Translate Tamil to any languages.

ஞாயிறு, 3 மார்ச், 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-005


யாப்பில் அலகிடுதல் என்பது
சீரை அசைகளாக
உடைத்துப் பார்ப்பதேயாகும்!
அலகிடாமலும்
பா புனைய இயலாது...
அலகிட்டாலும் கூட
குற்றியலுகரம், குற்றியலிகரம்,
மெய்யெழுத்து என்பன
செய்யுளில் அலகு பெறாது என்போம்!
தனிக்குற்றெழுத்தை
கொண்டிராத சொல்லில்
மாற்றெழுத்தின் பின்னே
வல்லின மெய்யின் மேல்
ஏறிவரும் உகரம் குற்றியலுகரமாம்!
க, ச, ட, த, ப, ற எனும்
வல்லினம் மேல் உகரம் ஏற
கு, சு, டு, து, பு, று என வருவது
குற்றியலுகர எழுத்தாம்!
ஆறு, காசு, நாடு என்பதில்
நெட்டெழுத்தின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
நெடிற்றொடர்க் குற்றியலுகரமாம்!
அஃது, எஃகு, கஃசு என்பதில்
ஆயுத எழுத்தின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
ஆயுதத் தொடர்க் குற்றியலுகரமாம்!
மதகு, பழுது, வயிறு என்பதில்
த, ழு, யி என்பன
த்+அ, ழ்+உ, ய்+இ என அமைந்த
உயிர் மெய்களின் பின்னே
(அ, உ, இ ஆகியவற்றின் பின்னே)
குற்றியலுகர எழுத்து வரின்
உயிர்த் தொடர்க் குற்றியலுகரமாம்!
நாக்கு, பாட்டு, கூற்று என்பதில்
வல்லின மெய்யின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
வன்றொடர்க் குற்றியலுகரமாம்!
சங்கு, நண்டு, நன்று என்பதில்
மெல்லின மெய்யின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
மென்றொடர்க் குற்றியலுகரமாம்!
பல்கு, ஆய்சு, மார்பு என்பதில்
இடையின மெய்யின் பின்னே
குற்றியலுகர எழுத்து வரின்
இடைத் தொடர்க் குற்றியலுகரமாம்!
நின்ற சொல்லின் ஈற்றில்
குற்றியலுகர எழுத்து நிற்க
வரும் சொல்லின் முன்னே
'யா' இருக்கும் வேளை பாரும்
குற்றியலுகரம்
குற்றியலிகரமாகத் திரியுமாம்!
'ம்' என்னும் மெய்யின் மீது
ஏறிவரும் இகரமும்
குற்றியலிகரமாம்!
எடுத்துக்காட்டாக
"காசு + யாது = காசியாது?"
"காது + யாது = காதியாது?"
என்பன முதல் வகையிலும்
"கேள் + மியா = கேண்மியா?"
"சென் + மியா = சென்மியா?"
என்பன இரண்டாம் வகையிலும்
சி, தி, மி என்பன
குற்றியலிகர எழுத்துக்களாம்!
"குடதிசை" இல் 'கு' போன்று
சொல்லின் முதலில் வரும் உகரம்
உ, கு, சு, ணு என
தனிக் குற்றெழுத்தாக உள்ள உகரம்
நகு, பசு, மறு என
தனிக் குற்றெழுத்தைத் தொடரும் உகரம்
புறவு, அலமு, புழுவு என
இரு குறிலைத் தொடரும் உகரம்
"தள்ளியிருமு" இல் 'மு' போன்று
இரு எழுத்துக்களுக்கு மேல் வரும்
சொல்லின் ஈற்றில்
கு, சு, டு, து, பு, று தவிர்ந்த உகரம்
எல்லாமே முற்றியலுகரம் தான்!
குறிலுக்கு ஒரு மாத்திரையாயினும்
குற்றியலுகரத்தில் வரும்
உகரத்திற்கும்
குற்றியலிகரத்தில் வரும்
இகரத்திற்கும்
குறுகி ஒலிப்பதால் அரை மாத்திரையாம்!
குறுகி ஒலிக்கும் எழுத்துக்கள்
மாத்திரையின் அளவை மாற்றும்
அவற்றைக் குறுக்கங்கள் என்போம்!
