து ஒன்றியிருக்கே!
உவமைக்கு எடுத்துக்காட்டாக
"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு" என்ற
ஈரடிப் பாவரிகளைப் படித்தால் புரியும்
"மணற்கேணியானது
எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும்.
அதே போல மனிதர்
எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ
அவ்வளவுக்கவ்வளவு
அவர்களது அறிவு பெருகும்." என்றொரு
உவமை விளக்கத்தையும் புரிந்திடுவீரென
தளமொன்றில் பொறுக்கித் தந்தேனே!
(சான்று: http://ta.wikipedia.org/s/9or)
உவமை என்று புளிக்கும் கல்வியை
நான் பொறுக்கிச் சொல்வதை விட
"தேசிப் பழத்தழகி
தேங்காய் முலையழகி
பாசிப் பழத்தழகி
பக்கத்தில் நான் வந்திடுவேன்." என்ற
நாடறிந்த நாட்டார் பாவரிகளைப் படி
உவமையறி பாபுனையப் புறப்படு!
உவமையறிந்தால் பாபுனையப் போதுமா?
கொஞ்சம் எதுகை, மோனையோடு விளையாடு
கொஞ்சம் எதுகை, மோனையைப் படிக்க
"ஒரே எழுத்து
ஒன்றுக்கு ஒன்று ஒத்து வரலாம்
ஒரே இன எழுத்துக்கள்
ஒன்றுக்கு ஒன்று ஒத்து வரலாம்" என்பது
அடிப்படை எண்ணக்கரு என்பேன்!
எதுகை, மோனையோடு விளையாடத் தேவை
எழுத்துகள் பற்றிய தெளிவே - அவை
"அ, ஆ, இ, ஔ என்பனவும்
இ, ஈ, எ, ஏ, யா என்பனவும்
உ, ஊ, ஒ, ஓ என்பனவும்
உயிர்களில் இன எழுத்துகளாம்
ஞ், ந் என்பனவும்
ம், வ் என்பனவும்
த், ச் என்பனவும்
மெய்களில் இன எழுத்துகளாம்" என
வலைத் தளமொன்றில் படித்தேன்!
பாபுனைய விரும்புவோர் எல்லோரும்
எழுத்தறிந்து இடமறிந்து சீரமைத்து
எதுகை, மோனை, அடி, தொடையாக்கி
பாபுனையச் சிறு குறிப்பைத் தந்தேன்
தமிழை வாழ்த்திப் பாபுனையுங்களேன்!

வியாழன், 20 பிப்ரவரி, 2014

மோதலிலே சாகையிலே...


சாலையிலே போகையிலே
ஓடுற ஊர்தியை ஓட்டுவோர்
கரையிலே நடைபோடும் நடப்போரை
எதிரிலே நெருங்கும் ஊர்தியை
பாராமலே ஓட்டினால் மோதவரும்
மோதினாலே சாவுவரும்
காவற்றுறை கையில் காசை வழங்கி
ஓட்டுநர் ஓடிட
நம்மவர் சாவீடு முடிய
கடவுளே!
அரசுமே இழப்பீடு வழங்கினும்
உயிரை மீட்டுத் தருவீரா!

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

புலவர் கவிதைகள்: மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது மனமென்னும் நிலத்திலே போட்ட விதை!

புலவர் கவிதைகள்: மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது மனமென்னும் நிலத்திலே போட்ட விதை!

சனி, 15 பிப்ரவரி, 2014

ஏன்டா தேர்வில தோல்வி?

காதலி : ஏன்டா தேர்வில தோல்வி?

காதலன் : மடிக்கணினியைப் பாவித்துப் படித்தேன். அதனாலே, படித்ததெல்லாம் கணினி நினைவகத்திலே... தேர்வு எழுதேக்க என்ர மூளையாலே வெளிவரேல்ல... அதனாலே தான் தோல்வி.

காதலி : கண்டறியாத மடிக்கணினியும் நீயும்...

