வாயும் நாக்கும்
"வாயடக்கு / நா
காக்க" என
ஏன் தான்
சொன்னார்களா?
நல்லதைச் சொல்லு
- அதுவும்
அளந்து அளவாகச்
சொல்லு - அதனால்
அடுத்தவர் உன்னை
விரும்பலாமென்றே!
"வாயிருக்கு /
நாக்கிருக்கு" என
கண்டதையும்
பறைஞ்சு போட்டு
உறவுகள் எவருமின்றித்
தனியாளாகாமல்
"வாயிருக்கு /
நாக்கிருக்கு" என
கண்டதையும்
உண்டுகளித்துப் போட்டு
நோய்களை
வேண்டிக்கட்டிச் சாகாமல்
"வாயடக்கு / நா
காக்க" எனக் கொஞ்சம்
எண்ணிச்
செயல்பட்டால் நலமே!
அப்படியாயின்
உள்ளத்தில்
உறங்கிக் கிடக்கும்
பழைய பதிவுகளை
மீட்கும் படி
மாற்றார்
உள்ளங்களை நோகடிக்காமல்
நல்லெண்ணங்களைப்
பகிர்ந்து
நாளும்
நட்புறவைப் பலப்படுத்தினால்
எதிரி கூட நண்பர்
ஆவாரே!
சாட்டு
மிச்சக் காசுக்காக
இறங்கேக்க தரலாமென
போக்குவரவு ஊர்திக்காரங்களும்
அடுத்த முறை வரும் போது தரலாமென
கண்ட கண்ட கடைக்காரங்களூம்
கொள்ளையடித்ததால்
நானும் பிச்சைக்காரனானேன்!
மிச்சக் காசுக்காக
காச்சல்,
பீச்சல் குளிகையை
மருந்துக் கடையிலும்
நீரிழிவைக் கூட்ட இனிப்புகளை
பல சரக்குக் கடையிலும்
திணித்தமையால் தான்
என் சாவுக்குச் சாட்டு என்பேன்!
உயர்ந்த மனிதராக
செய்வன எல்லாம் செய்த பின்
செய்தவை தவறென்று அறிந்து அழாதே!
தவறென்று அறியாது செய்தவற்றுக்கு
ஆண்டவன் கணக்கில் ஒறுப்பு இல்லையாம்!
அதற்காகச் செய்த தவறுகளையே
அறியாமல் செய்ததாகத் தப்பிக்க முயலாதே!
சூழ்நிலைகளும் அறியாமைகளும்
தவறுகளைச் செய்யத் தூண்டியிருக்கலாம்
அதற்காகச் செய்த தவறுகளை
மறைக்க முயல்வதும் நற்பெயரைத் தராது!
செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி
எம்மை வீழ்த்தப் பலர் இகுக்கலாம்!
செய்த தவறுகளை திரும்பச் செய்யாது
நல்லவராவது நமது பணியே!
செய்த தவறுகளை எண்ணி
உள்ளம் நொந்து வீழ்வதை விட
தவறுகள் ஏதும் செய்யாத மனிதராக
முன்னேற முயன்று பார்! - அதுவே
உயர்ந்த மனிதராக ஒரே வழி!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!