உளவியல் என்றால் என்ன?
உள்ளம்(மனம்) பற்றிய அறிவியல்.
அப்படியாயின், உள்ளம்(மனம்) என்றால் என்ன?
மூளை இயங்கும் செயலை உள்ளம்(மனம்) என்று ஒப்பிடுகிறார்கள். எனவே, உள்ளம்(மனம்) என்றால் மூளையுடன் தொடர்புடையது.
இனி, காதல் என்றால் என்னவென்று தெரியுமா?
அதுதானே, இதுவரை வரையறுத்துக் கூற முடியாதுள்ளது. ஆயினும், மூளையில் சுரக்கப்படும் ஓமோனின் தூண்டுதலால் ஏற்படும் நடத்தை மாற்றமே காதல் என அறிவியலாளர்கள்(விஞ்ஞானிகள்) கூறுகிறார்கள்.
ஒக்சிரோசின்(Oxytocin Hormone) என்னும் ஓமோன் மூளையில் சுரப்பதால் தான் தாய்-பிள்ளை உறவில் அதிக அன்பு ஏற்படுகிறது. இதுவே காதல் ஓமோன் என்றும் அழைக்கப்படுகிறது. (ஆயினும், பாலுறவில் மகிழ்வு மற்றும் பிரசவலி ஆகியவற்றுடன் இதற்குத் தொடர்பு உண்டாம். மேலதீகத் தகவலை மருத்துவரிடம் கேட்டுப்பெறவும்.)
எப்போது அந்தக் காதலைத் தூண்டும் ஓமோன் சுரக்கும் என்ற கேள்வி எழுகிறது, அதற்கு உளவியல் நோக்கில் தான் விடை காண வேண்டியுள்ளது.
இருவருக்கிடையே காணப்படும் உறவுமுறைக்கு அவர்களது உள்ள(மன)த்தில் உள்ள விருப்பு வெறுப்புகளே காரணமாக அமைகின்றது, வெறுப்பு அதிகம் என்றால் பிரிவும் விருப்பு அதிகம் என்றால் நெருக்கமும் இருவருக்கிடையேயான உறவுமுறையில் காணப்படுகிறது.
அப்படியாயின் காதல் எப்படி அமையும். காதல் என்பது அளவு கடந்த அன்பு என்றும் சொல்லலாம். இருவருக்கிடையேயான நெருக்கமான உறவுமுறையில் ஏற்படும் அளவு கடந்த அன்பு தான் காதல் என்று வரையறுக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் தான் காதலைத் தூண்டும் ஓமோன் மூளையில் சுரக்கும் என்று கூறலாம். சரி, ஒருவர் இன்னொருவர் மீது அதிக விரும்பம் கொள்ள மூளையில் சுரக்கும் ஓமோன் மட்டும் காரணமாக அமையாது.
ஒருவரது எதிர்பார்ப்புகள் இன்னொருவரது எதிர்பார்ப்புகளுடன் பொருந்தும் நிலை, ஒருவர் இன்னொருவர் மீது காணப்படும் சிறப்பு நடத்தைகளில் கொண்டுள்ள நாட்டம், எதிர்ப் பால் ஈர்ப்பு எனப் பல காரணங்களால் ஒருவர் இன்னொருவர் மீது அதிக விரும்பம் கொள்ளலாம். அந்த விரும்பம் தான் ஒருவர் இன்னொருவர் மீது அதிக அன்பு செலுத்தக் காரணமாக அமைந்து விடுகிறது. அந்த அன்பு தான் ஒருவர் இன்னொருவர் நலனில் அக்கறை காட்ட இடமளிக்கிறது. இந்த அக்கறை ஏற்பட மூளையில் சுரக்கும் ஓமோனும் ஒரு துணைக் காரணமாகலாம்.