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

வலன்டைன் (காதலர்) நாள்


சுவாமி வலன்டைன் அவர்களே!
ஆமாம்
கத்தோலிக்க மதகுருவே
போரில் பங்கெடுத்துச் சாவதைத் தடுக்க
இளசுகளை இணைத்து
மணமுடித்து வைத்ததால் சிறை சென்றீர்...
நீர்
சாவைத் தழுவிய நாளை
காதலர் நாள் என்றால்
எல்லோரும் ஏற்கலாம் தான்
ஆனால்
காதலர் நாள் என்று சொல்லி
வலன்டைன் குடிதண்ணி (விஸ்கி) குடிப்பதை
என்னால்
ஏற்க முடியவில்லையே!
காதலர் நாளில்
அடுக்கு ரோசாப் பூவை வழங்கி
காதலை வெளிப்படுத்துவதை
வரவேற்கிறேன் வலன்டைன் சுவாமி
ஆனால்
ஆண்டுக்கொரு ஆளிடம் அப்படிச் செய்வதை
ஏற்க முடியவில்லையே!
போன காதலர் நாளில்
காதலை வெளிப்படுத்திய பின்
இந்தக் காதலர் நாளில்
வரவேற்பு அட்டை நீட்டி
பெற்றோர் பேசி வைத்தவரோடு
மணநாள் என்றொரு குண்டைப் போட்டு
சாகடிப்பதைத் தானே
ஏற்க முடியவில்லையே வலன்டைன் சுவாமி!

கண்டதே காதல் கொண்டதே கோலம் – 2

அழகுப் பெண்களைக் கண்டால்
ஆண்களின் உள்ளங்களில்
கொஞ்சம் தள்ளாட்டம் தான்...
சும்மா சொல்லக் கூடாது
கொஞ்சம் வெறிதான்...
கண்கள் ஊடாகப் புகுந்த அழகு
நரம்புகள் ஊடாக மூளைக்குப் போய்
காதற் கோலம் போடத் தூண்டும்...
தூண்டற் பேறாக
ஆண்களும் காதலில் குதிப்பார்கள்...
குதித்தவர்கள் சிலரைக் கேட்டேன்
"சில நாட்கள் கழிந்து போக
காதலே முறிந்து போயிற்றாம்..." என்றார்கள்...
"அவளோ மாற்றான் மனைவி" என்றான் ஒருவன்...
"அவளுக்கு வெளிநாட்டில கணவன்" என்றான் ஒருவன்...
"என் கையில பணமில்லை என்றதும்
அவள் காலை வாரிவிட்டாள்" என்றான் ஒருவன்...
"அவளுக்கு நல்ல மணமகனைப் பெற்றோர்கள்
பார்த்திருக்கிறார்களாம்" என்றான் ஒருவன்...
இன்னும் பலரைக் கேட்டிருந்தால்
இன்னும் எத்தனையோ சொல்லியிருப்பார்கள்...
உண்மையாகவே
கண்டதே காதல் கொண்டதே கோலம்
நல்லாய் இல்லைப் பாருங்கோ!

கண்டதே காதல் கொண்டதே கோலம் – 1

கைகனக்க ஆள் சிவலையாய் இருந்தால்
சுத்தி வளைக்காமல் சொல்லுறேனே
பணக்கார அழகானவர் என்றால்
பெண்களின் உள்ளங்களில்
கொஞ்சம் துள்ளல் தான்...
ஆட்களைச் சும்மா இருக்க விடாது
கண்கள் ஊடாகப் புகுந்தவர்
நரம்புகள் ஊடாக மூளைக்குப் போய்
காதற் கோலம் போடத் தூண்டும்...
தூண்டற் பேறாக
பெண்களும் காதல் வானில் பறப்பார்கள்...
பறந்தவர்கள் சிலரைக் கேட்டேன்
"சில நாட்கள் கழிந்து போக
காதலே முறிந்து போயிற்றாம்..." என்றார்கள்...
"அவனோ மணமுறிவு பெற்றவராம்" என்றாள் ஒருத்தி...
"வேறு காதலிகளும்
அவனுக்கு இருக்காம்" என்றாள் ஒருத்தி...
"அவன் மனைவியின் பெயரே
காதல்ராணியாம்" என்றாள் ஒருத்தி...
"எல்லா நகைகளும் விற்று முடிய
நானோ பிச்சைக்காரியாக
அவனைக் காணவில்லை" என்றாள் ஒருத்தி...
"என் வயிற்றில சுமையைத் தந்துவிட்டு
அவனோ ஓடி மறைந்து விட்டான்" என்றாள் ஒருத்தி...
இன்னும் பலரைக் கேட்டிருந்தால்
இன்னும் எத்தனையோ சொல்லியிருப்பார்கள்...
உண்மையாகவே
கண்டதே காதல் கொண்டதே கோலம்
நல்லாய் இல்லைப் பாருங்கோ!

