Translate Tamil to any languages.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

எழுத்து


நான் கற்ற கல்வியால்
நான் புகழ் ஈட்டியதில்லை...
நான் செய்த பணியா(தொழிலா)ல்
நான் புகழ் ஈட்டியதில்லை...
நான் பழகிய ஆண் நட்பால்
நான் புகழ் ஈட்டியதில்லை...
நான் பழகிய பெண் நட்பால்
நான் புகழ் ஈட்டியதில்லை...
நான் ஈடுபட்ட எதனாலும்
நான் புகழ் ஈட்டியதில்லை...
ஆனால்,
நான்
என் எழுத்தால் அல்லவா
உலகெங்கிலும் இருந்து
புகழ் வந்து சேர வாழ்கின்றேன்!
வெற்றுத்தாளில்
வெறும் எழுதுகோலைத் தேய்த்து
என்ன தான் எழுதினாலும்
புகழ் வந்து சேருமென
எண்ணிவிட முடியாது தான்!
எழுத்தை வாசிப்பவருக்கு;
மகிழ்வாகப் பொழுதுபோக்கவோ
வாசிக்கையில் களிப்படைவதற்கோ
அறிவினைப் பெருக்கவோ
ஊர்ச் செய்திகளை உவமையோடு அறியவோ
நாளைய நடப்புகளை எண்ணவோ
சிறந்த முடிவுகளை எடுக்கவோ
உதவும் எழுத்தாக இருப்பின்
புகழ் வந்து சேர வாய்ப்புண்டாம்!
நான்...
எழுத்தைப் பற்றி எழுதியளவுக்கு
என் எழுத்தில்
எதுவும் இருக்க வாய்ப்பில்லைத் தான்...
என்றாலும் பாருங்கோ
தமிழ்நண்பர்கள் தளத்திலுள்ள
என் பதிவுகளைக் கண்டு
என் எழுத்தை வாசிப்பவருக்கு
சில வேளை சிரிப்பும் வரலாம்...
வெற்றுத்தாளில்
வெறும் எழுதுகோலைத் தேய்த்து எழுதிய
எனது
கையெழுத்துப் பதிவைப் பார்த்தால்
வயிற்றைக் குமட்டிச் சத்தி வருமளவுக்கு
குப்பையாய் எழுதியிருப்பேன்...
எட்டாம் வகுப்பில படிக்கையிலே
கணக்குப் பதிவேட்டில
இரட்டைச் சிவப்புக் கோடுகளுக்குள்ளே
"குப்பை" என்று எழுதி
ஒப்பமிட்ட ஆசிரியர்
போதாக்குறைக்கு
நல்ல அடியும் போட்டதே
எழுத்தால்
நான் வேண்டிய முதற் பரிசு!
என்னவோ எப்படியோ
குப்பையாய் எழுதினாலும்
எழுத்து நடையில் அழகிருந்தால்
வாசிப்பவருக்கு
வாசிப்புப் பசி தீர்த்தால்
எழுத்தால் புகழ் ஈட்டலாமென
கணினியில் தட்டச்சுச் செய்தெல்லோ
இணையத் தளத்தில் பதிவிட
தொலை தூரத்து வாசகர்
குறும் செய்தியில் வாழ்த்துகின்றனரே!
எவரும் எழுதலாம்
எழுத்துக்குச் சக்தியுண்டு...
எழுதுவேன் எனத் துணிந்துவிட்டால்
எழுதுகோலும் துணைநிற்கும்...
கையெழுத்து
அழகில்லாது போனாலும்
சொல்லவேண்டிய செய்தியை
அழகான எழுத்து நடையில்
வெளிப்படுத்தினால்
உன் எழுத்துக்கு நிகர் வேறேது!

குறிப்பு: என்னை இணையத்தள இலக்கிய உலகிற்கு 'தமிழ்நண்பர்கள்' தளமே அறிமுகம் செய்தது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!