நின்ற சொல்லொடு
வந்த சொல் இணைவதே
சொற்புணற்சியாம்!
சொற்புணற்சியின் போது
சொற்களில் மாற்றம் நிகழாமல்
இணையும் செயலே
இயல்புப் புணற்சியாம்!
எடுத்துக்காட்டாக
"தமிழ் + வளம்=தமிழ் வளம்" என்று
புணருவது இயல்பே!
நின்ற சொல்லுடன்
வரும் சொல் சேரும் பொழுது
சொற்களில் மாற்றம் நிகழுமாயின்
விகாரப் புணற்சியாம்!
தோன்றல், திரிதல், கெடுதல் என
மூவகை விகாரமுண்டாம்!
"ஏழை + குடும்பம்= ஏழைக்குடும்பம்" என்பதில்
'க்' எனும் மெய் தோன்றியமையே
தோன்றல் விகாரப் புணற்சியாம்!
"வில் + பொறி=விற்பொறி" என்பதில்
'ல்' ஆனது 'ற்' ஆகத் திரிந்தமையே
திரிதல் விகாரப் புணற்சியாம்!
"மரம் + வேர்=மரவேர்" என்பதில்
'ம்' எனும் மெய் கெட்டுப் போவதே
கெடுதல் விகாரப் புணற்சியாம்!
இயல்புப் புணற்சியும்
விகாரப் புணற்சியும்
உரைநடைக்கும்
செய்யுளுக்கும் உதவும் வேளை
செய்யுளுக்கு உரித்தானதாய்
செய்யுள் விகாரமும் உண்டே!
இயல்பிலும் விகரத்திலும்
சொற்கள் புணரும் போது
நெறிமுறைகள் சிலவற்றை
பின்பற்றவும் வேண்டுமே!
உயிர்க்கு முன்னும்
உயிர்மெய்க்கு முன்னும்
ஒரு, ஓர், அது, அஃது என்பன
வேறுபட்டே புணருமாம்!
வந்த சொல்லின் முதலெழுத்து
உயிராக இருப்பின்
நின்ற சொல்
ஓர், அஃது என்றே புணருமாம்!
வந்த சொல்லின் முதலெழுத்து
உயிர்மெய்யாக இருப்பின்
நின்ற சொல்
ஒரு, அது என்றே புணருமாம்!
வந்த சொல் ஆயிரமாயிருக்க
நின்ற சொற்களான
ஒரு, இரு என்பன
ஓர், ஈர் என்று மாறி
ஓராயிரம், ஈராயிரம் என்றே புணருமாம்!
'யா' வினது ஒலி
அகர ஒலி போல ஒலித்தலால்
விதிவிலக்காக
'யா' வின் முன் வரும்
ஒரு, அது என்பன
ஓர், அஃது என்றே புணருமாம்!
உயிருக்கு முன் 'ஓடு' என்றும்
உயிர்மெய்க்கு முன்னே 'ஒடு' என்றும்
உயிருக்கு முன் 'ஆன்' என்றும்
உயிர்மெய்க்கு முன்னே 'ஆல்' என்றும்
உயிருக்கு முன் 'தோறும்' என்றும்
உயிர்மெய்க்கு முன்னே 'தொறும்' என்றும்
சொற்கள் புணரும் வகையில்
தொடர் அமையுங்களேன்!
எடுத்துக்காட்டாக
உயிருக்கு முன்னே
பெருமை(பெரிய) + ஆசிரியர்=பேராசிரியர்;
சிறுமை(சிறிய) + அன்னை=சிற்றன்னை;
என்றும்
உயிர்மெய்க்கு முன்னே
பெருமை(பெரிய) + கதை=பெருங்கதை;
சிறுமை(சிறிய) + கதை=சிறுகதை;
என்றவாறும்
புணருவதைப் பாருங்களேன்!