எப்படித் தலைவராவது?

நானே அமைப்பு ஒன்றை வைச்சு
எனது அமைப்புக்கு ஒரு கொடியும் அமைச்சு
நானே தலைவனாக நினைப்பது
தலைமைத்துவம் அல்ல...
தெருவிற்கு இறங்கி வந்து
மக்களுக்கு வேண்டியதைச் செய்ய
நானே முன்னிற்பது தான்
தலைமைத்துவம்!
தமிழரெல்லோரும் தலைவராகலாம்
ஆனால்,
"தலைமைத்துவம்" என்றால்
என்னவென்று தெரியாதவர்கள்
எப்படித் தலைவராவது?

தேர்வில் சித்தியடைய...

ஆசிரியர் : நான் படிப்பித்தது ஒன்றும் தேர்வுத்தாளில வராமல் எப்படித் தேர்வில் சித்தியடைந்தாய்?

மாணவர் : நீங்க படிப்பித்தால் தானே தேர்வுத்தாளில் வர... முத்தன் கடையிலே முதல் நாளே விடைத்தாளை வேண்டிப் படித்ததாலே...

தமிழா! தமிழா!

ஆளுக்காள் அமைப்பு வைச்சு
அமைப்புக்கு ஒரு தலைவன் ஆக்கி
ஆளுக்கொரு கொடி தூக்கி
இப்படித் தமிழருக்குள்ளே
ஆளுக்காள் தலையை நிமிர்த்தினால்
தமிழினம் எப்படி வாழும்?
இன்றுவரை
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில்
அனைவரும் தாழ்வு" என்பதை
தமிழர் உணரவில்லைப் போலும்!

மாட்டிவிட்டார்

ஒருவர் : அந்தாளைப் போட்டடிக்கிறாங்களே... சுத்தி வளைத்து நிற்கிறவங்க உதவலாமே...

மற்றவர் : சுத்தி வளைத்து நிற்கிறவங்களைப் பொய் கூறி மாட்ட நினைத்தார்... கடைசியில் தானே மாட்டிக்கிட்டார்...

பொத்தகமும் கடையும்

வாசிப்பவர் நாடுவாரின்றிப் பாரும்
பொத்தகக் கடைககளில் தூக்கில் தொங்குகிறது
"அருமையான பொத்தகங்கள்!"

வேண்டுவோர் நாடுவாரின்றிப் பாரும்
பொத்தகங்களோ தூசிச்சேலை உடுத்திருக்கிறதே
"பொத்தகக் கடைகளில்..."

தேவை


பருவம் தப்பிய மழை
உருவம் இன்றிய உண்மை
தண்ணீரின் அருமை புரிந்திட
கண்ணீரின் வலிமை கூறுமே
"தேவை தண்ணீர்ச் சேமிப்பு!"

ஏழைகளுக்காக...

1.
நான்
நாட்டுத் தலைவரானால்
(பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ)
ஏழைகள் இல்லா
நாட்டை ஆக்குவேனே!
ஆனால்,
வாக்குப் போடவேனும்
நான்
நாலாளுகளை அணைக்க மறந்திட்டேனே!

2.
நல்வருவாய் தரும் தொழிலில்
நானிருந்தால் பாரும்
ஏழைகளுக்கு வாழ்வளிப்பேனே!
ஆனால்,
பிச்சை எடுக்கும் என் நிலை
எப்ப தான் மாறுமோ
எனக்கும் புரியுதில்லையே!