'ஐ' என்னும் உயிருக்கு
மாத்திரை இரண்டு - அது
ஒரு மாத்திரையாகக் குறைந்து
தன் வடிவம் மாறாமலோ
தன் வடிவம் திரிந்தோ
சொல்லுக்கு இடையிலும்
முதலிலும் ஈற்றிலும்
வருகின்ற வேள குறுகி ஒலிப்பதால்
ஐகாரக் குறுக்கமாம்!
"ஐந்தவித்தா னாற்ற " என்று (25 ஆம் குறள்)
தொடரும் குறளடியிலே
'ஐ' தன் வடிவம் மாறாது
குறுகி ஒலித்திடினும்
செய்யுள் நிலையில் 'நேர்' என்றே
அலகிடப்படுகிறதே!
"வையத்துள் வாழ்வாங்கு " என்று (50 ஆம் குறள்)
தொடரும் குறளடியிலே
'ஐ' தன் வடிவம் திரிந்து
'வை' என்று வந்தே
குறுகி ஒலித்திடினும்
'நேர்' என்றே அலகிடப்படுகிறதாம்!
"மனத்துக்கண் மாசில னாத லனைத்தற" என்ற
அடியின் ஈற்றுச் சீரான
"லனைத்தற" இல் 'ஐ' தன் வடிவம் திரிந்து
சொல்லுக்கு (அ)சீர்க்கு இடையே
குறுகி ஒலிப்பதால்
நெடில் 'ஐ' குறிலாகிறதே!
"வீழ்நாட் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்" என்ற
அடியின் இரண்டாம் சீரான
"படாஅமை" இல் ஈற்றில்
ஐகாரம் தனது வடிவம் திரிந்து
குறுகி ஒலிப்பதால்
நெடில் 'ஐ' குறிலாகிறதே!
'ஔ' என்னும் உயிருக்கு
மாத்திரை இரண்டு - அது
ஒரு மாத்திரையாகக் குறைந்து
மொழிக்கு முதலில் வந்து குறுகுவதால்
ஔகாரக் குறுக்கமாம்!
"உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்" என்ற
அடியின் மூன்றாம் சீரான
"கௌவை" இல் முதலில் வரும்
'ஔ' தன் வடிவம் திரிந்து
குறைந்து ஒலித்திடினும்
செய்யுள் நிலையில் 'நேர்' என்றே
அலகிடப்படுகிறதே!
ணகர, னகர மெய்களுக்குப் பின்னும்
வகர மெய்க்கு முன்னும்
அரை மாத்திரையான மகரம்
கால் மாத்திரையாகக் குறுகி ஒலிப்பதே
மகரக் குறுக்கமாம்!
ஈரசைச் சீர்களான
மருளும், போலும் என்பவற்றை
ஓரசைச் சீர்களாக்கினால்
மருண்ம், போன்ம் எனக் குறுகும் வேளை
தோன்றும் 'ம்' உம்
"தரும் வளவன்" என்பதில்
'வ' இற்கு முன்னுள்ள 'ம்' உம்
மகரக் குறுக்கங்களே!
தனிக் குறிலை அடுத்து வரும்
லகர, ளகர மெய்கள்
ஈற்றெழுத்தாகவுள்ள சொல்லுக்கு
பின்னொட்டாக வரும்
சொல்லின் முதலில் வரும் தகரம்
சொற்புணற்சியின் போது
ல், ள் ஆகியன ஆயுதமாகத் திரிந்து
இணையுமாம் - அதுவே
ஆயுதக் குறுக்கமாம்!
எடுத்துக்காட்டாக
கல் + தீது = கஃறீது எனவும்
அல் + திணை = அஃறிணை எனவும்
முள் + தீது = முஃடீது எனவும்
ஆயுதக் குறுக்கம் அமையுமே!
இங்கு
அரை மாத்திரை ஆயுதம்
கால் மாத்திரையாகக் குறுகி ஒலிக்கிறதே!
சொற்களை ஆக்கும்
எழுத்துக்களைப் படித்தோம்...
எழுத்துக்களான சொற்கள் தான்
பாக்களில் வரும் சீருமல்ல...
அசைகளால் ஆகும் சீர்கள்
தளைக்கேற்ப அமைவதால்
சொற்கள் கூட உடையலாம்!
உடையும் சொல்லை ஒட்டவோ
பிரியும் சொல்லைச் சேர்க்கவோ
பொருள் தரும் வகையில்
அசை, சீர், தளைக்கு இசைவாக
பாக்களைப் புனைவதற்கு
சொற்புணர்ச்சியும் தேவை தானே!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!