Translate Tamil to any languages.

வெள்ளி, 22 ஜூன், 2018

உங்களாலும் பாப்புனையவும் பாடல் புனையவும் முடியுமே!


எல்லோருக்கும் பாக்கள் புனையும் ஆற்றல் உண்டு. அவரவர் அதனை வெளிக்கொணருவதால் தான் பாவலராக/ கவிஞராகத் தலை நிமிர்ந்து நடைபோடுகின்றனர். முயன்றால் முடியாதது ஏதுமுண்டோ? ஆகையால், "பாப்புனைவது (கவிதை ஆக்குவது) பாடல் புனைவது எப்படியென்று எடுத்துரைத்தால் எல்லோரும் பாவலராகலாமே!" என மேற்கொண்ட சிறு முயற்சி இது.

கண்ணில் பட்டதை பா/ கவிதை நோக்கில் பார்க்கும் போது பா/ கவிதை புனைய முடிகிறது. எடுத்துக்காட்டாகக் காற்றிற்கு மரங்கள் (பனை/ தென்னை உட்பட) ஆடுகின்றன. அதனைப் பா/ கவிதை நோக்கில் பார்க்கும் போது கீழ்வருமாறு பா/ கவிதை புனைய முயன்று பார்க்கலாம்.

வீசும் காற்றோடு
ஏட்டிக்குப் போட்டியாக மோதி
பனையும் தென்னையும்
தள்ளாடுவதைக் கண்டதும்
கள்ளைத் தருவதும் அவை தானே
என்றெண்ணத் தோன்றுகிறதே!

"காற்றுக்குத் தென்னை ஏன் ஆடுகின்றது. அது தானே கள்ளையும் தருகின்றது." எனக் கவியரசர் கண்ணதாசன் தனது நூலொன்றில் குறிப்பிட்டிருந்தார். அதனையே மேற்படி பாப்புனையப் பாவித்துள்ளேன். சரி! அவரவர் வீட்டில் ஆளையாள் பாருங்க... அவர்களைப் பா/ கவிதை நோக்கில் பார்க்கும் போது கீழ்வருமாறு பா/ கவிதை புனைய முயன்று பார்க்கலாம்.

அம்மா! - அவர் தான்
என்னை ஈன்ற படைப்பாளி!
எனக்கு அன்பைத் தரும் கொடையாளி!

அப்பா! - அவர் தான்
படி படியென்று அறிவை ஊட்டியவர்!
அடிக்காமல் அச்சுறுத்தி நல்லாள் ஆக்கியவர்!

அக்கா! - அவர் தான்
தானுண்பதிலும் பாதி எனக்குத் தருவார்!
பிழைவிட்டால் அப்பாவிடம் மாட்டுவார்!

அண்ணா! - அவர் தான்
அடிக்கடி அடிப்பார்; அழுவேன்!
படித்தால் அடிக்காது அணைப்பார்!

தம்பி! - அவர் தான்
அன்போடு அண்ணன் என்பார்!
அடிப்பேனென அஞ்சிப் பண்போடு இருப்பார்!

தங்கை! - அவர் தான்
அம்மாவின் சேலைக்குள் அடிக்கடி ஒழிப்பார்!
அப்பாவோடு சேர்ந்து என்னை எதிர்ப்பார்!

என் வீட்டு நாய்! - அது தான்
எமக்கு முதன்மைப் பாதுகாவலர் என்பேன்!
நன்றிக்கு நற்சான்றிதழ் நம்ம நாய் தான்!

நம்ம வீடு! - அது தான்
என்றும் அமைதியான நல்ல வீடு!
இன்றும் வயிற்றுக்குக் கேடு இல்லை!
அப்பாவின் உழைப்பே அதற்கு விலை!

இனி வீட்டிற்கு வெளியே வந்து பாருங்கள்... பகலவன், நிலா, வானம், உலகு (பூமி), மரங்கள், மழை, மனிதர்கள், இயற்கை ஆகியவற்றைப் பா/ கவிதை நோக்கில் பார்க்கும் போது கீழ்வருமாறு பா/ கவிதை புனைய முயன்று பார்க்கலாம்.

பகலவன் - அவன் தான்
சுட்டெரிக்கும் வெயிலை வழங்கி
மழையைத் தருவிக்க உதவினாலும்
என் தலையை வெடிக்கச் செய்வான்!

நிலா - அவள் தான்
பாவலரின் பாக்களில் கருப்பொருள் தான்
நம்மாளுங்க கண்களில் தான்
அடிக்கடி வந்து போகும்
அமாவாசை, பூரணை (பௌர்ணமி) போலத் தான்!

வானம் - அது தான்
ஏழை வீட்டிற்கு ஒளியூட்டத் தடையாக
நிலவவளின் நிர்வாணத்தை மறைத்திட
சேலையாகப் போர்த்தி நிற்கிறதே!

உலகு (பூமி) - அது தான்
தொல்லை மேல் தொல்லை கொடுக்கும்
உலகெங்கும் நெருங்கி வாழும் மக்களை
தானே நொருங்கி உடையாமல் காக்கிறதே!

மரங்கள் - அவை தான்
நிழலைத் தந்தாலும் மழையைத் தரவுதவினாலும்
மனிதன் வெட்டி வீழ்த்துவதால்
உலகை (பூமியை) வெப்பமடையச் செய்கிறதே!

மழை - அது தான்
வேளாண்மைக்குத் துணைநின்று உதவினாலும்
கேட்பாரின்றி ஓட்டைக் குடிலுக்குள் நுழைந்து
ஏழையின் உடைமைகளை அழிக்கிறதே!

