Translate Tamil to any languages.

வியாழன், 8 மார்ச், 2018

இலங்கையில் இணையத் தளங்கள் முடங்கின



உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய செயலாகத் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு எழுச்சி இடம்பெறுகிறது. அவ்வெழுச்சி வெற்றிபெற இணையத் தளங்கள் முக்கிய பங்காற்றின. அதாவது மக்களாய (சமூக) வலைத் தளங்கள் ஊடாக ஜல்லிக்கட்டு எழுச்சியை மேற்கொள்ள முடிந்திருக்கிறது. இதனடிப்படையில் தான் இலங்கையில் மக்களாய (சமூக) வலைத் தளங்களை முடக்கி உள்ளனர்.

1944 இல் 'பட்டிப்பளை' என்ற ஊரிலுள்ள தமிழர்களை வெளியேற்றிய பின், அங்கே சிங்கள மக்களைக் குடியேற்றிய அரசு அவ்விடத்தை 'கல்லோயா' எனப் பெயர் மாற்றியது. இவ்வாறு தான் இலங்கையில் பேரினவாதிகளால் சிறுபான்மை இனத்தவர்கள் இன்றுவரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 2018 மார்ச்சு தொடக்கத்தில் முஸ்லீம் - சிங்கள மக்களிடையே மோதல்கள் இடம்பெறுகின்றன. இதனை வலுவடைய இடமளிக்காமல் மக்களாய (சமூக) வலைத் தளங்களை முடக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான இனமோதல்களைத் தடுக்க ஒரே வழி; பல இனங்களை, பல மதங்களை சமனாகப் பேணுவதேயாகும். இதற்கு எதிராகப் பௌத்த சிங்கள நாடென இலங்கை அரசு செயற்படுவதால் மென்மேலும் இனமோதல்கள் தோன்ற இடமுண்டு. எனவே, இலங்கை அரசு தனது செயற்பாட்டை மாற்றி எல்லா இனங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் சம உரிமை உண்டெனப் பேணினால் இலங்கையில் அமைதி ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வலு (சக்தி) மக்களாய (சமூக) வலைத் தளங்களுக்கு இருக்கிறது என்பதை இலங்கையில் இத்தளங்களுக்கான தடை உணர்த்தி நிற்கிறது. ஏற்கனவே, தமிழ்நாட்டில் 'சவுக்கு' என்ற வலைப்பூ (Blog) இற்கு சென்னை உயர் நீதிமன்று தடை ஏற்படுத்திமை வலைப்பதிவர்கள் யாவரும் அறிந்ததே!

தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும் நற்றமிழை உலகெங்கும் பரப்பிப் பேண நன்றே வலைப்பூக்கள் (Blogs) உடன் மக்களாய (சமூக) வலைத் தளங்களைப் பயன்படுத்தி வெற்றி காணலாம். மோதல்களைத் தூண்டாமல் அமைதியை ஏற்படுத்த நாட்டு மக்களுக்கு உண்மையை விளக்கலாம். மக்களுக்கு அறிவூட்டலாம்; தமது ஆற்றல்களை அரங்கேற்றலாம்.

அச்சு ஊடகங்களை (நாளேடுகள், ஏனைய ஏடுகள்) விட, மின்னூடகங்களை (வானொலி, தொலைக்காட்சி) விட வலை ஊடகங்கள் (வலைத் தள வெளியீடுகள்) வலுவானது என்பதை இப்பதிவினூடாக உணர்த்த முயன்றிருக்கிறேன். தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும் இந்த உண்மையை ஏற்று உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண முன்வாருங்கள்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!