இந்த அக்கறை பணம், பொருள், ஏற்ற இறக்கம், உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரர், திருமணமானவர் திருமணமாகாதவர், அகவை(வயது) எதனையும் பொருட்படுத்தாது ஒருவர் உள்ளத்தில் ஏற்படலாம். இந்த அக்கறையை அடுத்தவர் பொருட்படுத்தாவிடின் ஒரு தலைக் காதல் என்றும் அடுத்தவர் பொருட்படுத்தினால் இரு தலைக் காதல்(இருவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காதல்) என்றும் சொல்லப்படுகிறது.
காதலுக்குக் கண்ணில்லை என்பதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஒருவர் இன்னொருவர் நலனில் காட்டும் அக்கறைக்கு எது குறுக்கே வந்தாலும் அவ்வக்கறை குறைந்து விடுவதில்லை. அடுத்தவர் மீது அளவு கடந்த அன்பு அல்லது அடுத்தவர் நலனில் அக்கறை காரணமாக குறுக்கே வரும் எதுவும் பெரிதாகத் தென்படுவதில்லை. இதனால் தான் காதலுக்குக் கண்ணில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.
பாலியல் ஈர்ப்பால் சிலர் காதலை வரவழைக்க முயற்சிக்கிறார்கள். அம்முயற்சி கூட காதல் அமைய இடமளித்தால் அதுவும் ஒருவரது கண்ணை மறைக்கலாம். அதாவது, பாலியல் உந்துதலால் பாலியல் தேவைகளை அடைய மட்டும் தேனொழுக அன்பாகப் பழகுவர். அதனை உண்மையான அன்பு என நம்பி; ஒருவர் தேவையை ஒருவர் நிறைவு செய்ய உடன்படலாம். இறுதியில் தன் தேவையை நிறைவு செய்தவர் பிரிந்துவிடுவார்(சிலர் பணம், பொருள், பொன் எனத் திரட்டிய பின்னும் பிரிவர். அப்படியானவர்களின் நடிப்பிலும் பலர் பாதிப்படைவர்). பாலியல் உந்துதலால் பாலியல் தேவைகளை அடைய முனைந்தவரின் அன்பைக் காதலென நம்பி ஏமாந்தவரின் பாதிப்புகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
தொடக்கம் பாலியல் ஈர்ப்பாக இருந்தாலும் முடிவு நம்பிக்கையான காதலாகவும் அமையக்கூடும்.
ஒருவரது அழகிற்கும் பிறரை ஈர்க்கும் உடலமைவிற்கும் பாலியல் ஓமோன்கள் உதவுகின்றன. எடுத்துக்காட்டாகப் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென்(Estrogen Hormone)ஓமோன் மார்பழகையும் மென்மையான இனிய குரலையும் அதிக பெண்ணியல் நடத்தைகளையும் ஏற்படுத்த உதவும். இதேபோன்று ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன்(Testosterone Hormone)ஓமோன் எடுப்பான, மிடுக்கான, பலமான உடற்கட்டோடு, வன்மையான குரலையும் அதிக ஆணியல் நடத்தைகளையும் ஏற்படுத்த உதவும். ஆயினும், ஆண்களிற்கு ஈஸ்ட்ரோஜென்(Estrogen Hormone)ஓமோனும் சுரக்கப்படுவதால்; டெஸ்டாஸ்டேரோன்(Testosterone Hormone)ஓமோனை விட இதன் வீதம் அதிகம் எனின் அவ்வகை ஆண்கள் இனிய குரலையும் பெண்ணியல் நடத்தைகளையும் கொண்டிருப்பர்.
பெண்களிலுள்ள அன்ட்றோஜன்(Androgen Hormone)ஓமோன் ஆண்களை விரும்பத் தூண்டுகிறதாம். ஆண்களிலுள்ள அன்ட்றோஜன்(Androgen Hormone)ஓமோன் பெண்களை விரும்பத் தூண்டுகிறதாம். அதாவது, பாலியல் எண்ணங்கள் தோன்ற இவர் ஓர் ஊக்கி. இதனால் பாலியல் ஈர்ப்பு ஏற்படுகிறதாம். இதற்கு ஈஸ்ட்ரோஜென், டெஸ்டாஸ்டேரோன் ஓமோன்களால் அமைந்த உடலமைப்பும் துணைநிற்கிறதாம்.
