Translate Tamil to any languages.

புதன், 25 ஜூலை, 2018

இரட்டைக்கிளவியோடு விளையாடினேன்!

ஓர் இணையாக வருகின்ற சொல்களாயும் அவை பிரிந்தால் பொருள் தராததுமாக அமைவன இரட்டைக்கிளவி எனத் தமிழில் பேசப்படுகிறது. எ-கா: நறநற என பல்லைக் கடித்துக் காட்டினாள் என்பதில் "நறநற" என்பது இரட்டைக்கிளவி எனலாம்.

"சலசல சலசல இரட்டைக் கிளவி
தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ" என
பாவலர் வைரமுத்து அழகாகச் சொல்லியுள்ளார்.

சின்னப் பொடியன் நானும் இரட்டைக் கிளவி எனும் இணைச் சொல்களை கையாண்டு 'பா' நடையில கதையளந்துள்ளேன். 'பா' புனைய விரும்புவோர் இதனைக் கையாண்டால் சுவையான பாக்களை உருவாக்கலாம். வாருங்கள் இரட்டைக்கிளவியோடு விளையாடுவோம்!

இரட்டைக் கிளவி எனும் இணைச் சொல்களைக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடலாம்.

சலசல என ஓடிய ஆற்றின் மேலே
மடமட என முறிந்தன மரங்கள்!
சரசர என்று மான்கள் ஓடின
கீசுகீசு என குருவிகள் கத்தின
கிசுகிசுவாக "ஆறு வேரைக் கரைத்தது" என
பரபரப்பாக ஊரெங்கும் செய்தி!

கரகரத்த குரலில் "விரைவாக முடி" என
தொள தொளச் சட்டைக்காரர் சொல்ல
சாரைசாரையாக வந்த மக்கள்
கசகச என வியர்வை சிந்தி
மளமள என மரங்களை அகற்றிய பின்
சிலுசிலு என வீசும் காற்றில் ஓய்வாம்!

கிச்சுக்கிச்சு மூட்டியவாறு ஓய்வெடுத்தோரிருக்க
குளுகுளு ஆற்றங்கரைப் பக்கமாய்
கிளுகிளு படங்களில் வருவோரைப் போல
கலகலப்பான பேச்சோடு வாலைகள் வர
தளதளவென்று நின்ற காளைகள் நோக்க
குடுகுடு கிழவர் "காதல் அரும்புதோ?" என்றார்!

சொரசொரப்பான தாடிக்காரக் காளை
மொசுமொசுவென மயிருள்ள வாலையிடம்
குசுகுசு என்று "காதலிப்பியா?" எனக் கேட்க
சவசவ என்று முகம் சிவக்க - அவளோ
கடகட எனச் சிரித்தவாறு சொன்னாள்
தகதக என மின்னும் தன்னவரைக் கேளென்று!

விறுவிறுப்பாக உரையாடல் நடக்கையிலே
தைதை என்று ஆடினாள் அந்த வாலை
திடுதிடு என நுழைந்த அவளது கணவன்
கும்கும் என "காதலிப்பியா?" என்றவனைக் குத்த
வெடவெட என நடுங்கியது அவனது உடல்
பொலபொல எனக் கண்ணீரும் வடித்தான்!

பேந்தப்பேந்த விழித்தோரும் சிரித்தோரும்
வழவழ என்று பேசியவாறு அமைதியாக
லொடலொட எனப் பேசும் வாலை ஒருவள்
மொறுமொறு என்று சுட்ட முறுக்கு விற்று வர
சுடச்சுட வேண்டிக் கடித்துக் கொறித்துண்டு
மடமட என ஆற்று நீரைக் குடித்துக் கலைந்தனரே!

பள்ளத்தில் விழ முன்

தரதர என நண்பன் இழுத்துச் செல்ல
சதசத என்ற சேற்றில் விழுந்ததும்
குபுகுபு எனக் குருதி சிந்தாது கசிய
வடவட என உடல் வேர்க்கும் வேளை
கமகம என மணந்த பக்கம் திரும்ப
கிடுகிடு பள்ளம் தெரியக் கண்டதும்
படபட என இமைகள் கொட்ட
கிறுகிறு என்று தலை சுற்றியதே!

சுற்றுலாச் சொன்ன செய்தி!

கலகலப்பாக நண்பர்களோடு கதைத்து
அழகழகென மின்னுமிடங்களை எண்ணி
அடுக்கடுக்காகத் திட்டங்களைத் தீட்டி
மளமளவெனச் சுற்றுலாச் சென்றோம்!

சலசலவென அலைகள் வீசும் கடற்கரைகள்
பளபளவென வெயிலில் மின்னும் மலைகள்
கமகமவென மணம் பரப்பும் பூங்காக்கள்
சரசரவென ஓடியோடி உலாவந்தோம்!

புகைபுகையாய் வெண்சுருட்டை ஊதினோம்
கசக்கக்கசக்க மதுபானத்தையே குடித்தோம்
குளுகுளுவெனக் குளிரக் குளித்தோம் - ஆயினும்
சிலுசிலுவென்ற காற்றிலே கெடுநாற்றம் போகலையே!

கடகடவெனச் சிரித்து மகிழ்ந்தோம் - நாம்
கிடுகிடுவெனப் பலவிடம் போய்ப் பார்த்தோம்
புதுப்புதுச் சூழலைச் சுற்றிவரவே - ஈற்றில்
திருதிருவென ஊர்திரும்பப் பணமின்றி விழித்தோம்!

டிக் டிக் என நல்லநேரம் கரைய
பட்டுக்கெட்டுப் பொற்காலம் வீணாக
அடிக்கடி நாம் விட்ட தவறுகளால்...
பக்குப்பக்கென எங்கள் நெஞ்சு அடித்ததே!

குறிப்பு: ஒன்றிலே திட்டமிட்டு இன்னொன்றிலே கோட்டைவிடும் உறவுகளுக்காக எழுதியது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!