Translate Tamil to any languages.

புதன், 10 ஏப்ரல், 2013

தனிக்காட்டுத் தனியாளாகமுற்குறிப்பு:-
யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என மரபுக் கவிதை எழுத உதவும் குறிப்புகளை உடனுக்குடன் தராமல் பிற குறிப்புகளையும் தருவதால் வாசகர் உள்ளங்கள் நிறைவடையுமென நம்புகிறேன்.

பாட்டு, கவிதை, கதை என எதை எழுதப் புகினும் முதலில் நாம் பட்டுணர்ந்ததை அல்லது நாம் பட்டுணர்ந்தால் எப்படி இருக்குமென எண்ணியதை அல்லது கண்டதை அல்லது கேட்டதை அல்லது பார்த்ததை மீள மீள விரும்பிப் படிக்கத் தூண்டும் வண்ணம் அழகுற எழுதினால் நீங்களும் எழுத்தாளர் தான்!

பாபுனையும் போது எதுகை, மோனை அமைய குறைந்த சொல் எண்ணிக்கையில் இசையோடு (ஓசை நயம்) வாசிக்கத்தக்கதாக எழுதினால் நீங்களும் பாவலர் (கவிஞர்) தான்!

"நானோ எல்லாத்துறை அறிவிருந்தும் பட்டப்படிப்பு படிக்காத ஒருவர். என்னாலும் முடியுமென எனக்குள்ளே தன்னம்பிக்கையை வளர்த்து எந்த முயற்சியிலும் இறங்கிவிடுவேன்.

சில பொறாமைக்காரர் உதவும் கைகளை உதவவிடாமல் தடுத்தும் எனது முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டை போட்டும் என்னிடம் பயனடைவோரைத் தடுத்தும் எனப் பல வழிகளில் குறுக்கே நின்றனர்.

இப்படியான இக்கட்டான கட்டத்தில் எனது தேவைகளை நானே நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய சூழலுக்கு உள்ளானேன். சூழலுக்கு ஏற்ப என்னை நானே தயார் செய்தமையால் சிறு வெற்றிகளையும் சந்தித்தேன்." என்ற என் கதையை வைத்துப் புதுப்பா ஒன்று புனைந்துள்ளேன்.

இதே போன்று உங்கள் கதையை வைத்தோ என் கதையை வைத்தோ நீங்கள் பட்டுணர்ந்ததை வைத்தோ நீங்கள் பட்டுணர்ந்ததாக எண்ணியோ புதுப்பா ஒன்று புனையுங்களேன்.
முடியாது என்பது
மனித அகரமுதலி (அகராதி) யில்
இல்லைப்பாரும்...
முடியும் என்பவருக்கு
உருளும் உலகில்
எல்லாமே இலகுவாய்த் தான் இருக்கும்!
இதற்கு மேல் நான் எதைச் சொல்ல; நல்ல நல்ல புதுப்பாக்களை எழுதுங்களேன்.
அதற்கு முன் என் பாவைக் கீழே பாருங்களேன்.

ஆண்டவனுக்கென்ன
ஆளாளுக்கு ஏற்ப உயரம், அழகென
படைத்துவிட்டான் - அவன்
படைப்பில் எல்லோருக்கும்
மூளையின் எடை சம அளவே!

முயற்சியில் இறங்காத
முட்டாள்கள் தான்
படைத்த ஆண்டவன்
படைக்கும் போது
குறைந்த, கூடின எடை மூளையை
படைத்திருப்பானென நம்புவரே!

மாற்றார் படித்து முன்னேற
மாற்றாருக்கு மூளை கூடவேன
சின்ன அகவையில் நானும் சொல்லியே
சின்ன வகுப்பால
சின்னதாக முன்னேறி உயர் வகுப்படைந்து
சின்னாளாகவே இருந்து
பட்டப்படிப்பை
எட்டிப்பிடிக்காமல் விட்டிட்டேனே!

இருப்பது பட்டப் படிப்பாயினும் சரி
இருப்பது சின்னப் படிப்பாயினும் சரி
வருவாய் தரும் தொழிலின்றேல்
வருவாளா வாழ்க்கைத் துணை?
தருவாளா மகிழ்ச்சியை? - அன்று
ஒரு நாள் உணர்ந்தே
வருவாய் தருமெனப் படித்தேன் கணினியை
வருவாள் என்றவளும் வந்தாளே!

வீட்டிற்கு வீடு வாசற் படி போல
ஏட்டிக்குப் போட்டியாக எதிர்ப்புகள்
தொழிலகத்திலும் சரி
வழி நெடுகலும் சரி
முன்னேற்றம் முடங்க
பின்னேற்றம் கிட்ட நெருங்க
தொல்லை மேல் தொல்லை
எல்லையற்று நீள எதிர்ப்புகள்
தந்த எதிரிகளைக் கூட
முந்திக் கொண்டேன் தன்னம்பிக்கையாலே!

ஆளாளுக்கு
நாளுக்கு நாள் தப்பாமல்
தேவைகள் வந்து குவியுமே...
தேவைகள் கைக்கெட்டாத வேளை
தேவைகளுக்கு உதவுவோர்
கிட்ட நெருங்காத வேளை
பட்டென என் தேவைகளை
தனிக் காட்டுத் தனியாளாக
இனியென் பாட்டுக்கு நான் தான்
செய்ய வேண்டிய நிலையில்
செய்து முடிக்கக் கற்றுக்கொண்டேனே!

வேண்டிய வேளையில் எல்லாம்
வேண்டிய தேவைகள் எல்லாம்
நானே நிறைவேற்றிக் கொள்ள
நானே கற்றுக்கொண்டதால்
என்னை வீழ்த்த எவருமின்றி
என்னை நானே வளர்த்துக்கொண்டதால்
மிடுக்காகத் தலையை உயர்த்தி
எடுப்பாக உலாவுகின்றேனே!

தோழர்களே! தோழிகளே!
தோள்கொடுப்பார் யாருமின்றேல்
தன்னம்பிக்கை இருந்தால்
நன்னம்பிக்கை முனையையும்
கடக்கலாமென்பதைப் போல
முடங்கிவிடாது முன்னேறப் பார்
'முடியாது' என்பதை
விடியுமுன்னே உள்ளத்தை விட்டு விரட்டு
முடியும் என்போருக்கு
விடிய விடிய வெற்றிகள்
வீட்டிற்கே வருகை தருமே!

4 கருத்துகள் :

 1. புதுப்பா புனைய ஆர்வம் இருப்பவர்களுக்கு மிகவும் உதவும் என்பதை விட, அவர்களுக்கு :

  /// 'முடியாது' என்பதை
  விடியுமுன்னே உள்ளத்தை விட்டு விரட்டு
  முடியும் என்போருக்கு
  விடிய விடிய வெற்றிகள்
  வீட்டிற்கே வருகை தருமே! ///


  இதற்கு மேலும் தன்னம்பிக்கை தரும் வரிகள் ஏது...?

  அருமை ஐயா... வாழ்த்துக்கள்.... நன்றிகள் பல.....

  பதிலளிநீக்கு
 2. இலக்கணத்தில் உங்களுக்குள்ள ஆர்வம் என்னை வியப்படைய செய்கிறது எனது கவிதைகளில் உள்ள குறைகளிச் சொன்னால் திருத்தி நீங்கள் சொல்வதுபோல் எழுத முயற்சிப்பேன்.உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. தங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவேன், அப்போது தவறுகளைச் சுட்டிக் காட்டி எனது கருத்துகளைப் பதிவு செய்கிறேன்.
   தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!