நின்ற சொல்லொடு வந்த சொல்
புணரும் வேளை பாரும்
தோன்றல் விகாரப் புணர்ச்சியில்
வரும் சொல்லின் முதல் எழுத்து
வல்லினமாயின் - அவ்வல்லினம்
இரட்டிக்கப் பார்க்குதே!
இப்படி வல்லினம்
இரட்டித்தலை 'மிகும் இடம்' என்றும்
இயல்பாகப் புணருமாயின்
'மிகா இடம்' என்றும்
பார்க்கப் போகுமுன்
நின்ற சொல்லின் பொருள்
கணக்கிலெடுத்தே
மிகும் இடம், மிகா இடம்
வரையறுக்க வேண்டுமே!
எடுத்துக்காட்டாக
இட்டிலி, சாம்பார் ஆகியன
புணரும் நிலையை வைத்தே
"இட்டிலி சாம்பார்" என்பதில்
"இட்டிலியும் சாம்பாரும்" என்று பொருள்...
"இட்டிலிச் சாம்பார்" என்பதில்
(வல்லினம் மிகுத்து இருக்கிறது)
"இட்டிலியாகிய சாம்பார்" என்றும்
அப்படியாயின்
"இட்டிலியே சாம்பார்" என்றும்
பொருள் கொள்ளலாம் எனில்
மிகும் இடம், மிகா இடம்
பொல்லாத இலக்கணமே!
நின்ற சொல்லின்
சொல்கள் புணர வரும் தொடரின்
பொருளை அறிந்தே
மிகும் இடம், மிகா இடம்
கையாள வேண்டுமென்பதை
நினைவிற் கொள்வீரே!
தனிக்குற்றொடு
நின்ற மெய்யீற்றை அடுத்து
உயிர் வந்து இருந்தால்
நின்ற மெய்யீறு மிகுமாமே!
எடுத்துக்காட்டாக
கல்+எறிந்தான்=கல்லெறிந்தான்
என்பதில் பாரும்
மிகுத்த 'ல்' ஒடு எகரம் ஏறி
லெகரம் ஆனதை அறவீரே!
ங, ஞ, ந, ம ஆகிய
மெல்லினம் நான்கும்
சொல்கள் புணரும் வேளை மிகுமே!
வல்லினம் மட்டுமல்ல
மெல்லினமும் மிகுமே...
எடுத்துக்காட்டாக
இ+ஙனம்=இங்ஙனம்
அ+ஙனம்=அங்ஙனம்
எ+ஙனம்=எங்ஙனம்
மெய்+ஞானம்=மெய்ஞ்ஞானம்
மு+நீர்=முந்நீர்
கை+மாறு=கைம்மாறு
ஆகியவற்றில் மெல்லினம் மிகுத்ததே!
க, ச, த, ப ஆகிய
வல்லினம் நான்கும்
சொல்கள் புணரும் வேளை மிகுமே!
மெல்லினத்தில் ணகர, னகர
வல்லினத்தில் டகர, றகர
எழுத்துக்கள்
சொல்லுக்கு முதலில் வராமையால்
மிகும் இடங்களில்
தலை காட்டாமல் போயிற்றே!
மெல்லினமும் மிகும் என்றாலும்
வல்லினம் அதிகம்
பயன்பாட்டில் இருப்பதால் பாரும்
பல ஒழுங்கு முறையின் கீழே
வல்லினம் மிகும் இடங்களைப் பாரும்!
ணகர, னகர ஈற்றின் பின்னே
வல்லினம் வந்தால் பாரும்
மண்+குடம்=மட்குடம் என்றும்
பொன்+குடம்=பொற்குடம் என்றும்
'ண்' என்பது 'ட்' ஆயும்
'ன்' என்பது 'ற்' ஆயும்
புணர்ந்து வரக் காண்பீரே!
நின்ற சொல்லின் ஈறு
உயிர் மெய்யாக இருந்து
வரும் சொல் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால்
நின்ற சொல்லீற்று மெய் திரியுமாமே!
(வேற்றெழுத்தாக மாறும்)
நின்ற சொல்லின் ஈற்றில்
'ன்', 'ல்', 'ண்', 'ள்' என்பன வந்தாலும்
ஒவ்வோர் எழுத்துக்கும் - அதன்
தன்மைக்கு ஏற்ப திரிபடையும்
எழுத்து வெவ்வேறாமே!
