Translate Tamil to any languages.

செவ்வாய், 15 நவம்பர், 2016

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 03

வலைப்பூக்களை நடாத்திய பின் முகநூலில் புகுந்து பலர் உலாவுகின்றனர். முகநூலில் உலாவிப் பின் தற்கொலை செய்ததாகச் செய்திகளும் அடிபட்டதே! ஆயினும் கணவன், மனைவி தாம் யாரென்று அறியாது முகநூலில் காதலித்த செய்தி ஒன்றை நாளேடு ஒன்றில் படித்தேன். அதனை எனது கைவண்ணத்தில் கதையாக வடித்துள்ளேன்.

* 
விடிகாலை சேவல் கூவி எழுப்பியும் கோவலன் எழும்பியதாகத் தெரியவில்லை. மாசிப் பனி மூசிப் பெய்தும் காதுக்குள்ள பஞ்சடைந்தும் சணல் நூல் சாக்கால காலை மூடியும் படுத்த கோவலனால எழும்ப இயலவில்லை. ஓட்டைக் கூரை வழியே, உடைந்த சாளரம் வழியே பகலவன் கதிர்வீச்சுப் பட்டதும் கோவலன் எழும்பிவிட்டான்.

மாதவியோ ஆறு மணிக்கு நினைவூட்டல் (Alarm) மணி ஒழுங்கு பண்ணி வைத்ததால் எழும்பிவிட்டாள். தானோ பல்லு விளக்காமல் வாயைக் கொப்பளிக்காமல் முதலாவதாகக் கணவனுக்கு இஞ்சி, ஏலக்காய் போட்ட தேனீரை ஆக்கி நீட்டினாள்.

மாதவி காலை உணவு தயாரித்து முடிக்கவும் கோவலன் வேலைக்குப் போகத் தயாராகவும் நேரம் எட்டாச்சு. கோவலன் சாப்பிட்ட பின் வேலைக்குச் சென்றதும் மாதவி அடுக்களைப் பக்கம் சுத்தம் செய்தாள். பின்னர் தனது காலைக் கடன்களைச் செய்து முடித்ததும் காலை உணவை உண்டு தேனீரும் குடித்தாள்.

அடுத்ததாக மாதவி மடிக்கணினியை இயக்கி, முகநூல் (Facebook) பக்கம் நுழைந்தாள். கருத்துகளை இட்டாள்; விருப்புகளைத் தெரிவித்தாள். வணிகனிடம் இருந்து வந்த தகவலைப் படித்தாள். மதியம் ஒரு மணிக்கு நேரில் சந்தித்து ஐயங்களை போக்கலாமென, அரசடிப் பிள்ளையார் வடக்கு வீதிக்கு வரச்சொல்லித் தகவல் இருந்தது. தகவலைப் படித்த மாதவி சட்டென்று மதியச் சமையலைத் தொடங்கினாள்.

கோவலன் தனது செயலகத்துக்கு வந்ததும் அன்றைய நாள் வேலைகளை சட்டுப் புட்டென முடித்தான். பின்னர், கணினியை இயக்கி, முகநூல் (Facebook) பக்கம் நுழைந்தான். நெடுநாள் முகநூல் (Facebook) வழியே பழகிய கண்ணகியின் பதிலைத் தேடினான். "மதியம் ஒரு மணிக்கு அரசடிப் பிள்ளையார் வடக்கு வீதிக்கு வந்தால் நேரில் சந்திக்கலாம்; ஐயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்." என்ற பதிலைக் கண்டதும் கோவலன் மகிழ்ந்தான்.

மாதவி மதிய உணவைச் சமைத்து முடித்ததும் வணிகனைச் சந்திக்கச் சந்திப்பு இடத்திற்குச் செல்லத் தயாராகினாள். அவ்வாறே தனது கண்ணகியைச் சந்திக்கக் கோவலனும் சந்திப்பு இடத்திற்குச் செல்லத் தயாராகினான்.

அந்த அரசடிப் பிள்ளையார் வடக்கு வீதியில் அருமையான சந்திப்பு நிகழ வசதியாக வெயிலைத் தணிக்க மழைக் குணம் வானில் தெரிந்தது. அங்கே வணிகனின் வரவை எண்ணி முதலில் மாதவி வந்து சேர்ந்தாள். அடுத்ததாகக் கண்ணகியின் முகத்தைக் காணக் கோவலன் வருகை தந்தான்.

சந்திப்பு நிகழ்வில் வணிகனைத் தேடி மாதவியும் கண்ணகியைத் தேடிக் கோவலனும் வந்த பின்னர் தான், முகநூல் (Facebook) வழியே போலிப் பெயரில் உறவைப் பேணிய உண்மை அவர்களுக்குள் தெரிய வந்தது. அங்கு அமைதியாக வணிகன் என்ற கோவலனும் கண்ணகி என்ற மாதவியும் நிலத்தை நோக்கி தலை குனிந்து நின்றனர்.

அந்த நேரம் பார்த்து ஒரு பெட்டை நாயை பத்துப் பொடியன் நாய்கள் துரத்தி வந்தன. அவை ஒன்றை ஒன்று பார்த்துச் சண்டை போட்டு வந்தன. அந்த நாய்களின் குரைப்பு, கண்ணகி மற்றும் வணிகனின் அமைதியைக் குலைத்தது. "மன்னிக்கவும்" என ஆளை ஆள் பார்த்து கெஞ்சினர்.