இன்னும் சொல்லப் போனால்
ஓர் அறிவிப்பு (ஓர்)
ஒரு நற்செய்தி (ஒரு)
ஈர் ஆயிரம் / ஈராயிரம் (ஈர்)
இரு நன்மைகள் (இரு)
அஃது ஒரு நாய் (அஃது)
அது கருங்குரங்கு (அது)
கற்றாரோடு ஏனையவர் (ஓடு)
விலங்கொடு மக்கள் (ஒடு)
நீரான் அமையும் (ஆன்)
வாய்மையால் வெல்லலாம் (ஆல்)
வெளிப்படுந்தோறும் இனிது (தோறும்)
களித்தொறும் கள்ளுண்டல் (தொறும்)
என்றெல்லோ புணருமாம்!
'உடன்படு மெய்' என்ற
எழுத்து ஒன்று இருப்பதை
நினைவிற் கொள்வீர்களா?
நின்ற சொல்லின் ஈறு உயிராயும்
அதாகப்பட்டது
உயிரெழுத்து ஒலியாயும்
வரும் சொல்லின் முன்னும்
வருவது உயிராயும் இருப்பின்
உயிரும் உயிரும்
ஒன்று சேராது என்பதால்
புணர்ச்சிக்கு இடமில்லையாம்!
சொற்கள் புணர வேண்டுமாகையால்
ஈருயிர்களுக்கிடையே
மெய்யொன்று தோன்றி
ஓருயிரைத் தான் பெற்ற உடம்பே
உடம்படு மெய்யாம்!
உடம்பை அடுத்து வரும்
மெய் என்பதை விட
சொற்கள் புணர உடன்படும்
மெய் என்றே கருதி
ஈருயிர்களுக்கிடையே
தோன்றும் மெய்யை
உடன்படு மெய் என்போமே!
நின்ற சொல்லின் ஈற்றில்
இ, ஈ, ஐ ஆகியவற்றில்
ஏதுமொன்று வரின்
இடையில் யகர(ய) மெய்யும்
'ஏ' இன்றி ஏனைய எட்டுக்கும்
இடையில் வகர(வ) மெய்யும்
ஏகாரம்(ஏ) தோன்றின்
யகர(ய), வகர(வ) மெய்யிரண்டும்
உடன்படு மெய்யாகத் தோன்றுமே!
ஏகாரத்தில்(ஏ) முடியும் நின்ற சொல்
பெயர்ச்சொல்லாயின் வகரமும்(வ்)
இடைச்சொல் - அதாவது
அசைநிலையாயின் யகரமும்(ய்)
பண்புச் சொல்லுக்குத் தான் இரண்டும்
உடன்படு மெய்யாகுமே!
யகர(ய்) உடன்படு மெய்யிற்கு
கிளி(இ) + அழகு = கிளியழகு
தீ(ஈ) + அழல் = தீயழல்
மை(ஐ) + அழகு = மையழகு
எடுத்துக்காட்டாகுமே!
வகர(வ்) உடன்படு மெய்யிற்கு
பல(அ) + இடங்கள் = பலவிடங்கள்
பலா(ஆ) + அடியில் = பலாவடியில்
நடு(உ) + இடம் = நடுவிடம்
பூ(ஊ) + அழகு = பூவழகு
எ(எ) + அழகு = எவ்வழகு
(இங்கு 'எ' - வினாச்சுட்டு)
நொ(ஒ) + அகலும் = நொவ்வகலும்
இங்கு 'நொ' - துன்பம்)
கோ(ஓ) + இல் = கோவில்
கௌ(ஔ) + அழுக்கு = கௌவழுக்கு
(இங்கு கௌவுதல் - திருடுதல்; அழுக்கு - குற்றம்)
எடுத்துக்காட்டாகுமே!
