நம்மாளுகள்(மனிதர்கள்)
வாழ்க்கையின் கண்ணாடி!
காலங்கள்
வரலாற்றின் கண்ணாடி!
கலைஞர்கள்
மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி!
நிகழ்வுகள்
சான்றுகளின் கண்ணாடி!
"சான்றுகள்" என்ற தலைப்பில் நான் எழுதிய பாவிது. ஈழப்போரில் எரிந்துபோன பல நூறு படைப்புகளில் இதுவும் ஒன்று. இப் பா(கவிதை) பற்றிய எனது எண்ணங்களை உங்களுடன் பகிர முனைகிறேன்.
நம்மாளுகள்(மனிதர்கள்)
வாழ்க்கையின் கண்ணாடி!
இவ்வரிகள் சொல்லுவதாவது; ஆணும் பெண்ணும் மணமுடித்து வாழ்ந்த வாழ்க்கையின் சான்றாகப் பிள்ளைகள்.
காலங்கள்
வரலாற்றின் கண்ணாடி!
இவ்வரிகள் சொல்லுவதாவது; நேற்று, இன்று, நாளை என்பது காலங்கள். ஆயினும், காலங்களை மீட்டால் கண்முன்னே வருவது கடந்தகால வரலாறு.
கலைஞர்கள்
மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி!
இவ்வரிகள் சொல்லுவதாவது; எழுத்தாளர்கள், பாவலர்கள்(கவிஞர்கள்), நகைச்சுவையாளர்கள், நடிகர்கள் எனக் கலைகளை வெளிப்படுத்துவோர் கலைஞர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். கலைஞர்களின் வெளிப்பாடு புலம் சார்ந்து இருக்கும். அந்தப் புலம் தான் அவர்கள் வாழ்ந்த, வாழும் சூழல் அதாவது மக்களாய(சமூக)ம் என்று கூறலாம்.
நிகழ்வுகள்
சான்றுகளின் கண்ணாடி!
இவ்வரிகள் சொல்லுவதாவது; இயற்கை நிகழ்வுகள், நம்மவர் நடாத்தும் செயற்கை நிகழ்வுகள் யாவும் நிகழ்வுகளே! ஒவ்வொரு நிகழ்விலும் நம்மாளுகள்(மனிதர்கள்), காலங்கள், கலைஞர்கள் இடம்பெறுவர். எனவே, எல்லாவற்றின் சான்றுகளும் இங்கே தான் பகிரப்படுகிறது.
எடுத்துக்காட்டாக பாவ(கவிய)ரங்க நிகழ்வில் நான் பா(கவிதை) பாடினேன். அந்நிகழ்விலே காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களின் மூத்தமகன் ஜீவலிங்கம். வடமொழியில ஜீவலிங்கம் தமிழில உயிரழகன், புனைபெயராக யாழ்பாவாணன் அவர்கள் பா(கவிதை) பாடுவாரென நிகழ்வின் தலைவர் அறிவித்தார்.
நானோ,
பாவ(கவிய)ரங்கச் சுவைஞர்களே!
சின்னப் பொடியன் - நான்
படிக்கும் பாவினைச் சுவைக்க முன்
2004 கடற்கோள்(Tsunami) என்பதே
என் தலைப்பென்று தொடங்கினேன்...
கடற்கோள்(Tsunami) வந்தது
மடக்கெனத் தன்வேலை முடித்துச் சென்றதே!
கடற்கோள்(Tsunami) என்னவென்று
சுடச்சுடச் சொல்வதற்காய்
ஆச்சியின் ஆச்சி படித்த
பூச்சிகள் அரித்துண்ட நூலில் இருப்பதாய்
உலகை ஆண்ட தமிழன்
கடைசியாக ஆண்ட மண்
பாண்டியன் ஆண்ட மண்
குமரிக்கண்ட(லெமூரியா-Lemuria Continent)த்தில்
ஒரே நிலப்பரப்பாயிருந்த
இந்தியாவையும் இலங்கையையும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
இரண்டு நிலப்பரப்பாக்கியதும் - இந்த
கடற்கோள்(Tsunami) தான் என்றறிவீரா?
இப்படிப் படித்து முடித்ததும் இத்தனை தலைவர்கள் இருந்தும் சொல்லாத செய்தியாக இந்திய-இலங்கைத் தமிழர் ஒரு தாய் பிள்ளைத் தொப்புள் கொடி உறவென்பதை சின்னக் கலைஞன் சொன்னதாக நிகழ்வின் தலைவர் கூறிமுடிக்கிறார்.
மேற்படி நிகழ்வின் சுருக்கப்படி "ஒரு கலைஞன் காலத்தின் கண்ணாடி" என்றும் கூறலாம். சிலர் கலைஞன் காலத்தின் கண்ணாடி என்றும் அழைக்கிறார்கள். வேறு சிலர் பாவலன்(கவிஞன்) காலத்தின் கண்ணாடி என்றும் அழைக்கிறார்கள்.
