Translate Tamil to any languages.

வெள்ளி, 25 செப்டம்பர், 2026

வாழ்வா சாவா


சமகாலத்தில் சாவு அதிகரித்து விட்டது.
வாழ்வைப் பற்றிச் சிந்திக்க மறந்து
சாவை நாடிச் செல்வது மனிதரா
மனிதரின் வாழ்வைப் பறிப்பது சாவா
கண்டு பிடிக்க முடியவில்லையே!
(வசன/வரிக் கவிதை)

சாவை விரட்டுவதும் கூட
வாழ்வதற்கான போராட்டம் தான்!
வாழ்க்கையே போராட்டம் என்று
சாவை நாடுவதும் கூட
தவறான கண்ணோட்டம் தான்!
(புதுக் கவிதை)

சாவைத் தான் நீதழுவப் போனாயா
சாவேதான் உன்னையே நாடியதா
எண்ணிப் பாருன் வாழ்வைத் தானே!
(நேரிசை ஆசிரியப்பா)

மனிதரா சாவைத்தான் தேடியே செல்கிறார்
சாவு மனிரையே நாடி வருகிறதா
யாருக்குத் தான்தெரியும் சொல்லு.
(பல விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வாழ்வை உதறியே சாவையே நாடுவதா
வாழ்ந்துதான் பாருங்கள் நன்று.
(ஒரு விகற்பக் குறள் வெண்பா)

ஆக்கம்: யாழ்ப்பாவாணன் (மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

திங்கள், 21 செப்டம்பர், 2026

முயற்சி செய்து பார்க்கலாம்

 

என்னையும்
கவிதை எழுத வைக்க
பலர் தூண்டி இருந்தனர்!
ஒழுங்காகக் கையெழுத்துப் போடத் தெரியாது
எனக்கு எப்படி எழுத முடியும் என்றேன்!
பத்திரிகையை வாசித்துப் பார்
மூ.மேத்தாவின் புத்தகத்தை வாசித்துப் பார்
யாருடைய கிறுக்கலையாவது  வாசித்துப் பார்
அதேபோல - நீயும்
எழுத முயற்சி எடுத்துப் பார் என்று ஆளுக்காள் அறிவுரை சொன்னார்கள்!

"உனக்கு நீயே கடவுள்
உனக்கு நீயே பிரம்மா
உனக்கு நீயே நீதிபதி
உனக்கு நீயே முதலாளி
உனக்கு நீயே தொழிலாளி
உனக்கு நீயே எல்லாமும் தான் 
அப்படி இருக்கையில்
எப்படியாவது எல்லாவற்றுக்கும்
உன் முடிவே செல்லுபடி ஆகும்!"
என்றெழுதிச் சிலரிடம் காட்டினேன்!

"நாலு பேரை விசாரித்து
மூன்று பேர் சொன்னதையாவது
முடிவாகக் கொள்ளலாமே!
மாற்றார் முடிவுகள் எப்படி இருக்குமென
பொருட்படுத்தாமல் முடிவு எடுப்பது
முற்றிலும் தவறல்லவா!" என்று
வாசித்தவர் பலர் - ஆளுக்கொரு
எதிர்க்கருத்தை முன்வைத்தனர்!

"எவரும் எதையும் எப்படியும்
எழுதிவிடலாம் - ஆனால்
வாசிப்பவர் விருப்பந்து எழுதினால் மட்டுமே
எழுத்துக்குப் பெறுமதி கிட்டும்!" என்று
தோழி ஒருத்தி
எனக்கு ஊக்கம் தந்தாள்!

"உள்ளம் நிறையக் கிடக்கின்ற
எதனையும் வெளியில் கொட்டி விட்டாள்
உள்ளத்தில் அமைதி கிட்டும் - அதற்கு
எழுத்து நல்ல ஊடகம் ஆகும்!" என்று
தோழர் ஒருவர் - எழுத்தையும்
மருந்தாகப் பாவிக்கலாம் எனத் தூண்டினார்!

பயனுள்ள பொழுதுபோக்காக
விரும்பியதை வாசி/எழுது என்று
எனக்குப் படிப்பித்த ஆசிரியர்மார்
அடிக்கடி நினைவூட்டி இருந்தனர்!
நானும்
நேரம் கிடைக்கின்ற போது
பயனுள்ளதாகப் பொழுதைப்  போக்க
எழுதிக் கொண்டே இருக்கிறேன்!
எப்பன் எப்பனாக - என்
எண்ணங்களை எழுதிக் கொண்டிருப்பதும்
உள/மன நிறைவு தரும் முயற்சியே!

ஆக்கம்: யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)