"முகநூலில் (Facebook) காட்டிய அன்பு, பற்று, நம்பிக்கை, விட்டுக்கொடுப்பு எல்லாவற்றையும் வீட்டிலும் காட்டியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?" என்று தங்கள் தவறுகளை தாமே உணர வைத்த அரசடிப் பிள்ளையாருக்கு நன்றி கூறியவாறு இருவரும்  புதிய இணையர்களாகப் புரிந்துணர்வோடு (Understanding) மதியவுணவு உண்ண வீட்டிற்குச் சென்றனர்.
* 

முகநூலில் (Facebook) வேறு பெயர்களில் உறவைப் பேணிய கணவன், மனைவி பற்றிய கதையை இப்படி என்னால் எழுத முடிந்தது. இவ்வாறு நீங்கள் எண்ணிப் பார்த்ததை எழுதினாலே சிறந்த கதைகளை உங்களாலும் ஆக்க முடியும்; முயன்று பாருங்கள்.

மூகநூலில் "தமிழ்க் கவிதைப் பூங்கா" என்ற குழுவினர் இனிய பா(கவிதை) புனையும் போட்டி நடாத்துகின்றனர். மூன்று அடிப் பா(கவிதை) என்றும் அதில் முதல் அடியின் முதல் சொல்லாகவும் மூன்றாம் அடியின் ஈற்றுச் சொல்லாகவும் அமையுமாறு பா(கவிதை) புனைய நாளுக்கொரு சொல் வழங்குகின்றனர். அதன் படிக்குச் சிறப்பாகப் பா(கவிதை) புனைந்த நான்கு பாவலர்களை நாளுக்கு நாள் தெரிவு செய்கின்றனர். இம்முயற்சியில் நீங்களும் பங்குபற்றக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.


மேற்படி போட்டிகளில் நான் புனைந்த பாக்(கவிதை)களைக் கீழே தருகின்றேன். அதேபோல நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்களேன்; வெற்றிபெற வாழ்த்துகள்.

பெண்ணே!
பெண்ணே! உன்னை அன்னை என்பேன்
என்னை பெற்று ஆளாக்கிய பணியாலே
நான் இறந்தாலும் மறவேன் பெண்ணே!

உறவு!
உறவு என்றுரைக்க எனக்கு எவருமில்லை
உண்பதற்கும் உடுப்பதற்கும் மிஞ்சிப் பணமில்லை
பணமில்லாத என்னையே வெறுக்கிறது உறவு!

பணமே!
பணமே! பலரைச் சேர்த்து வைப்பாய்!
பணம் இல்லை என்றதும் பிணமானேன்
உறவுகளை முறிக்க முனைவதும் பணமே!

நினைவே!
நினைவே உன்னைத் தடுக்க முடியல
நினைவில் உருளுவது உன் வேலையாச்சு
புண்ணாக்கும் பாதிப்பை மீட்கும் நினைவே!

உடைத்திடு!
உடைத்திடு உங்கள் அடிமையாகும் எண்ணங்களை
படைத்திடு உங்கள் வெற்றிபெறும் வண்ணங்களை
உங்கள் 'முடியாது' என்றெதனையும் உடைத்திடு!

கலையே!
கலையே என்னோடு ஒட்டிப் பிறந்தாயா
நான் பட்டுக் கெட்டுத் தெளிந்தமையாலே
நானே வடித்துக் கொள்கிறேன் கலையே!

இப்படி நீங்களும் பா(கவிதை) புனைய முயன்று பாருங்கள். தரும் சொல்களை அழகாகப் போட்டு, மூன்று அடிகளில் நற்செய்தியை வெளிக்கொணர முயலுங்கள். இப்படி முயன்று முயன்று பா(கவிதை) புனைவதில் ஆற்றல் பெற எனது வாழ்த்துகள்.

கதை, பா(கவிதை) புனைய வாசிப்புத் தேவை. வாசிப்பதால் அறிவு, எழுத்தாளுமை எனப் பலவற்றைப் பெருக்கலாம். தேடல் மிக்க ஆள்களால் தான், சிறந்த படைப்புகளை ஆக்க முடிகிறது. எனவே, நீங்களும் வாசிப்பை விரும்புங்கள். அதற்கு ஏற்ப வாசிப்பின் பயனைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியும் அறியலாம்.

வாசியுங்கள்... வாழ்நாள் அதிகரிக்கும்!

என்னங்க... முகநூலில் எல்லோரும் உலாவுறாங்க... முகநூலில் உலாவும் பலரில் சிலர் வலைப்பூக்களை அறியாதவர்களே! வலைப்பூக்களை நடாத்திய பின் முகநூலில் உலாவும் பலரும் உள்ளனர்.

முகநூலில் பதிந்து வைத்தால் தேடி எடுப்பது கடினம்.   வலைப்பூவில் பதிந்து வைத்தால் தேடி எடுப்பது இலகு. முகநூல் பதிவுகளை ஆய்வு செய்வதில் சிக்கல் உண்டு. வலைப்பூப் பதிவுகளை ஆய்வு செய்வதில் சிக்கல் இருக்காது.


எனவே, முகநூலில் படிக்கவோ பழகவோ பகிரவோ படைப்புகளை ஆக்குங்கள். ஆனால், ஆவணப்படுத்த எண்ணியிருப்பின் அல்லது ஆய்வுக்குட்படுத்த விரும்பின் வலைப்பூவே சிறந்தது. அறிவாளியின் அடையாளம் முகநூல் அல்ல; வலைப்பூ என்பதை மறந்துவிடாதீர்கள். ஆளுக்கொரு வலைப்பூவில் தங்கள் பதிவுகளைப் பேணிப் பகிர முன்வாருங்கள். 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!