Translate Tamil to any languages.

வெள்ளி, 18 நவம்பர், 2016

பாவலன் (கவிஞன்) ஆகுமுன் அறிவோம்!

பாவலன் (கவிஞன்) ஆக விரும்புவோர்
பாப்புனைய முன்னும் பாப்புனைகையிலும்
கீழான எண்ணங்கள் வந்தால் - கொஞ்சம்
மேலான எண்ணங்களாக மாற்றி
நல்ல எண்ணங்களைப் பகிரவும்
நல்ல எதிர்வைச் சுட்டியும்
நாட்டில் நல்லன விளையவும் - உன்
பாட்டில் புனைந்து காட்டிவிடு - உன்
பாவண்ணத்தைப் படிப்பவர் சுவைக்க - என்
எண்ணத்தில் பட்டதைப் பகிருகிறேன்!

பாவலன் (கவிஞன்) என்பான்
எண்ணி எண்ணிப் பார்த்து
(கற்பனையில் மிதந்து சென்று)
இங்கால இருந்து கொண்டே
கருங்கல் சுவருக்கு அங்கால
இருப்பதையும் துருவித் துருவி
வரிக்கு வரி விரிப்பவனே!

பாவலன் (கவிஞன்) என்பான்
எண்ணத் தோன்றியதையும் எண்ணி
(கற்பனையில் கண்டதையும் எண்ணி)
தெருவில் கண்டதையும் எண்ணி
தெருவில் கண்டவரையும் எண்ணி
கேலியும் நையாண்டியும் பண்ணி
பண்பாட்டைப் பேணும் வகையில்
வரிக்கு வரி விரிப்பவனே!

பாவலன் (கவிஞன்) என்பான்
காலம் கடந்ததும் உணருவீரென
காதலிக்காமல் இருந்தும் கூட
காதலித்தவன் போல எண்ணி
காதலின் முன்பின் விளைவை
வரிக்கு வரி விரிப்பவனே!

பாவலன் (கவிஞன்) என்பான்
கட்டினால் பட்டுத் தெளிவீரென
எவளுக்கும் தாலி கட்டாமலே
குடும்பம், அழகு (காமம்), வாழ்வு
எல்லாம் எப்படி என்றே
வரிக்கு வரி விரிப்பவனே!

பாவலன் (கவிஞன்) என்பான்
குப்பையைக் கிளறி விடும்
பெட்டைக் கோழியைப் போலின்றி
கல்லெறிந்து மக்களை நோகடிக்காமல்
சொல்லெறிந்து மக்கள் உள (மன) மாற்றி
நல்ல பண்பாட்டைக் காட்டி
நாட்டில் நல்லாட்சி மலர
வரிக்கு வரி விரிப்பவனே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!