"கவிஞர்கள் காலத்தின் கண்ணாடி. அதனால் அவர்கள் நற்கருத்தைத் தான் கூறவேண்டும் என்பது என் இனிய வேண்டுகொள்." என்று நண்பர் ஒருவர் தெரிவித்தார். நானும் அவருக்கு "தங்கள் கருத்தை வரவேற்கிறேன். அதற்கு மாற்றுக் கருத்துக் கிடையாது." என்றும் பதிலளித்தேன். இந்தக் கருத்தாடலே இத்தனையும் என்னை எழுதத் தூண்டியது. நானோ 1987 இலிருந்து எழுதுகிறேன். நல்ல வழிகாட்டலை வெளிப்படுத்தவே நானும் எழுத்தைப் பாவிக்கிறேன்.
பாவலன்(கவிஞன்) காலத்தின் கண்ணாடி என்றால் நற்கருத்தைத் தான் கூறவேண்டும் என்றால் மேலே நான் பத்திரிகையில் பொறுக்கிப் பாவ(கவிய)ரங்க நிகழ்வில் பாடியது போன்று எழுதுவதா? இல்லவே இல்லை!
படைப்பு; படைப்பாக்கச் சூழலையும் அதற்கான தீர்வையோ வழிகாட்டுதலையோ கொண்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக:
ஒரு மணி நேரம்
மகிழ்வாய் இருக்கலாம்
ஒரு நூறு போதுமென்று
உரசினாள் ஒருவள்!
உனக்கு
ஒரு நூறல்ல
பல நூறு தரலாம்
என் வீட்டு
வேலைக்காரியாகிவிடு!
எனக்கு
ஆறு பெட்டை ஆறு பொடியன்
மொத்தம் பன்னிரண்டையும்
நீ தான்
ஒழுக்கமாக வளர்த்துப் பேணி
பள்ளிக்கும் அனுப்ப வேண்டும்!
இன்றுடன்
தெருப் பொடியளுக்குப் பல்லைக் காட்டாமல்
என் வீட்டில்
வேலைக்குச் சேர்ந்து விடு
முப்பதாயிரம் கூலி தாறேனென்றதும்
வந்தவள் தான்
இன்று
எதிர் வீட்டில்
மருத்துவர் மனைவியாகி
இரண்டு பிள்ளைக்குத் தாயுமானாளே!
"விலைப்பெண்ணும் மருத்துவர் மனைவியானாள்" என்ற தலைப்பில் ஆக்கப்பட்ட பாவிது. விலைப்பெண்ணும் வேலை பெற்று, வீட்டாரின் பிள்ளைகளுடன் இணைந்து வீட்டில் படித்தாளோ, வருவாயைப் பெற்று வெளியில் படித்தாளோ மருத்துவர் மனைவியாகத் தகுதி பெற்றுவிட்டாளே! என எழுதியதின் படி நற்கருத்தைப் பாவலன் கூறுகிறார் எனலாம்.
ஆளுக்கொரு கொடி
ஆளுக்கொரு கட்சி
ஆளுக்கொரு இனமாகப் பிரிந்து வாழும்
தமிழா
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
என்றறிந்தால்
இன்றே தமிழனென்று ஒன்றுபடு!
இப் பாவிலும் "பிரிந்து தமக்குள்ளே மோதிக்கொள்ளும் தமிழரை ஒன்றுபடு" என அழைப்பதும் பாவலன் கூறும் நற்கருத்தே!
நண்பர்களே! "பாவலன்(கவிஞன்) காலத்தின் கண்ணாடி" என்பதை நான் ஏற்கமாட்டேன். என் அறிவிற்கெட்டியவரை "கலைஞர்கள் காலத்தின் கண்ணாடி" எனலாம். "கலைஞர்கள் மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி" என்றும் அழைக்கலாம். ஏனென்றால், பாவலன்(கவிஞன்) மட்டும் கலைத்திறனை வெளிப்படுத்துவதில்லையே! கலைத்திறனை வெளிப்படுத்தும் எல்லாத்துறைக் கலைஞர்களுக்கும் நற்கருத்தை வெளிப்படுத்த வேண்டிய கடமையுள்ளதால்; "கலைஞர்கள் மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி" என உணர்ந்து நற்கருத்தும் நல்வழிகாட்டலும் உள்ள படைப்புகளை ஆக்கி வெளியிடுவீர்களென நம்புகிறேன்.
நண்பரே தங்களால் கூகிள்சிறி தளத்தில் பகிரப்பட்ட இந்த பதிவு கூகிள்சிறி தளத்தின் 6000 ஆவது பதிவு.தங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே.
பதிலளிநீக்குநண்பரே! தங்களின் கூகிள்சிறி தளத்திற்கு சின்னப்பொடியன் யாழ்பாவாணின் ஒத்துழைப்புத் தொடர்ந்து கிடைக்கும். முன் பின் அறியாது, முகம் நிறம் அறியாது, ஆள் அடையாளம் ஏதுமறியாமல் தங்களின் கூகிள்சிறி தளத்திற்குள் நுழைந்து பதிவுகளை மேற்கொள்ள அனுமதி தந்த தங்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!