நின்ற சொல் ஈறு ஏகாரத்திற்கு
அவனே(ஏ) + அழகன் = அவனேயழகன்
(இங்கு அசைநிலை - இடைநிலை ஏகாரம்)
ஏ + எலாம் = ஏவெலாம்
(இங்கு ஏ-அம்பு பெயர்ச்சொல்)
சே(ஏ) + அடி = சேயடி
(இங்கு சே-செம்மை பண்புச்சொல்)
சே(ஏ) + அடி = சேவடி
(இங்கு சே-செம்மை பண்புச்சொல்)
எடுத்துக்காட்டாகுமே!
நன்னூலர் காலத்தில்
ஏகாரத்திற்கு எப்படியோ
தொல்காப்பியர் காலத்தில்
ஆகாரத்திற்கும் அப்படியாமே!
நின்ற சொல் ஈறு ஆகாரம்(ஆ)
பெயர்ச்சொல் ஈறாயின் வகரமும்
அகரம் நீண்டு நின்ற
சுட்டுச்சொல் ஈறாயின் யகரமும்
உரிச்சொல் ஈறாயின் யகரமும்
உடன்படு மெய்யாகுமாமே!
இதோ
ஆ + ஈன = ஆவீன
(இங்கு ஆ-பசு பெயர்ச்சொல்)
ஆ + இடை = ஆயிடை
(இங்கு அகரச்சுட்டு நீண்டு நின்றது)
மா + இருஞாலம் = மாயிருஞாலம் (பேருலகம்)
(இங்கு மா-உரிச்சொல்)
என்பன எடுத்துக்காட்டாம்!
நின்ற மெய்யீற்றுக்கு
அடுத்து உயிர் வந்தால்
வந்த உயிர்
நின்ற மெய்யின் மேல் ஏறுமே!
எடுத்துக்காட்டாக
ஆண் + அழகு = ஆணழகு ஆகுமே!
"உயிர்வரின் உக்குறள்
மெய்விட்டோடும்" என்பது
நின்ற சொல்
குற்றியலுகர ஈறாயின்
வந்த சொல்லின் முதல் எழுத்தான
உயிர் அதன் மீது ஏறுதலேயாம்!
"கொக்கு + அழகு = கொக்கழகு" என்பதில்
'கு' இலிருந்த 'உ'
'க்' ஐ விட்டோட
'க்' கோடு அகரம் இணைந்தமை
எடுத்துக்காட்டு ஆகுமே!
எண்ணிப்பாரும்
காசு + அகலும் = காசகலும்
நாடு + என்னுயிர் = நாடென்னுயிர்
காது + இரண்டு = காதிரண்டு
மார்பு + அகன்றது = மார்பகன்றது
ஆறு + அழகு = ஆறழகு
எல்லாம் எடுத்துக்காட்டே!
சொற்கள் புணரும் வேளை
மிகும், மிகா இடங்கள்
வரும் முறை காண்போமே!
(தொடரும்)
முன்னையதைப் பார்க்க
அருமை ஐயா... தெரிந்து கொள்ள வேண்டியது... தொடர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதொடரும்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி.
நான் தங்கள் வலைக்குப் புதியவன்.
பதிலளிநீக்கு”தமிழ்நண்பர்கள்” வழியாக வந்தவன்.
எனது வலையில் நான் எழுதிய “ஒரு தோழனின் காதல் கடிதம்” எனும் எளிய வகைக் கவிதைத் தொடர் பற்றியும்
மற்றும் “மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்” சிற்றிலக்கியம் பற்றியும் தங்கள் கருத்தறிய ஆவல்.
சொல்வீரா கவிஞரே? - நா.முத்துநிலவன்.
http://valarumkavithai.blogspot.in/
தங்கள் வேண்டுதலை ஏற்றுக்கொள்கிறேன். அடிக்கடி தமிழ் நண்பர்கள் தளப் பக்கம் வாருங்கள். தங்கள் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள். தங்கள் தளத்திற்கு வரும் போதெல்லாம் கருத்துப் பதிகிறேன்.
பதிலளிநீக்குநன்றி.