Translate Tamil to any languages.

வியாழன், 19 ஜூலை, 2018

சாவதற்கும் நல்ல வழிகாட்டல்


நம்மட உள்ளத்தில
நல்லபடி விருப்பங்கள் விளையுமே!
விருப்பங்களை அடையத் தானே
விடாப்பிடியாக முயற்சி பண்ணுறோமே!
விடிந்த பிறகு தானே தெரிகிறது
கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதென்று!
பரவாயில்லை! - உங்கள்
கடன் தொல்லையைப் போக்க
நல்லபடி சாவதே சிறந்த வழி!

கடன் தொல்லைக்கு
சாவு தான் தீர்வென்று கூறும்
என்னைக் கொல்ல வருமுன்
நிற்க,
சற்றுத் தலைக்கு எண்ணெய் தேய்த்து
மூளை இயங்கியதும் எண்ணிப் பாருங்க...
கொஞ்சம் கொஞ்சமாகக் கடனடைக்க
வருவாய் இருக்கென்பீர்! - இருப்பினும்
வருவாய் வரவில்லையாயின் சாவதே வழி!

எப்படியோ
இப்படிச் சாகடிக்கத் தான்
உருப்படியான செயலும் பணியுமென
அழகாக அறிவூட்டி
நிதி நிறுவனங்கள் விளம்பரம் செய்ய
உள்ளத்து விருப்பத்தை அடைய
நுண்மதிக் கடன், வாடகைக் கொள்வனவு,
முக்கோண (பிரமிட்) முறை வணிகம்,
சீட்டுக் குலக்கல், கடன் அட்டைப் பாவனை
இருக்கு இருக்கென முண்டியடிப்பீர் - பின்
பெற்றதை மீளளிக்க முயன்றும்
வருவாய் வரவில்லையாயின் சாவதே வழி!

வருவாய் வர வரச் சேர்த்தோ
தெருவில பிச்சை எடுத்துத் திரட்டியோ
உள்ளத்து விருப்பங்களை அடைய
உங்களால் முடியாதென்பதை உணர்ந்த
வணிகர்கள் கையாள்வது
"பணம் கொடு பயன் பெறு" என்ற - அதாவது
'கையில காசு வாயில தோசை' என்ற
முகாமைத்துவ நுட்பம் என்பேன்!

உள்ளம் குழம்பியதே!


நீரிழிவைக் குறைக்க நடையிலே
வழக்கமாகச் செல்லும் வழியிலே
பழக்கமில்லாத அழகான கறுப்பி
எதிர்பட்டு இடைமறிக்க நின்றானிவன்!!

வெண்பல்லுத் தெரியச் சிரித்தாள்
வெட்டி வெட்டிக் கண்ணடித்தாள்
கையைப் பிடித்துக் குலுக்கினாள்
கைமாறாக ஆயிரந்தான் கேட்டாள்!

முன்னாலே கன்னக்குழி அழகியவள்
என்னாலே என்னதான் செய்வதென
கள்ளமில்லா உள்ளம் - பையிலே
கிள்ளியொரு ஆயிரத்தை நீட்டியதே!

காற்றிலே காசினி தானென்று
ஈற்றிலே திரும்பிப் பாராமல்
அவளோடு ஆயிரம் தான் போக
இவன் உள்ளத்தில் அவள் தானே!

அவளோ அத்தானின் சம்பளத்தன்று
இவனுக்குச் சொத்தாகும் ஆயிரமென
சொல்லிச் சிட்டாகப் பறக்கையிலே
சொல்லின் பொருளுணர நேரமாச்சே!

நீரிழிவைக் குறைக்கும் நடையிலே
பேரிலவள் காசினியாம் தருவாளோ
ஆயிரமெனக் கணிப்பிட முன்னரே
ஆயிரமடிக்கு அப்பாலே நடந்தானிவன்!

பிள்ளைகள்
உலகத்தில எவருமே
உடல் நொந்தவுடனே
'அம்மா' என்று தான் அழுகிறாங்க!
'அம்மா' என்ற சொல்
உலக மொழிகளுக்குப் பொதுவானதா?
உலகின் முதன்மொழி தமிழ் என்பதாலா?
'அம்மா' என்ற சொல்லின் வலு
உலகத்தாரை ஆளுகின்றதா?
இது இப்படி இருக்க
அம்மாக்களை 
முதியோர் இல்லத்தில தள்ளிவிட்டு 
ஓடி ஒளியும் பிள்ளைகளையே
நம் கண்கள் கண்கிறதே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!