ஆயினும், உளவியல் நோக்கில் எதிர்ப் பால் ஈர்ப்பு(கவர்ச்சி) என்று அழைக்கின்றோம். எடுத்துக்காட்டாக
“எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று – அது
உன்னிடம் இருக்கிறதே – அதை
அடையாமல் விடாமாட்டேன்” என்றொரு திரைப்பாடல் அடிகளை நினைவூட்டினால் புரியும். இதே பாடல் அடியை “எந்த ஆணிலும் இல்லாத ஒன்று” என்று மாற்றியும் படிக்கலாம். இதுவே அதாவது இவ்வாறான எண்ணங்களே உளவியல் நோக்கில் எதிர்ப் பால் ஈர்ப்பு(கவர்ச்சி)க்கு அடித்தளமாகக் காணப்படுகிறது.
இவ்வாறான எதிர்ப் பால் ஈர்ப்பு சக்தியே ஆணையும் பெண்ணையும் பழகத் தூண்டுகிறதாம். இவ்வாறு பழகுவோர் நீண்ட நாள் தமது விருப்புகளைத் தேக்கி வைத்திருந்தாலும் சூழல் இடமளிக்கையிலே சூழலுக்கு அஞ்சிப் பழகத் தொடங்குவர். இதனால் இவர்களது பழக்கம் அதாவது அன்பு வைத்துப் பழகுதல் இயல்பாகவே தொடரும். இது நாளடைவில் நம்பிக்கை தர உறுதியான காதலாக மாறிவிடும். இனியென்ன, சூழலுக்கு ஏன் அஞ்சவேணும் எனத் துணிந்தவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தி வென்றிடுவர். சூழலுக்கு அஞ்சி காதலை வெளிப்படுத்த நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருப்போர் நிலை ஒரு தலைக் காதலாகவே அமைகிறது.
ஓமோன்களின் தூண்டலால் காதல் அமைவதால் கண்ணை மறைக்க இடமிருந்தாலும் உறுதியான உள்ளத்தைக் கொண்டவர்கள் தங்கள் தொலைநோக்குப் பார்வையால் தமது மகிழ்வான வாழ்வை அமைப்பதோடு; தமக்கும் காதலுக்கும் உரிய மதிப்பைப் பெற்றுக் கொடுக்கிறார்கள் என்பது உண்மையே!
எஞ்சியோர் ஏதோ ஒரு வழியில் பாதிப்பையோ கெட்ட பெயரையோ பெறலாம், அதேவேளை முறையற்ற வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ளலாம்.
சில எடுத்துக்காட்டுகள்:
சகோதர உறவுக் காதல்
அதிக அகவை(வயது) வேறுபாட்டுக் காதல்
மணமுடித்தவர்-மணமுடிக்காதவர் காதல்
துணைவர் இருக்கையில் அடுத்தவரோடு காதல்
இவ்வாறு நமது சூழலில் பல இருக்கலாம்.
காதலுக்கு அகவை, துணைவன்(கணவன்)/துணைவி(மனைவி), ஏழ்மை, பணம், எனப் பல இருந்தாலும், அதனையும் தாண்டி விரும்பம் மேலிட காதல் தன் வேலையைக் காட்டும் என்பது உண்மைதான். அதற்காக மனித ஒழுக்கத்தை, மக்களாய(சமூக) வேலியை மீறிக் காதலித்தல் அறிவுடைய செயலல்ல.
எடுத்துக்காட்டாக
மணமுடித்த(தனது துணைவர் இருக்கக் கூடியதாக) பெண்ணோ ஆணோ மணமுடிக்காத ஒருவரைக் காதலிப்பது அறிவுடைய செயலல்ல என்பேன். இங்கு எதிர்ப் பால் ஈர்ப்பு(கவர்ச்சி) முதலிடம் பிடிக்க; தொலைநோக்குப் பார்வைக்கு இடமில்லாமல் போயிருக்கிறது.