மனிதர்கள் - அவர்கள் தான்
தாங்கள் நலமாக வாழ்ந்தாலும் கூட
மாற்றார் மகிழ்வோடு வாழ்வைச் சுவைக்க
ஒத்துழைக்காத ஆறறிவு விலங்குகள்!

இயற்கை - அது தான்
உலகை ஆளும் ஆண்டவனின் படைப்பு
ஒத்துழைப்பவர்களுக்கு உதவும் அமைப்பு
ஒத்துழையாதோருக்கு எதிர்ப்பைக் காட்டும்!

இப்படித்தான் வீட்டிற்கு உள்ளே சரி, வீட்டிற்கு வெளியே சரி, மக்கள் வாழ்விலும் சரி, நாட்டு நிலைமையிலும் சரி உங்கள் பார்வை பா/ கவிதை நோக்கில் இருக்குமாயின் உங்கள் உள்ளத்தில் பா/ கவிதை புனையும் ஆற்றல் ஊற்றெடுக்கும். நீங்களும் பாவலராக/ கவிஞராகத் தலை நிமிர்ந்து நடைபோடலாம்.

பா/ கவிதை புனையும் ஆற்றல் உங்களுக்கு இருப்பின் திரை இசைப் பாடல் அல்லது பக்திப் பாடல் புனையும் ஆற்றல் இருக்க வேண்டுமே! அதற்குப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு, அதன் இசைக்கட்டுக்கு (மெட்டுக்கு) எழுதப் பழக வேண்டுமென்பார்கள். பெரும்பாலான பாடல்களில் ஒவ்வொரு அடியும் ஒரே ஒலியில் முடிவதைக் காணலாம். எடுத்துக்காட்டாகச் சில வரிகளைப் பாருங்கள்:

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
என்ற வரிகள் "மா" என்ற ஒலியில் முடிவதைக் காண்பீர்!

அத்தான்...என்னத்தான்...
அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி
என்ற வரிகள் "தான்" என்ற ஒலியில் முடிவதைக் காண்பீர்!

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
என்ற வரிகள் "தேன்" என்ற ஒலியில் முடிவதைக் காண்பீர்!

இவ்வாறான ஈற்றுச் சீர் ஈற்றொலி, எதுகை, மோனை அமையப் பாடல் புனையலாம். அதற்கும் எடுப்பு (பல்லவி), தொடுப்பு (அனுபல்லவி), கண்ணி (சரணம்) ஆகிய மூன்றும் தெரிந்தால் போதும்!

என் பாட்டைக் கேட்டுப் பாரேன்
என் வீட்டைக் காட்டித் தாறேன்
(என் பாட்டை)

என்றவாறு எடுப்பை எழுதிப்பாருங்க...

நானோ ஓட்டை வீட்டுக் காரன்
ஏனோ ஏழைப் பாட்டுக் காரன்
(நானோ)

என்றவாறு தொடுப்பை எழுதிப்பாருங்க...
இனி ஒவ்வொரு கண்ணி, கண்ணியாக போட்டுப்பாருங்க...

காலை கூலி வேலைக்கு போறேன்
மாலை கூலிக் காசோடு வாறேன்
உலையில அரிசி வெந்தாலும் பாரேன்
உறவுகள் உண்ணப் போதாது பாரேன்
(என் பாட்டை)
(நானோ)

விடிய விடிய வேலைக்கு போறேன்
வேலை முடியக் காசோடு வாறேன்
பெண்டில் விருப்புக்குச் செலவிடப் போறேன்
எண்ணிப் பார்த்தால் கைகடிக்கும் பாரேன்
(என் பாட்டை)
(நானோ)

வேலைக்குப் போறேன் காசோடு வாறேன்
மனைவியை மகிழ்விக்கப் பணமில்லைப் பாரேன்
பிள்ளைகளைப் படிப்பிக்கப் பணமில்லைப் பாரேன்
நாளும் கண்ணீர் வடிப்பதைப் பாரேன்
(என் பாட்டை)
(நானோ)

வயிற்றுப் பாட்டுக்கு வேலைக்குப் போறேன்
என்வீட்டுத் துயரை எண்ணிப் பாரேன்
மகிழ்வான வாழ்விற்கு உழைக்கப் போறேன்
மருந்தெடுக்கப் பணமின்றிக் கலங்குவதைப் பாரேன்
(என் பாட்டை)
(நானோ)

எடுப்பு , தொடுப்பு, கண்ணி என எழுதும் வேளை ஒவ்வொரு அடியிலும் ஈற்றுச் சீர் (இறுதிச் சொல்) ஒரே ஒலியெழுப்பல் (ஓசை) கொண்டதாக அமைய வேண்டும். "றேன்", "ரேன்" என முடியுமாறு நான் எழுதியுள்ளேன். எதுகை, மோனை முட்டிவரப் பாடும் வேளை இசைகூடும். இப்படி எழுதிப்பாருங்க... உங்களுக்கும் பாடல் புனையும் ஆற்றல் வருமே!

இத்தனையும் எழுதிய நான் யாரென்று கீழே அறிமுகம் செய்வதைப் பாரும். இது அவையடக்கம் அல்ல, உண்மை.

உண்மையைச் சொன்னால் குறைவில்லையே!
எழுதிய யாவும் பா/ கவிதை என்றறியேன்
உள்ளத்தில் தோன்றியதையே புனைகின்றேன்
எழுதிய நானும் பாவலனோ/ கவிஞனோ அல்லன்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!