சனி, 8 பிப்ரவரி, 2014

வாடகைக் கொள்வனவு (Leasing)

மூண்டு சில்லு (Auto) வண்டியெடுத்து
ஊருக்குள்ள உழைக்கலாமென
வாடகைக் கொள்வனவுக்கு (Leasing) வாங்கிய
நம்மாளு
உழைப்பேதும் கைக்கெட்டாமல்
நாலஞ்சு கட்டுப்பணம் செலுத்தாமல்
கடைசியிலே
நடுத்தெருவிலே
மூண்டு சில்லு (Auto) வண்டியை
பறிகொடுத்து (வழங்கிய நிறுவனம் பறிக்க)
ஊரோரமாய் ஒதுங்கி நின்று
இழப்புகளைக் கணக்கெடுக்க வேண்டியதாயிற்றே!
வண்டியைப் பறிகொடுத்த
நம்மாளு
வணிகருக்குத் (Business ஆளுக்குத்) தான்
வாடகைக் கொள்வனவு (Leasing)
பொருந்துமே தவிர
தனியாளுக்குச் சரிப்பட்டு வராதென
எண்ணி என்ன நன்மை!
எங்கேயாவது வேலை செய்து
கைக்கெட்டியதைக் கையாளப் பழகி
கிடைக்கின்ற வருவாயை வைத்து
வாழ முயன்றவன் வென்றிட
ஆழமறியாமல் காலை வைத்தவன்
கண்டதெல்லாம் தோல்வியே!


பதிவர்களுக்கான செய்தி : http://wp.me/pTOfc-9c என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்.

அரங்கும் ஆட்டமும்

வீசுற காற்றில் பட்டெனப் பறக்கிற
ஆடைகளே அணிந்த
அழகுப் பெண்ணாட
இளைய ஆண்கள் நோக்க
அரங்கு முட்டியே வழிய
பொழுதும் போக்கிடப் பணமுமே கரையுதே!

பணமுமே கரைந்தால் ஆட்களே தேடுவர்
கரைகிற பொழுதில்
குணமுமே மாறுவதால்
ஆளுக்கு ஆள்தான் முட்டிட
ஆங்கே முட்டியோர் மோத
அரங்கு சட்டெனக் குழம்பிடக் கலைந்ததே!

கலைந்தே சென்றவர் செயலைப் பார்த்தால்
அப்பன் ஆத்தாளே
எப்பனும் அறியாமல்
உணர்ச்சிகள் முறுக்கேற இளசுகள்
தெருவெளித் தவறு செய்திட
நாட்டவர் நடத்தை கெட்டுப் போச்சுதே!


பதிவர்களுக்கான செய்தி : http://wp.me/pTOfc-9c என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்.

என்னை உரிந்து காட்டியும்...


ஒவ்வொரு ஆளுக்கும்
ஒவ்வொரு குறையிருக்கும்
ஒவ்வொரு ஆளும்
எந்தவொரு தவறையும் செய்திருக்கலாம்
என் குறையையும் என் தவறையும்
பொறுக்கித் தொகுத்து
பரப்புகிற எதிரிக்குத் தெரியாதா
இந்த உண்மை!

என்னை உரிந்து காட்டியும்
பார்த்தவர்கள் உணருவது
என்னுடல்
ஆண்டவன் படைப்பென்றும்
அறியாமல் தெரியாமல்
நான் விட்ட தவறுக்கு
ஆண்டவன் மன்னிக்கையில்
எதிரியால் மன்னிக்க முடியாதா!

நானொரு கெட்டவனென்று
ஒதுக்கியோரை ஒதுக்கியும்
நானொரு முட்டாளென்று
முரண்பட்டோரைப் பொருட்படுத்தாமலும்
நானொரு ஊனமென்று
கழித்துவிட்டோரைக் கழித்தும்
நானொரு அறிவிலியென்று
என் சொற் கேளாதோரை விட்டு நீங்கியும்
தன் நம்பிக்கையோடு வாழ்ந்தபடியால்
காலம் - இன்று
எனக்குச் சான்று கூறுகிறதே!

