Translate Tamil to any languages.

செவ்வாய், 31 ஜூலை, 2018

இலக்கியத் திருட்டு


இலக்கியத் திருட்டு

ஒவ்வொருவர் எழுத்தும் வேறுபட்டாலும்
ஒரு சிலரின் புனைவு (கற்பனை)
ஒன்றுபடலாம் தான்! - அது
இலக்கியத் திருட்டாகாதே!
ஒருவர் எழுதியது போல
மற்றொருவர் எழுதியிருந்தால்
எவரது எழுத்தைப் படியெடுத்தாரென
கண்டுபிடிக்க முண்டியடித்தால்
இலக்கியத் திருட்டைக் காண்பீரே!
எவரெவருடைய எண்ணமென
பொறுக்கிச் சுட்டிக்காட்டியே
நானும் எழுதுகிறேன். - அதை
இலக்கியத் திருட்டு என்கிறாங்களே!
என்னைக் கேளாமல்
என் பெயரைச் சுட்டாமல்
எனது எண்ணங்களைப் பொறுக்கி
தங்களுடையதெனப் பகிருவது
இலக்கியத் திருட்டு இல்லையா?
இலக்கியத் திருட்டுப் பற்றி
அறியாதோர் அறிந்திட்டால் - சிறந்த
இலக்கிய வெளியீடுகளை வெளிக்கொணர
இடமுண்டு என்பதை அறியாதோரும் உண்டோ?


படிப்பது சுகமே!

படிக்கப் பின்வாங்கும் உள்ளங்களே!
படிக்கத் தொடங்கும் வேளை
புளிக்கிறதா? - பரவாயில்லை
படிக்க முயன்று பாருங்கள்...
கொஞ்சம் படித்த பின்னே
படிப்பது சுகமே என
படிக்கப் படிக்க இனிக்கிறதே என
நீங்களாகவே விரும்பிப் படிப்பீர்களே!
சின்னப் பிள்ளையாக இருக்கையிலே
படிப்புக்குப் பின்னடித்த நானே
பொத்தகக் கடையையே வீட்டிலிறக்கியே
இனிக்க இனிக்கப் படிக்கிறேனே!
தம்பி! தங்கைகளே! - இன்று
புளிக்கின்ற படிப்புத் தானே - நாளை
இனிக்கும் படிப்பு ஆகிறதே! - நீ
படித்த படிப்புத் தானே - நாளை
உனக்கென்ற தனி அடையாளத்தை
நிலைநிறுத்தப்போகிறதே! - அதுவே
உலகம்
 
உன்னை நாடவைக்க உதவப்போகிறதே!



படித்தமைக்குச் சான்று

படிப்புக்கான தகுதியே
சான்றிதல்களின் பட்டங்களின் எண்ணிக்கை - அது
படிப்பின் அளவுகோல் என்பேன்! - அதனை
விளம்பரங்களில் காணமுடியுமே!
படித்தமைக்கான தகுதியே
படித்ததைப் பாவித்த மக்களின் எண்ணிக்கை - அது
படித்தவரின் அளவுகோல் என்பேன்! - அதனை
மக்கள் பேச்சுகளில் காணமுடியுமே!
படிப்பைக் காட்டித்திரிவதை விட
படித்ததைப் பலரும் பயனீட்ட வழங்கினாலே
படித்தவரென மக்கள் பாராட்டுக் கிட்டுமே! - அதுவே
இறுதி வரை எம்மோடு பயணிக்கும்!


அடையாளம்

படித்துப் படித்துச் சொன்னார்கள் - உங்கள்
அடையாளத்தை இழக்காமல் வாழப் பழகென்று!
படித்துப் படித்துப் பின்பற்றினேன் - எங்கள்
அடையாளத்தை இழக்காமல் பணி செய்யவே!
என் பணி என்னை அடையாளப்படுத்துகிறதே!
உங்கள் பணி உங்களை அடையாளப்படுத்துகிறதா?



எண்ணிப்பாருங்க...

நானே எனக்குக் கடவுள்!
நானே எனக்குப் பிரம்மா!
நானே எனக்கு நீதிபதி!
பதினொரு பக்கம் பார்த்து
முடிவு எடுக்கும் என்னை விட
பெரியவர் எவரும் உளரோ?

குறிப்பு:
பிரம்மா - படைத்தற் கடவுள்
பதினொரு பக்கம் - முன், பின், இடம், வலம், கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம், நேர் எண்ணம், மறை எண்ணம், நேர் மறை எண்ணம், எதிர் மறை எண்ணம்.

"மனிதன் கடவுளாக மாட்டான்
மனிதன் மனிதனாக வாழவே
பதினொரு பக்கங்களையும் பார்த்து
ஒவ்வொரு முடிவையும் எடுக்கலாமே!" என
நினைவூட்டவே இவ்வாறு எழுதினேன்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!