அ+காளை=அக் காளை
அந்த+காளை=அந்தக் காளை
இ+செய்தி=இச் செய்தி
இந்த+செய்தி=இந்தச் செய்தி
என்றவாறு பார்த்தால்
சுட்டுச் சொல்லை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
எ+பக்கம்=எப் பக்கம்?
எந்த+சேனை=எந்தச் சேனை?
எப்படி+பேசினான்=எப்படிப் பேசினான்?
என்றவாறு பார்த்தால்
வினாச் சொல்லை அடுத்து வரும்
வல்லினம் மிகுமே!
பெயர்ச் சொல்லினது பொருளை
வேறுபடுத்திக் காட்டுவதே
வேற்றுமையின் வேலையாகும்!
முதல் வேற்றுமையாக
எழுவாய்/பெயர் வேற்றுமை
எடுத்துக்காட்டாக : அழகன்,
இரண்டாம் வேற்றுமையாக
'ஐ' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகனை,
மூன்றாம் வேற்றுமையாக
'ஆல்' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகனால்,
நான்காம் வேற்றுமையாக
'கு' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகற்கு,
ஐந்தாம் வேற்றுமையாக
'இன்' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகனின்,
ஆறாம் வேற்றுமையாக
'அது' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகனது,
ஏழாம் வேற்றுமையாக
'கண்' உருபு ஒட்டியது
எடுத்துக்காட்டாக : அழகன்கண்,
எட்டாம் வேற்றுமையாக
விழி வேற்றுமை
எடுத்துக்காட்டாக : அழகா!,
என்றவாறு தான்
முதல் எட்டு வேற்றுமைகளும்
தமிழில் அமைகிறதே!
எப்படித் தான் இருப்பினும்
மூன்றாம் வேற்றுமைக்கு
ஆன், ஆல், ஓடு, ஒடு ஆகிய
நான்கு உருபுகள் இருப்பதை
இலக்கியங்கள் சாற்றுமே!
ஆகப் பிந்திய தகவலாக
உடன், கொண்டு ஆகிய உருபுகளும்
மூன்றாம் வேற்றுமையாமே!
வரும் சொல் முதல் எழுத்து
உயிராய் இருப்பின்
ஆன், ஓடு உருபுகளும்
உயிர்மெய்யாய் இருப்பின்
ஆல், ஒடு உருபுகளும்
வந்தமையக் காண்பீரே!
நான்காம் வேற்றுமையிலும்
கு, ஆ, பொருட்டு, நிமித்தம் என
நான்கு உருபுகள் உண்டாமே!
ஐந்தாம் வேற்றுமையிலும் பாரும்
இன், இல், இருந்து, நின்று,
காட்டிலும், பார்க்கிலும் என
உருபுகள் ஆறாமே!
ஆறாம் வேற்றுமையில்
அது, ஆது, ஆ, உடைய என
நான்கு உருபுகளும் உண்டாமே!
ஏழாம் வேற்றுமையில்
கண், கால், உள், இல், தலை,
உழி, புறம், அகம், பால், இடை என
உருபுகள் பத்தாமே!
எட்டாம் வேற்றுமையிலும்
அப்ப!, அம்ம! என விளிப்பது
அண்மை விளி என்றும்
அப்பா!, அம்மா! என விளிப்பது
சேய்மை விளி என்றும்
சொல்லிக் கொள்கிறார்களே!
சரி! சரி!
வேற்றுமை தெரிந்தால்
வேற்றுமையிலும்
சொற்புணர்ச்சியைப் பார்ப்போமே!
எடுத்துக்காட்டாக
ஆட்டை+கட்டினான்=ஆட்டைக் கட்டினான்
நாயை+துரத்தினான்=நாயைத் துரத்தினான்
இவ்வாறே
இரண்டாம் வேற்றுமை விரியில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
நம்பியால்+பெற்றான்=நம்பியாற் பெற்றான்
வாளால்+குறைத்தான்=வாளாற் குறைத்தான்
என்றவாறே
'ல்' என்பது 'ற்' ஆகத் திரிந்தும்
மூன்றாம் வேற்றுமை விரியில்
வல்லினம் மிகுமே!
எடுத்துக்காட்டாக
வேலிக்கு+கம்பி=வேலிக்குக் கம்பி
பாம்புக்கு+பகை=பாம்புக்குப் பகை
என்றவாறே
நான்காம் வேற்றுமை விரியில்
வல்லினம் மிகுமே!
எஞ்சியிருக்கும்
மிகும் இடம், மிகா இடம்
வரும் முறை தொடரலாம் என
எண்ணியிருக்கிறேன்!
(தொடரும்)
முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/03/006.html
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!