கள்ளமில்லாமல் பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன்.
நான் எழுதுவது எல்லாம் எழுத்தானாலும்
கவிதையெனச் சொல்வதற்கில்லை என்பேன்!
புதுப்பாவலர் மூ.மேத்தாவின் புதுப்பா போல
கிறுக்கிப் பார்க்க முனைந்தாலும் கூட
பாவரசர் கண்ணதாசனைப் போலத் தான்
நானும் மின்ன வேணுமென எண்ணியே
எதுகை, மோனை
இருந்தாலும் கூட
*கோட்பாட்டை நுழைத்து விளக்கப்
போய்
என்னெழுத்தில் கவித்துவம் இழந்திருக்க
நான் எழுதியது கவிதை இல்லையே!
மேற்கோள் குறியீட்டிற்கு உள்ளே தான்
திருக்குறளையும் ஆத்திசூடியையும் தான்
நுழைத்து வைத்து அழகு பார்த்து
அறிவுரை கூறிட எழுதினாலும் கூட
அசை, சீர், தளை எட்டிப் பார்க்கினும்
உரைநடை போல அடிகள் அமைய
என்னெழுத்தில் கவிதைநடை இல்லையே!
கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் கலந்தே
படித்ததும் சுவைத்ததும் பட்டறிந்ததும்
கதை சொல்லும் பாணியில் உரைத்திடவே
அடி, தொடை, பிணை வந்தாலும் கூட
கட்டுரை வரிகளை உடைத்துப் போட்டதாக
எழுத்து நடை நொருங்கிக் கிடப்பதால்
என்னெழுத்தும் கவிதை போல அமையாதே!
திரையிசைப் பாடலடிகளைச் சுட்டிக்காட்டி
திருப்புகழ் இசைக்கூட்டை உள்வாங்கி
துக்ளக் சோ, மனோரமா ஆச்சி
சொன்ன
நகைச்சுவையும் கலந்து எழுதிக் கிறுக்கிய
விளம்பரப் பாணியில் அடிகள் அமைந்த
கவிதை வீச்சின்றிய என்னெழுத்தில் பாரும்
மேடைப் பேச்சாக வாடை வீசுகிறதாமே!
"வறுசட்டியில்
துள்ளும் சோளப்பொரி போல
வானில் பூத்த வெள்ளிகள் மின்னுதே!" என
மீள மீள இசைத்துப் படிக்க வல்ல
செவிமொழியாம் நாட்டார் பாடல் போலாவது
வாசிக்கும் போதே இசை மீட்டாத
என்னெழுத்தில் கவிதையழகு இல்லையாமே!
எழுதுவதால் உள்ளச் சுமைகள் குறையுமென
பெரும் கதையைக் கூட சுருங்கக் கூறவல்ல
கவிதை வடிவத்தை விரும்பினாலும் கூட
ஓசைநயம், உவமையணி, எழுத்தெனக் கற்று
கவிதை புனைவதைக் கற்றிட மறந்தாலும்
வாசகர் வாசித்தறிந்து சாட்டிய குறைகளை
நானும் தொகுத்துப் பகிர்ந்தேன் - இனியாவது
கவிதை எதுவெனக் கற்றபின் எழுதலாமென!
*கோட்பாடு - தத்துவம்
மாற்றங்கள்!
அந்த 1987 இல்
உலங்கு வானூர்தி
தாழப் பறந்து
மக்கள் மீது வேட்டுத்
தீர்க்கும் வேளை
நான் யாழ்ப்பாணத்தில
பதுங்கிப் பதுங்கிப்
பத்திரிகை விற்றேன்!
படிக்கிற காலத்தில -
அது
எனக்குப்
பொழுதுபோக்காகவே இருந்தது!
அந்த 1999 இல
உழைத்தும் பணம்
சேமிக்காமையால்
வவுனியா ஆதிவிநாயகர்
கோவில் வாசலில்
படிக்க வேண்டி
வைந்திருந்த
வழிகாட்டல்
புத்தகங்களையே விற்று
வருவாய் ஈட்டிப்
பிழைத்துக் கொண்டேன்!
உழைக்க வேண்டிய
அகவையிலே
வயிற்றிப் பசி போக்கி
வாழ
பொய், களவு, உருட்டு, பிரட்டு ஏதுமின்றி
கண்ட தொழிலையும் கற்க
வேண்டியதாயிற்றே!
முறையே படித்துக்
கற்றதை விட
பட்டுக் கெட்டுக்
கற்றவை மேலாக
காலம் மாற நானும்
மாறினேன்!
அடியேன் அறிந்த அறிவை
அனைவரும் அறிந்திடத்
தானே
அச்சடித்துப்
புத்தகமும் வெளியிட்டேன்!
அந்த 2020 இல - எனது
"முயன்றால் முடியாதது ஏது?" என்ற
புத்தகம் தாருங்களென
- ஆங்காங்கே
வாசகர் படையெடுத்து
முண்டியடிக்க
விற்பனையாளர் திணறித்
திணறி
உலகெங்கும்
விற்பதாகச் செய்தீ!
விற்பனை சூடு
பிடித்ததேன்?
பலருக்கு
என்னைப் போல
வாழாதிருக்க
எனது கற்றவை
பட்டறிந்தவை
அடிக்கடி
வழிகாட்டுவதாக இருக்குமே!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!