காதலின் தொடக்கமே எதிர்ப் பால் ஈர்ப்பு(கவர்ச்சி) தான். ஆயினும், மகிழ்வான வாழ்வைக் குறிவைத்து தொலைநோக்குப் பார்வையோடு உறுதியான முடிவு எடுத்தால் தவறுகள் நிகழாது.
உள்ளத்தைக் கட்டுப்படுத்தினால்(அதாவது, தீய எண்ணங்களை நினைவூட்டாது) நல்ல முடிவுகளை எடுக்க வாய்ப்புண்டு.
துணைவ(கணவ)னுக்கோ/துணைவி(மனைவி)க்கோ ஊறு விளைவிக்க நினைக்காதிருத்தல் மிகவும் நன்று.
பிறரைக் காதலிக்க ஓமோன்கள் தூண்டினால்; பிறரை விட துணைவன்(கணவன்)/துணைவி(மனைவி) மீது அதிக விருப்பம் கொள்ளுதல் வேண்டும்.
இவைதான் திருமணமான பின்பு வேறு ஆள் மீது காதல் வருவதைத் தடுக்க உதவும்.
இதே போன்று சகோதர உறவுக் காதல் ஒரு எல்லைக்கப்பால் நிறைவான மகிழ்வைத் தராதெனக் கருதுக. அதாவது எதிர்ப் பால் ஈர்ப்பு(கவர்ச்சி) சில நாட்கள் மகிழ்வைத் தரலாம். நிறைவைத் தராமையால் பிறிதொருவரை நாட இடமளிக்கும்.
அகவை(வயது) வேறுபாட்டுக் காதலில் மணமுடித்தவர்களில், முதிந்தவர் பாலுணர்வில் முடங்க மற்றவர் பிறிதொருவரை நாட இடமளிக்கும். பின்னாளில் மகிழ்வற்ற வாழ்வையே களிக்க நேரிடும்.
இங்கு ஆணைவிட பெண்ணுக்கு ஒரிரு அகவை கூடினால் பரவாயில்லை. அதேபோல் பெண்ணைவிட ஆணுக்கு ஐந்தாறு அகவை கூடினால் பரவாயில்லை. எப்படியிருப்பினும் இருபது அகவைக்கு முந்திய ஒருவரை காதலிக்கவோ மணமுடிக்கவோ கூடாது. இருபதாம் அகவையின் பின் உளப்பக்குவமடைந்து மாற்று முடிவுகள் எடுக்க வாய்ப்புண்டு.
எதிர்ப் பால் ஈர்ப்பு(கவர்ச்சி) முலமோ இன்னொருவர் மீது அதிக விரும்பம் கொள்வதாலோ காதலிப்பதை வரவேற்கிறேன். ஆனால், தங்கள் தொலைநோக்குப் பார்வையால் தமது மகிழ்வான வாழ்வை அமைத்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.
அதேவேளை, பாலியல் உந்துதலால் பாலியல் தேவைகளை அடைய முனைவோரின் அன்பைக் காதலென நம்பி ஏமாறவேண்டாம். அவர்களுக்கு சுற்றுலா, பொழுதுபோக்கு முக்கியமாகத் தோன்றும். அதெல்லாம் மணமுடித்த பின்னென்றால் அவர்கள் முகம் வாடும். இவர்களுக்குப் பாலியல் தேவைகளை அடையக்கூடிய நிகழ்சி நிரலைத் தவிர வேறெதுவும் வராது. இவற்றை வைத்தே நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.
உளவியல் நோக்கில் காதல் என்று சொல்லி, உண்மைக் காதல் வேண்டும்(காதல் இல்லாத உயிருமுண்டோ?), அதுவும் மகிழ்வான வாழ்வை அமைத்துக் கொள்ளத் துணை நிற்க வேண்டும் என்ற நோக்கில் என் சிற்றறிவுக்கு எட்டிய உளவியல் கருத்துகளை இங்கு விளக்கியுள்ளேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!