Translate Tamil to any languages.

புதன், 30 நவம்பர், 2016

மின்நூல் (eBooks) வெளியீடுகள் மிகவும் தேவையா?

அச்சடித்த (Printed) வெளியீடுகளை அல்லது மின் (Electronic) வெளியீடுகளை அதாவது மின்நூல்களை வெளியிடுவதன் நோக்கம் என்ன? ஆவணப்படுத்திப் பகிருவதே இலக்கு என்பீர்கள்! எப்போதாவது வெளிவந்தவற்றைத் தொகுத்து அச்சடித்த (Printed) அல்லது மின் நூல்களாக (eBooks) வெளியிடுவதால் வாசகர் ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் படிக்க முடிகிறது. அவ்வாறு படிக்கின்ற போது நூலாசிரியரின் அறிவூட்டலை வாசகர் நிறைவோடு பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இதனடிப்படையில் அறிஞர்கள் தமது அறிவூட்டலை வாசகர் பக்கம் கொண்டு செல்லவே இவ்வாறான வெளியீடுகளைச் செய்கின்றனர்.

கடந்த காலங்களில் அச்சடித்த (Printed) நூல்கள் முதன்மை பெற்றிருந்தாலும் இன்றைய காலங்களில் (1995 இன் பின்) மின் நூல்கள் (eBooks) புழக்கத்திற்கு வந்துவிட்டன. அச்சடித்த (Printed) நூல்களை எங்கும் வைத்திருந்து பேணலாம். ஆயினும் மின் நூல்களை (eBooks) அதற்கான சேமிப்பகங்களிலேயே வைத்துப் பேணமுடிகிறது. எப்படி இருப்பினும் இருவகை நூல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அவற்றிற்கான வாசகர்களும் பயன்பெறுவதைக் காணலாம். ஆயினும் இன்றைய ஆள்களிடையே வாசிப்புப் பழக்கம் சற்றுக் குறைந்து கொண்டே செல்கிறது. அதாவது, அச்சு ஊடக வாசிப்புப் பழக்கம் குறைந்தாலும் மின் ஊடக வாசிப்புப் பழக்கமும் இருப்பதை நினைவிற் கொள்வோம்.

மின் நூல்கள் (eBooks) வலை வழியே தான் அதிகம் உலாவுகின்றன. வலை வழியே என்றால் நடைபேசிகள், கணினிகள் (Smart Phone, Tab Phone, Mini Laptop, Laptop, PC) எனப் பல கருவிகளின் துணையுடன் பார்வையிட முடிவதால் வாசகர் நாட்டம் கொள்கின்றனர். வலை வழியே அன்பளிப்பு (இலவச) வெளியீடுகள் அதிகம் என்பதால் வலை வழியே வாசிப்புப் பழக்கம் கூடுகிறது எனலாம். இதனடிப்படையில் மின்நூல் (eBooks) வெளியீடுகள் முதன்மை பெறுகின்றன.

தமிழறிஞர்களே! உங்கள் அறிவூட்டலை மின் நூல்கள் (eBooks) வழியே வாசகர்களுக்கு வழங்க முன்வந்தால், உலகெங்கும் நற்றமிழைப் பேணமுடியும். உங்கள் முயற்சியால் தாங்கள் பெற்ற அறிவை (யாம் பெற்ற கல்வி இவ்வையகமும் பெற) உலகெங்கும் பரப்பிப் பேண முடியுமே! எனவே, மின்நூல் (eBooks) வெளியீடுகள் மிகவும் தேவை என்பதை உணருவோம். ஆகையால் ஒவ்வொரு தமிழறிஞரும் தானாகவே (சுயமாகமே) மின்நூல்களை (eBooks) ஆக்கி வெளியிடக் கற்றுக்கொண்டால் நன்மை அதிகம் என்பேன். இதற்கென இரண்டு படைப்புகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

1. "மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்" என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவைக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும். அதன் பின் ஒளிஒலி (Video) இணைப்பைப் பார்க்கையில் மின்நூல் (eBooks) ஆக்கம் பற்றிய தெளிவை அதிகம் பெறலாம்.

2. மேற்காணும் எனது பதிவைப் படித்த பின் கீழுள்ள ஒளிஒலி (Video) இணைப்பினூடாக அறிஞர் சிறிநீவாசன் கற்பிற்பதைப் பொறுமையுடன் பார்த்துக் கேட்டுப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். "மின்னூல் உருவாக்குவது எப்படி?" என்ற தலைப்பில் அறிஞர் வைசாலி செல்வம் அவர்கள் தனது வலைப்பூவில் (http://ksrcasw.blogspot.com/2016/11/blog-post_29.html) பகிர்ந்த ஒளிஒலி (Video) இணைப்பையே நானும் இங்கே பகிருகிறேன்.



தமிழ் மொழிமூல வெளியீடுகள் பல ஊடகங்களிலும் உலாவுகின்றன. அதிலும், வலை வழியே தமிழ் மொழிமூல வெளியீடுகள் அதிகம். இவற்றிலும் பிறமொழிக் கலப்பற்ற நற்றமிழைப் பேணுமாறு உலகெங்கும் பல அறிஞர்கள் முழங்குவதைக் காணலாம். அவர்களது முழக்கங்களை மின்நூலாக்கி வெளியீட யாழ்பாவாணன் வெளியீட்டகம் என்றும் உதவும். அதேவேளை நம்மாளுங்க பக்கத்தில் வாசிப்புப் பழக்கம் மேலோங்க முயற்சிகளை மேற்கொள்வோம். இதனடிப்படையில் எமது " மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்" என்ற https://seebooks4u.blogspot.com/ வலைப்பூ ஊடாக இப்பணிகளைத் தொடரவுள்ளோம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!