Translate Tamil to any languages.

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

எழுதத் தூண்டின எழுதினேன்!


நம்பிக்கை

கடவுள் இருப்பதனால் தான்
நீங்கள் வாழ்கிறீர்கள் - அந்த
கடவுளுக்கு நன்றி கூறுங்கள்!
கடவுள் இல்லை என்போரும்
வாழ்கின்றனர் தான் - அதற்கு
தன்னம்பிக்கை தான் மருந்து!
கடவுள் இருக்கிறரோ இல்லையோ
நாங்கள் இருக்கிறோம் என்றால்
ஏதோ ஒரு நம்பிக்கை தான்
எம்மை வாழ வைக்கிறதே!
வெறுப்புகளைச் சுமப்பவர்களே - அதை
கொஞ்சம் இறக்கி வைத்தால் தானே
நம்பிக்கை மலரும் என்பேன்!
உருள மறுக்கும் உலகையே
நம்பிக்கை என்ற கருவியால்
உருட்டிக் கொண்டே இருக்கலாம்!
நீங்களும்
ஊக்கம் பெற்று உயரப் பறக்கலாம்!!


எழுதத் தூண்டின எழுதினேன்!

"என்னைப் பற்றி
நன்கறிய விரும்பினால் - என்
எதிரியைக் கொஞ்சம் கேட்டறி (விசாரி)
நான் சொல்வதை விட
அவர்கள் தான் அதிகம் சொல்வார்கள்!"
என்றவாறு
பாவலர் மூ.மேத்தா சொன்ன நினைவு!
அதனையே
உள்ளத்தில் இருத்தி
"என்னைப் பற்றி
என்னிடம் கேட்டுப் பயனில்லையே!
எதிரியிடம் கேளுங்கள்...
என்னைப் பற்றி அ - ஃ வரை
அப்படியே சொல்லுவார்கள்!"
என்றவாறு
நானும் பாப்புனைய முனைந்தேன்!
அதற்கு அடுத்தபடியாக
"ஊருக்குள்ளே வந்தும்
நாலாளுகளைக் கேட்டுப் பாருங்கள்
என்னைப் பற்றி எல்லாமே
உள்ளதை உள்ளபடி உரைப்பார்கள்!"
என்றவாறு
பொதுவான எண்ணத்தையும் பகிர்ந்தேன்!
இதற்கெல்லாம்
"வெறித்தும் முறைத்தும் சிரித்தும்
எல்லோரும் என்னைப் பார்க்க...
நானும் கையில காசின்றி
அழுவாரைப் போல அலைய
அதனை
ஏழு தலைமுறைப் பணக்காரன்
பிச்சை எடுப்பதைப் பாரென்று
எதிரிகள் சிலர் பரப்பி விட்டனரே!
என்றவாறு
பட்டறிந்தவையே எழுதத் தூண்டின!



தொலைந்து போன என் கவிதைகள்
யாழ் நல்லூர் வீதியிலே
புதிய அகிம்சைக்கு வழிகாட்டிய
திலீபன் அண்ணாவை இழந்து
மூன்றாம் ஆண்டு நினைவாக (25-09-1990)
யாழ் ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்த
எனது முதலாவது கவிதையே
பாராட்டையும் புகழையும்
எனக்கு ஈட்டித் தந்தமையால் 
இன்றுவரை எழுதுகோல் ஏந்துகிறேன்!

"உலகமே
ஒரு கணம் சிலிர்த்தது
உண்ணா நோன்பு இருந்து
உயிர் நீத்த திலீபன் அண்ணாவின்
உயிர் மூச்சு நின்ற போது..." என்று
எழுதியது மட்டும் அடிக்கடி நினைப்பேன்!

"உலகிற்கு
அகிம்சையைப் போதித்த
மகாத்மா காந்தியின் இந்தியாவிற்கே
புதிய அகிம்சையைப் போதித்தவர்
எங்கள் திலீபன் அண்ணா!" என்று
அடுத்த வரிகள் தொடரலாமென
மீட்டுப் பார்க்கிறேன் - ஆயினும்
எஞ்சிய வரிகள் என்னிடம் இல்லையே!

"மென்மைகள்
காவலாக இருப்பதால் தான்
அழிக்கப்படுகிறது கற்பு!
வன்மைகள்
காவலாக இருப்பதால் தான்
காக்கப்படுகிறது கற்பு!" என்று
கொழும்பு வீரசேசரி நாளேட்டில்
"கற்பு" என்ற தலைப்பில் (1993)
வெளிவந்ததோட பிறவும் வெளியாகின!

அரங்குகளில் வாசித்துமான
ஏடுகளில் வெளியாகியதுமான
எத்தனையோ படைப்புகளை
நானும் இழந்துவிட்டேன் - அவை
காணாமல் போனதாகக் கருதினாலும்
நெஞ்சை விட்டு நீங்காத இழப்பே! 
அவை தான் - இன்று வரை 
என்னை எழுதத் தூண்டுகின்றனவே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!