Translate Tamil to any languages.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் உருவாக இடமிருக்கே!

யாழ்பாவாணன் ஆகிய நான், இணைய வழியில் நல்வாய்ப்பு (அதிஸ்டம்) கிடைத்தாக வந்த மின்னஞ்சல் கதையைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் பகிர்ந்தேன். அவ்வேளை "உங்களை அறியாத ஒருவர் உங்கள் தன் (சுய) விரிப்பைக் கேட்கிறார் என்றால், அவரை எப்படி நம்புவீர்? எனவே, தன் (சுய) விரிப்பைக் கேட்டால் அனுப்ப வேண்டாம்." என அத்தள நிறுவுனர் வினோத் (கன்னியாகுமாரி) அவர்கள் எனக்கு மதியுரை கூறியிருந்தார்.

அண்மையில் ஒருவர் இதே கதையை எனக்குக் கூறிய போது, நானும் இதே பதிலைத் தெரிவித்திருந்தேன். ஆனால், அவரோ இதனைத் தளத்தில் பகிர்ந்து உதவினால் பலரும் நன்மை அடைவரென வழிகாட்டி இருந்தார். அதனைக் கருத்திற் கொண்டு இப்பதிவை உங்களுடன் பகிருகிறேன்.

"Spam, Junk மின்னஞ்சல் என்றால் நம்பக்கூடியதல்ல..." என நம்பி Inbox இற்கு வரும் மின்னஞ்சல்களை நம்புவதும் முட்டாள் செயலே! அப்படியான முட்டாளாக நானும் இருந்துள்ளேன். எனது Inbox இல் வந்த மின்னஞ்சல் ஒன்றில் Microsoft Lottery Winner Award என்றிருந்தது. பரிசு எவ்வளவு தெரியுமா? 8600000000 பிரிட்டிஸ் பவுண்ஸ் என்றிருந்தது. என்னுடைய பெண்டாட்டிக்கும் தெரியாமல் எனது Inbox இல் வந்த மின்னஞ்சலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விரிப்பைச் சரியாக அனுப்பியும் இருந்தேன்.

இரண்டு ஏழலில் (வாரத்தில்) மடல் (கடிதம்) ஒன்று வந்தது. தங்களுக்குக் கிடைத்த Microsoft Lottery பரிசைத் தாங்கள் பெறுவதற்கு கூரியர் செலவாக 2000 பிரிட்டிஸ் பவுண்ஸ் (இலங்கைப் பணமாக 360000 உரூபா) அனுப்புமாறு கேட்கப்பட்டிருந்தது. பெண்டாட்டிக்கு நடந்ததைச் சொல்ல, அவளோ கன்னத்தில் அடிக்க வந்திட்டாள். "எவராவது ஏமாற்றுவாங்க... இருக்கிறதையும் இழந்து பிச்சை எடுக்கப் போறியா?..." என்று திட்டித் தீர்த்தாள்.

எங்கட உள்ளம் (மனம்) எப்போதும் உள (மன) நிறைவு அடைவதில்லை. அதற்கு நானும் புறம்போக்கல்ல! Microsoft Lottery பற்றி இலங்கைக்கான Microsoft Corporation கிளையில் நான் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டேன். "Microsoft Lottery என்பதெல்லாம் பொய்! நாம் அப்படி எதுவும் நடாத்துவதில்லை. போலி மின்னஞ்சல்களை நம்பி ஏமாறாதீர்கள். இப்படி அவர்கள் பணம் வசூலித்ததும் தங்களுடனான தொடர்பை முறித்துவிடுவார்கள்." என எனக்கு மதியுரை கூறினார்கள்.

அதன் பின்னர் தான், Inbox இற்கு வரும் மின்னஞ்சல்களில் போலி மின்னஞ்சல்கள் வரலாம் என நம்பினேன். போலி மின்னஞ்சல்களை வழங்கும் நிறுவனங்களும் இருப்பதாக உறுதிப்படுத்தினேன். எடுத்துக்காட்டுக்கு இரு முகவரியைத் தருகின்றேன்.


இனிய உறவுகளே! இவ்வாறு பல சாட்டுகளைக் கூறிப் பல வழிகளில் பணம் பறிக்க முயலலாம். தங்கள் தன் (சுய) விபரங்களை கேட்கும் எந்த மின்னஞ்சல்களுக்கும் பதில் வழங்கி ஏமாற வேண்டாம். சில மாதிரிப் படிவங்களை (Form) இங்கே இணைக்கின்றேன். இனியாவது இணைய வழியில் ஏமாற வேண்டாம். இணையத்தில் பெரும்பாலானோர் போலித் தகவலை வழங்கிப் பேணுகின்றனர். அதனால் தான், முகநூல் காதல் தோல்வியும் தற்கொலையும் தொடருகின்றன. போலி இணைய உறவுகளை நம்பி ஏமாறாதீர்கள். "ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் உருவாக இடமிருக்கே!" என்பதை மறவாதீர்கள்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!