Translate Tamil to any languages.

வெள்ளி, 13 ஜூலை, 2018

தமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்!



திறமையாகப் படிப்பித்ததால தான் - எனக்கு
சிங்கள மாணவர்கள் பெருகியதால தான்
சிங்கள ஆசிரிய நண்பர்கள் - சிலருக்கு
என் மீது பொறாமை பொங்கியதாம்!

தமது சிக்கல்களைத் தாமே தீர்க்காமல்
நாட்டு மக்கள் கண்டு களிக்கவே - நடு
வழியே என்னை வாட்டி வதைத்தே - என்
திறனை எல்லோரும் உணர வைத்தனரே!

சிந்திக்க மறந்த சிங்கள ஆசிரிய நண்பர்கள்
"நீயொரு வெங்காயம் உன்னை உரித்தால்
உனக்குள்ளே ஒன்றும் இருக்காது!" என
எனது செயல்களைச் செயலிழக்க வைத்தனரே!

கற்பித்தல் கருவிகளைக் களவாடியும் தான்
கற்பித்தல் பணியை முடக்கினால் தான்
சிங்கள மாணவர் எண்ணிக்கை - எனக்கு
குறையுமென நம்பி ஏமாந்தனர் போலும்!

இயலாது போகவே இழிவுபடுத்தியே
கற்பித்த நிறுவனத்தை விட்டு வெளியேற்றியே
கொழும்பு வீதிகளில் வாட்டி வதைத்துமே
என்னை யாழ்ப்பாணத்திற்கு விரட்டி விட்டனரே!

சிங்கள மண்ணில் இருந்து விரட்டியதால்
என்னைப் போலப் பலர் லங்காராணியில்
யாழ்ப்பாணம் வந்திறங்கிய 1983 நிகழ்வுகள்
அடிக்கடி தமிழரின் உள்ளத்தில் உருளுமே!

யாழ்ப்பாணம் திரும்பிய நாள் தொட்டு
நம்மவர் நிலை பரவவும் நற்றமிழ் பேணவும்
தமிழுக்காக என் குரல் ஒலிக்கட்டுமென
இலக்கியம் படைப்பதோடு ஊரிலே முடங்கினேன்!

தமிழரின் உயிரைக் காப்பாற்றிய சிங்களவரை
மதித்துப் போற்றும் தமிழரும் இருக்க
தமிழரைக் கொன்ற சிங்களவரால் ஏற்பட்ட
ஆறாத புண்களைத் தமிழரும் சுமக்கின்றனரே!

கேளுங்க சிங்கள உறவுகளே! - உங்களால்
தமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள் தான்
வாழ்நாள் சொத்தாக இருக்கும் வரை
தமிழர் - சிங்களவர் நல்லுறவு மலருமா?

கேளுங்க சிங்கள உறவுகளே! - உங்கள்
சொல்கள், செயல்கள் எல்லாம் உலகறியுமே!
உங்களால் புண்பட்ட எங்கள் தமிழருக்கு
உங்களால் தீர்வும் வாழ்வும் தரவியலாதே!

தீர்வும் வாழ்வும் தரவியலாத உங்களால்
தமிழர் - சிங்களவர் நல்லுறவுக்கு இடமுண்டோ?
கேளுங்க சிங்கள உறவுகளே! - உங்கள்
உள்ளத்து மாற்றத்தில் தான் அமைதியுண்டே!

லங்காராணி: 1983 இல் கொழும்பில் இருந்து உயிர் தப்பிய தமிழரை யாழ்ப்பாணம் ஏற்றி வந்த கடற்கப்பலின் பெயர்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!