எனது
தாய் மண்ணில், நான் பிறந்த ஊரில் பிறந்த தம்பி அஸ்வின் சுதர்சனை நான் நேரில்
கண்டதுமில்லை; கதைத்ததுமில்லை. நம்நாட்டு இடப்பெயர்வுகள் தான் காரணம். இருந்தும்
ஊடகவியலாளன், சித்திரக் கலைஞன் (காட்டூனிஸ்ட்), குறும்திரைப்பட இயக்குனர் எனப்
பலதுறை ஆற்றலாளனாக எனது ஊருக்கும் எனது நாட்டிற்கும் உலகத் தமிழருக்கும்
மின்னினார். ஆண்டவன் இளம் அகவையிலேயே அவரை அழைத்துவிட்டான். அவரது இழப்பை ஈடு
செய்ய இயலாது. எனினும் அவரது வெளியீடுகளில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்நோக்கத்தைக்
கருத்திற் கொண்டு, அவரது சில பதிவுகளைத் தொகுத்து மின்நூலாக்கி உள்ளேன்.
மாதகல்வாசி
அறிஞர் அஸ்வின் தனது நேர்காணல் ஒன்றில் ஈழத்து மூத்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர
திருச்செந்திநாதன் அவர்களே தனது வழிகாட்டி என்று தெரிவித்திருந்தார். அவரது
ஊக்கப்படுத்தலே தனது வளர்ச்சிக்கு உந்துசக்தி என்றும் தெரிவித்திருந்தார். எனது
இலக்கிய முயற்சிகளின் வழிகாட்டியும் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களே!
புதுக்குடியிருப்பில் இருந்த வேளை மாதகல்வாசி அறிஞர் அஸ்வின் இணுவையூர் சிதம்பர
திருச்செந்திநாதன் அவர்களோடு ஈழநாடு பத்திரிகை ஊடாக முதன் முதலில் அடையாளம்
காட்டிவிட்டார். பின் ஈழத்து முன்னணி நாளேடுகளில் முத்திரை பதித்துள்ளார்.
இலங்கை
ஊடகங்களில் பணியாற்றுவதென்பது கத்தியின் கூர் விளிம்பில் நடப்பது போலத் தான்
இருக்கும். இங்கே கருத்துகளைக் கவனமாகக் கையாளத் தெரிந்தாலும் ஊடகக்காரனுக்குத்
தற்காப்புத் வேவைப்படுகிறது. இந்நிலை அறிந்தும் தம்பி மாதகல்வாசி அஸ்வின் சுதர்சன்
துணிச்சலுடன் ஊடகங்களில் பணியாற்றி வெற்றி பெற்றவர் என்பதால் அவரது பதிவுகளை
உலகெங்கும் வாழும் தமிழர் அறியும் வண்ணம் அவரது நினைவாக இம்மின்நூலை வெளியிட்டுத்
தங்களுடன் பகிருகிறேன்.
இம்மின்நூலைப் பதிவிறக்க கீழ்வரும் இணைப்பையும் பயன்படுத்தலாம்.
https://app.box.com/embed/preview/jo8nbovx6xlrm449l6lo6zfel0hj3et6
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!