என்னை உரிந்து காட்டியும்
எனது உண்மையைத் தான்
பார்க்கலாம் என்பது
காலத்தின் சான்றென்றால்
நண்பா
என் நிலைமை 
உனக்கு வந்தாலும் சோர்ந்து விடாதே
மக்கள் எப்போதும்
எங்கள்
நல்ல பக்கத்தையே பார்ப்பதால்
கெட்டவர்களென எம்மை
எவரும் அழகுபடுத்தினாலும்
எமக்குத் தீங்கில்லைப் பாரும்!


பதிவர்களுக்கான செய்தி : http://wp.me/pTOfc-9c என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்.

அடகு நகை (Pawning)

விருப்பங்களை
மட்டுப்படுத்த முடியாமல்
விரும்பிய ஒன்றை அடைய
நிரந்தரமற்ற வருவாயை நம்பி
வைப்பகத்தில் (வங்கியில்)
நகையை (Pawning) அடகு வைத்து
அடைந்து விடலாம் தானே!
என் மனையாளும்
வைப்பகத்தில் (வங்கியில்)
நகையை (Pawning) அடகு வைத்து
விரும்பிய ஒன்றை அடைந்த பின்
காலம் கரைந்தோடிய பின்
வைப்பகத்திற்கு (வங்கிக்கு)
பெற்ற தொகையை
மீளளிக்க முடியாமல் போகவே
நகையையும் இழக்க வேண்டியதாயிற்றே!
என்னங்க...
நீங்க தலையைப் பிய்க்கிறீங்க...
அடகு, வட்டி, கடன், சீட்டு யாவும்
எம்மை விழுங்கிப்போடுமங்கோ...
நடந்தது நடந்து போச்சு
இனியாவது
நல்லதைப் பண்ணுங்கோவேன்!


பதிவர்களுக்கான செய்தி : http://wp.me/pTOfc-9c என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

எழுத்தாளர்களே! ஒன்றுகூடுங்களேன்!

என் உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே!

நாம் வலைப்பூக்கள், வலைத்தளங்கள் போன்ற மின் ஊடகங்களில் தமிழைப் பரப்புவோர், இலக்கியங்களை வெளியிடுவோர் தள முகவரிகளைத் திரட்டி http://thamizha.2ya.com/ தளத்தில் களஞ்சியப்படுத்துகிறோம்.

இச்செயலால் பல அறிஞர்களை, பல வலைப்பூக்களை, பல வலைத்தளங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் பலரது பல கோணத் தமிழ் ஆய்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, இச்செயற் திட்டத்தின் மூலமாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழி பிறக்கும் என நம்புகிறோம்.

நீங்களும் உங்கள் வலைப்பூ, வலைத்தள முகவரிகளை எமது http://thamizha.2ya.com/ தளத்தில் இணைத்து உலகெங்கும் உங்கள் அறிவைப் பரப்ப முன்வாருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

பாவலர்களே! பாடலாசிரியர்களே!


என் உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே!

நாம் வலைப்பூக்கள், வலைத்தளங்கள் போன்ற மின் ஊடகங்களில் தமிழைப் பரப்புவோர், இலக்கியங்களை வெளியிடுவோர் தள முகவரிகளைத் திரட்டி http://thamizha.2ya.com/ தளத்தில் களஞ்சியப்படுத்துகிறோம்.

இச்செயலால் பல அறிஞர்களை, பல வலைப்பூக்களை, பல வலைத்தளங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் பலரது பல கோணத் தமிழ் ஆய்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, இச்செயற் திட்டத்தின் மூலமாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழி பிறக்கும் என நம்புகிறோம்.

நீங்களும் உங்கள் வலைப்பூ, வலைத்தள முகவரிகளை எமது http://thamizha.2ya.com/ தளத்தில் இணைத்து உலகெங்கும் உங்கள் அறிவைப் பரப்ப முன்வாருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்