நல்ல தமிழ்
சொல்களாலான வரிகள், உணர்வு வீச்சாக அமைய,
ஓசை நயம் வந்தமர, எதுகையும் மோனையும்
கூடிவர, வாசிப்பவர் மீள மீள
வாசிக்கத் தூண்டும் வரிகளாக அமைந்தால் கவிதை எனலாமென நண்பர் ஒருவர் எனக்கு மதியுரை
கூறினார். அதன்படிக்குக் கீழ் வரும் பகுதியைக் கவிதையாக்க முனைகின்றேன்.
கவிதைக்கான சூழல்:
கடின உழைப்பின் பயனாக
ஈட்டிய பணத்தில் சமையல் பொருள்கள் அப்பா வேண்டிவர, அரைப் பட்டினியாக இருந்த அம்மாவும் சட்டுப்
புட்டென உணவு ஆக்கிவிட்டார். வறுமையைத் தெரியாத வண்ணம் பிள்ளைகளுக்கு அப்பெற்றோர்
அன்றைய உணவை ஊட்டி மகிழ்ந்தனர். பெற்றோர் இவ்வாறு பிள்ளைகளை வளர்க்க; பிள்ளைகள் பெற்றோரின்
நிலையை உணர்ந்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அதுவே தமக்கும்
தம்பெற்றோருக்கும் தம் நாட்டுக்கும் செய்கின்ற நற்பணியாகும்.
இச்சூழலுக்கு ஏற்ற
கவிதை எது?
1.
கடின உழைப்பின் பயனாக
ஈட்டிய பணத்தில்
சமையல் பொருள்கள்
அப்பா வேண்டிவர,
அரைப் பட்டினியாக
இருந்த அம்மாவும்
சட்டுப் புட்டென உணவு
ஆக்கிவிட்டார்.
வறுமையைத் தெரியாத
வண்ணம் பிள்ளைகளுக்கு
அப்பெற்றோர் அன்றைய
உணவை ஊட்டி மகிழ்ந்தனர்.
பெற்றோர் இவ்வாறு
பிள்ளைகளை வளர்க்க;
பிள்ளைகள் பெற்றோரின்
நிலையை உணர்ந்து
கல்வியில் சிறந்து
விளங்க வேண்டும்.
அதுவே
தமக்கும் தம்பெற்றோருக்கும்
தம் நாட்டுக்கும்
செய்கின்ற
நற்பணியாகும்.
*இப்படிக் கட்டுரை
வரிகளைத் துண்டு துண்டாக எழுதினால் கவிதை அமைந்துவிடாதே!
2.
பகலவன் எரிந்தெரிந்து
ஒளி தருவது போல
அப்பாவும் கடுமையாக
உழைத்து
வருவாயோடு வருகையில்
தான்
அரைப் பட்டினியோடு
கிடந்த அம்மா
அடுப்பில உலை
வைத்துச் சமைப்பார்!
வறுமையின் தாக்கமும்
குடும்பத் துயரும்
பிள்ளைகளறியா வண்ணம்
உணவூட்டி வளர்த்த
பெற்றோருக்குப்
பிள்ளைகள் படித்து அறிஞராகணுமே!
இன்றைய படிக்கிற
பிள்ளைகளை நம்பியே
நாளைய நம்நாடு
முன்னேறக் காத்திருக்கிறதே!
*எனது நண்பர் சொன்னபடி
கவிதை ஆகவில்லையே! ஒரு படி முன்னேறினாலும் கவிதை அமைய முயல வேண்டும்
3.
281 நாள் எம்மைச் சுமந்த
அம்மா
அரைப் பட்டினியாக
முழுப் பட்டினியாக
தான் நொந்தும் பிள்ளை
நோகாமல்
பகலவனைப் போல
எரிந்தெரிந்து உழைத்தே
பணமீட்டிச் சமையல்
பொருளோடு வர
வீட்டில சமையல்
சாப்பாடு நிகழுமே!
வறுமையும் துயரமும்
பிள்ளைக்குத் தெரியாமல்
நாளும் தப்பாமல்
பட்டினி போடாமல்
அன்பும் அறிவும்
ஊட்டி பிள்ளைகளை
வளர்த்தெடுப்பதில்
பெற்றோர் பங்கு உயர்வானதே!
பெற்றோர்
பிள்ளைகளுக்கு ஆற்றும் பணிக்கு
பிள்ளைகள் தம்
அறிவைப் பெருக்கி
ஊருக்கும்
நாட்டுக்கும் நற்பணி ஆற்றலாமே!
*இதெல்லாம்
கவிதையென்றால், உண்மையான கவிதையை
என்னவென்று சொல்லலாம். முயன்றால் முடியாதது ஏதுமில்லை.
4.
ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு அம்மா
எவ்வளவு துன்பம்
வரினும் தளராமல்
அன்பும் ஆதரவும்
கலந்து சமைப்பார்!
ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு அப்பா
எவ்வளவு கடினமான
உழைப்பும் பார்த்து
அறிவும் அணைப்பும்
கலந்து பேணுவார்!
வறுமை, துன்பம், துயரம் இருப்பினும்
பொறுமை மிக்க
பெற்றோர் பிள்ளைகளை
மகிழ்வோடு உள
நிறைவோடு வளர்க்கின்றார்!
மகிழ்ச்சியாகப்
பிள்ளைகள் படித்துப் பெற்றோருக்கு
அறிஞராகி ஊருக்கும்
நாட்டுக்கும் பணியாற்றலாமே!
*கொஞ்சம் கவித்துவம்
அரும்பினாலும் சொல்களை, அடிகளைக் குறைத்தால்
நல்ல கவிதை வரும் தானே!
5.
எட்டுத் திக்கிலும்
பிள்ளைகள் புகழீட்ட
கட்டுப்பணம் உழைத்து
வாழவைத்த அப்பா!
அன்பும் பண்பும்
பாலோடு ஊட்டிய
அன்பான அம்மாவைப் போல
எவருமுண்டோ?
வறுமையும் துன்பமும்
அறியாமல் வளர்த்த
மறுமையிலும் மறக்க
இயலாத பெற்றோருக்காக
பிள்ளைகள் படித்து
ஊருக்கும் நாட்டுக்கும்
கள்ளமின்றி நற்பணி
ஆற்றுதல் வேண்டுமே!
*கொஞ்சம் கவிதை
அரும்புவதாகத் தெரிந்தாலும் சொல்களை, அடிகளைக் குறைத்தால் சிறந்த கவிதை கிட்டுமே!
6.
பெற்றோருக்கு
நிகராகக் கடவுளும் இல்லையே!
உற்றாரும் ஊராரும்
உற்று நோக்கவே
பெற்றோர் பெத்து
வளர்த்து அறிஞராக்கவே
கற்ற பிள்ளையும்
நற்பணி ஆற்றலாமே!
ஊரும் நாடும் உலகும்
மேன்மையுறவே!
இப்படித்தான் நானும்
கவிதை எழுதப் பழகினேன். ஆயினும், நான் எழுதியது கவிதை அல்ல. இப்படி நீங்களும் கவிதை எழுதப்
பழகிப் பாருங்கள்; நல்ல கவிதை உங்களால்
ஆக்க முடியுமே!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!